வியாழன், 28 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 14 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நெஞ்சம் தஞ்சம் புகும் திருமலை

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் 
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற 
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் 

தமிழினத் தலைவராக கருதப்படுகிற பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஓர் அற்புதமான பாசுரம் இது. தன்னையே நாயகி பாவத்தில் பார்த்துப் பரம்பொருள்மீது மாளாக் காதலால் உள்ளம் உருகி ஈடுபட்டதன் விளைவுதான் தேன் தமிழால் திவ்யப் பிரபந்தமாக நமக்கு தங்கப்புதையல் போல் கிடைத்திருக்கிறது. இதுதான் மனதை மயக்கும் தமிழ். சரி... பாசுரத்திற்குள் வருவோம். திருமலை. அடடா! இந்தப் பெயரைச் சொன்னாலே மனதிற்குள் மழைத்துளி விழுந்ததைப் போல இருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் படையெடுப்பால் தினமும் திருவிழாதான் திருமலை திருப்பதியில். ஜாதி மதம் பாராமல் ஏற்ற இறக்கங்களைக் கருதாமல் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் அவன் சந்நதி முன் அனைவரும் சமமாகும் பேரதிசயம் வேறெங்காவது உண்டா? 


எல்லோருடைய மூச்சுக் காற்றின் மையப் புள்ளியாக அல்லவா திருமலை வழிபாட்டுத் தலமாக அமைந்திருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கண்ணன் சொன்னாலும் இந்தப் புரட்டாசி மாசம் திருமலையப்பனுக்கு மட்டுமல்ல அவனைக் காணவரும் பக்தர்களுக்குகூட கொண்டாட்டம்தான். விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து திருநாமத்தைத் தரித்தபடி அவன் பெயரை கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுகிறபோது ஏற்படுகிற இன்பம் இருக்கிறதே அதை எப்படி வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியும்? இதைத்தானே திருமழிசை ஆழ்வார் தனது நான்முகன் திருவந்தாதியில் ‘‘செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்’’ என்று கொண்டாடுகிறார். குருவி சேர்ப்பதுபோல் சிறிது சிறிதாக பணத்தைச் சேர்த்து திருமலைக்குச் சென்று அவனை பக்தியுடனும் பாசத்துடனும் வழிபடுகிற சாமான்ய மக்களில் எல்லாம் அந்த வேங்கடவன் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறான். 

பிரம்மதேவனே திருமலையப்பனுக்கு விழா எடுத்த இடம் இந்த திருமலை திருப்பதி. தன்னை நாடி வருகிறவர்களுக்கு மட்டுமல்ல தன்னையே சிந்தித்து இருக்கிறவர்களுக்குக்கூட கேட்டவற்றை கேட்டபடி தருகின்ற கேசவனாக... மாதவனாக... இந்த மலைமேல் மாலவன் திகழ்கிறான். சாதாரணமாக சனிக்கிழமையன்று மாலவனாக இருக்கின்ற பெருமாள் தரிசனம் உகந்தது என்பார்கள். புரட்டாசி சனிக்கிழமை என்றால் கேட்கவா வேண்டும். வேங்கடம் என்றாலே பாவத்தை போக்குகிற இடம் என்கிறார்கள். ஆழ்வார்கள் மட்டுமில்லை எத்தனைவிதமான ஆசார்ய புருஷர்கள் தவம்செய்த மாமலை இந்தத் திருமலை!

பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான், அரசன் தொண்டைமான், விஜயநகரப் பேரரசர்கள் ‘மகா புருஷர் அன்னமாச்சார்யா... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கரன்சி நோட்டுக்களையும் காரட் தங்கக் கட்டிகளையும் பக்தர்களிடமிருந்து உவகையோடு உள்ளன்போடு பெற்றுக் கொள்கிற அந்தப் பரம்பொருள் சாப்பிடுவது என்ன தெரியுமா? எளிய  மண்செட்டியில் தயிர்சாதம். அவ்வளவே! அவனை ஆடம்பரங்களால் ஒருபோதும் அடைய முடியாது. உண்மையான பக்தியினால் மட்டுமே அவன் அருளை எளிதாகப் பெற முடியும். இப்படிப்பட்ட மேலான பரம்பொருளாக இருக்கிறவனை ஆழ்வார்களின் தலைவனாக பேயாழ்வார் மலை என்றாலே அது திருமலைதான் என்கிறார். நம் நாட்டில் எத்தனையோ மலைகள் இருக்கின்றன. இமயமலையில் ஆரம்பித்து எத்தனை எத்தனையோ மலைகள்! ஆனால், மலை என்றால் அந்த ஏழுமலையான் குடிகொண்டிருக்கிற திருமலைதான் இல்லாவிட்டால் திருமங்கையாழ்வார் தன்னுடைய பெரிய திருமொழியில் ‘‘உலகுக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மலை திருவேங்கடம் அடை, நெஞ்சமே என்று தன் மனதிற்கு கட்டளையிடுவாரா? வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி அனந்தாத்ரி என்கிற ஏழுமலைகளுக்கு நடுவில் நின்று கொண்டு அதுவும் எப்படித் தெரியுமா?

குலசேகர ஆழ்வாரின் திருவாக்கின்படி,

‘‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா’’

நின்று கொண்டே நமக்கு அருள்மாரிப் பொழிந்து கொண்டிருக்கிறான். கலியுகத்தில் நமக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக இவனைத்தவிர வேறு யார் இருக்க முடியும். அதனால்தான் பேயாழ்வார் எந்த மலையைப் பற்றி பேச்சு வந்தாலும் எனக்கு திருமலைதான் ஞாபகத்திற்கு வருகிறது, மனம் மகிழ்கிறது என்கிறார். இல்லாவிட்டால் வெற்பு என்று வேங்கடம் பாடும் என்பாரா என்ன? பொய்கை ஆழ்வார் இன்னும் ஒருபடி மேலே போய் உன் பெருமையை மகிமையை யாரால் உணர முடியும். அவருடைய அற்புதமான பாசுரம்... உண்வார் யார் உன் பெருமை? ஊழிதோரு ஊழி உணர்வார் யார் உன் உருவம் தன்னை  உணர்வார் யார் விண்ணகத்தாய், மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீ கிடந்த பால்... பொய்கை ஆழ்வாராலேயே அவனை உணர முடியாது. தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாது எனறால் பெரும்பாலும் பொய் வாழ்க்கை வாழ்கிற நம்மால் எப்படி அவனை உணர்ந்து கொள்ள முடியும். வடவேங்கம் தென்குமரி என்று எல்லைகளின் அளவு கோலாகவும் அவன் இருக்கிறான். ‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி’’ என்று இளங்கோவடிகள் தன்னுடைய சிலப்பதிகாரத்தில் வேங்கடவனின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறார். இதனால்தான் நம்மாழ்வார் இவனிடமே சரணாகதி அடைய முற்படுகிறார்.

‘‘புகல் ஒன்று இல்லா அடியேன் 
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’’ 

என்கிறார். எனக்கு உன்னைவிட்டால் வேறு கதிஇல்லை நீதான் என் நெஞ்சம் தேடுகிற தஞ்சம். நிழல் தரும் இடம். அடைக்கலம் நீதான் என்று என்று பரிபூரண சரணாகதி அடைகிறார். ஆண்டாள் நாச்சியாரோ வேங்கடவனுக்காக மேகத்தையே தூதுவிடுகிறார். மதயானைபோல் எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்! நான் தனிமையில் தவித்துப் போகிறேன் வேங்கடவனிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா என்று மேகங்களிடம் ஆவலாய் கேட்கிறாள், ஆண்டாள். அவனுக்குத்தான் அந்த வேங்கடவனிடத்தில் எத்தனை பிரேமை அன்பு பாசம் பந்தம். எத்துணை மக்களுக்கு அவன் குலதெய்வம். பிரார்த்தனையின் நாயகன். அவன் மேல் அப்படியொரு அசைக்க முடியாத நம்பிக்கை. திருமங்கையாழ்வார் பக்தர் நிலையிலிருந்து அருளப்பட்ட அற்புதப் பாசுரம் இதோ...

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்! இனி யான் உனை என்றும் விடேனே !

இந்தப் பாசுரத்தை படிப்போம். அவன் நினைவில் மூழ்குவோம்...

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக