வில்லேந்திய ஒருவனால் வாலி கொன்று வீழ்த்தப்பட்டான் என்கிற சமாசாரம் கிஷ்கிந்தையிலுள்ள வானரர்களுக்குத் தெரிந்ததும் அவர்கள் இங்குமங்கும் பயந்து ஓடினதைப் பார்த்தாள் தாரை.
“யுத்தம் என்றால் எப்போதும் அரசன் வாலிக்கும் முன்னதாக இதுவரையில் புறப்பட்டுப் போய் வந்தீர்களே! ஏன் இப்போது இப்படிப் பயந்து ஓடுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. சுக்ரீவனை அரசனாக்குவதற்காக வாலியைக் கொன்றான் ராமன். அவ்வளவே. நீங்கள் அனாவசியமாகப் பயந்து ஓடாதீர்கள்! உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை” என்று அரசிக்குரிய முறையில் தன் துக்கத்தைத் தள்ளிவிட்டு வானரர்களுக்குத் தைரியம் ஊட்டினாள்.
*
பிறகு தன் புருஷன் இறந்து கிடக்கும் இடத்துக்குப் போகப் புறப்பட்டாள். வானரர்கள் தடுத்தார்கள்.
“அங்கதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வோம். கோட்டையைப் பத்திரப்படுத்துவோம். நம்முடைய பகைவன் சுக்ரீவனும் அவனுடைய துணைவர்களும் வராமல் ஊரைக் காப்போம்!” என்று தாரையைப் போகவிடாமல் தடுக்கப் பார்த்தார்கள்.
அவளோ, “என் வீர புருஷன் இறந்த பிறகு எனக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை!” என்று சொல்லி நிர்ப்பயமாக ராம லக்ஷ்மணர்கள் இருந்த இடத்துக்கு நேராகச் சென்றாள்.
*
தரையில் விழுந்து கிடந்த தன் புருஷனைக் கண்டதும் துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. கதறி அழுதாள்.
“ஹா என் வீரனே! எத்தனை சூரர்களை நீ வீழ்த்தினாய், இப்போது மாண்டு கிடக்கிறாயே! என்னை விட்டுப் போய் விட்டாயே!” என்று குத்துபட்டுக் கிடந்த வாலியை ஆலிங்கனம் செய்து கொண்டு அழுதாள்.
வாலியின் குமாரன் அங்கதனும் அங்கே வந்து சேர்ந்தான். இந்தக் காட்சியைக் கண்டபின் சுக்ரீவன் தன் பொருட்டு இவ்வளவு துயரம் ஏற்பட்டதே என்று துக்கப்பட ஆரம்பித்தான்.
இது வேஷமல்ல. இவ்வாறே உலகத்தில் துவேஷமும் பழி தீர்க்கும் காரியங்களும் ஆசைகளும் முடிவில் ஒரு நற்பயனும் சந்தோஷமுமின்றித் துக்கத்தில் முடிகின்றன. நேரில் கண்டு அனுபவித்த பின்னரே துவேஷத்தின் அற்பத்தனம் விளக்கமாகிறது. அறிவு அடைகிறோம். அதுவரையில் மோகத்தில் மூழ்கி உண்மையைக் காண்பதில்லை.
*
“அன்புக்குரிய அங்கதனை அநாதையாக விட்டு விட்டு என்னையும் திக்கின்றி விட்டுவிட்டுத் திரும்பி வராத பிரயாணத்தில் போய் விட்டாயே! என் வீரனே!” என்று தாரை அழுது புரண்டு, அங்கேயே உயிர் நீப்பேன் என்றாள்.
ஹநுமான் ஆறுதல் சொல்லிப் பார்த்தான். “இறந்தவர்கள் தங்களுக்குரிய மேல் உலகங்களை அடைவார்கள். வாலியைப்பற்றித் துக்கப்பட வேண்டாம். அங்கதனுக்குப் பட்டாபிஷேகம் ஆகும். அதைக் கண்டு மகிழ்வோம். இப்போது வாலிக்குச் செய்ய வேண்டிய உத்தரகிரியைகளை நடத்துவதில் புத்தி செலுத்துவோம். அங்கதனைச் சரியாகப் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான்.
“எனக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. உத்தரகிரியை செய்வதும் அங்கதனை ரக்ஷிப்பதும் எல்லாம் சுக்ரீவன் பார்த்துக் கொள்வான். என்னால் என்ன செய்ய முடியும்? ஆயிரம் அங்கதர்கள் இருந்தாலும் அது என் புருஷனுக்குச் சமானம் ஆகுமா? என் வீரனுடன் நானும் யமாலயம் செல்வேன். அதுதான் எனக்குச் சந்தோஷம்” என்றாள் தாரை.
நினைவிழந்து மரணத் தறுவாயிலிருந்த வாலி, அச்சமயம் கண்ணைத் திறந்து சுக்ரீவனைப் பார்த்து மெதுவாகச் சில வார்த்தைகள் பேசினான்:
“தம்பீ! நாம் இருவரும் ஒன்றாக இருந்து சந்தோஷமாக ராஜ்யத்தை ஆண்டு அனுபவித்திருக்கலாம். அதற்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. என்னுடைய தவறே அதிகம். அதைப்பற்றி இப்போது பேசிப் பயனில்லை. நீ இனி இந்த ராஜ்யத்தை ஆள்வாயாக. எனக்கும் தாரைக்கும் உயிரைவிடப் பிரியமான குமாரன் அங்கதனை உன்னிடம் ஒப்புவித்தேன். அவன் உன்னைப் போன்ற வீரன். எனக்குப் பதிலாக நீயே அவனுக்குத் தந்தையாக இருந்து அவனை அன்புடன் பார்த்து வா. இதுதான் உன்னை நான் கேட்டுக் கொள்வது.
என் மனைவி தாரை மிகுந்த அறிவாளி. சூக்ஷ்மமான விஷயங்களை அறியும் சக்தி பெற்றவள். இவ்விதம் நடக்கும் என்று அவள் ஒன்றைக் கூறினாளானால் அது அப்படியே நிகழும், சந்தேகமில்லை. அவள் யோசனையை எந்த விஷயத்திலும் தட்டாதே.
இதோ இந்திரன் எனக்குத் தந்த மாலையை என் கையிலிருந்து பெற்றுக்கொண்டு அதன் சக்தியை நீ பெற்று விளங்குவாயாக. என் வாழ்க்கை முடிந்தது. உன் மேல் இப்போது எனக்குக் கோபம் தணிந்து விட்டது. உனக்கு மங்களம் ஆகுக!” என்று தம்பி சுக்ரீவனை மிகப் பெருந்தன்மையோடு ஆசீர்வதித்தான்.
“அங்கதா, அரசனாகிய சுக்ரீவனிடத்தில் சரியாக நடந்து கொள். பொறுமையுடன் நடந்து கொள். அன்போடு நடந்து கொள்” என்று குமாரனுக்குச் சொல்ல வேண்டியதையும் சொன்னான்.
காட்டு விருக்ஷம் வெட்டப்பட்டுக் கீழே விழுந்தால் அதைத் தழுவி ஏறிய இளங்கொடியும் அதை ஒட்டிக் கிடப்பது போல் வாலியைக் கட்டித் தழுவிக் கொண்டு கிடந்தாள் மலர் பூத்த கொடியைப் போன்ற தாரை.
நீலன் வாலியின் மார்பில் குத்தி நின்ற பாணத்தை மெள்ள எடுத்து அகற்றினான். உடனே காயத்திலிருந்து மலையருவி போல் ரத்தம் பொங்கி எங்கும் பரவிற்று. வாலியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. “ஐயோ!” என்று தாரை அழுதாள்.
“அங்கதா! உன் தகப்பனைக் கடைசித் தடவையாக வணங்குவாய்” என்றாள்.
“உங்களுடைய பிரிய மகன் வணங்கி நிற்கிறானே! அவனுக்கு ஒன்றும் சொல்லமாட்டீர்களா? நான் விதவையானேன். மகனும் திக்கற்றுப் போனான்!'” என்று இதயம் உடைந்த தாரை பிரலாபித்தாள்.
இதையெல்லாம் கண்டு சுக்ரீவனுடைய உள்ளம் பதைத்தது. தன் குற்றத்தை இப்போது நன்றாக அறிந்தான். 'எனக்குள் மறைந்து நின்று உள்ளே வேலை செய்து வந்த ஆசை என் புத்தியைக் கெடுத்து விட்டபடியால் அல்லவோ நன்றாக ஆலோசியாமல் வாலி புகுந்த குகையின் வாயிலை மூடிவிட்டு அண்ணனுடைய சம்பத்தை அபகரித்துக் கொண்டு ஆனந்தமாக அனுபவித்தேன்!' என்று தனக்குள் சிந்திக்கலானான்.
நம்மையும் அறியாமல் உள்ளே இருந்து வரும் ஆசை விவேகத்தைக் கெடுத்து விடுகிறது. தவறான முடிவுகளுக்கு வந்து விடுகிறோம். பாவங்களில் சிக்கிக் கொள்கிறோம். சுக்ரீவன் இப்போது கண்டான். தன் விவேகத்தைக் கெடுத்தது உள்ளே மறைந்து நின்று வேலை செய்த தன்னுடைய ஆசை என்பதைக் கண்டான்.
காமம் என்கிற பொதுப் பெயர் வடமொழியில் எல்லா வகை ஆசைகளையும் குறிக்கும். காமமே மனிதனுக்கு உட்பகை. அந்த சத்துருவை ஜயிக்கவேண்டும். இதுவே கீதையில் மூன்றாவது அத்தியாயம் கடைசி ஏழு சுலோகங்களில் செய்யப்படும் உபதேசம். ஜஹி சத்ரும் காமரூபம் துராஸதம் என்று முடிக்கிறான் கண்ணபிரான்.
சுக்ரீவனைக் கெடுத்தது ஆசை. வாலியின் விவேகத்தைக் கெடுத்தது கோபம். சுக்ரீவன் குகையின் வாயிலை மூடிவிட்டதைக் கண்டதும் ராஜ்யத்தை அபகரிப்பதற்காகவே சுக்ரீவன் தன் கூட வந்து இப்படிச் செய்தான் என்று வாலி எண்ணிவிட்டான். அரக்கனுக்குத் தன்னைப் பலிகொடுத்து விட்டு, தன்னுடைய பதவியை அபகரித்துக் கொள்ளப் பார்த்தானே என்று மனத்தில் சுக்ரீவனைப் பற்றி முடிவு செய்துகொண்டு பொங்கிய கடுங்கோபத்துக்கு இரையானான். உடன் பிறந்த தம்பியை அவமானப்படுத்தி, ஊரைவிட்டுத் துரத்திவிட்டு சினத்தை வளர்த்துக் கொண்டே போனான். கோபம்-'மன்யு' என்று கோபத்தின் மூலத்திற்கு வடமொழியில் பெயர்-இது வாலியை ஏமாற்றி அவனைப் பாவத்தில் தள்ளிற்று.
'காமம்'-'மன்யு' இவை இரண்டும் எல்லாக் குற்றங்களுக்கும் காரணம். இவற்றை உள்ளம் என்கிற கோட்டைக்குள் விடாமல் மனத்தைக் காப்பாற்றினாலேதான் தப்புவோம்.
*
சுக்ரீவன் பிரலாபிக்கலானான்: “நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் என்னைக் கொல்லாமல் 'ஓடிப்போ உயிர் தப்பிப் பிழை!' என்று சொல்லி அண்ணன் என்னைத் துரத்தினான், அவ்வளவே! நானோ அவனைக் கொல்லச் சதி செய்து அவனைக் கொன்றும் விட்டேனே! என்னைப் போன்ற பாதகன் உலகத்தில் இல்லை சாகும் தறுவாயில் 'ராஜ்யத்தை நீ எடுத்துக் கொள்' என்று என்னிடம் சொல்லித் தன்னுடைய ராஜ்யத்தையும் இந்திரன் தந்த சக்தி மாலையையும் தன் கையால் எனக்குத் தந்தானே! இவனல்லவோ மகான்! நீசனாகிய நான் உயிர் வைத்துக் கொண்டு பிழைப்பதில் என்ன பயன்? உலகத்துக்கு ஒரு சூரனாக இருந்த என் அண்ணனைக் கொன்றேனே!'” என்று தன் பெருங் குற்றத்தை உணர்ந்து அழுதான்.
*
வருஷத்துக்கு ஒருமுறையாவது 'காமோ கார்ஷீத்’ ‘மன்யுரகார்ஷீத்'—சந்தியைப் பிரித்தால் - காம: அகார் ஷீத், மன்யு: அகார்ஷீத்-அதாவது 'ஆசை என்னை ஏமாற்றி பாபம் செய்யச் செய்தது; கோபம் என்னை ஏமாற்றிப் பாபம் செய்யச் செய்தது' என்று வருந்தி அடக்கத்துடன் பல தடவை சொல்லி உள்ளத்தைச் சுத்தப்படுத்திக் கொள்வது வைதிகர்களின் ஜப முறை. இதை யாவருமே அனுசரித்தல் வேண்டும். ஜபம் செய்து உள்ளத்தை ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்துவிடவேண்டும். காமோகார்ஷீத் மன்யுரகார் ஷீத் நாராயணாயநம:
*
பிரலாபித்துக் கொண்டிருந்த தாரையினிடம் ராமன் மெள்ளச் சென்றான். பயந்தே சென்றான்.
தாரையானவள் தன் முகத்தில் கோபக் குறிகள் ஏதும் காட்டாமல், “வீரனே, எந்தப் பாணத்தால் என் புருஷனைக் கொன்றாயோ அதே பாணத்தைக் கொண்டு என்னையும் கொன்று என் பர்த்தாவை நான் சேரும்படி செய்வாயாக. என்னைவிட்டு அவர் சுவர்க்கத்திலும் சந்தோஷப்பட மாட்டார். பெண்ணைக் கொன்ற பாபம் உனக்கு உண்டாகும் என்று பயப்படாதே! புருஷனையும் மனைவியையும் ஒன்று சேர்த்த புண்ணியமே உனதாகும். என் புருஷனை அதர்ம முறையில் கொன்றதற்கு இதுவே உனக்குப் பிராயச்சித்தமாகும். வாலி இறந்த பிறகு நான் பிழைத்திருக்க முடியாது!” என்று மகாவீரனுடைய பட்ட மகிஷிக்கு உரித்தான மொழிகளைப் பேசிப் புலம்பினாள்.
*
இவ்விடத்தில் தாரை ராமனுடைய அவதார உண்மையை அறிந்து ராமனை மகாவிஷ்ணுவாகவே கண்டாள் என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
லக்ஷ்மணன் தாயாகிய சுமித்திரையைப் பற்றி வழங்கி வருவது போலவே, வாலியின் மனைவி தாரையும் மகா அறிவாளி, ஞானி என்பது பரம்பரையாக வந்த அபிப்பிராயம். ஆனபடியால் அவள் தன் புருஷனை அதர்ம முறையில் கொன்றவன் மேல் கோபமும் வெறுப்பும் முதலில் கொண்டிருந்தாலும் நேரில் தரிசனம் அடைந்ததும் ராமனுடைய உண்மைச் சொரூபத்தைக் கண்டாள் என்று சொல்லப்படுகிறது.
வெறுங் கதையாகப் படித்தால் இது ரஸமாகத் தோன்றாது. பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு இது அசம்பாவிதமாகத் தோன்றாது. துளசிதாஸருடைய ராமாயணத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில் பரமசிவன் பார்வதிக்குச் சொல்வதாகப் பாடுகிறார்:
“உமையே, பார்த்தாயா? சுவாமியாகிய ராமன் எல்லோரையும் எப்படிப் பொம்மையாட்டம் ஆடச் செய்கிறான் என்று.”
பக்திக் கண்களால் பார்த்தால்தான் பழைய புராணங்களின் சாரம் நன்றாகக் காண முடியும். சாதாரணமாக விமரிசனம் செய்தாலும் தாரை மிக சாமர்த்தியசாலி, ராஜ நீதியில் தேர்ச்சி பெற்றவள். முன்னால் நடக்கப் போவதை ஊகித்து அறியும் சக்தி அவளுக்கிருந்ததை வாலியே சொல்லியிருக்கிறான். நடந்தது நடந்துவிட்டது; சுக்ரீவன் தன்னுடைய சாமர்த்தியத்தாலும், தெய்வச் செயலாலும் ராமனுடைய துணையைச் சம்பாதித்து விட்டான்: வாலி இறந்துவிட்டான்; இனி அங்கதனுடைய க்ஷேமத்தைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டும்? அங்கதன் சுக்ரீவனோடு விரோதம் செய்து கொண்டு சண்டை பிடிக்க முடியுமா? சுக்ரீவனுக்கு வில்லேந்திய ராம லக்ஷ்மணர்கள் சகாயமாக ஏற்பட்டு விட்டார்கள்: ஆனபடியால் நீதி சாஸ்திரப்படி இந்தச் சமயத்தில் சாமோபாயமே மேல் என்பதை தாரை கண்டாள். ஆனபடியால் ராமனிடம் தன் கோபத்தை மறைத்துப் பொறுமையுடன் நடந்து கொண்டாள். அங்கதனுடைய வாழ்க்கை பாழாகப் போகாமற்படி காக்கும் வழியைத் தேடினாள்.
வாலிக்கு உத்தரகிரியை விமரிசையாக நடத்தப்பட்டு முடிந்தது. மங்கள ஸ்நானம் செய்வித்து, சுக்ரீவனுக்கும் அங்கதனுக்கும் முறையே ராஜ்யாபிஷேகமும் யுவராஜ்ய பட்டாபிஷேகமும் செய்யப்பட்டன.
*
மழைக்காலம் ஆரம்பித்தது. சுக்ரீவன் முதலியவர்கள் கிஷ்கிந்தாபுரத்தில் சுகமாகக் காலங் கழித்தார்கள். ராம லக்ஷ்மணர்கள் பக்கத்திலிருந்த ஒரு மலைக் குகையில் காலங் கழித்தார்கள். மழையால் வெள்ளப் பெருக்கெடுத்து, காட்டுப் பாதைகள் நீரோட்டமாக ஓடி, போக்குவரத்துத் தடைபட்டுக் கிடந்தது. சீதையைத் தேடும் காரியம் அதனால் தடைபட்டது. சீதையின் நிலையை எண்ணி எண்ணி ராமன் மிகவும் துக்கப்பட்டான். மாரி காலம் முடிவாகும் வரையில் பொறுமையோடு இருக்கவேண்டும் என்று லக்ஷ்மணன் ராமனுக்குச் சொல்லிச் சமாதானப்படுத்தி வந்தான். ராமனும் அப்படியே பொறுத்திருந்தான்.
எத்தனை பெரிய துக்கம் நேர்ந்தாலும் காலக்கிரமத்தில் உள்ளத்தில் நாம் பெற்றிருக்கும் மறதி என்ற சக்தியினால், துக்கம் வர வர மறைந்து போய், வாழ்க்கையில் கவனம் செலுத்தி அமைதி அடைகிறோம். ஈசுவரன் அமைத்திருக்கும் இந்த மறதி என்னும் சக்தி நமக்கு மிகப் பெருஞ்செல்வமாகும். அது இல்லையேல் இந்த உலகம் துயரத்துக்கு மேல் துயரமாகக் குவிந்து நரகமேயாகிவிடும். இந்த நியதியின்படி சுக்ரீவனும் அவன் பந்துக்களும் தாரையும் உள்பட எல்லாரும் வாலியை இழந்த துக்கத்தை மறந்து சீரும் சிறப்பும் நிறைந்த கிஷ்கிந்தையில் சந்தோஷமாக இருந்தார்கள்.
ஹநுமான் மட்டும் கவலைப்பட்டான். அவன் ராமனுடைய காரியத்தை மறக்கவில்லை. பிரதிக்ஞை செய்து கொடுத்ததைப் பற்றி அரசனிடம் மெதுவாகப் பேசுவதற்குத் தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
மழைக் காலம் முடிந்தது. ஆகாயம் மேகமும் மின்னலும் இல்லாமல் வெண்மையாகி விட்டது. பறவைகளும் பறந்து விளையாட ஆரம்பித்து விட்டன. மகா புத்திசாலியும் தர்மத்தினின்று என்றும் பிறழாத உள்ளத்தைப் பெற்றவனுமான ஹநுமான் தன் அரசனிடம் சென்றான்.
ராஜ காரியங்களையெல்லாம் மந்திரிகளிடத்தில் ஒப்புவித்து விட்டு, அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று வினயமாகப் பேசலானான். எத்தனை அறிவாளிகளும் நல்லவர்களுமானாலும் சுக போகத்தில் மூழ்கி விட்டால் கடமைகளை மறந்து விடுவது இயற்கை என்பது ஹநுமானுக்குத் தெரிந்த விஷயம்.
கருத்துரையிடுக