58. வாலி வதம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)


மாலை நெருங்கி வந்த வேளை. மறுபடியும் சுக்ரீவன் பெருங் கர்ஜனை செய்து வாலியை யுத்தத்துக்கு அறைகூவி அழைத்தான்.

சந்தோஷமாகப் படுத்திருந்த வாலி திடுக்கிட்டான். இதென்னவென்று அவனுக்கு விளங்கவில்லை. பயம் என்று சொல்லுவதற்கில்லை. ஆயினும் கொஞ்சம் நிறம் மாறினான். பிறகு ரோஷம் கொண்டான். தோல்வியடைந்து அடிபட்டுப் பயந்தோடின தம்பி மறுபடியும் இம்மாதிரி வந்து கர்ஜிக்கிறானே என்று பொறுக்க முடியாத கோபத்தோடு எழுந்து உடனே அவனை ஹதம் செய்துவிடத் தீர்மானித்துப் புறப்பட்டான். தரையை அவன் காலால் மிதித்தது பூமியைப் பிளப்பதுபோல் இருந்தது.


“வேண்டாம்! இன்று வேண்டாம்! நாளைப் பார்த்துக் கொள்ளலாம்” என்றாள் தாரை, அவனைப் பிரியமாகத் தடுத்து.


வாலியின் பட்டமகிஷி மகா புத்திசாலியான தாரை புருஷனை ஆலிங்கனம் செய்து கொண்டு, “வேண்டாம், யுத்தத்துக்கு அவசரமில்லை. நாளைக் காலையில் சென்று சத்துருவை அழித்துவிடலாம். நன்றாக யோசிக்காமல் இப்போது வெளியேறித் தம்பியுடன் யுத்தம் செய்வது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ எனக்குப் பயமாக இருக்கிறது. அடிபட்டு, அவமானப்பட்டு உயிர் தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்து கொண்ட தம்பி என்ன தைரியம் கொண்டு இன்றே மறுபடியும் வந்து இவ்வளவு அட்டகாசம் செய்கிறான்? இதைப்பற்றித் தீர ஆலோசிக்க வேண்டும். பிரிய நாதா! இப்போது போக வேண்டாம். ஏதோ மோசமும் அபாயமும் நான் இதில் காண்கிறேன். என் பேச்சைப் புறக்கணிக்க வேண்டாம். அவனுடைய பேச்சையும் கர்ஜனையையும் கவனித்தால் ஏதோ பெரும் சகாயம் சேர்த்துக்கொண்டு நிற்கிறான் என்பது நிச்சயமாகிறது. இல்லாவிடில் இவ்வளவு கர்வம், பிடிவாதம் ஏன்? பலமான சகாயத்தைச் சம்பாதித்திருக்கிறான் என்பது உறுதி. அந்தச் சகாயத்தின் பலத்தை நன்றாய்ப் பரீட்சை செய்து தைரியமடைந்தே வந்திருக்கிறான் உங்கள் தம்பி. இதில் சந்தேகமில்லை. நம்முடைய பிரிய குமாரன் அங்கதனுடைய நலனைக் கருதுவீர்களாக. நான் சொல்லும் பேச்சைத் தட்டாதீர்கள். ஏதோ பிதற்றுகிறேன் என்று எண்ண வேண்டாம். சாரர்களால் அங்கதன் அறிந்து என்னிடம் சொன்னதைச் சொல்லுகிறேன். அயோத்தியிலிருந்து மகா வீரனான ஒரு ராஜகுமாரன் நம் பிரதேசத்துக்கு வந்திருக்கிறானாம். அவனை எல்லாரும் உத்தம தர்மவானாகவும் வீரனாகவும் மதிக்கிறார்களாம். அவனுடைய சிநேகத்தை உங்கள் தம்பி அடைந்து விட்டானாம். இதனால் அவனுடைய பலமும் தைரியமும் வளர்ந்து போயின. உங்கள் தம்பியும் நல்லவன், வீரன், அவனை ஏன் விரோதிக்க வேண்டும்? அவனைவிட நமக்கு யார் நெருங்கிய பந்து? அவன் உங்களுக்கும் பக்தியோடு பணி செய்து பராக்கிரமமான துணையாவான். சுக்ரீவனை நாம் மறுபடி அழைத்து விரோதத்தை மறந்து விட்டு ஒன்றாகப் போவதே நலம். அருமை நாதனே, என் பேச்சைப் புறக்கணிக்க வேண்டாம்” என்றாள்.


வாலிக்கு இந்தப் பேச்சுப் பிடிக்கவேயில்லை. கடல் பொங்குவதுபோல் எழுந்த கோபத்தில் அவன் தன் மனைவியின் பேச்சில் நியாயம் காணவில்லை. கால பாசத்தால் இழுக்கப்பட்டுச் செல்பவன் எப்படிக் காண்பான்? தாரை என்கிற பெயருக்குத் தகுந்த முக லக்ஷணம் கொண்ட மனைவி சொன்ன புத்திமதி, வாலிக்குச் சம்மதப்படவில்லை.


“என்ன சொல்லுகிறாய்! சத்துருவான தம்பி செய்யும் கர்ஜனையை நான் எப்படிப் பொறுப்பேன்? ஏன் பொறுப்பேன், அழகியே! எதிரி யுத்தத்துக்கு அழைக்கும் போது வீரன் போகாமலிருக்க முடியுமா அதைவிட உயிரை விடுவதே மேலாகும். இந்த அற்பன் போடும் கர்ஜனை காதில் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க என்னால் சாத்தியமில்லை. நீ ராமனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவன் தர்மத்தை அறிந்தவன், பாபத்துக்குப் பாபத்துக்குப் பயந்தவன். அவன் அநியாய காரியத்தில் இறங்கமாட்டான். நீ என்னைத் தடுக்காதே, திரும்பிப் போ! சுக்ரீவனை நான் கொல்ல மாட்டேன். அவன் கர்வத்தை அடக்கிவிடுவேன், அவ்வளவே. அந்தத் துராத்மாவின் அட்டகாசத்தைப் பார்த்துச் சகிக்க முடியவில்லை. உனக்கு என் மேலிருக்கும் பிரியத்தால் சொல்ல வேண்டியதைச் சொன்னாய். தம்பியின் கொழுப்பை அடக்கி ஓட்டி விட்டு வெற்றியுடன் திரும்பி வருவேன். பயப்பட வேண்டாம். மங்கல மொழி சொல்லி என்னை அனுப்பு, தடுக்க வேண்டாம்” என்றான்.


கவி வால்மீகி வாலியை எவ்வளவு உயர்த்தி வைத்துச் சித்திரித்திருக்கிறார்!


தாரையும் கண்களில் நீர் ததும்பிய வண்ணம் வாலியை வலம் செய்து மங்களம் சொல்லிவிட்டு நல்லதாக முடியவேண்டும் என்று வேண்டிக் கொண்டு கவலையுடன் அந்தப்புரம் திரும்பிப் போனாள். தாரையையும் அவளுடைய தோழிகளையும் அனுப்பிவிட்டு வாலி புற்றிலிருந்து பாம்பு சீறிக்கொண்டு வெளி வருவது போல் சுக்ரீவனைத் தேடிச் சென்றான்.


மகா ரோஷத்துடன் போன வாலி தம்பி தைரியமாக தேஜஸ் வீசிக்கொண்டு நிற்பதைப் பார்த்தான். பார்த்ததும் கச்சையை இழுத்துக் கட்டிப் பாய்ந்தான். சுக்ரீவனும் வாலியை நோக்கி வேகமாய் வந்தான்.


“உயிரில் ஆசை வைத்திருப்பாயாயின் ஓடிப் போ. இந்த முஷ்டிக்கு உன் உயிரை தத்தம் செய்யாதே” என்று கர்ஜித்தான் வாலி.


சுக்ரீவனும் கோபமாக மறுமொழி சொன்னான். பிறகு யுத்தம் முற்றிற்று. இருவரும் அடிமேல் அடி அடித்து ரத்தப் பிரவாகம் ஓடிற்று. மிகவும் அடிபட்ட சுக்ரீவன் ஒரு ஆச்சா மரத்தைப் பிடுங்கி அதனால் வாலியைப் பலமாக அடித்தான். வாலி அந்த அடியின் வேகத்தால் கொஞ்சம் அசைந்து கோபம் கொண்டு அவனும் மரங்களை வேரோடு பிடுங்கி சுக்ரீவனை அடித்தான். இருவரும் சம வீரர்கள். வெகு நேரம் கோரமான யுத்தம் நடந்தது. வரவர வாலியின் பலம் அதிகரித்தது. சுக்ரீவனுடைய பலம் குறைய ஆரம்பித்தது.


இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமன், இனி சுக்ரீவன் தாங்கமாட்டான், உயிர் நீப்பான் என்று கண்டு வில்லை வளைத்துக் கொல்லும் பாணத்தை விட்டான். அது நேராகச் சென்று வாலியின் வைரமான மார்பை ஆச்சா மரத்தைத் துளைத்தபடியே துளைத்து விட்டது. வாலியின் வாழ்க்கை முடிந்தது. விழா முடிந்ததும் அதற்காக அலங்கரிக்கப்பட்ட துவஜ ஸ்தம்பம் தரையில் கிடப்பது போல் ரத்தம் பெருகக் கீழே வாலியின் உடல் கிடந்தது.


இப்படி ராமனுடைய பாணத்தால் மரண காயமடைந்து மகா சூரனான வாலி கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட பெரிய காட்டு விருக்ஷத்தைப் போல் கையும் காலும் விரிந்து கீழே கிடந்தான்.


கீழே கிடந்தாலும் வாலியின் அழகும் காந்தியும் குறையவில்லை. ஆபரணங்கள் பூண்டிருந்த அவன் தேகம் சூரியன் அஸ்தமிக்கும்போது சிவந்து பிரகாசிக்கும் மேகக் கூட்டத்தைப் போல் பிரகாசித்தது. இந்திரனால் கொடுக்கப்பட்ட தெய்வீக மாலை அவன் மார்பில் பிரகாசித்துக் கொண்டு அவன் உயிரையும் அவன் திருவையும் தாங்கி மிகப் பொலியச் செய்தது. அந்த மாலையின் ஜோதியும் வீரனுடைய மார்பில் குத்தி நின்ற கொல்லும் ராம பாணமும், ரத்தம் பெருகும் காயமும் எல்லாம் சேர்ந்து அந்த மகா வீரனுடைய தேகத்தை மும்மடங்கு பொலிவுடன் விளங்கச் செய்தன. வீழ்ந்து கிடந்த இந்த மகா வீரனுடைய கம்பீரத் தோற்றத்தை வால்மீகி மிக அழகாக வர்ணிக்கிறார். உயிர் நீங்குவதற்கு முன் இறக்கும் தறுவாயில் சூரர்களுடைய காந்தி மிகப் பொங்கி வளர்ந்து எப்போதும் விட அதிகமாக ஜொலிப்பது இயற்கை.


எதிர்பாராத வகையில் வீழ்த்தப்பட்ட வாலி, நான்கு பக்கமும் தன் பார்வையைச் செலுத்திப் பார்த்தான். எங்கிருந்து தன் உயிரைக் கொண்டேக இந்தப் பாணம் வந்தது என்று சுற்றிலும் பார்த்தான். அச்சமயம் ராம லக்ஷ்மணர்கள் அவன் பக்கத்தில் வந்தார்கள். வில்லேந்தி வந்த அவர்களைப் பார்த்ததும் வாலியின் கண்களில் சூரர்கள் கண்களில் வடியும் கண்ணீர் வடிந்தது. மெதுவான குரலில் தருமத்துக்கு இசைந்ததும் மேம்பட்ட பண்பாடு நிறைந்ததுமான மொழிகளைச் சொல்லி ராமனுடைய குற்றத்தை எடுத்துக் காட்டிக் கண்டித்துப் பேசினான்.


உயிர் தேகத்தை விட்டுப் போகும் தறுவாயான படியால் பேச்சு தடைப்பட்டது. ஆயினும் தாழ்ந்த சுவரத்தில் கஷ்டப்பட்டுப் பேசினான்.


“ராமனே! தசரத சக்கரவர்த்தியின் புத்திரனாவாய். உத்தம குலத்தில் பிறந்த நீ, பெரும் புகழும் அடைந்த நீ, ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும் ஒழுக்கமும் உலகம் அறிந்த விஷயம். இப்படியிருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்துகொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என் மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ்மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமாயிருக்கிறதே! எல்லாப் பிராணிகளிடமும் கருணை கொண்டவன், தோஷ எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் புலன்களையும் உள்ளத்தையும் அடக்கியாள்பவன், அற வழியில் நிற்பவன், பொறுமை, சாந்தி, தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே, இப்போது அவையெல்லாம் என்னவாயிற்று? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள். அவள் பேச்சைத் தட்டிவிட்டு வந்தேன். நீ வேஷதாரியென்றும் துன்மார்க்கன் என்றும், புல்லால் மூடப்பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரியாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியுடன் யுத்தத்துக்கு வந்தேன். உனக்கு என்ன தீமை நான் செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந்தேன்? அதருமத்தில் இறங்கி என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரச குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதியைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்தவனல்ல. மோசக்காரனான உன்னை பூதேவி மணக்க விரும்ப மாட்டாள். நீ எப்படி தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப்பட்டேன். என் கண்ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந்தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டிருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே! சுக்ரீவனுக்காக என்னைக் கொன்றாயே. ராவணனைக் கொன்று பிரேதத்தைக் கழுத்தில், கயிறு போட்டுக் கட்டி உன்னிடம் இழுத்துக்கொண்டு வந்து விட்டிருப்பேனே! மைதிலியை எவ்விடம் மறைத்து வைத்திருந்தாலும் கண்டு பிடித்து உன்னிடம் ஒப்புவித்திருப்பேனே! பிறந்தவர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம்.”


இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரணாவஸ்தையில் ராமனைக் கண்டித்தான்.


வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்னதாகவும் அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டு விட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள். ராமாவதாரத்தில் ஆண்டவனும் தேவியும் சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று.


சுக்ரீவனால் அடிபட்டு உடம்பெல்லாம் ரண காயங்கள். அதன் மேல் ராம பாணத்தினால் உண்டான மரணாவஸ்தை. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு கடைசியாக வாலி ராமனுக்கு ஒரு வார்த்தை சொன்னான்:


“ஏதாயினும் சரி, நான் இனி அதைப்பற்றி தோஷம் சொல்லவில்லை: எனக்கு மிகப் பிரியமான குமாரன் அங்கதன் மிகவும் துக்கப்படுவான். சுக்ரீவனும் நீயும் அவனைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவனை உன் வசம் ஒப்புவித்தேன்.


அவனைக் காப்பாற்றுவது உன் கடமையாகப் பாவிக்க வேண்டும். ஜலம் வற்றிப் போன குளத்திலுள்ள தாமரைக் கொடிபோல் துக்கப்படுவான். நான் சுக்ரீவ னுக்குச் செய்த கொடுமை தாரையின் தூண்டுதலால் என்று அவன் எண்ணாமலிருக்க வேண்டும். அங்கதனை அவன் கவுரவமாகவும் அன்புடனும் நடத்த வேண்டும். இதை நீ செய்தால் போதும். நான் வேறொன்றும் விரும்பவில்லை. வீரர்களுக்குரிய உலகம் எனக்குக் காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நினைவு இழந்தான்.

*

ஒன்று நிச்சயம். வாலியை ராமன் எதிர்த்து ஜெயித்திருக்க முடியாது. ராவணனைத் தேவர்கள் எதிர்க்க முடியாதிருந்தது போலவே இதுவும் வரத்தினால் ஏற்பட்ட நிலைமை. மறைந்து நின்றே தான் ராமன் வாலியைக் கொல்ல முடியும். ஆயினும் ஏன் வாலியைக் கொல்ல வேண்டும் என்கிற கேள்வி நிற்கிறது.


கபந்தனுடைய சாப விமோசன காலத்தில் அவன் “நீ சுக்ரீவனுடைய நட்பை சம்பாதித்து சீதையை அடைவாய்” என்று சொன்னபடி ராமன் சுக்ரீவனைத் தேடிச் சென்றான். அவனை அடைந்து அக்கினி சாட்சியாக நட்புப் பிரதிக்ஞையும் செய்து விட்டான்.


மன்னிக்கத் தகாத அபராதம் ஏதும் சுக்ரீவன் வாலிக்குச் செய்யவில்லை. அப்படியிருக்க, வாலி தான் பெற்றிருந்த பலத்தைக் கொண்டு தம்பியைப் படாத பாடு படுத்திக் கொடுமை செய்து வந்தான். இதைச் சொல்லி முறையிட்ட சுக்ரீவனுக்கு “உன் பகைவனை ஒழித்து மனைவியையும் ராஜ்யத்தையும் நீ மறுபடி அடையச் செய்வேன், இது சத்தியம்” என்று சுக்ரீவனுக்கு உறுதியான பிரதிக்ஞை செய்து விட்டான். இதன்மேல் வேறு வழியில்லை. வாலியை மறைந்து நின்று கொல்வது அவசியமாக ஏற்பட்டுவிட்டது. காதல் மனைவியைத் திருப்தி செய்ய மாய மானைத் தேடிப் போனதின் பயனாக ஒன்றன்பின் ஒன்றாகச் சிக்கலும் துக்கமும் தரும சங்கடங்களும் ராமனைத் தொடர்ந்து வந்தன. இவ்வளவே என் சிற்றறிவுக்குக் காணப்படுவது.




Post a Comment

புதியது பழையவை