ஞாயிறு, 1 டிசம்பர், 2019

ஸ்ரீ ஆண்டாளும் எதிராசரும் - ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி

கலியில் திருவேங்கடவனே கண்கண்ட தெய்வமாய் நிற்கிறான். நம்மாழ்வார் “ஒழிவில் காலமெல்லாம் அவன் திருவடிகளில் வழுவிலா அடிமை” செய்ய பாரித்திருந்தார்.


ஸ்ரீ ஆண்டாளும் “வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே” என்று கூறி மேகத்தைத் தூதாக விடுகிறாள். இவ்விருவரையும் மனத்தில் கொண்ட எம்பெருமானார். அவரவர் விருப்பங்களை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார். நம்மாழ்வார் விருப்பத்தை ஸ்ரீ அனந்தாழ்வானையும் அவருக்குப் பிறகு பெரிய கேள்வி ஜீயரையும் நியமித்து, கைங்கர்யம் தொடர வழிவகுத்தார்.


ஆண்டாளுக்கு கீழ்த்திருப்பதியில் கோயில் அமைத்து கோவிந்தராஜர் ஸன்னதியில் தனிக்கோயில் அமைத்து சிறப்பித்தார் எனினும், நம்மாழ்வார் வைகுந்தம் சென்று அடியார் குழாங்களோடு கூடி அடிமை செய்ய ஆர்த்தி தலையெடுத்துப் பேசியபோது, திருமாலிருஞ்சோலையில் தன் இருப்பைக் காட்டித் தந்துள்ளான் எம்பெருமான் தெற்குத் திருமலையில் வடிவழகைத் தினவடங்க அனுபவித்தபோது, வடக்குத் திருமலையில் அவர் நெஞ்சு சென்றது.


அதே போன்று ஆண்டாளுக்கு திருவேங்கடமுடையானிடத்தில் சென்ற நெஞ்சு, தெற்குத் திருமலைக்குத் திரும்பியது. மாலிருஞ்சோலை மணாளனை ஆண்டாள் தன் தந்தையாரைப் போன்றே பெரிதும் விரும்பி



நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு 
நான் நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பரவிவைத்தேன் 
நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன் 
ஏறுதிருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொயோ?” 


என்றதோடு நில்லாமல், 


இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில், நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்


என்று தன் பாரிப்பை நித்ய கைங்கர்ய பரமாகப் பெரிதாக்கிக் காட்டினார்.


எம்பெருமானார் வடதிருமலையில் ஆழ்வார் விருப்பத்தைச் செயல்படுத்தியதைப் போலவே, ஆண்டாளின் பாரிப்பை திருமாலிருஞ்சோலையில் நிறைவேற்றிய பின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஸேவித்தபோது. “வாரும் எம் அண்ணரே” என்று ஆண்டாளின் அநுக்ரஹம் பெற்றார். இதனால் ஆண்டாளுக்கும் அண்ணராக வாழ்த்துப் பெறுகிறார் எதிராசர்.


''தேவுமற்றறியேன்'' என்று நம்மாழ்வாரைச் சார்ந்துநின்ற மதுரகவிகள் போன்று, வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் வளர்ப்பில், "நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர்" என்று பின்வாங்கி எம்பெருமானை விட்டு பெரியாழ்வாரையே தஞ்சமாகப் பற்றி விஷ்ணுசித்தர் வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே என்று சரமபர்வ நிஷ்டையை (அடியவர்க்கு ஆட்படுதல்) மேற்கொண்டாள்.


மதுரகவிகள் மற்றும் ஆண்டாள் வழியையே எதிராசரும் பின்பற்றினார். “மாறன் அடிபணிந்துய்ந்தவர்” என்றும் ''குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன்" என்றும் ஆழ்வார்களை அடியொற்றி சரமபர்வத்தை மேற்கொண்டார்.


மதுரகவிகள், ஆண்டாள், எம்பெருமானார் இம்மூவரையும் ஒரே வரிசையில் சேர்த்து மாமுனிகள் “உபதேச ரத்தினமாலை”யில் பாடிப் பரவியுள்ளார்.


''உண்டபோது ஒரு வார்த்தை: உண்ணாதபோது ஒரு வார்த்தை'' என்று பத்துப்பேர் உண்டிறே; அவர்களைச் சிரித்திருப்பார் ஒருவர் உண்டிறே" என்று மதுரகவிகளைக் குறிப்பிடுகிறார் மாமுனிகள்.


"ஆழ்வார்கள் தம்செயலை விஞ்சி நிற்கும் தன்மையள்'' என்று ஆண்டாளைக் குறிப்பிடுகிறார் மாமுனி.


ஆழ்வார்கள் அவதரித்த நாள்களிலும் வாழ்வான நாள் நமக்கு என்று எம்பெருமானார் அவதரித்த சித்திரையில் செய்ய திருவாதிரையைப் போற்றுகிறது உபதேச ரத்தினமாலை.


இப்படி மதுரகவிகள் படியே நிலையாகப் பெற்றவர்கள் ஆண்டாளும் எதிராசரும்.


"கலியும் கெடும் கண்டு கொண்மின்'' என்று எதிராசரை எதிர்நோக்கிய ஆழ்வாரின் திருவுள்ளப்படியே திருவரங்கத்து அமுதனார்,


"தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தலமுழுவதும் கலியே 
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர்மௌலி 
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல் இராமாநுசனென்னும் மாமுனியே


என்ற பாசுரத்தின் ஆண்டாளையும் எதிராசரையும் இணைத்துப் பேசும் அழகைக் காணலாம்.


சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்தவன், நல்லார் பரவுமிராமாநுசன்” - அன்றாடம் ஸ்ரீரங்கத்தில் மாதுகரத்துக்கு (பிட்சைக்கு) எழுந்தருளுகையில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையையே ஓதிச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார் என்பது உலகறிந்த உண்மை , "உந்து மதகளிற்றன்" பாசுரத்தில் இச்செய்தி வெளிவருகிறது.


இதிலிருந்து எம்பெருமானார் திருப்பாவையில் எத்தகைய ஈடுபாடு கொண்டிருந்தார் என்று தெரிகிறது. “திருப்பாவை ஜீயர்” என்ற பெயரும் பெற்றார் என்பது உலகறிந்ததே.


ஏரார் எதிராசர் இன்னருளால் அன்றோ ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை நமக்கு நித்யாநுஸந்தான கைங்கர்யமாகக் கிடைத்துள்ளது. எம்பெருமானார் ஈடுபட்டதனாலேயே திருப்பாவைக்கு ஒரு ஏற்றம் என்றால் அது மிகையாகாது. உலகளாவிய புகழ்கொண்ட ஆண்டாளும் எதிராசரும் கலியும் கெடும் வண்ணம் திருப்பாவையின் மூலம் செயல்பட்டுள்ளனர் என்பது வியந்து போற்றத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக