தேகம் வீழ்ந்திடும் முன் திருமாலை தரிசியுங்கள்
‘‘சொல்லும் தனையும் தொழுமின், விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை - நல் இதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால்
மந்திரத்தால்நாமத்தால் ஏத்துதிரேல் நன்று’’
பொய்கை ஆழ்வாரின் மிகமிக அற்புதமான பாசுரம் இது! நம் உடலில் சக்தி இருக்கும்போது அவனைப் பற்றிய சிந்தனையில், செயலில் ஈடுபட வேண்டும் என்கிறார். எப்படிச் செயல்பட வேண்டும் என்று ஒரு வகுப்பே எடுக்கிறார் ஆழ்வார். செல்லுவதற்கு சக்தியுள்ள காலத்திலேயே திருமாலை தரிசியுங்கள். அழிவதே இயல்பாக உடைய இவ்வுடம்பு இருக்கும் வரையில் அவனை வணங்குங்கள். அழகிய பூவிதழ்களைக் கொண்ட நறுமணம் மிக்க மாலைகளை அவனுக்கு சாற்றுங்கள். அவன் புகழ் பாடுகிற வேத மந்திரங்கள் சொல்லும் இடத்திற்கு சென்று உங்கள் கவனத்தை அங்கே ஒருமுகப்படுத்துங்கள். உங்கள் இல்லத்திலேயே கூட மனதை ஒருமுகப்படுத்தி உங்களுக்கு தெரிந்த மந்திரத்தால் அவன் புகழ் பாடிடுங்கள். இப்படி உங்களால் எப்படி எப்படி செயல்பட முடியுமோ, அப்படி அப்படி பகவானுடைய கல்யாண குணங்களில் ஈடுபட்டால் நன்மைகளை அடையலாம் என்று நமக்கு நல்வழிப் பாதை காட்டுகிறார் ஆதிகவி என்று அழைக்கப்படுகிற பொய்கையாழ்வார்!
ஆழ்வாரின் இந்தப் பாசுரத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். உள்ளே ஊன்றி கவனித்தால்தான் அர்த்தம் நமக்கு நன்கு பிடிபடும்.
விழம் உடம்பு என்கிறார். இந்த தேகம் மண்ணில் சரிவதற்கு முன் அதாவது நன்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவனைப் பற்றிய செயல்பாடுகளில் மனதின் எண்ணத்தை குவித்து வையுங்கள். மானிடப் பிறவி என்பது அரிதானது! இந்தப் பிறவியில் நன்கு தேக ஆரோக்கியமாக இருக்கும்போது திருமாலை அந்தப் பரந்தாமனை துதியுங்கள். உங்களால் எப்படி முடிகிறதோ அப்படி அவனை ஏற்றிப் போற்றுங்கள்.
ஏனென்றால், இறைவனை அடைதல் எளிது, அவனை ஆராதித்தல் அதனினும் எளிது என்னும் கொள்கையை இங்கே பகிரங்கமாக பிரகடனப்படுத்துகிறார் ஆழ்வார்!
ஏன் ஆழ்வார் இப்படிச் சொல்கிறார் தெரியுமா?
நம்மில் பல பேர் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படிச் செய்யக்கூடாது. அவன் புகழைப் பாடவும், அங்கே சென்று வணங்குவதற்கு நமக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடைகளைத் தகர்த்து விடுங்கள் என்கிறார். அவரே மற்றொரு பாசுரத்தில் சொல்கிறார்.
நம்மில் பல பேர் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படிச் செய்யக்கூடாது. அவன் புகழைப் பாடவும், அங்கே சென்று வணங்குவதற்கு நமக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடைகளைத் தகர்த்து விடுங்கள் என்கிறார். அவரே மற்றொரு பாசுரத்தில் சொல்கிறார்.
‘‘நமோ நாராயணா என்னும்
சொல்மாலை கற்றேன் தொழுது’’
பெருமுயற்சி எதுவுமின்றி திரு எட்டு எழுத்தாகிய நாராயணனுடைய அந்த மிகவும் புகழ் பெற்ற நாமத்தைச் சொல்லி நலம் பெறுங்கள் என்கிறார். பொய்கையாழ்வாரின் பாசுரங்களில் தனித் தன்மையும், பாசுரங்களிலுள்ள கருத்துச் செறிவும் மிகவும் அடர்த்தியாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். குறிப்பாக திருமலையில் நித்யவாசம் செய்யும் வேங்கடவனை அவர் போற்றிப் புகழ்கிற பாசுரம் இது!
‘‘வழிநின்று நின்னைத் தொழுவார் வழூவா
மொழிநின்ற மூர்த்தியரே ஆவர் - பழதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும்
மண்ணளந்தசீரான் திருவேங்கடம்’’
இந்தப் பாசுரத்தில் இரண்டு பெரிய கருத்துக்களை முன் வைக்கிறார். ஒன்று திருமலையில் அந்த ஏழுமலையில் வாசம் செய்யும் கோவிந்தன், மலையப்ப சுவாமியை மனதாற வேண்டுகிறார். மற்றொன்று வேங்கடவன் குடியிருக்கும் அந்த ஏழுமலையையே மனதாற வேண்டி மனம் உருகுகிறார். இறைவனோடு சம்மந்தமுடைய வேங்கடமலையே தன்னைத் தொழுவார்க்கு நற்கதி அளிக்கும் எனில் அவனையே சரணடைபவர்களை, அவன் எப்படிக் காப்பாற்றாமல் இருப்பான் அல்லது அவனால் எப்படி காப்பாற்றாமல் இருக்க முடியும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு
பேசுகிறார் ஆழ்வார்!
