செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 10 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

குலசேகர ஆழ்வாரும் திருமலை பிரம்மோத்ஸவமும் !


திருமலையில் நடைபெறும் உற்சவங்களிலேயே மிக மிக முக்கியமான உற்சவம் பிரம்மோத்ஸவம். பிரம்மோத்ஸவம் என்பது ஆகமப்படி ஒவ்வொரு திருக்கோயில்களிலும் நடைபெறும் தலையாய உத்ஸவம். இந்த உத்ஸவத்திற்கு எத்தனையோ பொருள் உண்டு. ஆதியில் நான்முகன் தொடங்கி எம்பெருமானுக்கு நடத்திய உத்ஸவமாகக் கருதி, பிரமன் மற்ற தேவர்களோடு இணைந்து நடத்திய உற்சவம். எனவே பிரம்மோத்ஸவம் என ஓர் அர்த்தம் கொள்ளலாம்.


பிரம்மம் என்றால் பெரிது என்று பொருள். உற்சவங்களிலே பெரிதாக அதிக நாட்கள் நடைபெறும் உற்சவம் என்ற பொருளில் பிரம்மோத்ஸவம் எனலாம். யார் பிரம்மம் என்று காட்டுவதற்காக, பரம்பொருளான பகவான் தான் தான் பிரம்மம் என்று அறிவிக்க வரும் உற்சவம் பிரம்மோத்ஸவம் எனலாம். வேதம் அப்படித்தான் எம்பெருமானை பிரம்மமாகச் சொல்கிறது.


“நாராயணப் பரபிரம்மம் தத்வம் நாராயணப் பர:” என்பது வேத வாக்கியமன்றோ.


இந்தியாவில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில், பிரம்மோத்ஸவம் நடைபெற்றாலும் திருமலை பிரம்மோத்ஸவத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவியும் உற்சவம் பிரம்மோத்ஸவம்.


இதனைக்காணத்தான் குலசேகராழ்வார் "படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே" என்று இன்றும் குலசேகரன் படியாக எழுந்தருளி உற்சவத்தைக்கண்டு வருகிறார்.


படியாய்க் கிடந்து உற்சவம் காண்பது மட்டும் குலசேகரரின் நோக்கமல்ல. அப்படி யுகம் யுகமாய் கிடப்பதில் இன்னொரு நோக்கமும் ஆழ்வாருக்கு உண்டு. அதனை சூசகமாக தம் பாசுரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். பாசுரம் இது.


“காரினம் புரை மேனி நற்கதிர் முத்த வெண்நகைச் செய்யவாய் 
ஆரமார்வன் அரங்கனென்னும் அரும் பெரும் சுடரொன்றினை
சேரும் நெஞ்சினராகிச் சேர்ந்துக சிந்திழிந்த கண்ணீர்களால் 
வார நிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகும் என் நெஞ்சமே”


இதில் அரங்கன் என்று சொன்னாலும் திருமலையப்பனையும் குறிக்கும். காரணம் திருமலையில் நின்று அரங்கம் வந்து சேர்ந்த திருமலையெப்பன் தான் அரங்கன்.


"மந்தி பாய் வடவேங்கட மாமலை வானவர்கள் 
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்" என்பது திருப்பாணாழ்வார் பாசுரம்.


திருமலையில் நின்று ஓய்வெடுத்துத்தானே அரங்கம் சேர்ந்தான். இன்று எல்லா பெருமாள் கோயில்களிலும் உள்ள கருவறைப்படியை “குலசேகரன் படி” - என்றே அழைப்பர். அரங்கன் கோயில் படியும் குலசேகரன் படிதான். திருமலைக்கோயில் படியும் குலசேகரன் படிதான். ஆலயங்களுக்கு அன்புடன் பகவானைத் தேடி வரும் பக்தர்கள் தாளிணைகளைத் தன் மார்பில் தாங்க வேண்டும் என நினைக்கிறார் குலசேகர ஆழ்வார். அரங்கத்தில் அது நிறைவேறவில்லை. திருமலையில் தான் அந்த வேண்டுகோள் நிறைவேறியது. திருமலையில் பிரம்மோத்ஸவம் நடைபெறும் போது ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர். அத்தனை பக்தர்களையும் பார்க்க வேண்டும் என்றால் அங்கே படியாய் கிடந்தால் தானே முடியும்.


குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிப் பாசுரங்களில் அவன் வருடந்தோறும் காணும் பிரம்மோத்ஸவத்தின் சிறப்புக்களையும், கூறுகளையும், தத்துவங்களையும் காணலாம்.


பிரம்மோத்ஸவத்தின் மிகப் பெரிய செய்தி பகவான் பல்வேறு வடிவ அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் காண்பது.


அர்ச்சாவதாரத்தின் சிறப்பே இது தான். இத்தகைய வீதி உலாக்கள் நித்ய விபூதியான பரமபதத்திலும் இல்லை. எனவே உற்சவத்தை அனுபவிக்க பகவானும், உற்சவத்தை அனுபவிக்கும் பகவானை அனுபவிக்க பக்தர்களும், இருவரையும் மங்களாசாசனம் செய்ய ஆழ்வார்களும் மண்ணுலகிற்கே வந்தாக வேண்டும். அந்த மண்ணுலகிலும் பொருந்துமிடம் திருமலை.


அர்ச்சாவதாரத்தில் பிரம்மோத்ஸவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம் ஒவ்வொரு அலங்காரம். முதல் நாள் இரவு “பெரிய சேஷ வாகனம்”. குலசேகராழ்வார் இந்த சேஷனைத்தான். முதலில் பாடுகிறார். “இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்னும்” என்று எம்பெருமானின் சேஷ வாகன மங்களா சாசனத்துடன்தான் பெருமாள் திருமொழி தொடங்குகிறது. அடுத்த நாள் காலை “சிறிய சேஷ வாகனம்”. அன்று இரவு “ஹம்ஸ வாகனம்”. ஹம்ஸம் என்னும் அன்னம் பெரும்பாலும் நீர்த் தடாகத்தில் நிற்கும். அந்த அன்னத்தைப் பார்க்க நீரில் இருக்கும் ஏதேனும் ஒன்றாக இருப்பின் சௌகரியமாக இருக்கும். ஆழ்வார் சிந்திக்கிறார். நீரிலிருக்கும் பிறவியில், சிறந்தது மீன் அல்லவா. எனவே “திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே” என்கிறார்.


வேதம் என்பது அன்னம். அன்னமாய் நின்று அருமறை பயந்தான் என்பார் ஆழ்வார். அன்னமும் அதாவது வேதமும் பகவானும் பிரியாத நிலைகள். அந்த வேதமாகிய அன்னம் நிற்பது நீர் நிலை. அந்த நீர் நிலையைப் பிரியாது இருப்பது மீன். எனவே மீனாய்ப் பிறக்கும் வரத்தை திருவேங்கடத்தில் கேட்கிறார். அடுத்த நாள் மாலை பகவான் "சிம்ம வாகன"த்தில் வருகிறார். சிம்ம வாகனத்தில் யோகம் செய்யும் நிலையில் பகவான் நரசிம்மப் பெருமாளாய் வலம் வருகின்றார். ஆண்டாள் சிம்ம வாகனம் மட்டுமல்ல சிம்ம ஆசனத்தையும் சிலாகித்துப் பேசுகின்றாள். அவள் இந்த ஆசனத்துக்கு வைத்த பெயர் ‘கோப்புடைய சீரிய சிம்மாசனம்’. இரணியனுக்கு அவன் சீறிய சிம்மம். பிரகலாதனுக்கு அவன் சீரிய சிம்மம். சிம்மத்தின் மீது அமரும் போது அவன் செங்கோல் கம்பீரமாய் நிற்கும். நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை. நரசிம்மத்தில் அமரும் பகவானிடமும் இல்லை. இதில் நாம் செய்ய வேண்டியது அவன் அருள் நோக்கை நோக்கிக்கிடப்பது தான். இதை குலசேகர ஆழ்வார் காட்டுகின்றார். பகவானே நீ சிம்ம வாகனத்தில் வருகிறாய். அடியேன் உன் அருளே எதிர்பார்த்திருந்தேன்.


"தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே" என்கிறார்.


சிம்ம வாகனத்திற்கு அடுத்து அன்றிரவு "முத்துப்பந்தல்" வாகனத்தில் குளிர்ச்சியான முகத்தோடு கண்ணனெம்பெருமானாய் காளிங்க நடனம் செய்து வருகிறான். இந்த காளிங்க நர்த்தன விளையாட்டினைக் காணகுலசேகரருக்கு ஆர்வம் இல்லாமலிருக்குமா.... பாடுகிறார் பாருங்கள்


“குன்றினால் குடை கவித்ததும் கோலக் குரவை கோத்ததும் 
குடமாட்டும் கன்றினால் விளவெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்தது முதலா…” இந்த காளியன் தலை மிதித்த அற்புதக்காட்சி பிரம்மோத்ஸவத்தில் வருகிறது. அடுத்த நாள் பகல் "கல்ப விருக்ஷ வாகனம்". கேட்கும் வரத்தைத் தருவது கற்பக விருட்சம். ஆனால் நமக்கு எதைக் கேட்பது என்பது தெரியாதே. எனவே கேட்காத போதும் மனதின் எண்ணம் அறிந்து வரம் தருபவன் வேங்கடவன்.


திருவேங்கடத்தில் இருக்கும் ஒவ்வொரு, சோலையும் மரமும் செடியும் கொடியும் கற்பக விருட்சம் தான்.

திருவேங்கடத்தில் வண்டினங்கள் அமர்ந்து ரீங்காரமிடும் ஒரு செண்பக மரத்தைப் பார்க்கிறார். செண்பக மரமாக மாறினால் நன்றாக இருக்குமே, என நினைக்கிறார். அதை யாரிடம் கேட்டுப் பெறுவது. வேங்கடத்து கற்பக விருட்சத்திடம் கேட்கிறார்.


இதோ பாசுரம் : 


“ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள் 
கண் துயிலும் மாயோன் கழலிணைகள்
காண்பதற்கு பண்பகரும் வண்டினங்கள் 
பண்பாடும் வேங்கடத்து செண்பகமாய் 
நிற்கும் திருவுடையேன் ஆவேனே.” 


திரு என்றால் செல்வம். கற்பகமும் செல்வம் தான். அதனில் பவனி வரும் வேங்கடவனும் செல்வன் தான். செல்வத்தை உடைய செல்வனிடம் சென்று, செல்வம் பெற்று தான் செல்வராகிறார். குலசேகர ஆழ்வார். எனவே கற்பக விருட்சத்தையும் குலசேகரர் பாடியாயிற்று.


பகலில் கற்பக விருட்ச வாகனத்தில் பவனிவரும் பகவான் அன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் வருகின்றான். “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்” என்பார் நம்மாழ்வார்.
திருவுடை மன்னர்குலசேகர ஆழ்வார். காரணம், இவருக்கும் பெருமாள் என்று தான் பெயர். குலசேகரப் பெருமாள் குலசேகரராகிய இந்தப் பெருமாளை அறிந்தால்தான் அந்தப் பெருமாளை அறிய முடியும்.

“அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே” என்று சர்வ பூபாலகர்களையும் ஆண்டாள், குறிப்பிடுகிறாள். இங்கே சர்வ பூபாலர்களும், பகவானைத் தம் தோளில் தாங்கி வீதி வலம் வருகின்றனர். பூபாலனாகிய அரசரான குலசேகரர் இவர்களைப் போலவே பகவானின் அடியிணைகளைத் தம் தலையால் சுமக்க ஆசைப்படுகிறார்.


