செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 11 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 4 பகுதி - 3 


ஸ்ரீரங்கத்தில் ஒரு விசாரமே வந்துவிட்டது. “ஸ்வதந்திரனான ஈஸ்வரனைப் பற்றியதால் ஒரு ஸம்சயம் உள்ளது” என்று ஒரு ஸ்வாமி சந்தேஹத்தைக் கிளப்பிவிட்டார். அவரையே எல்லாமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவரோ மதிள்மேல் பூனை. இந்தப்பக்கம் குதித்தாலும் குதிப்பார். அந்தப்பக்கம் குதித்தாலும் குதிப்பார். என்னுடைய கர்மங்களைப் பார்த்து ஸம்சாரத்திலேயே போட்டுவிடுவார். இல்லையானால் தன் க்ருபையாலே மோக்ஷம் கொடுத்தாலும் கொடுப்பார். இந்த இரண்டுக்குள் நான் எதுக்கு ஆளாகப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லையே. கூட இருந்தவர்கள் எல்லாம் நீர் எழுப்பிய சந்தேகம் சரிதான். அதுக்குத்தான் நாமெல்லாம் ஆசார்யரையே பற்றுகிறோம். பெருமாளிடம் ஒரே குறைதான். என்ன செய்வார் என்றே தெரியாது. அவர் ஸ்வதந்திரன். அதுகூட அவர் குறையல்ல. நாம் அப்படி நடந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் நமக்கு ஸந்தேகமே வருகிறது. 

தந்தை ஒருவர் தன் குழந்தை தப்புப் பண்ணியிருக்கிறது என்றால் கோபம் வருவது இயற்கை தானே. அதைப் போய் குறை சொல்லமுடியுமா? ஆகவே பகவானிடம் குறை இல்லை. நமக்குப் பயமாய் இருக்கிறது. ஸ்வாதந்த்ரியத்தைக் கண்டு பயப்படுகிறோம். 

ஆசார்யரிடத்தில் ஸ்வாதந்த்ரியம் இல்லை. பயம் இல்லாமல் மோக்ஷம் கொடுத்து விடுவார் என்று நம்புகிறோம். ஆகவேதான் இங்கே வாரும் என்று அழைக்கிறார். வாக்கு, மனம், மொழி மூன்றும் தேவரீரிடத்து ஈடுபட்டிருக்க வெண்டும். ராமாநுஜா “உந்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன்” ராமானுஜரின் குணங்கள் என்று சொன்னால் திருமேனியின் குணங்கள் ஒருபக்கம். அவருடைய ஆத்ம குணங்கள் ஒருபக்கம். ஆத்ம குணங்களான சௌசீல்யம், வாத்ஸல்யம் முதலியவற்றைக் கூட இங்கு பேசவில்லை. ஆனால் திருமேனி என்ன அழகாக இருக்கிறது அவர் கைகூப்பிக் கொண்டிருந்தாலும் அழகாக இருக்கிறது. பாஷ்யகாரர் திருமலையில் உபதேச முத்திரையோடு இருந்தாலும் நன்றாக இருக்கிறது. 

எதற்காக ஸ்வாமி உபதேச முத்திரையை வைத்துக் கொண்டிருக்கிறார். நிறைய வேதாந்த அர்த்தங்கள் இருக்கின்றது. அதை எல்லாம் நாம் புரிந்துகொள்வோமா? ஜரிக்குமா? தெரியாது. ஆகவே குழந்தைகளான நமக்கு எத்தனை புத்தி இருக்குமோ, ஜரிக்குமோ அந்தளவுக்கு விஷயங்களைத் தேர்ந்து எடுப்பாராம். ஒவ்வொரு உபநிஷத்திலிருந்தும் எது அவசியமோ அதைத் தேர்ந்தெடுத்து நமக்குப் புரியும் வகையில் எடுத்துக் கொடுப்பாராம். இதனை வேதாந்த தேஶிகர் தமது யதிராஜ ஸப்ததியில், “நமக்கு உபதேசிக்க யதிராஜர் வருகிறார். இங்கேயோ ஒரே இருட்டு. மனதில் அனாதிகால அஞ்ஞான இருட்டு உட்கார்ந்திருக்கிறது. அதை எப்படிப் போக்குவது. நானோ உசத்தியான விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இவனோ உள்ளத்தில் இருட்டை வைத்துக் கொண்டிருக்கிறான். மூன்று விரல்கள் இருக்கிறதல்லவா? அதை மேலே மடிப்பாராம். அது சந்திரனாட்டம் பிரகாசிக்குமாம். அந்தப் பிரகாசத்தாலே நம் உள்ளத்தில் இருக்கும் இருட்டைப் போக்கிவிட்டு அழகான விஷயத்தை உள்ளே புகுத்திவிடுவாராம்.” இதைத்தான்

மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் *
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு*ஆட்
புக்க காதல் அடிமைப் பயன்ன்றே. 9.     கண்ணிநுன்சிறுதாம்பு 

நம்மாழ்வார் விஷயமாக மதுரகவியாழ்வார் சொல்லியுள்ளார். எத்தனையோ விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. ஆனால் பாகவத அபிமானம் உத்தாரகம் என்று திருவாய்மொழி மூலம் நம்மாழ்வார் என் நெஞ்சுள் நிறுத்தினார். அதைப் போலத்தான் யதிராஜ ஶப்ததியில் ஸ்வாமி தேஶிகன் ஸாதிக்கிறார், “ராமானுஜரே தன் விரல் நகங்களின் ஒளிமூலம் இருட்டையும் போக்கிவிடுகிறார். தானே தேர்ந்தெடுத்த அர்த்தத்தை நல் உள்ளத்தில் புகட்டிவிடுகிறார். பாகவத அபிமானம், ஆசார்ய அபிமானத்தோடு இரும்., பெருமாளையும், அவர் அடியார்களையும் பற்றும்., என்று சொல்லிக் கொடுக்கப் போகிறார். அதனாலே அந்த திருக்கைகளின் அழகை சேவிக்கப் போகிறோமா? ஆத்ம குணங்களின் அழகை சேவிக்கப் போகிறோமா? கையின் அழகே போறுமே! அவருடைய உபதேச முத்திரை, கமலக் கண்ணழகு, திருவடிகளின் அழகு, பரந்து விரிந்திருக்கிற திருமுதுகு, ஆதிஶேஷன் படம் விரிந்து இருக்கும் உடம்பு சுருங்கி இருக்கும். அதுபோல ஸ்வாமியினுடைய திருத்தோள்கள் விரிந்து, இடை சுருங்கி இருக்கும். திருத்தொடைகள் பருத்து, ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியிருக்கும் அழகைச் சேவித்துக்கொண்டே இருக்கலாம். ஆகவே தான் நித்ய மனோ பவது. திருமேனியிலேயே என் மனதானது இருக்கட்டும்.

“வாக் குண கீர்த்தநேஸௌ” உன் குணத்துக்குக் குறைவா. விஷயம் இல்லையென்றால் எத்தனை நாழி பேசுவது என்போம். அடியேனுடைய (ஸ்ரீ வேளுக்குடி வரதாசாரியார் ஸ்வாமி ) தகப்பனார் சொல்லுவார். “ஆசார்யனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டோம் என்றால் இருக்கின்ற இரண்டு மணி நாழிகைக்குள் எதை விடறது, விடறது என்று யோசிக்கணும். எதைச் சொல்லவேணும் என்று யோசிக்க வேண்டிய தேவை இல்லை. ஆக அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது ஆக குணங்களைப் பாடிக்கொண்டே இருக்கலாம். வாக் குண கீர்த்தநேஸௌ”

“க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய”


என் கைகள் இரண்டும் உன் திருவடிகளுக்கு கைங்கர்யம் செய்வதாய் இருக்க வேண்டும். அப்படி என்றால் என்ன செய்யவேண்டும். ஸ்ரீபெரும்பூதூர் போய் எல்லோரும் கோயிலில் உட்காரமுடியுமா? அப்படிப் பொருள் அல்ல. ராமாநுசர் என்ன என்னெல்லாம் தொண்டு செய்யணும் என்று ஆசைப்பட்டாரோ அதை எல்லாம் செய்யணும். அந்தந்த ஆசார்யர்களுக்கு கைங்கர்யம் செய்வது. அவரவர் திவ்யதேசமோ, கோவிலோ அதற்கு ஒரு குறையும் வராமல் மூன்று கால பூஜையும் நடக்கிற அளவு கைங்கர்யம் பண்ணவேண்டும். வாக்காலே திருமந்திரம், துவயம், சரம ஸ்லோகத்தை விடாமல் சொல்லுவது. திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செல்வது. புத்தகங்களை வெளிக் கொணர்வது. பிரமாணத்தை காலக்ஷேபம் பண்ணணும். அந்தப் பிரமாண ரக்ஷணத்துக்காக நிறைய விடாமல் புத்தகங்களை வெளியிட்டு, புத்தகங்களைப் படிக்க வேண்டும். அநுசந்தானம் பண்ணுவது. பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணுவது. நித்திய அநுஷ்டானங்களை விடாமல் பண்ணுவது. இவைகள்தான் கைங்கர்யம். இதைத்தான் ராமாநுஜர் ஆசைப்பட்டிருப்பார். 

நம்மிடம் ஒரு பொறுப்பு வந்தால் மற்றவரிடம் கைகாட்டக் கூடாது இல்லையா? ஆனால் ஆசார்யரிடம் பொறுப்புக் கொடுத்தால் அவர் அவருடைய ஆசார்யரிடம் கொடுத்துவிடுவார். அவர் அவருக்கும் ஆசார்யரான தொட்டையாசாரியார் ஸ்வாமியிடம் கொடுப்பார். அவருக்குக் கூடஸ்தர் முதலியாண்டான். அவருக்கு ஸ்ரீ ராமாநுஜர் - அவருக்கு பெரிய நம்பிகள் – அவருக்கு ஆளவந்தார் ஸ்வாமி – அவருக்கு மணக்கால் நம்பி - அவருக்கு நாதமுனிகள் – அவருக்கு நம்மாழ்வார் – அவரோ விஷ்வக்சேனரிடம் – அவரோ பெரிய பிராட்டியிடம் – அவரோ பெரிய பெருமாளிடம் கொண்டு சேர்த்துவிடுவார். இப்படியே கைகாட்டி விடுகின்றனர். கைகாட்டி விடுவதுதான் இவர்களது பொறுப்பு. 

ஒருவருக்கு முடியாததை தான் செய்கிறேன் என்று சொல்வதை விட தனக்கு மேம்பட்ட ஆசார்யரிடம் ஒப்படைப்பதே உண்மையான பொறுப்பு. தன்னால் முடியாது என்று தெரிந்த வைத்தியர் நோய் போக்குவதற்கு அதற்கென உள்ளவரிடம் அனுப்புவது போன்றதே இது. சங்கிலித் தொடர்போல வருகிற ஆசார்ய ஸம்பிரதாயம் நம் ஸம்பிரதாயத்துக்கே உரித்தானதாகும் 

இப்படி முக்கரணங்களும் உன்னிடம் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே 
ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய 
வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச || (4)

ஸ்லோகம் 4 முற்றிற்று.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 


நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக