அதிகப் பார்வை

60. கோபம் தணிந்தது (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

“முன்னோர்கள் அனுபவித்த ராஜ்யத்தை அடைந்து விட்டீர். புகழும் பெற்று விட்டீர். உம்முடைய அதிகாரம் ஸ்திரமாகி விட்டது. ஆனால் மித்திரர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து அவர்களுடைய சிநேகத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டியது எஞ்சி நிற்கிறது. அதைச் செய்தால் அல்லவோ உம்முடைய புகழ் இன்னும் பெருகும். ராஜ்யமும் பலப்படும். தன் காரியங்களையும் சுகங்களையும் புறக்கணித்துங்கூடத் தன்னுடைய நண்பர்களின் காரியத்தை வாக்களித்தபடி செய்ய வேண்டும். அப்படிச் செய்து தீர்த்தால் அரசனுடைய பலமும் கீர்த்தியும் விருத்தியடையும். பிரதிக்ஞை செய்து கொடுத்த வாக்குறுதிப்படி, சொன்ன காலத்துக்கு முன்னாலேயே அதைச் செய்து தருவது விசேஷம். காலதாமதம் கூடாது. செய்ய வேண்டியதைக் கால தாமதம் செய்து விட்டு, பின்னால் செய்தாலுங்கூட அது பயன் தராது. மித்திரர்களுக்குச் செய்ய வேண்டியதை அவர்கள் அதைப்பற்றி ஞாபகப்படுத்துவதற்கு முன்பே செய்வது புத்திசாலித்தனம். தாமதப்பட்டுச் செய்வதில் குணக் குறைவு. இது உமக்குத் தெரிந்த விஷயமே. ராமன் நமக்குச் செய்த உதவியை நாம் நினைவில் வைத்து அவனுக்காக நாம் செய்ய வேண்டியதை அவன் நமக்கு நினைவூட்டுவதற்கு முன்னதாகவே நாம் ஆரம்பிக்க வேண்டும். மாரி காலம் முடிந்து விட்டது. இனி தாமதிக்கக் காரணமில்லை. சீதையைத் தேடவேண்டிய பெருங்காரியத்தை இனி ஒத்தி வைப்பது தகாது. ராமன் அதைப்பற்றி மிகப் பொறுமையாகவே இருந்து வருகிறான். ஆனாலும் இனிக் கொஞ்சமேனும் தாமதிக்கலாகாது. ராமன் உம்முடைய சத்துருவைக் கொன்றதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதிலுள்ள பெரிய அபாயத்தையும் பழியையும் கருதாமல் எவ்வளவு துரிதமாகச் சொன்னபடியே செய்து விட்டான். நாமும் அவ்வாறே வாக்குறுதியைச் சீக்கிரமாக நிறைவேற்ற வேண்டும். கால தாமதம் செய்வது கூடாது.”

*

இவ்வாறு மிக வினயமாக நீதி முறையை எடுத்துக் காட்டி மாருதி சுக்ரீவனுக்கு யோசனை சொன்னான். சுக்ரீவனும் அது சரி என்று ஒப்புக்கொண்டு, சரியான காலத்தில் யோசனைகள் சொன்னதற்காக ஹநுமானுக்கு நன்றி செலுத்தி வானர சேனையைத் திரட்டச் சொல்லி நீலனுக்கு உத்தரவிட்டான்.


“பூமி முழுவதும் சுற்றித் தேடிப் பார்த்து சீதையைக் கண்டு பிடிக்க வேண்டும். திறமை வாய்ந்த வானரர்களை உடனே வந்து சேரக் கண்டிப்பாக உத்தரவிடுவாய். வந்து சேராதவர்களுக்கு மறு விசாரணையின்றித் தண்டனை விதிக்கப்படும்” என்று சொல்லிவிட்டு சுக்ரீவன் தன் அந்தப்புரத்துக்குள் சென்றான்.

*

ராமனும் லக்ஷ்மணனும் தங்களுடைய குகையில் காலம் கழித்து வந்தார்கள். எப்போது மாரி காலம் முடிந்து வானர ராஜன் தன்னுடைய பணியைச் செய்வான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


மழையெல்லாம் முடிந்து வனமும் வனத்தில் வசிக்கும் பிராணிகளும் மிகுந்த அழகுடன் பிரகாசித்து வருவதை ராமன் பார்த்து அரக்கன் கையில் அகப்பட்டுத் தவிக்கும் சீதையைப் பற்றி எண்ணியெண்ணித் துயரத்தில் மூழ்கினான்.


“உலகமெல்லாம் சௌந்தரியமும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. சீதை எங்கேயோ தவித்துக் கொண்டிருக்கிறாள். நானோ இங்கே நன்றி மறந்த வானர ராஜனுடைய தயவை எதிர்பார்த்துக் கொண்டு சும்மா கிடக்கிறேன். ஆஹா! நான் சென்ற தண்டகாரண்யத்தை ஒரு உத்யான வனமாகக் கருதி என்னுடன் முள் மேலும் கல் மேலும் துள்ளிக் குதித்துச் சந்தோஷமாக நடந்து வந்தாளே. அவள் இந்தச் சமயத்தில் என்ன கஷ்டப்படுகிறாளோ! இந்த வானர ராஜனோ மதுபானத்தில் மூழ்கி, பெண்களோடு கூடி கிராம்மிய சுகத்தில் ஈடுபட்டு எனக்குத் தந்த வாக்கை முற்றிலும் மறந்து விட்டான். இந்த வானர ராஜன் ஒரு கயவனாகத் தெரிகிறது. லக்ஷ்மணா! நீ உடனே கிஷ்கிந்தைக்குப் போய் வானர ராஜனைக் கண்டு சொல்: ‘உன் அண்ணனை அனுப்பிய யமாலயத்தின் வாயில் திறந்து உனக்காகவும் காத்திருக்கிறது. தெரிந்து கொள். வாலி சென்ற வழி நீயும் போக விரும்புகிறாயா?' என்று நான் கேட்டதாக அவனுக்குப் பளிச்சென்று சொல்லிப் புத்தி புகட்டுவாய்.


செய்த உபகாரத்தை மறந்தவன் அழிந்து போவான். மித்திரனை ஏமாற்றப் பார்ப்பவன் கதி அதோகதியாகும். ராமனுடைய வில்லும் அம்பும் தயாராக இருக்கின்றன’ என்று அவனுக்குச் சொல்.


மாரி மாதங்கள் நான்கும் முடிந்து விட்டன. நான்கு மாதங்களும் ராமனுக்கு நான்கு யுகங்களாகக் கழிந்தன. நீயும் உனக்கு அடங்கியவர்களுமோ சந்தோஷமாகப் போகங்களை அனுபவித்து வருகிறீர்கள். ராமனுடைய கோபத்தை வளர்த்து வருகிறீர்கள். நாசமடைவதற்கு வழி தேடுகிறீர்கள் என்று சொல்வாய்.”


இப்படி ராமன் தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் சுக்ரீவனுக்குத் தெரியப்படுத்தச் சொல்லித் தம்பி லக்ஷ்மணனை அனுப்பினான்.

*

லக்ஷ்மணன் புறப்பட்டான். அண்ணனுடைய துயரத்தையும் நெருப்பைப் போன்ற கோபத்தையும் அப்படியே ஏற்று வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போனான்.


உடனே ராமன் யோசிக்கலானான். லக்ஷ்மணனுடைய சுபாவமறிந்தவனானபடியால் இது அபாயத்தில் முடியும் என்று எண்ணித் தம்பியைக் கூப்பிட்டு மறுபடியும் ராமன் பேசலானான்.


“சுக்ரீவனிடம் என் கோபத்தைச் சொல்லும் போது கடுஞ் சொற்கள் உபயோகிக்க வேண்டாம். என்னவாயினும் அவனை நாம் சிநேகிதனாகக் கொண்டு விட்டோம். அவனுடைய தவற்றை மட்டும் எடுத்துக் காட்டு” என்று எச்சரித்து அனுப்பினான்.


லக்ஷ்மணன் “அப்படியே!” என்று சொல்லிச் சென்றான். ஆயினும் மகா கோபத்தோடேதான் கிஷ்கிந்தை வாயிலை அணுகினான்.


லக்ஷ்மணனுடைய கோபத் தோற்றத்தையும் கையிலிருந்த ஆயுதங்களையும் பார்த்து, வானரக் காவலாளிகள் ஏதோ விபரீதம் நடக்கும் போலிருக்கிறது, கோட்டையை ஜாக்கிரதையாகக் காக்க வேண்டும் என்று ஆயத்தமானார்கள்.


அவர்களுடைய இந்த நடவடிக்கையைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.


சில வானரர்கள் ஒரே ஓட்டமாக ஓடி அந்தப்புரத்திலிருந்த சுக்ரீவனுக்கு விஷயத்தைச் சொன்னார்கள். “லக்ஷ்மணன் பெருங் கோபமாய் வில்லும் பாணமுமாக வந்து கொண்டிருக்கிறான். தடுத்தாலும் நிற்கவில்லை” என்றார்கள்.


வானர ராஜனோ கள்ளும் ஸ்திரீகளுமாக அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடந்தான். வானரர்கள் சொன்னது அவன் காதில் ஏறவில்லை.


ராஜ சேவகர்களுடைய உத்தரவின் பேரில் குகை வாயிலைச் சேனையாட்கள் பலமாக நின்று யாரும் உள்ளே பிரவேசிக்காமல் காவல் காத்தார்கள். இப்படி நிகழ்ச்சிகள் மேன்மேலும் இளைய பெருமாளுக்குக் கோபம் மூட்டும் முறையில் வளர்ந்து கொண்டு போயின.

*

தடையை மீறி லக்ஷ்மணன் உள்ளே பிரவேசித்தான். முதலில் அங்கதனைக் கண்டான். வாலியின் குமாரன் அங்கதனைக் கண்டதும் லக்ஷ்மணனுடைய கோபம் ஓரளவு தணிந்தது.


“குழந்தாய்! போய் வானர ராஜனிடம் தெரியப் படுத்துவாய்! ராமசந்திரனுடைய துயரத்தால் தம்பி லக்ஷ்மணன் மிக வருத்தத்துடன் அரண்மனை வாயிலில் அரசனைப் பார்க்கக் காத்திருக்கிறான் என்று சொல்வாய்!” என்றான்.


அங்கதன் அந்தப்புரம் போய் சுக்ரீவனிடம் விஷயத்தை மிக வினயமாய்த் தெரிவித்தான்.


ஆனால் கிராம்மிய போகத்தில் மூழ்கியிருந்த சுக்ரீவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. இதைக் கண்டு அங்கதன் மிகவும் வருத்தப்பட்டான். அந்தரங்க மந்திரிகளுடன் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.


ஹனுமான் உள்பட சில மந்திரிகள் உள்ளே சென்று சுக்ரீவனுக்கு விஷயங்களை நன்றாக எடுத்துக் காட்டி அவன் புத்தி தெளிவடையச் செய்தார்கள்.


“நான் ஒரு பிசகும் செய்யவில்லையே? என் நண்பர்களாகிய ராம லக்ஷ்மணர்களுக்கு என்மேல் ஏன் கோபம்? யாரோ விரோதிகள் கோள் சொல்லி அவர்களுடைய மனத்தைக் கெடுத்திருக்க வேண்டும்” என்றான் சுக்ரீவன்.


ஹனுமான் “அரசனே, நான் சொல்லக் கடமைப் பட்டவன், சொல்லுகிறேன். கோபித்துக் கொள்ளக் கூடாது. ராமனுக்கு நாம் செய்த பிரதிக்ஞையை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமசந்திரனுடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இது நமக்கு அபாயமாக முடியும். ஆனபடியால் செய்ய வேண்டியதைச் செய்வீர். லக்ஷ்மணனிடம் மன்னிப்புக் கேட்டு இனித் தாமதப் படுத்தாமல் ராமனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்” என்றான்.


இதன்மேல் சுக்ரீவன் லக்ஷ்மணனை அழைத்து வரச் சொன்னான்.


லக்ஷ்மணன் சென்றான். கிஷ்கிந்தையின் அழகையும் உன்னத நாகரிக நிலையையும் பார்த்து வியந்தான். அழகிய தெருக்களின் வழிச்சென்று சுக்ரீவனுடைய அந்தப்புரத்துக்கு வெளியே நின்றான். உள்ளிலிருந்து மகிழ்ச்சி ஓசைகளும் ஆட்டமும் பாட்டும் கேட்டு, இவர்கள் தங்கள் கடமையை முற்றிலும் மறந்துவிட்டு இப்படிப் போகத்தில் மூழ்கியிருக்கிறார்களே என்று கோபம் இன்னும் அதிகமாயிற்று. ஆயினும் ஸ்திரீகள் நிறைந்து கிடக்கும் அந்த இடத்துக்குள் போகக் கூச்சப்பட்டுத் தூர ஒரு மூலையில் நின்று வில்லின் நாணை இழுத்து ஒலியெழுப்பினான்.


அந்த ஒலி கிஷ்கிந்தா நகரத்தை நடுங்கச் செய்தது. நாண் ஓசையைக் கேட்டதும் சுக்ரீவன் பயந்து எழுந்து இளைய ராஜகுமாரன் உண்மையில் ஏதோ கோபமாக வந்திருக்கிறான் என்று அபாயத்தை உணர்ந்து கொண்டு தாரையைக் கேட்டுக்கொண்டான். அவளை முன்னதாகச் சென்று லக்ஷ்மணனைச் சமாதானப் படுத்தும்படி கேட்டுக் கொண்டான்.

*

தாரை லக்ஷ்மணனிடம் சென்றாள். அழகிலும் உலக விஷயங்களைப் பற்றிய சாமர்த்தியத்திலும் பேச்சு நயத்திலும் அவளுக்குச் சமானம் யாருமில்லை. அவள் லக்ஷ்மணனுக்குச் சொன்னாள் :


“வெகு நாட்கள் தரித்திரத்தையும் பகைவன் தொந்தரவையும் பொறுத்துக் கஷ்டப்பட்ட சுக்ரீவன் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த ராஜ்ய சுகங்களை அனுபவித்து வருகிறான். போகத்தில் புத்தி மயங்கி விட்டான். அவன் குற்றம் எனக்குத் தெரியாததல்ல. நீங்கள் அவன்மேல் கோபம் கொள்ளலாகாது.


எல்லாம் தெரிந்த நீங்கள் பொறுமையிழக்கலாகாது. மதுபானத்திலும் பிராக்ருத போக மயக்கத்திலும் மூழ்கிய சுக்ரீவனைப் பூரண அறிவைப் பெற்ற நீங்கள் மன்னிக்க வேண்டும். அவன் உங்களுக்குச் செய்ய வேண்டியதை மறந்து விடவில்லை. பல இடங்களிலுள்ள நம்முடைய வீரர்களையெல்லாம் வந்துசேர உத்தரவு பிறப்பித்திருக்கிறான். அவர்கள் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். பிறகு சீதையைத் தேடும் வேலையும் ராவணனை எதிர்த்து வெற்றி பெறும் வேலையும் நடைபெறும், சந்தேகப்பட வேண்டாம். அரசனைப் பார்க்க உள்ளே வரலாம்” என்று அழைத்துச் சென்றாள்.


லக்ஷ்மணன் கோபம் தணிந்து உள்ளே சென்றான். கோபம் தணிந்த நிலையில் வந்த லக்ஷ்மணனைப் பார்த்து சுக்ரீவன் மிகச் சந்தோஷப்பட்டு ஆசனத்திலிருந்து இறங்கி வணங்கினான்.


“நான் எந்தக் குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும். ராகவனுடைய சிநேகத்தாலும் வீரத்தாலும் அல்லவா நான் ராஜ்ய பதவியை அடைந்தேன். ராமன் செய்த உபகாரத்தை நான் மறப்பேனா? ராமனுடைய பராக்கிரமத்தை நான் அறிந்தவன் அல்லவா? என் துணையே இல்லாமல் பகைவர்களை நாசம் செய்யும் பலம் அவருக்கு உண்டு என்பது எனக்குத் தெரியும். நான் என் சேனைகளுடன் அவரைப் பின்பற்றிச் செல்வேன். அவ்வளவே. நிச்சயமாக ராவணன் அழிவான். சீதையைத் தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனே செய்யப்படும், நான் செய்த தாமதத்தை மன்னிப்பீர்களாக” என்று சுக்ரீவன் லக்ஷ்மணனிடம் சொன்னான்.


இதைக் கேட்ட லக்ஷ்மணன் மகிழ்ச்சி அடைந்தான்.


“உன்னைப் போன்ற தீரன் ராமனைத் தவிர வேறு யாருமில்லை. ரிச்யமூகம் வந்து ராமனைக் கண்டு அவன் துயரத்தைத் தணிக்கும் வார்த்தைகளைச் சொல்வாயாக” என்றான்.

*

ஒரே சிவிகையில் சுக்ரீவனும் லக்ஷ்மணனும் ஏறிச் சென்றார்கள். ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாடுகளையெல்லாம் ராமனுக்குச் சொல்லி அவனைத் திருப்திப் படுத்தினார்கள்.


ராமன் சந்தோஷமாகப் பேசினான் :


“உன்னைப் போன்ற நண்பன் உலகத்தில் வேறொருவனில்லை. மேகங்கள் மழை பெய்வதைப் போலும், சூரியன் இருட்டை நீக்குவதைப் போலும் சந்திரன் மக்கள் உள்ளத்தைக் குளிரச் செய்வதைப் போலும் யாருடைய ஏவுதலுமில்லாமல் உதவுவது உண்மை நண்பனுடைய சுபாவம். உன் நட்பை நான் சம்பாதித்தது என் பாக்கியம். இனி ராவணன் அவன் குலத்துடன் நிர்மூலமாவது நிச்சயம்.”


இவ்வாறு ராமன் தன் நன்றியையும் மகிழ்ச்சியையும் சுக்ரீவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பெருங் கூட்டமாக வானர வீரர்கள் தத்தம் சேனைகளுடன் சுக்ரீவன் அனுப்பியிருந்த உத்தரவின்படி பல்வேறு காடுகள் மலைகள் சமுத்திரக் கரைகளிலிருந்து வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் கிளப்பிய தூசியால் ஆகாயம் மறைந்து இருள் மூடி விட்டது.


பல்வேறு வடிவமும் நிறமும் கொண்ட வானரர்களும் கரடிகளும் கோடிக்கணக்காகக் குழுமிவிட்டார்கள். இந்த மாபெரும் சேனைக்குச் சொல்ல வேண்டியதைத் தகுந்தபடி சொல்லி அவரவர்களுக்குத் தாற்காலிமாக இருக்குமிடம் சுக்ரீவன் நியமித்தான்.


பிறகு யோசித்து சேனாதிபதிகளை எட்டுத் திக்குகளுக்கும் அவரவர்களுக்குச் சேர்ந்த வானரக் கூட்டங்களோடு சென்று சீதையைத் தேட உத்தரவிட்டான்.


இவ்விடத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் காட்டலாம். கம்ப ராமாயணத்தில் தாரையின் குணத்துக்குக் களங்கமோ குறையோ ஏதுமில்லாமல், வாலி இறந்த பின் அவளை விரதம் காத்த கற்பரசியாகச் சித்திரிக்கப் பட்டிருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் அப்படியில்லை. வாலி இறந்தபின் சுக்ரீவன் வசத்தில் ராஜ்யாதிகாரத்துடன் தாரை உள்பட அந்தப்புரம் முழுவதும் சேர்ந்து விட்டதாக வைத்துக் கொண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. சுக்ரீவன் கிராம்மிய சுக பரவசனாகிப் போய் மதுபானத்திலும் மூழ்கி ராம காரியத்தை மறந்து கிடந்தபோது தாரா தேவியையும் அதில் சேர்த்தே குறிக்கப்பட்டிருக்கிறது.


பழைய ராஜ குல சம்பிரதாயத்திலும் வேறு குலங்களிலும் அண்ணன் இறந்த பின் புருஷனையிழந்த அண்ணன் மனைவியைக் குலத்துக்கு எஜமானனான் தம்பி தன் மனைவியாகச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. அது அந்தக் காலத்து ஆசாரம். ஒரு காலத்து வழக்கத்தின் நன்மை தீமைகளை இன்னொரு யுகத்தில் ஆராய்ந்து உணர்வது கடினம், அதற்கு விசாலநோக்கமும் கற்பனா சக்தியும் வேண்டும்.


இந்தக் காலத்துச் சூழ்நிலைகளைக் கொண்டு ஆராய்ந்தாலும் ஒன்று வெளிப்படை. புருஷனில்லாத ஸ்திரீ ஒரு எஜமானனிடம் நெருங்கிப் பழகும் அவசியம் ஏற்பட்டால், அந்த ஸ்திரீயைப் பற்றி மக்களின் வாயை அடக்குவது கஷ்டம். விவாகம் செய்து கொண்டு விட்டால் இந்த அபாயமில்லை.


தவிர, வால்மீகி முனிவருடைய சித்திரத்தை வைத்துக் கொண்டாலும் நாம் தாரை பேரில் குற்றம் சாட்ட முடியுமா? அவள் மகா சாமர்த்தியசாலி; ராஜ நீதியும் உலகப் போக்கும் நன்றாய் அறிந்தவள்; வரப் போகும் சுக துக்கங்களை முந்தியே தெரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றவள். வாலி இறந்த பின் அங்கதனைப் பற்றியே அவளுடைய பெருங்கவலை. இந்தக் காரணத்தாலே தான் அவள் சுக்ரீவனுக்கு அடங்கிப் போனாள் என்று வைத்துக் கொள்ளவேண்டும்.


நம்முடைய இக்காலத்து நடவடிக்கைகளைத்தான் பார்ப்போமே. மனைவியையிழந்து அழுது புரண்டு அந்தரங்க சுத்தியுடன் துக்கப்பட்ட ஆண் மக்கள் எத்தனையோ பேர் மறுபடி விவாகம் செய்து கொள்வதைப் பார்க்கிறோமே! முன் காதலித்த மனைவியின் நினைவை நன்றாகக் குறைவின்றிக் கவுரவித்தே இப்படிச் செய்கிறதையும் பார்க்கிறோம். யோக்கியமாக இருப்பதையும் பார்க்கிறோம். அதில் யாதொரு தவறும் காண்பதில்லை. ஆண் மக்களின் நடவடிக்கைக்கு ஒரு தருமம் ஸ்திரீகளுக்கு வேறு தருமமா? தாரையை ஏன் குற்றம் சொல்லவேண்டும்? கற்பு என்பது இரு பாலருக்கும் ஒன்றே.


வாலி இறந்த பின் தாரை அந்தப்புரத்துக்கு எஜமானித் தாயாக விளங்கி சுக்ரீவனையும் அங்கதனையும் தன்னுடைய நுட்பமான புத்தியும் அறிவும் கொண்டு நன்றாகக் காப்பாற்றி வந்தாள். இது வால்மீகி ராமாயணத்தில் காணும் தாரை. கம்பருடைய தாரையோ விரதம் காத்து வந்த களங்கமற்ற விதவையாகவும் ராஜ மாதாவாகவும் விளங்குகிறாள். இது நம்முடைய மனத்துக்கு மிகப் பிடித்தமான புனிதச் சித்திரமாக இருக்கிறது. ஆனால் மற்றொன்றும் உலகானுபவத்துக்குப் பொருந்தியதாகத்தான் இருக்கிறது.


வால்மீகி ராமாயணத்திலும் பின்னால் ஒரு இடத்தில் கம்பருடைய சித்திரத்துக்கு ரொம்ப இடம் தரும் வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. (சுந்தர காண்டம் 13 : 28) இலங்கையில் கூர்ந்து தேடித் தேடி சீதையைக் காணவில்லை என்று துக்கத்தில் மூழ்கி இனி என்ன செய்யலாம், கிஷ்கிந்தைக்குத் திரும்பிப் போய் முயற்சி எல்லாம் வீணாயிற்று என்று தெரியப்படுத்தினால் என்னவெல்லாம் நேரிடுமோ என்று ஹனுமான் ஆராய்கிறான். அங்கே சொல்லப்படுகிறது வால்மீகி ராமாயணத்திலேயே: “சீதையைக் காணாமல் திரும்பினேனானால் சுக்ரீவன் இறப்பான். புருஷன் இறந்த பின் ருமை உயிர் வைத்திருக்க மாட்டாள். வாலி கொல்லப்பட்ட காலத்திலிருந்து துக்கத்தில் மூழ்கித் துரும்பாக இளைத்துப் போய் உயிரைத் துறக்கவே விரும்பி வரும் வானர அரசி தாரையும் உயிரை நீப்பாள்.” இவ்வாறு வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பது கம்பருடைய சித்திரத்துக்குச் சரியாக இருக்கிறது. இதை வைத்தே கம்பர் தம் ஒப்பற்ற கற்பனா சக்தியைச் செலுத்தி முழுச் சித்திரத்தையும் அதற்குத் தகுந்தவாறு உண்டாக்கிக் கொண்டு சில விஷயங்களை மாற்றிச் சரிப்படுத்திப் பாடியதாக எண்ணுகிறேன்.



Post a Comment

புதியது பழையவை