பெருமாள் குடியிருக்கும் மலையே உனக்கு அருள் செய்ய நினைக்கும்போது மலையில் நின்று கொண்டிருக்கிற மலையப்பன் நமக்கு அருளும் பொருளும் தரமாட்டானா என்ன? என்ற ரீதியில் இந்தப் பாசுரத்தை படைத்திருக்கிறார் ஆழ்வார். வேங்கடமலையின் மீதும், வேங்கடவன் மீதும் எந்தளவிற்கு நம்பிக்கை இருந்தால் ஆழ்வாரால் இப்படி ஒரு பாசுரத்தை மயக்கும் தமிழில் படைத்திருக்க முடியும்! இறைவன் மீது மனம் லயிப்பதை எது தடுக்கிறது? அந்த இறையருள் என்கிற பெருவெள்ளத்தில் நாம் நீந்திக் களிப்பதை எது தடுக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்கிறார், பொய்கையாழ்வார். மிகவும் யதார்த்தமான அந்தப் பாசுரம் இதோ:
‘‘வாரி சுருக்கி மதக்களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ - கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்’’
புலனடக்கம் அதாவது இந்திரியங்களை வென்ற நல்லறிவாளர்களே! இறைவனின் திருவடிகளைக் காணமுடியும் என்பதை வலியுறுத்தி, அதற்கான வழியையும் காட்டுகிறார். ஐம்பொறிகளும் மதயானை போன்றவை. இந்த இந்திரிய சுகத்தால் பெறும் இன்பம் மதயானையின் மதநீர் போன்றது!
நாம் அனுபவிக்கும் சுவை, ஒளி, ஊறு முதலான இன்பங்கள் அந்த யானைகள் சுற்றித் திரியும் தெருக்களைப் போன்றது! இந்த யானைகளுக்கு இன்பமாகிய நீரைச் சிறிது சிறிதாகக் குறைத்துப் புலன் இன்பங்களாகிய தெருக்களில் அவை சுற்றித் திரியாதபடி கட்டி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவற்றைக் கட்டுப்படுத்தி, நுண்ணிய பக்தி வடிவான மெய்ஞ்ஞானத்தால் அவனை அறிய வல்லவர்களே முன்பு கஜேந்திரனைக் காத்த பெருமாளின் திருவடிகளைக் கண்டு அனுபவிக்க முடியும்.
மற்றபடி தம் உள்ளத்தையும் உடலையும் அடக்க முடியாதவர்களால் ஆண்டவனை ஒருபோதும் அடைய முடியாது. யதார்த்ததைச் சொல்லப் போனால் காமம் மிகுதியாக இருந்தால் கடவுளை உணர முடியாது. தேக இன்பத்திலேயே மூழ்கியிருப்பவனால் தேவேந்திரனுக்கு தலைவனாக இருக்கக்கூடிய அந்த தேவநாதனை மனம், மொழி, மெய்யால் உணர முடியும். அதன் அடிப்படையில் இந்தப் பாசுரத்தில் மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே என்கிறார். அஞ்ஞானம் நம்மை விட்டு அகன்றால் தான் மெய்ஞானம் நமக்குள் வரும், புகும்! பந்த பாசங்களிலும் எல்லாப் பொருட்களின் மீதும் மிகுதியான பற்று கொண்டவனால் இறைவனின் திருவடி மகிமையை உணர முடியாது! அதனால் தான் தம் மனதிற்கு சொல்வது போல்...
‘‘பாம்பணையான் பாதம்
அடை, ஆழி நெஞ்சே அறி’’
பாம்பணையான் பாதம் அடை என்றால் என்ன அர்த்தம்! திருப்பாற்கடலிலும் அரவரசப் பெருஞ்ஜோதி என்றும் அழைக்கப்படுகிற ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிற பரந்தாமன் மீது நெஞ்சே தஞ்சம் புகு என்கிறார். மனம் என்பது காட்டாற்று வெள்ளம். இந்த வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படாமல் இருக்க வேண்டுமானால் இறைவனின் திருநாமம் என்கிற துடுப்பு மிக முக்கியம்! அதை ஆழ்வார் சொன்னபடி ஓரளவிற்காவது நாம் கடைபிடித்தால் மன நிம்மதியோடு மிக மிக சந்தோஷமாக வாழலாம். பொய்கையாழ்வாரின் பாசுரக் கருத்துக்களை உள்வாங்கி உணர்ந்து செயல்பட்டால் எந்த வினையால் நம்மை என்ன செய்ய முடியும்?
நன்றி - தினகரன்