“இதோ பார்! ராமனே, இந்தக் கோடிக்கணக்கான வானரர்களடங்கிய சேனை முழுதும் உன்னுடைய சேனை; இந்த அபூர்வ பலம் கொண்ட வானரர்கள் அனைவரும் உன்னுடைய ஆட்கள், உன் பணியைக் குறைவறச் செய்யும் ஆசையும் பலமும் பெற்றவர்கள்: நீ இடும் ஆணையைச் செய்து முடிப்பவர்கள். இந்தப் பெருஞ்சேனையை உன் பொருளாகவே கருதி என்ன வேண்டுமோ அதைச் செய்ய உத்தர விடுவாய்” என்றான் சுக்ரீவன்.
இதைக் கேட்ட ராமன் மகிழ்ச்சி பரவசனாகி சுக்ரீவனை அணைத்துக் கட்டிக் கொண்டான்.
“முதலில் கண்டறிய வேண்டியது சீதை உயிரோடிருக்கிறாளா, எங்கே இருக்கிறாள், ராவணன் எங்கே இருக்கிறான் என்பதை. பிறகு செய்ய வேண்டியதைச் செய்வோம். இந்தச் சேனைக்கு உத்தரவு இட வேண்டியவன் நீதான். நானாவது லக்ஷ்மணனாவது அல்ல. அரசன் நீ. தவிர நீதான் எல்லாம் அறிந்து செய்ய வேண்டியதைச் செய்யத் தெரிந்தவன். உன்னைப் போன்ற ஒரு நண்பன் தம்பி லக்ஷ்மணனோடு எனக்குக் கிடைத்த பாக்கியத்தை நான் என்னவென்று சொல்வேன்!” என்றான்.
பிறகு சுக்ரீவன் தன் சேனாதிபதிகளுக்குக் கண்டிப்பான ஆணையிட்டான்: நான்கு திக்குகளுக்கும் தன் பெருஞ் சேனையையும் தலைவர்களையும் பிரித்து ஒரு இடம் விடாமல் நன்றாகப் பார்த்து சீதையைத் தேடும்படி கடுமையான உத்தரவிட்டு அனுப்பினான்.
வானரத் தலைவர்கள் அனைவரையும் பல திசைகளுக்கு அனுப்பித் தேடச் சொன்ன பின் ஹனுமானைத் தனியாகக் கூப்பிட்டு சுக்ரீவன் சொன்னான்:
“வாயு குமாரனே! நீயே இந்தக் காரியத்தை முடித்துக் கொடுக்கக் கூடியவன். உன் தந்தையின் வேகமும் தேஜஸும் நீ பெற்றிருக்கிறாய். உனக்குச் சமமாக வேறு யாரும் உலகில் இல்லை. உன்னைத் தான் நான் இந்தப் பெருங்காரியத்தில் நம்பியிருக்கிறேன். பலம், புத்தி, பராக்கிரமம், உபாயம், அறிவு அனைத்தும் உன்னிடமிருக்கிறது. உனதே இந்தப் பொறுப்பு” என்றான்.
ஹனுமானால் காரியம் சித்தியாகும் என்று ராமசந்திரனும் உணர்ந்தான். எந்த இடையூறு நேர்ந்தாலும் இவன் அதற்குப் பரிகாரம் கண்டு செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பான் என்று உணர்ந்தான். தன் சொந்த மோதிரத்தை ஹனுமானிடம் தந்து “இதை வைத்துக் கொள்வாய். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்படுவாள். அவளுக்கு இதைக் காட்டினாயானால் என் தூதன் என்று அவளுக்கு உறுதியாகும். சீதையை நான் மறுபடி அடையும்படி செய்வாயாக!” என்று அன்போடும் பூரண நம்பிக்கையுடனும் ராமன் ஹனுமானைக் கேட்டுக் கொண்டான். சீதைக்காக வாடி, துயருற்ற ராமன் ஆஞ்சனேயனுக்கு மோதிரத்தைத் தந்த காட்சியை யாரே எழுதிக் காட்ட முடியும்? பூரண நம்பிக்கையுடன் தந்தான். வாயு புத்திரனும் மோதிரத்தைப் பக்தியுடன் வாங்கிக் கொண்டு ராமசந்திரனை வணங்கி விடை பெற்றுக்கொண்டு சென்றான்.
சுக்ரீவன் தன் வானரப் படைக்கு மிகக் கண்டிப்பான ஆணையிட்டான். “எப்படியாவது சீதையைக் கண்டு பிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப் பட்டிருந்தாலும் உங்களால் கண்டு பிடிக்க முடியும்; ஒரு மாதத்துக்குள் கட்டாயம் திரும்பி வந்து தன்னிடம் செய்தி சொல்ல வேண்டும்” என்று ஆணையிட்டு அனுப்பினான். அவர்களும் புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோல் கிளம்பி நான்கு திக்கிலும் சென்று விட்டார்கள்.
சதபலி என்கிற வானர வீரன் தன் சேனையுடன் வடக்கே சென்றான். வினதன் அவ்வாறே கிழக்கு நோக்கிச் சென்றான். சுஷேணன் மேற்கே தேடப் போனான். ஆஞ்சனேயன், அங்கதன், தாரன் தெற்கு நோக்கிச் சென்றார்கள்.
எல்லாரும் மிக உற்சாகமாகச் சென்றார்கள். எங்கிருந்தாலும் இந்தத் திருடன் ராவணனைக் கொன்று சீதையை மீட்டுக் கொண்டு வருவோம் என்று ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு உற்சாகமாக கோஷம் செய்து கொண்டு சென்றார்கள்.
*
“இந்தப் பூமி முழுதும் நேரில் கண்டபடி ஒவ்வொரு திக்கிலிருக்கும் பிரதேசத்தையும் நீ உன் படை வீரர்களுக்கு விளக்கிச் சொன்னாயே; இவ்வளவையும் நீ எப்படிக் கண்டாய்? எப்போது கண்டாய்?” என்று ராமன் வானரர் தலைவன் சுக்ரீவனைக் கேட்டான்.
“ஐயனே! நான் வாலியால் திரும்பத் திரும்பத் துரத்தியடிக்கப் பட்டேனல்லவா! நான் எங்கே சென்றாலும் அவன் என்னைத் துரத்திக் கொண்டு வருவான். உலகம் முழுதும் நான் இப்படி அலைந்தேனல்லவா? அந்தக் காரணத்தால் எனக்கு இந்தப் பூ மண்டலத்தில் ஒவ்வொரு பாகமும் நேரில் காணச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பிறகு இந்த மாதங்க ரிஷி ஆசிரம பூமியைப் பற்றி அறிந்தேன். இந்தப் பிரதேசத்திற்குள் வாலி நுழைந்தானானால் ரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும். அந்தக் காரணத்தால் அவன் இந்த இடம் வரமாட்டான். வந்தாலும் எனக்கு அபாயமில்லையென்றறிந்ததும் இவ்விடம் மறைந்து பிழைத்தேன்” என்றான்.
*
வானரப் படைகளில் வடக்கும் கிழக்கும் மேற்கும் போனவர்கள் ஒரு மாதம் தேடிப் பார்த்துவிட்டு, சீதையைக் காணாமல் திரும்பி வந்து வானர ராஜனிடம் விஷயத்தைச் சொல்லி வணங்கினார்கள்.
“காடுகள், மலைகள், ஆறுகள், நகரங்கள் எல்லாம் ஜாக்கிரதையாகத் தேடிப் பார்த்து விட்டோம். எங்கும் காணவில்லை. ஜானகியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துத் திரும்பி வர எங்களுக்குப் பாக்கியமில்லாமல் தெற்கே போயிருக்கும் ஹனுமானுக்கே அந்த அதிர்ஷ்டம் போலிருக்கிறது. அரக்கன் சீதையைத் தூக்கிப் போனதும் தென் திசை நோக்கியே அல்லவா? ஹனுமான் இன்னும் திரும்பி வரவில்லை” என்றார்கள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமன் வானரர்கள் செய்து வந்த முயற்சிகளைப் பற்றித் திருப்தியடைந்தான்.
*
ஹனுமானும் அங்கதனும் தெற்கே தேடிக் கொண்டு சென்றார்கள். விந்திய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களையும் தேடிப் பார்த்தார்கள். பிறகு ஒரு பெரும் பாலைவனத்தைக் கண்டார்கள். அவ்விடம் ஒரு ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய சாபத்தால் அவ்விடம் ஒரு மரமும் செடியும் மிருகங்களும் பக்ஷிகளுமில்லாமல் சூன்யமாக இருந்தது. அங்கேயும் தேடிப் பார்த்துவிட்டுப் பிறகு வேறு பிரதேசம் சென்றார்கள். அங்கே ஒரு பெரிய அசுரனைக் கண்டார்கள். மகா கொடியவனான அந்த அசுரன் வானரர்கள் கூட்டமாக வருவதைக் கண்டு நல்ல போஜனம் கிடைத்தது என்று சந்தோஷமாக அவர்களைப் பிடிக்கத் தாவினான்.
தங்களை எதிர்த்த அரக்கன் ராவணனாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்கள். அங்கதன் அவன் மேல் பாய்ந்து ஒரு அறை அறைந்தான். அந்த அடியைத் தாங்கமாட்டாமல் அரக்கன் ரத்தம் கக்கிக் கொண்டு கீழே ஒரு மலைபோல் விழுந்தான். வானரர்கள் ராவணன் செத்தான் என்று மகிழ்ச்சி அடைந்து, பிறகு காடு முழுதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதையாவது ஒரு அறிகுறியுமாவது காணவில்லை. பிறகு வேறு இடங்களைத் தேடிச் சென்றார்கள்.
பல சமயங்களில் எவ்வளவு தேடியும் பயன் காணவில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு உட்காருவார்கள். பிறகு அங்கதன், கந்தமாதனன் முதலியோர் தைரியம் சொல்லி மறுபடியும் தேடிச் செல்வார்கள். இப்படிப் பல நாட்கள் கழிந்துவிட்டன. சீதையைக் காணவில்லையே, சுக்ரீவனோ கடுமையான தண்டனை விதித்து விடுவானே, என்ன செய்வது என்று தெற்கு நோக்கிப் போன வானரர்கள் வெகு தூரம் தேடிக்கொண்டே சென்றார்கள்.
பசியாலும் தாகத்தாலும் வாட்டப்பட்ட இந்த வானரப் படையினர் ஒரு பெரிய குகையைக் கண்டார்கள். அந்தக் குகையிலிருந்து அநேக வகைப் பறவைகள் சந்தோஷமாக வெளி வந்து கொண்டிருந்தன. உடல் முழுவதும் தாமரைப் புஷ்பத்து மகரந்தப் பொடி பூசிய நீர்ப் பறவைகளைக் கண்டும் நல்ல வாசனையோடு காற்று வீசுவதையும் பார்த்து, ‘இந்தக் குகைக்குள் தண்ணீர் இருக்கும். உள்ளே புகுவோம்’ என்று தாகத்தால் மிக வருந்திய வானரர்கள் புகுந்தார்கள்.
பேரிருள் மூடியிருந்த அந்தக் குகைக்குள் வானரர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு மெள்ள வெகு தூரம் சென்றார்கள். வானரர்களில் சிலர் மிகக் களைத்துப் போய், ‘ஐயோ! தாகம், தாகம்’ என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்கள். வெகு தூரம் இப்படி இருட்டிலேயே சென்ற பிறகு திடீர் என்று வெளிச்சம் தோன்றி மிக ரம்மியமான வனத்தைக் கண்டார்கள். போகப் போக மிக அதிசயமான மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தைக் கண்டார்கள். தங்க மயமாக அற்புத அழகோடு தெருக்களும் மாளிகைகளும் சொல்ல முடியாத சௌந்தர்யம் கொண்டு பிரகாசித்தன.
அங்கே ஓரிடத்தில் மரவுரி தரித்து மான் தோல் விரிப்பு மேல் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிக ஸ்திரீ தபஸ்வியைக் கண்டார்கள். அவள் முகத்தின் திவ்விய தேஜஸைப் பார்த்து வானரர்கள் நடுங்கினார்கள்.
ஹனுமான் தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டு தபஸ்வியை வணங்கிப் பேசலானான் : “தாயே, நமஸ்காரம்! தாங்கள் யார்? இந்த விசித்திரக் குகையைப் பற்றியும் தங்களைப் பற்றியும் சொல்லவேண்டும்! நாங்கள் மிகப் பசியும் தாகமும் களைப்புமாக இந்த இருள் மூடிய குகைக்குள் புகுந்தோம். தண்ணீர் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு உள்ளே நுழைந்தோம் இங்கே தங்கமயமான விசித்திர மாடமாளிகைகளும் மரங்களும் குளங்களும் பார்த்து எங்களுக்குப் பயம் உண்டாகிறது. விஷயத்தைச் சொல்லி எங்கள் பயத்தைப் போக்க வேண்டுகிறேன்” என்றான்.
“வானரர்களே, நீங்கள் இந்த இருள் மூடிய குகை வாயிலை எப்படிக் கண்டு எவ்வாறு உள்ளே பிரவேசித்தீர்கள்? இங்கே உங்களுக்கு வேண்டிய தண்ணீரும் ஆகாரமும் இருக்கின்றன. பசியும் களைப்பும் தீர்த்துக் கொள்ளுங்கள். இந்த அழகிய மாளிகை தானவர்களுடைய விசுவகர்மாவான மயன் நிர்மாணித்தது. அவன் சுக்ராச்சார்யரிடம் நிர்மாண வேலையை நன்றாகக் கற்றவன். அவன் இங்கே வெகு காலமிருந்தான். பிறகு அவன் மேல் இந்திரன் பகை கொண்டு அவனை வதம் செய்து விட்டான். அதன் பின் இந்தப் பொன் மயமான மாளிகையை இந்திரன் ஹேமை என்கிற என் தோழி அப்சரஸுக்குக் கொடுத்தான். இந்த மாளிகைகள் உத்யான வனங்கள் முதலியவற்றுக்கு அவளே உரியவள் அவள் இப்போது தேவலோகம் சென்றிருக்கிறாள். உங்கள் காரியம் என்ன? ஏன் இந்த மாதிரிக் காடுகளில் திரிந்து களைப்படைந்தீர்கள்? பசியும் தாகமும் களைப்பும் தீர்த்துக் கொண்டு விவரமாகச் சொல்லுங்கள்” என்று அவர்களுக்கு ஆகாரமும் பானமும் வேண்டிய அளவு அமைத்துக் கொடுத்தாள்.
எல்லாரும் நீர் அருந்தி, நன்றாகப் புசித்து, மகிழ்ச்சியடைந்தார்கள். பிறகு ஹனுமான் வணக்கத்துடன் தபஸ்வியம்மைக்குக் காரியத்தை எடுத்துச் சொன்னான்.
“தசரத குமாரன் ராமன் பூமண்டலத்துக்கு அதிபதியானவன், அவன் தன் தம்பியுடனும் மனைவியுடனும் ஒரு காரணமாக ராஜ்ய பதவியை விட்டு வன வாசம் செய்து கொண்டிருந்தான். அப்போது அரக்கன் ஒருவன் ராமனுடைய மனைவி சீதையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவளைத் தேடிக் கொண்டு ராமனும் லக்ஷ்மணனும் வந்தார்கள். வானர ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனாகி விட்டான். ராமனுக்காகச் சீதையைத் தேடும்படி எங்களை வானர ராஜன் ஆணையிட்டனுப்பினான். அவன் இட்ட கால வரை இந்தக் குகையில் நாங்கள் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த காலத்தில் தாண்டி விட்டது இப்போது எங்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. எங்களுடைய அரசன் சுக்ரீவன் மிகக் கண்டிப்புக்காரன். அவன் இட்ட வேலையைக் குறித்த காலத்தில் செய்யவில்லையென்கிற காரணத்தால் எங்களைக் கொன்று விடுவான்” என்று ஹனுமான் சொன்னான்.
தபஸ்வியம்மை இதைக் கேட்டு, “நீங்கள் இப்போது வெளியில் போக முடியாதே! இந்தக் குகையின் சக்தி உங்களுக்குத் தெரியவில்லை. இதில் பிரவேசித்த அன்னியர்கள் மறுபடி வெளியில் உயிருடன் செல்லமுடியாது, மாண்டு போவார்கள். உங்கள் காரியமோ பெருங்காரியம். ஆனபடியால் கண் மூடிக் கொள்ளுங்கள். நான் என்னுடைய தவ வலிமையால் உங்களை வெளியேற்றுகிறேன்” என்றாள்.
அவர்கள் அவ்வாறே கண்களை மூடிக் கொண்டார்கள். உடனே தபோ பலத்தினால் கடற்கரையில் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
கருத்துரையிடுக