"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" என்கிறார் பூபாலராகிய குலசேகரர். 


அரசன் என்ற அபிமான பங்கமாய் பகவானின் திருவடியைத் தாங்கி நிற்கும் வரம் வேண்டுகிறார்.
“அடி சூடும் அரசு” என்று இந்த ஆவலை பதிவு செய்கிறார் திருச்சித்திரக்கூடத்துப் பதிகத்தில். அடுத்த நாள் பகவான் மோகினியாக வலம் வருகிறான். மோகினி அழகு எல்லோரையும் மயக்கும். அதனால் தான் மால் என்று பகவானுக்குப் பெயர். 


“வன்னெஞ்சர்களை அம்பாலும் மென்னெஞ்சர்களை அழகாலும் கொ(ல்)ள்பவன் அவன்.”


அந்த மோகினி அவதாரத்தில் ஆழப்பட்டு மூழ்கிய விஷயத்தை “மையல் கொண்டெழுந்தேன் என்றன் மாலுக்கே” என்று உருகி உருகிப்பாடுகிறார் ஓர் பதிகத்தில்.


அன்று இரவில் பிரம்மோற்சவத்தின் சிறப்பான “கருட சேவை” நிகழ்ச்சியல்லவா... கருடன் வேதாத்மா. அதன் மேல் ஏறி வரும் எம்பெருமான் வேதாத்மகன். அந்த கருடனைப் போல் தான் எம்பெருமானைச் சுமக்கும் பாக்கியம் பெற மாட்டோமா என்று ஏங்குகிறார். கருடனைப் போலவே ஆழ்வாரும் நித்யசூரிகளின் அம்சம் தான். ஈ(கௌஸ்துப அம்சம்). கருடனைப் புள் என்று சொல்வார்கள். பறவை என்றும் சொல்வார்கள். “பறவை ஏறும் பரம புருடா” என்றே பெரியாழ்வார் சொல்லுகிறார். “காலார்ந்த கதிக் கருடனென்னும் வென்றிக்கடும் பறவை” என்றே குலசேகரர் கருடாழ்வாரை பல்லாண்டு பாடுகிறார். அந்தப் பறவை எங்கே சுற்றினாலும் பகவத் கைங்கர்யமாகிற தொண்டிற்குத் தூயவனாக தயாராக இருக்கும். ஆழ்வாரின் நிலையும் அது தான். “மாப்பறவை போன்றேனே”' என்றே மங்களாசாசனம் செய்கிறார்.


அடுத்து “அனுமத் வாகனம்”. குலசேகர ஆழ்வார் இராமாவதாரத்தில் ஊறித் திளைத்தவர்.


அனுமனைப் பாடுவது அவருக்கு அக்கார அடிசிலைச் சுவைப்பது போல அல்லவா. அதுவும் அனுமத் வாகனத்தில் இவருடைய இராமனாக அல்லவா திருவேங்கடவன் காட்சி தருகிறான்.


இலங்கை நகரின் அரசனான இராவணனின் சினமடங்க மாருதியால் சுடுவித்தான் என்று பாடி, அந்த இராமன் எப்போதும் அனுமனைப் பிரியாது இருக்கிறார் என்று ஸ்ரீராம அனுமனை இணைத்து மங்களாசாசனம் செய்கிறார்.


"தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள் திறள்விளங்கு மாருதியோடு அமர்ந்தான்" என்பது குலசேகரரின் மாருதியோடு இராமன் இணைந்த தோற்றத்திற்கான மங்களாசாசனம். அனுமத் வாகனத்தின் சிறப்பும் இது தானே.


அடுத்து “யானை வாகனம்”. பகவானின் திருவிளையாடல்களில் யானையோடு தொடர்புடையது இரண்டு. ஒன்று யானையைக் காத்தது. இன்னொன்று யானையைக் கொன்றது. காத்தது ஆதி மூலமே என்றழைத்த கஜேந்திரனை. கொன்றது குவலயாபீடமாகிய யானையை. ஜகத்தைக் காக்கும் குறியீடாகவே கஜத்தைக் காத்தான். பகவானின், நடையே கஜகதிதான். இதனை ஆழ்வார்,
"கைம்மாவின் நடையன்ன மென்னடை" - என்றே பாடுகிறார். யானை மெதுவாக நடப்பதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். குலசேகர ஆழ்வார் அரசர். அரசர்கள் அம்பாரி மீது வலம் வருவார்கள். கஜ வாகன சேவையைப் பார்த்ததும் பகவான் யானை மீது ஆரோகணித்து வருவதிலேயே பொருள் இருக்கிறது. நம்மைப் போன்ற நிலையற்ற மனிதர்கள் யானை மீது ஏறலாமா? என்று எண்ணுகிறார். பகவான் ஏறிய யானையின் மீது தாம் ஏறுவது தகாது என்று நினைக்கிறார்.


"கம்ப மதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்
வேண்டேன்" என்கிறார்.


அடுத்த நாள் காலை “சூரியப் பிரபை”. மாலை “சந்திரப்பிரபை”. பகவானின் ஒளியாலே இரண்டும் ஒளி பெறுகின்றன. எனவே பகவானின் திருவதனத்தில் சூரியனையும், சந்திரனையும் காணலாம். சூரியனைக் கண்டால் தாமரை மலரும். இங்கே சூரியப்பிரபை வாகனத்தில் சூரிய நாராயணனாக பகவான் வரும்போது, ஆழ்வாரின் செங்கமலத் திருமுகம் மலர்கிறது. இந்தக் காட்சியைக் காணும் வரை அவர் முகம் ஒளியின்றியே இருக்கிறது. ஆழ்வார் பாடுகிறார்.


“செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கு
அல்லால் அலரா” என்கிறார்.


அவன் தானே ஆழ்வாரின் குல விளக்கு. வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உயக்கொண்ட வீரன் அல்லவா.


குலசேகராழ்வார் பகவானை, “எந்தையே என்தன் குலப்பெருஞ்சுடரே” என்றல்லவா பாடுகிறார். அன்று மாலையே சந்திரப்பிரபை. பயிர்களையும் உயிர்களையும் காப்பவன் சந்திரன். அவன் கதிர்களால் உலகம் குளிர்ச்சி பெற்று ஒளிர்கிறது. எவருடைய மன வருத்தத்தையும் நீக்குபவன் சந்திரன். காரணம், அவன் மனவருத்தத்தைத் தீர்க்கவல்லவோ குறையில்லாத கோவிந்தன் சந்திரப் பிரபையில் வருகிறான். “சந்திர மா மனஸோ ஜாத: சக்ஷோஸ் சூர்யோ அஜாயதா:” என்று வேதம் ஓதுகிறது.


அன்று காலையில் பகவான் சூரியப்பிரபை வாகனத்திலும் மாலை சந்திரப்பிரபை வாகனத்திலும் வலம் வரும் போது சந்திரனோ சூரியனோ நமக்குத் தெரிவதில்லை. பகவானின் திருமுகமே சந்திர சூரியனாகத் தெரிகிறது.


குலசேகரர் பகவானின் திருவதன அழகை சந்திர சூரியனாகவே வர்ணிக்கிறார். வான் நிலா அழகா அல்லது பகவானின் எழில் முகம் அழகா என்ற கேள்வி எழுகிறது.


ஆஹா பகவானின் முக அழகால் அல்லவா, அந்த நிலவும் எழில் பெறுகிறது. குலசேகரர் பாடுகிறார்.
“களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே” என்பது அவர் வாக்கு. அந்த முகத்தைக்கண்டு உருகுகிறார். “ஒளி மதி சேர் மதி முகமும் கண்டு கொண்டு என் உள்ளமிக என்று கொலோ உருகும் நாளே”! என்கிறார். இப்போது பகவான் இரவில் ஒளியாக வெண்மையான சந்திரப்பிரபையில் காட்சி தரும் போது உள்ளம் உருகாமலிருக்குமா என்ன?


இனி அடுத்த நாள் காலை “ரதோற்சவம்”, (திருத்தேர்). அன்று மாலை “குதிரை (அஸ்வ) வாகனம்” குலசேகரர் அரசராக இருந்தவர். தேரும் குதிரையும் அவருடைய வாழ்வில் விட்டு அகலாத அங்கங்கள். அவருடைய இஷ்ட தெய்வமான இராமனும் அரசர்க்கரசன். ஆனால் கைகேயி வரம் வேண்ட இரண்டையும் அதாவது தேரையும் குதிரையும் விட்டு விட்டு கால் நடையாக அல்லவா, கானகம் சேர்ந்தான். அதே நிலையில் தான் குலசேகரரும் தேரையும், குதிரையும் இல்லாது அரண்மனையை விட்டு வெளியேறினார்.


இதைப் பாடுகிறார். “மாவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து”.


இப்போது திருமலையிலே அர்ச்சாவதாரம் எம்பெருமானான திருமலையப்பன் மாவாகிய அஸ்வத்த வாகனத்திலும் தேர் வாகனத்திலும் உலா வருவதைக் காண எத்தனை மகிழ்ச்சி?


தேரில் எம்பெருமான் எப்படி பவனி வருகிறான் தெரியுமா. 


“மங்கல நன் வனமாலை மார்வில் இலங்க 
மயில் தழைப்பீலி சூடி பொங்கிள வாடை அரையில் சாத்திப் 
பூங்கொத்து காதில் புணரப் பெய்து” - தேரில் பவனி வரும் எம்பெருமான் அழகையும் குலசேகர ஆழ்வார் பாசுர வரிகளையும் இணைத்துப் பாருங்கள். அன்று மாலை குதிரை வாகனம் ஏறி வரும் பரம புருஷனே! நீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை அசுரனை வாய்பிளந்தாயே! என்று மங்களாசாசனம் செய்கிறார். பகவான் கேசி என்னும் குதிரையை, வாய் பிளந்து அழித்த நிகழ்ச்சியையும் நினைவு கூறுகிறார். “மாவினை வாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை” என்பது அவர் பாசுரம். கடைசியாக அஸ்வ வாகனம் அமைந்த காரணம் இனி வரும் அவதாரமான கல்கி அவதாரத்தில் பகவான் குதிரை மீது ஆரோகணித்துத் தான் வரப் போகிறான் என்பதை அறிவுறுத்தத்தான். நிறைவாக “அவப்ருத ஸ்நானம்” - என்னும் “சக்ர ஸ்நானம்.” சக்கரத்தையும் குலசேகரர் மங்களாசாசனம் செய்கிறார்.


“அங்கை ஆழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தன்” என்று சக்கரத்தையும் பல்லாண்டு பாடுகிறார். திருமலையில் தினந்தோறும் திருவிழா தான். அதனைக்காண திருமலையிலேயே இருக்க வேண்டும். எப்படி இருப்பது? எப்படியாவது இருக்க வேண்டும். எப்படியாவது திருமலையிலே இருக்க வேண்டும் என்பதைத்தான் குலசேகர ஆழ்வார்
“செம்பவள வாயால் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே” என்கிறார். 


இதற்கு அனந்தாழ்வார் விசேஷ உரையிடும் போது ஏதேனும் என்றால் திருவேங்கட நாதனாகவும் என்கிறார். ஆழ்வார் திருவேங்கட நாதனாகி விட்டால் பிரம்மோத்சவம் அவருக்கும் ஆனது தானே. வாருங்கள் குலசேகர ஆழ்வாரின் துணையோடு திருமலையப்பன் பிரம்மோத்சவத்தை கண்டு கண்களின் பலனைப் பெறுவோம்.


குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்.


வாழ்க்கை நெறிகள் வளரும்.....


நன்றி - சப்தகிரி அக்டோபர் 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக