மயக்கும் தமிழ் - 13 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உளன் எனில் உளன்

கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து கேட்கப்படுகின்ற மிக முக்கியமான கேள்வி. உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் கடவுள் இருக்கிறார். அவர்தான் அதாவது, அந்த மாபெரும் சக்திதான் இந்த உலகையும் மக்களையும் படைத்து காத்து ரட்சித்து வருகின்றது என்பதை மிகவும் திடமாக நம்புகிறார்கள். இதுதான் யதார்த்தமான நிதர்சனமான உண்மை. அவரவர்கள் தத்தமக்கான கடவுளை வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொருவருடைய சித்தாந்தமும் செயல்பாடுகளும் வேறு வேறாக இருந்தாலும்கூட ஒரு (Super power) எல்லாவற்றுக்கும் மேலான சக்தி நம்மையெல்லாம் வழி நடத்துகிறது என்று பலமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். இம்மாதிரியான சிக்கலான அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் மிக அழகான அறிவுப்பூர்வமான பதிலை தன்னுடைய நாலாயிர திவ்ய பிரபந்தப் பாசுரத்தின் மூலம் நமக்கு தருகிறார், ஆழ்வார்களின் தலை மகனாக கருதப்படுகிற நம்மாழ்வார்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்  உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே

இந்த திருவாய்மொழிப் பாசுரத்தின் திரண்ட கருத்துதான் என்ன தெரியுமா?


‘கடவுள் உண்டு’ என்றும், இல்லை என்றும் ஆஸ்திக நாஸ்திக கருத்துகளை மனதில் கொண்டு ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார், ஆழ்வார். இறைவன் இருக்கிறான் என்று சொன்னால் இருக்கிறவனே ஆவான். அப்போது உருவத்தோடு இருக்கும் இப்பொருட்கள் எல்லாம் அவனுடைய தூல சரீரமாகும். இறைவன் இல்லை என்றாலும் இருக்கிறவனே ஆவான். அப்போதும் உருவம் இல்லாதனவாய் இருக்கும் இப்பொருட்கள் எல்லாம் அவனுடைய சூட்சும சரீரமாகும். ஆகையினால் இருக்கிறான் என்றும் இல்லையென்றும் சொல்லப்படுகிற இந்தத் தன்மையை தன்னுடைய குணமாக உடையவன் இறைவன். இத்தகைய ஈஸ்வரன் எங்கும் வியாபித்து, என்றும் எங்கும் உள்ளவனாகவே இருக்கிறான். ஆகவே, ‘உளன்’ என்ற சொல்லாலும் இலன் என்ற சொல்லாலும் இறைவன் இருக்கிறான் என்பதே மாபெரும் சத்தியமான உண்மையாக இருக்கிறது.

விஷ்ணு என்றாலே எங்கும் வியாபித்திருப்பது என்பதாகும். உருவமாக இருந்தாலும் உருவம் அற்றதாக இருந்தாலும் இரண்டிலும் அவன் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்கிறார் ஆழ்வார். இன்னும் சொல்லப்போனால் பார்க்கப்படுகிற பொருட்களிலும் பார்க்கப்படாத அதாவது, கண்ணுக்குப் புலப்படாத பொருட்களிலும் பரம்பொருள் காணப்படுகின்றான். அவரவர் சிந்தனை ஓட்டம் எது எப்படி இருந்தாலும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறார். இந்தப் பாசுரத்தை முன்மாதிரியாக வைத்துத்தான் ராமானுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் சூன்ய வாதத்தை எதிர்த்து உண்மைப் பொருளை நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள், வைணவத்தில் கரை கண்ட பெருமக்கள். அதுவும் மாறன் சடகோபன் என்றெல்லாம் பக்தியோடு வைணவ உலகம் கொண்டாடி மகிழ்கின்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களில் தன்னையே கரைத்துக் கொண்டவர், உடையவர் எம்பெருமானார். 

இந்த நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் வேதத்திற்கு ஒப்பானவை. அதனால்தான் நம்மாழ்வாருக்கும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்று உள்ளப் பூர்வமாக உணர்வுப் பூர்வமாக வைணவ அடியார்கள் உலகம் தலைக்கு மேல் வைத்து அவரையும் அவரின் மிகவும் அற்புதப் படைப்பான திருவாய்மொழியையும் ஏற்றிப் போற்றுகின்றது ஆனந்தக் கூத்தாடுகிறது. நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு உரை எழுதிய பெருமக்கள் என்ன சொல்ல வருகிறார்கள் தெரியுமா? ஞானச்சுடரை வீசிய ஒளிப்பிழம்பு என்கிறார்கள். இவரை வைணவ குலபதி என்றும் இவருடைய தேன் மணக்கும் தித்திக்கும் பாசுரங்களை தமிழ் மறை என்றும் போற்றி மகிழ்கிறார்கள். நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்பதற்கு மேன்மையான வாயினால் சொல்லும் சொற்களினால் ஆகிய நூல் என்று பொருள் சொல்லுகிறார்கள் பக்தி என்ற அங்குசத்தால் பரமனை வசப்படுத்தியதால் பராங்குசன் ஆனார் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரை ஆன்மாவாகவும் மற்ற ஆழ்வார் பெருமக்களை அவருடைய சரீரமாகவும் உருவகிக்கும் சம்பிரதாயம் இன்றளவும் இருந்து வருகிறது. நம்மாழ்வாரின் அகத்துறைப் பாடலாக ஒரு அற்புதப் பாசுரம் அவர் படைத்த திருவிருத்தத்திலிருந்து பார்க்கலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருமகன் எத்தகைய தொலைநோக்குப் பார்வையில் அதுவும் தான் வழிபடும் திருமாலின் மீது எத்தகைய மாறாத திடபக்தியை மேலான காதலை வைத்திருக்கிறார் என்று பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. இனி அந்த அற்புத திருவிருத்தப் பாசுரத்தை பார்ப்போம்...

வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவை
தோறு அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய் 
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே

பக்தர்கள் வணங்கும் துறைகள் பலவற்றையும் எதிர்கருத்துக்களால் வேறுபடும், அதைத்தான் பிணங்கும் என்கிறார். அவைகள் உண்டாக்கும் தெய்வங்கள் பலவற்றையும் நீயே ஆக்கி உன் உருவத்தையே பரப்பி வைத்திருக்கிறாய். உனக்கு இணை வேறு யார்தான் இருக்க முடியும்? உன்மேல் எனக்கு கேட்கை எழுகிறது. நம்மாழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா? யாரைத் தொழுதாலும் திருமாலையே வணங்குவது போன்ற தன் உணர்வு மேம்படுகிறதாம். எல்லா நதிகளும் கடலைச் சென்றடைவதுபோல் எல்லா உருவங்களிலும் திருமாலைக் காண்கிறோம். திருமாலிடம் எல்லா உருவத்தையும் பார்க்கிறேன். என்ன வார்த்தை போடுகிறார், ‘நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்’ பகவான் கண்ணன் கதையில் சொல்கிறானே. எல்லாம் நானே என்று.

மாம் ரகம் சரணம் வ்ரஜ

இவ்வளவு ஏன்?

விண் மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!
கடல் சேர்ப்பாய்! மண்மீது உழல்வாய்
இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!

பஞ்ச பூதங்களும் நீதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறாய் என்கிறார். திரும்புகிற பக்கம் எல்லாம் திருமால்தான் என்கிறார். ஆழ்மனதில் எத்தகைய சிந்தனையும் தூய பக்தியும் இருந்ததனால்தானே இப்படிப்பட்ட பாசுரங்கள் தேனமுதாக நமக்கு கிடைத்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பழத்திலிருந்து சாறைப் பிழிந்து தருவதுபோல் திருவாய்மொழியில் மிகவும் ஜீவனான, உயிர்நாடியான பாசுரம் ஒன்றைப் பார்ப்போம்.

"திடவிசும்பு. எரி. வளி. நீர், நிலம் இவைமிசைப்  
படர்பொருள்  முழுதும்  ஆய்  அவை
அவைதொறும்  உடல்மிசை  உயிர்  எனக்  
கரந்து  எங்கும் நிறைந்துளன்"

திடப்பொருட்கள், ஆகாயம், காற்று, நீர், நிலம் இவை எல்லாவற்றிலும் படர்ந்த பொருள் ஆனவன். அவைகளில் உடலுக்குள் உயிர்போல மறைந்து உள்ளேயும் வெளியேயும் வியாபித்து இருக்கிறவன் வேதத்தில் உள்ளவன். நம்மாழ்வாரின் இந்த திருவாய்மொழிப் பாசுரம்தான் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதக் கொள்கைக்கு மூலமாக உள்ளது என்கிறார்கள். உலகுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ளதுபோல் தொடர்பு உடையது என்கிறார் உலகமெல்லாம் எம்பெருமானுக்கு சரீரம்; அவன் சரீரி என்னும் வைணவத்தின் உயிர்நிலைக் கொள்கையை வெளியிடுகிறது இந்தப் பாசுரம். ஒவ்வொரு பொருளிலும் உடம்பில் உயிர் உறைவதுபோல் மறைந்திருந்து, எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவின்றி வியாபித்திருக்கிறான் எம்பெருமான் என்கிறார் நம்மாழ்வார்.

இதனால்தானோ என்னவோ நாம் மட்டுமல்ல மேலை நாட்டு அறிஞர் பெருமக்களும் நம்மாழ்வாரை ஞானத்தந்தை (Father of Philosophy) என்று அழைத்து மகிழ்கிறது. நம்மாழ்வார் இந்த உலகத்திற்கு கிடைத்த தங்கப் புதையல். அவரைப் பற்றிய சிறப்புப் பாடல் ஒன்று அப்பிள்ளை இயற்றிய வாழித் திருநாமம்.

மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்! சரணம்! சரணம்!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை