மயக்கும் தமிழ் - 37 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

கண்ணபுரத்து கருமணியே ராகவனே தாலேலோ!

வண்டமரும் வனமாலை மணிமுடிமேல்
   மணநாறும் என்கிறாளால்;
‘உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும்
   பிரிகிலேன்’ என்கிறாளால்;
‘பண்டு இவரைக் கண்டறிவது எவ்வூரில்
   யாம்? என்றே பயில்கின்றாளால்
கண்டவர்தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து
   அம்மானைக் கண்டாள் கொலோ?

- பெரிய திருமொழி

திருமங்கை ஆழ்வார் அறிவு தரும் பெரிய திருமொழியிலிருந்து ஓர் அற்புதப் 
பாசுரம் இது! 

பெருமானை நேரில் கண்டு அவனது வடிவழகில் ஈடுபட்டு ஆச்சரியப்படுத்துகிறாள், தலைவி. அந்தத் தலைவியின் நிலையில் நின்று பேசுகிறார் 

ஆழ்வார். அதோடு மட்டுமல்லாமல் அவளின் தவிப்பையும் தாகத்தையும் மிகப் பிரமாதமாக கடவுளின்மேல் வைத்த காதலை நட்பை, அன்பை, அந்தப் புனித உள்ளத்தை இந்தப் பாசுரத்தின் ஒவ்வொரு வரியிலும் கொண்டு வருகிறார்.

இந்தப் பாசுரத்தில் அப்படி அதிசயித்துச் சொல்லப்படுகிற எம்பெருமான் யார் தெரியுமா? திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள்! கண்டவர்தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தான் நேரில் நின்று பேசுகிற பெருமாள் பாசுரத்திற்கு வருவோம்!


‘‘என் பெண், இந்த எம்பெருமான் மணிமுடிமேல் வண்டுகள் படியும் திருத்துழாய் மாலை அதாவது தூய்மையான துளசி மாலை அரிய பரிமளத்தை வாசனையை உண்டுபண்ணுகிறது என்கிறாள்.’’

 அந்தப் பரந்தாமன் மேல் எத்துணை மோகமும் தாகமும் இருந்தால் இந்த வார்த்தைகள் வந்து விழும்.

‘‘உண்டு இவர்பால் அன்பு எனக்கு 
என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கிறாளால்’’

என்றைக்கும் யாராலும் பிரிக்க முடியாத உறவு அன்பு எங்கள் இருவருக்கும் இடையில் உள்ளது. அதனால்தான் ஒருகாலும் பிரிகிலேன் என்று உள்ளப்பூர்வமாய் பேசுகிறாள். முன்பே இவருடைய முகத்தைப் பார்த்த மாதிரி இருக்கிறதே? எந்த திவ்யதேசமாக இருக்கும். 

எல்லோருடைய மனமும் தொழுகிற திருக்கண்ணபுரமாக இருக்குமோ! அந்த செளரிராஜப் பெருமாளை நித்தமும் சதாசர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

திருமங்கையாழ்வாருக்கும் மிகவும் பிடித்தமான ஊர், பெருமாள், தீர்த்தம் என்று பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியிருக்கிறது திருக்கண்ணபுரம். 

திருமங்கையாழ்வார் மட்டுமா? அவரோடு நம்மாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் என்று இத்தனை பேரும் திருக்கண்ணபுரத்து  செளரிராஜப் பெருமாளை தங்களுடைய மயக்கும் தமிழால் பரவசத்தோடு பாடியிருக்கிறார்கள்.

‘‘சரணமாகும் தனதாள் அடைந்தார்கெல்லாம்;
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரணைமந்த மதில்சூழ் திருக்கண்ணபுரத்து
தரணியாளன், தனது அன்பர்க்கு
அன்பு ஆகுமே!’’

மிக அற்புதமான இந்தப் பாசுரத்தின் உட்கருத்து என்ன தெரியுமா? எம்பெருமானின் திருவடியை யார் யாரெல்லாம் அடைகிறார்களோ பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு வாழ முற்படுகிறார்களோ அவர்களை அவன் நிச்சயம் காப்பாற்றுவான். திருக்கண்ணபுரத்தில் இந்த திவ்ய தேசத்தில் வசிக்கும் எல்லாருக்கும் பின்னாளில் மோட்சம் அதாவது அவனுடைய திருவடி சம்பந்தத்தையே பரிசாகத் தருகிறானாம். அடியார்களின் அதாவது பாகவதர்களின்  அன்புக்கு ஆட்படுகிறான். அதேபோல் பக்தர்களுக்கு அன்பையும் அருளையும் வாரி வழங்குவதால் அவனுக்கு இணை வேறு யார் இருக்க முடியும்?

திருக்கண்ணபுரம் அந்த ஊரின் அழகு இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழ்நிலை திருக்கோயிலுக்கு முன் அழகிய பெரியகுளம் என்று நம் நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது இந்த திவ்ய தேசம். சேரநாட்டு தலைவரும் ஆழ்வார்களில் தனிச்சிறப்பு பெற்றவரான குலசேகராழ்வார்

‘‘தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே!
காவிரி நல் நதிபாயும் கண்ணபுரத்து என் கருமணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!’’

ஒரு புள்ளிமான் சிலிர்ப்போடு தாவித்தாவி வருவதுபோல் அற்புத சந்தத்தோடு அமைந்திருக்கிறது இந்தப் பாசுரம்... தேவர்களை, அசுரர்களை திக்குகளைப் படைத்தவனே! எல்லா உயிர்களும் வந்து உன் திருவடிகளில் சரணடைகிறது. இந்தச் சிறப்புக்களை உடைய நீயே திருவரங்கத்தில் பள்ளி  கொண்டு இருக்கிறாய். உன் சிறப்புகளை யாரால் சொல்ல முடியும்?

காவிரி நதி பெருக்கெடுத்து பாயும்
சிறந்த திவ்யதேசத்தில் உடையவளே
கண்ணபுரத்து என் கருமணியே
இராகவனே தாலேலோ!

என் கருமணியே என்கிறார்.

கண்ணின் கருமணி என்றால் என்ன அர்த்தம்? நம்முடைய கண்பார்வைக்கு வெளிச்சம் கொடுப்பதைத்தான் இப்படி சிறப்பித்துச் சொல்லுவோம் திருக்கண்ணபுரத்து செளரிராஜப் பெருமாளும் கண்ணபுரத்து தாயாரும் நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை அர்த்தத்தை தருகிறவர்கள் என்ற ரீதியில் குலசேகராழ்வார் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். 

திருக்கண்ணபுரம் என்ன சாதாரணமான ஒரு ஸ்தலமா? இந்த ஊரின் சிறப்புகளையும், பெருமைகளையும் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியுமா? 

108 திவ்ய தேசங்களுள் பிரசித்தி பெற்ற திவ்ய தேசம் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் மிகவும் முதன்மையான ஸ்தலம் திருமங்கையாழ்வார் மந்திர சித்தி பெற்ற திவ்ய தேசம்.

எம்பெருமான் தாள ஹஸ்தமாகவும், பிரயோக சக்கரத்துடனும் செளரிமுடியுடனும் சேவை சாதிக்கும் திவ்ய தேசம் பூலோக வைகுண்டம் எனப்படுவதால் பரமபதவாசல் இல்லாத தலம். எல்லா நாளுமே இங்கே சொர்க்கவாசல்தான். பிரதி அமாவாசைதோறும் திருக்கைத்தல நடையழகு சேவை மிகவும் அற்புதமாக நடைபெறும் அற்புத திவ்யதேசம். இவை எல்லாவற்றையும்விட இந்த மாசி மாதத்தில் செளரிராஜப் பெருமாளுக்கு மாசி மகப்பெருவிழா மிகவும் அற்புதமாக வருடா வருடம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

திருக்கண்ணபுரத்திலிருந்து புறப்பட்டு காரைக்கால் திருமலைராயன் பட்டிணம் சமுத்திரத்தில் கடலில் தீர்த்தவாரி நடைபெறுகிற காட்சி இருக்கிறதே! 

அப்பப்பா... அந்தக் காட்சியை வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்? மீனவ சகோதரர்கள் பலரும் ஆயிரக்கணக்கில் கூடி கடலில் செளரிராஜப் பெருமாளை சமுத்திர தீர்த்தவாரி செய்கிற காட்சி உலகில் வேறு எங்கும் நாம் பார்க்க முடியாது, வைணவத்தில் சாதி மதம் எதுவும் இல்லை என்பதற்கு இந்த மாசிமகத் திருவிழா மிகப்பெரிய சான்று. லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை நாயகனாக காட்சி தருகிறார் இந்த செளரிராஜப் பெருமாள்.

முனையதரையர் என்பவரின் பக்திக்கு இணங்க அவர் மானசீகமாக படைத்த பொங்கலை விருப்பத்தோடு ஏற்றவர்தானே இந்த எம்பெருமான் ஒரு பக்தனின் அதீதமான உச்சபட்ச நம்பிக்கைக்கு உயிர் கொடுத்த உத்தமன் அல்லவா அவன்! அதனால்தானே இன்றைக்கும் தினமும் அர்த்தசாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் திரு அமுதாக படைக்கப்படுகிறது! 108 திவ்ய தேசங்களில் திருக்கண்ணபுரத்தை கீழை வீடு என்று அழைக்கிறார்கள்.

மிகப்பெரிய ஆசார்யப் பெருமகனான மணவாள மாமுனிகள் இந்த திவ்ய தேசத்தில் தங்கியிருந்து இப்பெருமாளை வழிபட்டார் என்று புராணம் சொல்கிறது. வாழ்வில் ஒரு முறையேனும் இங்கு சென்று வாருங்கள். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து இந்த திவ்ய தேசத்தை எளிதில் அடையலாம். திருக்கண்ணபுர பெருமான் பார்வை பட்டால் போதும். வாழ்வில் எல்லா நன்மைகளும் தானாக வந்து சேரும். இது கண் கண்ட உண்மை.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை