கோதையின் கீதை - உ.வே. வங்கிபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியார்

நாம் ஆண்டாள் என்று அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறோமே, அவள்தான் பெரியாழ்வார் கண்டெடுத்து வளர்த்த கோதை.


கோதை உண்மையில் இரண்டாக நிற்கும் ஒன்று (2 - in -1) ஆவாள். எப்படி?


1. வைணவ சமயக் குரவர்களான ஆழ்வார்களில் ஒருவராக ஆண்டாள் போற்றப்படுகிறாள். அவள் இயற்றிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும், ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆழ்வார்கள் பதின்மர் (10 பேர்) என்றும், ஆண்டாளையும் மதுரகவிகளையும் சேர்த்துப் பன்னிருவர் (12 பேர்) என்றும் சொல்வதுண்டு.


2. ''மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்'' என்ற ஆண்டாள், திருவரங்கம் சென்று, ஸ்ரீரங்கநாதனுடன் இரண்டறக் கலந்து, அவனிடம் ஐக்கியமாகி மறைந்தாள். அதனால் பகவான் ஆன நாராயணனின் தேவியாகவும் ஆகிறாள்.


ஸ்ரீ பூமிதேவியே ஆண்டாள் ஆக வந்து தோன்றினாள் என்பது ஐதிகம். இதை வேதாந்த தேசிகரும் ''ஸாக்ஷாத்க்ஷ மாம் - கோதாம்'' என்று குறிப்பிடுகிறார் (கோதா ஸ்துதி - 1)


ஆக, ஆண்டாள் ஓர் ஆழ்வாராகவும், அதே சமயம் மஹாவிஷ்ணுவின் பிரியமான தேவியாகவும்; இப்படி, இரண்டாக நிற்கும் ஒன்றாக (2-in-1) விளங்குகிறாள்.


ஆண்டாளுடைய திவ்ய சரிதம் யாவரும் அறிந்ததே. ஸ்ரீவில்லிபுத்தூரில், துளசித்தோட்டத்தில் பூமியில் அந்த தெய்வீகக் குழந்தையைப் பெரியாழ்வார் கண்டெடுத்தது; அங்கே நிலவிய பக்திச் சூழலால் கவரப்பட்டுக் கண்ணனிடம் தீராக் காதல் கொண்டது; பெருமானுக்காக ஆழ்வார் தொடுத்த மலர்மாலைகளைத் தான் முதலில் சூடிக் கொண்டு, சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றது; ''மானிடனைத் திருமணம் செய்யேன்'' என்று சொல்லி, 108 திவ்யதேசப் பெருமான்களில் திருவரங்கனையே மணாளனாக வரித்தது; திருவரங்கம் சென்று அந்தப் பெருமானில் கலந்தது; இவை எல்லாம் உலகம் அறிந்து வியந்த தெய்வீகச் செயல்கள் ஆகும்.


ஆண்டாளுடைய திருப்பாவைப் பிரபந்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. நாலாயிர திவ்யப் பிரபந்தம் தமிழ் வேதம் என்று போற்றப்படுகிறது. நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழி, வேதங்களுள் பெருமை வாய்ந்த ஸாம வேதமாகப் புகழப்படுகிறது. (கண்ணபிரான் பகவத் கீதையிலே, "வேதங்களில் நான் ஸாம வேதமாக இருக்கிறேன்'' என்கிறான். கீதை - 10-22).


ஆனால், திருப்பாவையை, சுவாமி தேசிகன், வேதங்களில் சிறந்த பாகமான, வேதசிரஸ் (வேதத்தின் தலை) என்றும், வேதாந்தம் (வேதத்தின் நிறைவு) என்றும் போற்றப்படும், உபநிஷத் என்றே புகழ்கிறார். இவ்வளவு பெருமை வாய்ந்தது திருப்பாவை.


"பாவை பாடப் பாவம் நில்லா'' என்று பழமொழி உள்ளது. அதாவது, திருப்பாவையை ஓதினாலே, ஒருவனுடைய பாவங்கள் அழிந்துவிடும். எளிய தமிழ்ச் சொற்களால் ஆன முப்பதே பாடல்களைக் கொண்ட திருப்பாவையைப் படித்தால், நம் நெஞ்சும் வாயும் மணக்கும். இந்த எளிய நூல் மிக உயர்ந்த தத்துவங்களை விளக்குகிறது. பரம்பொருளையும், அவன் மேன்மையையும் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை; அவனுக்குத் தொண்டு செய்வதே நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கூறுகிறது இந்தத் தீஞ்சுவை இலக்கியம்.


மகாபாரத யுத்தத்தில், அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசம் செய்தது உலகப் புகழ்பெற்ற பகவத் கீதை ஆகும். பகவத் கீதை என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.


1) பகவான் கண்ணன் உபதேசித்த கீதை (இசைப்பாடல்)


2) பகவானைப் பற்றின கீதை (இசைப்பாடல்)


இதே போல, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையும் நாம் பகவத் கீதை என்றே கூறலாம். எப்படி? அதுவும் பகவானைப் பற்றின கீதை தானே.


கண்ணன் சொன்ன கீதையை விட, ஆண்டாள் சொன்ன கீதை பல வகைகளிலும் உயர்ந்தது. எப்படி என்று பார்ப்போமா?


 1. கண்ணனின் கீதை போர்க்களத்தில் தோன்றியது. 


 கோதையின் கீதை ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் புனிதமான திருத்தலத்தில் தோன்றியது.


 2.கண்ணனின் கீதை வட மொழியில் உள்ளது. வடமொழியைக் கற்றறிந்த புலவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.


 கோதையின் கீதை அமுதத்தமிழில் எளிய சொற்களில் அமைந்துள்ளது. எல்லோராலும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.


 3. கண்ணனின் கீதை 18 அத்யாயங்களில், 700 சுலோகங்களைக் கொண்டது. மிகப் பெரிய நூல். கடினமான கருத்துக்களைக் கொண்டது.


 கோதையின் கீதை 30 பாடல்களை மட்டுமே கொண்டது. கடினமான கருத்துக்களையும் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும்படிக் கூறுகிறது.


 4. கண்ணனுடைய கீதைக்குப் பலர் பலவிதமாகப் பொருள் கூறுகிறார்கள். சங்கரர், ராமானுஜர், மத்வர் கீதைக்குப் பல இடங்களில் வெவ்வேறு விதமாகப் பொருள் கூறுகின்றனர்.


 கோதையின் கீதையோ அப்படி அல்ல. அதற்குப் பொருள் கூறுவதில் எந்த விதமான சிரமமோ, குழப்பமோ இல்லை.


 5. கண்ணனின் கீதை கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று கடினமான கருத்துக்களைக் கூறுகிறது.


 கோதையின் கீதையோ, மிகவும் உயர்ந்ததான சரணாகதி தத்துவத்தை மட்டும் எளிமையாக போதிக்கிறது.


 6. கண்ணனின் கீதை குழப்பங்கள் நிறைந்தது. அர்ஜுனனே "என்னைக் குழப்புகிறாயே கண்ணா. நான் என்ன செய்வேன்?'' என்கிறான்.


 கோதையின் கீதையோ எந்த விதமான குழப்பமும் இல்லாதது.


 7. கண்ணனின் கீதை வன்முறையைத் தூண்டுகிறது!! அதாவது, யுத்தத்தில் இரண்டு தரப்பிலும், பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் கொல்லப் படுவார்கள். யானைகள், குதிரைகள் முதலியன பல்லாயிரக்கணக்கில் மாண்டொழியும். எங்கு பார்த்தாலும் ரத்த வெள்ளமும், உயிர்ச்சேதமும், பிணக்குவியல்களும் நிறைந்திருக்கும். ஆகிலும், கீதையில், யுத்தம் செய்யவே தூண்டுகிறான் கண்ணன்.


 மாறாக, கோதையின் கீதையோ சாந்தி ரஸத்தையே முழுமையாகக் கொண்டது. பகவானிடம் சரணாகதி செய்து, இன்புற்று இருப்பதையே வலியுறுத்துகின்றது.


இப்படிக் கோதையின் கீதை கண்ணனின் கீதையை விடப் பல வழிகளிலும் சிறந்தது, உயர்ந்தது.


கோதையின் கீதையான திருப்பாவை எப்படி உதித்தது?


கண்ணனிடம் தீராத காதல் கொண்ட ஆண்டாள், கண்ணனையும் அவன் திருவிளையாடல்களையும் நினைத்து நினைத்து ஏங்கினாள். கண்ணனையே மணாளனாக அடைய என்னவழி என்று யோசித்தாள்.


முன்பு கண்ணனைப் பிரிந்த இடைப் பெண்கள், ஏங்கித் தவித்தனர். அவனைத் திரும்பப் பெறுவதற்காக அந்தப் பெண்கள் நோன்பு நோற்றதாக பாகவதம் கூறுகின்றது.


இதைக் கேள்விப்பட்ட கோதை தன்னையும் ஓர் இடைப் பெண்ணாகவே பாவிக்கிறாள். ஸ்ரீவில்லிபுத்தூரையே கண்ணன் வாழ்ந்த ஆய்ப்பாடியாக நினைத்துக் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெருமான் வடபத்ரசாயியின் திருக்கோயிலே நந்தகோபன் மாளிகை ஆகிறது. ஆண்டாளின் தோழிகள் தாம் ஆய்ப்பாடியில் உள்ள இடைப் பெண்கள். அவர்களை நோன்புக்காக அழைக்கிறாள்.


இப்படித்தான் திருப்பாவை பிறக்கிறது.


குறிப்பு - இந்தக் கட்டுரையில் பகவத் கீதையைத் தாழ்த்திப் பேசி இருப்பது போல் தோன்றும். இதற்கு வடமொழியில் நஹிநிந்தா நியாயம் என்று பெயர். அதாவது, ஒருவரை உயர்வாகவும், இன்னொருவரைத் தாழ்த்தியும் பேசினால், உண்மையில் இன்னொருவரைத் தாழ்த்திப் பேசுவது நோக்கமல்ல. மற்றவரைப் போற்றி, அவரை உயர்த்திப் பேசுவதில் தான் நோக்கம்.


அது போல, இந்த நஹிநிந்தா நியாயத்தின்படி, கோதையின் கீதையான திருப்பாவையின் பெருமைகளைப் பேசுவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.


(வங்கிபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியார் ஸ்வாமிகள் இயற்றிய திருமால் திருவருள் புத்தகத்திலிருந்து)

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை