அதிகப் பார்வை

57. சுக்ரீவன் சந்தேகம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)


மனைவியையும் ராஜ்ய பதவியையும் மறுபடியும் அடைய வேண்டும் என்கிற ஆசை சுக்ரீவனை விட்டுப் போகவில்லை. ஆனால் அதற்கு அவன் ஒரு வழியும் காணவில்லை. வாலியின் பராக்கிரமம் தாண்டக்கூடாத ஒரு மலையாக நின்றது.


ராமனுடைய சகாயத்தைக் கொண்டு காரியம் சாதிக்கலாம் என்று மந்திரி ஹனுமான் தைரியம் சொல்லி வந்த போதிலும் சுக்ரீவன் மனத்தில் சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. இந்த ராமனுடைய பராக்கிரமத்தைக் கொண்டு வாலியை வெல்ல முடியுமா? இது ஆகாத காரியமாகத் தோன்றுகிறது என்று ஐயப்பட்டுக் கொண்டேயிருந்தான். வாலியினுடைய தேகம் இரும்பைப் போன்றது. அவனை எப்படி ராமன் கொல்லப் போகிறான் என்பது சுக்ரீவனுடைய சந்தேகம்.


ஆயினும் இதைவிட்டால் வேறு வழி ஒன்றுமே இல்லை. நிராசையாகப் போவதற்கும் மனம் இணங்கவில்லை. ராமனுடைய பலத்தைப் பரீக்ஷை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான்.

நண்பனுடைய பலத்தை எவ்வாறு சந்தேகித்துப் பரீக்ஷை செய்வது? நான் செய்து முடிக்கிறேன் என்று ராமன் பிரதிக்ஞை செய்து விட்ட பிறகும் எப்படி அவனுடைய பராக்கிரமத்தைச் சோதித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்வது என்றெல்லாம் சுக்ரீவன் யோசித்தான். சுக்ரீவன் மிக்க சமத்காரம் பெற்றவன். மெள்ளப் பேசலானான் :


“ராமசந்திர பிரபுவே! நீ சொன்ன சொல் இது வரையில் உன் உள்ளத்தில் இருந்து வந்த துக்கத்தைப் போக்கிவிட்டது. உன்னுடைய பராக்கிரமத்தை அறிவேன். உன்னால் விடப்படும் சரம் மூன்று லோகங்களையும் அழிக்கும். அப்படியிருக்க வாலியின் தேகக்கட்டு அதைத் தாங்குமா? ஆயினும் இந்த வாலியின் பராக்கிரமத்தைப் பற்றி உனக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. வாலியானவன் அதிகாலையில் எழுந்து ஒரே முகூர்த்தத்தில் நான்கு சமுத்திரங்களுக்கும் போய்ச் சந்தியா வந்தனம் செய்து முடிப்பான். மலைப் பாறைகளைப் பந்துபோல் மேலே எறிந்து விளையாடுவான். காட்டிலுள்ள பெரிய பெரிய மரங்களைப் புல்லைப் பிடுங்குவது போல வேரோடு விளையாட்டாகப் பிடுங்கித் தள்ளுவான்.


ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்கிற அசுரன், தான் பெற்ற வரத்தினால் ஆயிரம் யானையின் பலம் அடைந்து, அந்த பலத்தை இன்ன விதத்தில் உபயோகிப்பது என்று தெரியாமல் சமுத்திர ராஜனைச் சண்டைக்கு இழுத்தான். சமுத்திர ராஜன், 'உனக்குச் சமானமான எதிரியோடு அல்லவோ நீ யுத்தம் செய்ய வேண்டும்? வடக்கே ஹிமவான் இருக்கிறான். அவனண்டை போய் யுத்தம் கேள். நான் உனக்குச் சமான எதிரியல்ல' என்றான். இது நியாயமே என்று துந்துபி ஒப்புக்கொண்டு மிக வேகமாக வடக்கே சென்றான். போய் ஹிமவானை ‘வா! என்னோடு யுத்தம் செய். நீ மகா பலவான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயாம். உன் பலத்தைப் பரீட்சை செய்ய வந்திருக்கிறேன்!' என்று இமய மலையிலுள்ள பாறைகளைக் கொம்பால் இடித்துத் தள்ளி அட்டகாசம் செய்து கர்ஜித்தான். ஹிமவான் தனக்குண்டான கோபத்தை அடக்கிக்கொண்டு ‘அப்பா, நீ என்மேல் ஏன் பாய்கிறாய்? எனக்கு யுத்தப் பயிற்சியே கிடையாது. நான் சாதுக்களாகிய முனிவர்களுக்கு இருக்க இடம் தந்து அவர்களோடு காலம் கழித்து வருகிறேன்' என்றான்.  'அப்படியானால், எனக்குச் சமானமான ஒரு பலவானைச் சொல்லு. அவனோடு இன்றே நான் யுத்தம் செய்ய வேண்டும்' என்று மஹிஷாசுரன் மூர்க்கமாகச் சொன்னான்.


இதைக்கேட்ட ஹிமவான், 'தெற்கே உனக்குச் சமமானவன் ஒரு பலவான் இருக்கிறான். வாலி என்ற வானர ராஜன். இந்திரனைப் போன்ற பராக்கிரமசாலி. அவன்தான் நீ யுத்தத்துக்கு அழைக்கத் தக்க சமான வீரன். உனக்கு இஷ்டமிருப்பின் உடனே அவனிடம் போய் யுத்தம் கேள்' என்றான்.


இதைக் கேட்டதும் துந்துபி வாலியின் நகரத்துக்குச் சென்றான். கிஷ்கிந்தை வாயிலில் பெரிய அட்டகாசம் செய்தான். மரங்களைத் தள்ளிக் கோட்டை வாயிலைத் தன் கொம்புகளால் இடித்துப் பெருங் கர்ஜனை செய்து வாலியை 'வா, வெளியே! உனக்கு பலம் இருப்பது உண்மையானால் என்னுடன் போர் செய்' என்றான்.


அந்தப்புரத்தில் சுகமாகப் படுத்திருந்த வாலி இந்தச் சப்தத்தைக் கேட்டான். உடனே எழுந்து வந்தான். அவனுடன் ஸ்திரீகளும் அச்சமயம் சென்றார்கள். வெளியே வந்து, 'துந்துபீ, ஏன் இம்மாதிரி என் நகரத்து வாயிலில் கோஷமிடுகிறாய்? உயிரோடு இருக்க உனக்கு ஆசை இருந்தால் இவ்விடத்தை விட்டுச் செல்' என்றான்.


இப்படி வாலி தன்னை அலட்சியமாகப் பேசியதைக் கேட்ட துந்துபி மிகக் கோபங் கொண்டு ‘உன்னுடைய மனைவிகளுக்கு எதிரில் ஜம்பமாகப் பேசாதே! போருக்கு வந்திருக்கிறேன். உனக்கு வீரியமிருக்குமாயின் என்னுடன் யுத்தம் செய். வீண் பேச்சு வேண்டாம். இப்போது நீ படுக்கையிலிருந்து மயக்கமாக வந்திருக்கிறாய். காலை வரையில் நான் காத்திருக்கச் சம்மதிக்கிறேன். கள்ளைக் குடித்து பலம் இழந்தவனைத் தாக்குவது பாவமாகும். இந்த ராத்திரி நீ எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு சரியான நிலையில் வா. உன்னை வதம் செய்வேன்' என்றான்.


துந்துபியின் வார்த்தைகளைக் கேட்ட வாலி சிரித்து விட்டுச் சொன்னான்: 'பெண்களே! நீங்கள் போங்கள். அசுரனே! நான் மயக்கத்தில் இல்லை. யுத்தத்துக்கு முன் அருந்தும் உற்சாக பானம்தான் குடித்து வந்திருக்கிறேன் என்று வைத்துக் கொள். போர் செய்ய விரும்புகிறாயானால் இப்போதே போர் செய்யலாம்' என்று சொல்லி மகிஷாசுரனுடைய வாலைப் பிடித்துக் கரகரவென்று அவனைச் சுழற்றி வீசி எறிந்தான். ரத்தம் கக்கிக் கொண்டு அசுரன் கீழே விழுந்தான்.


பிறகு சமாளித்துக் கொண்டு அசுரன் எழுந்தான். இருவருக்கும் பெரும் போர் நடந்தது. இந்திரனுடைய புத்திரனான வாலி மகிஷாசுரனை இடித்து இடித்துக் கொன்றான். செத்து விழுந்த அசுரனை வாலி எடுத்துத் தூக்கி எறிந்தான். அது ஒரு யோஜனை தூரம் போய் விழுந்தது.


எறியப்பட்ட அசுரனுடைய தேகத்திலிருந்து ரத்தத் துளிகள் காற்றால் வீசப்பட்டு மதங்க முனிவர் ஆசிரமத்தின் மேல் விழுந்தன. முனிவர் யார் இதைச் செய்தது என்று கோபங் கொண்டு பார்த்தார். நடந்ததை உடனே அறிந்து கொண்டார்.


கர்வம் கொண்டு இம்மாதிரி ஒரு சவத்தை விட்டெறிந்து ஆசிரமத்தின் பேரில் அசுத்தமான ரத்தத் துளிகள் விழச் செய்தானே என்று வாலியை முனிவர் சபித்து விட்டார். 'இந்த ஆசிரமத்துப் பூமியில் அவன் பிரவேசித்தானானால் உயிர் நீப்பான்' என்று சாபமிட்டார். இதனால்தான் ராமனே, நானும் என் மந்திரிகளும் இவ்விடம் வந்து க்ஷேமமாக இருக்கிறோம். வாலி இவ்விடம் வருவதற்கில்லை. மற்ற எந்த இடம் சென்றாலும் அவனுடைய தொந்தரவு உண்டாகும்.


ரிஷியின் சாபத்தால் இந்த எல்லைக்குள் பிரவேசிப்பதற்குப் பயப்படுகிறான். இந்த ஆச்சா மரங்களைப் பார். வாலி இந்த மரங்களில் ஒன்றைத் தன் கையால் பிடுங்கி ஒரு அசைப்பு அசைத்தால் மரத்தில் உள்ள அவ்வளவு இலைகளும் உதிர்ந்துபோகும். அவனுடைய பராக்கிரமம் இவ்வாறு இருக்க அவனுடைய விரோதத்தைச் சம்பாதித்த நான் எப்படித் தைரியமாக இருக்க முடியும்?” என்றான் சுக்ரீவன்.


லக்ஷ்மணன் சுக்ரீவனுடைய பயத்தையும் அவன் இம்மாதிரி வாலியின் பலத்தைக் குறித்துப் பேசி வந்த தன் நோக்கத்தையும் நன்றாக உணர்ந்துகொண்டான்.


“சுக்ரீவனே ! உன் சந்தேகம் தீர ராமனுடைய பலத்தையும் நீ பார்க்கலாம்” என்றான்.


“சந்தேகம் எனக்கில்லை. சாம்பல் பூத்த நெருப்பைப் போன்ற ராமனுடைய பலத்தை நான் அறிந்தவனே யாவேன். ராமனை நான் சரணமடைந்தேன். ஆனாலும் வாலியின் பல பராக்கிரமத்தைப் பிரத்தியட்சமாகப் பார்த்த நான் அவனை நினைக்கும் போதெல்லாம் நடுங்குகிறேன். அவ்வளவே” என்றான் சுக்ரீவன்.


இப்படிச் சுக்ரீவனுடைய பக்தியையும், சரணமடைந்துவிட்ட நிலையையும், வாலியை நினைத்துப் பயப்படுவதையும் பார்த்த ராமன், அவனுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதே சரி என்று எண்ணித் தன் கால் கட்டை விரலால் துந்துபியின் பிரேதம் ஒரு மலைபோல் கிடந்ததை நெம்பி விளையாட்டாகத் தூக்கி எறிந்தான். பிரேதம் பத்து யோஜனை தூரம் போய் விழுந்தது.


பிறகு அதுவும் போதாதென்று ராமன் தன் வில்லைக் காது வரை இழுத்து வளைத்து ஒரு சரத்தை விட்டான். சுக்ரீவன் காட்டிய ஆச்சா மரத்தையும் அதன் பின் நின்ற ஆறு ஆச்சா மரங்களையும் சேர்த்துத் துளைத்துவிட்டது. ஏழு மரங்களையும் துளைத்து அந்தத் தங்கக் கட்டுச் சரம் பூமியில் புகுந்தது. பிறகு திரும்பி ராமசந்திரனுடைய தூணியில் வந்து

சேர்ந்தது.


இதையெல்லாம் கண்ட சுக்ரீவன் பரவசமாய்ப் போனான். வாலியின் வஜ்ஜிர தேகம் ராமனுடைய சரத்தால் பிளக்கப்படும் என்று நிச்சயமடைந்தான். வானர ராஜன் அப்படியே சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து ராமனை நமஸ்கரித்து,


“உன் பராக்கிரமத்தைக் கண்ணாரக் கண்டேன். தேவகணங்கள் அவ்வளவு பேரும் இந்திரனைத் தலைமை கொண்டு வந்து நின்று உன்னை எதிர்த்தாலும் உன் வெற்றி நிச்சயம். இனி வாலியைப்பற்றி என்ன பேச்சு? உன்னுடைய நட்பை அடைந்த என் துயரம் இன்றே தீர்ந்துவிட்டது. உடனே வாலியை அழித்துவிட்டு என்னைக் காப்பாற்றுவாய். இன்றே கிஷ்கிந்தை செல்வோம்” என்றான்.


லக்ஷ்மணனும் சம்மதித்தான். “அப்படியே ஆகட்டும்!” என்றான் ராமன். கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள். சுக்ரீவன் முந்திச் சென்றான். ராமன் பின்னால் சென்று அடர்ந்த காட்டில் ஒரு மரத்துக்குப் பின் நின்றான்.

*

சுக்ரீவன் ஒரு பெருங் கர்ஜனை செய்தான். அதைக் கேட்ட வாலி பெருங் கோபத்துடன் மலைக் கோட்டையிலிருந்து உதய சூரியனைப்போல் தேஜஸுடன் வெளியே வந்தான். இருவரும் கச்சை இழுத்துக் கட்டிக்கொண்டு கை கலந்தார்கள். உக்கிரமான முஷ்டி யுத்தம் நடந்தது.


இப்படிக் கோர யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் வில்லைப் பிடித்து மறைந்து நின்ற ராமன் திகைத்தான். இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்து யுத்தம் செய்ய ஆரம்பித்ததும் யார் சுக்ரீவன், யார் வாலி என்று ராமனால் உணர முடியவில்லை. இருவரும் ஒரே வடிவம், ஒரே விதமான ஆபரணங்கள் பூண்டு ஒரே விதமான பராக்கிரமத்துடன் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனபடியால் யார் வாலி என்று' தெரிந்துகொள்ள முடியாமல் போயிற்று. கொல்லும் சரத்தைப் பிரயோகிக்க இடமில்லாமல் போயிற்று.


இதற்கிடையில் சுக்ரீவன் மிக அடிபட்டு, ராமன் ஒன்றும் செய்யவில்லையே என்று ஏமாற்றமடைந்து, தன் உயிர் போகும் என்று பயந்து ரிஷ்யமுகவனத் துக்கு ஒரே ஓட்டமாக ஓடினான்.


“இன்று பிழைத்தாய், போ” என்று வாலி தம்பி சுக்ரீவனை நோக்கிச் சொல்லி விட்டுத் தன் கோட்டைக்குள் சென்றான்.


ராமலக்ஷ்மணர்கள் அடிபட்டும் துக்கப்பட்டும் நின்ற சுக்ரீவனிடம் வந்து சேர்ந்தார்கள். வானர ராஜன் ராமனை நேரில் பார்க்காமல் தரையைப் பார்த்துப் பேசினான். சொன்ன சொல்லைத் தவறினான் என்பது சுக்ரீவனுடைய கோபம்.


“வாலியைக் கொல்ல நான் பிரியப்படவில்லை என்று முந்தியே என்னிடம் சொல்லி விட்டிருந்தாயானால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா? என்னை ஏன் வாலியைப் போருக்கு அழைக்கச் சொன்னாய்?” என்றான் சுக்ரீவன்.


“சுக்ரீவனே! கோபிக்க வேண்டாம். நான் சொல்லுவதைச் சாவதானமாகக் கேட்க வேண்டும்” என்றான் ராமன். “நான் பாணம் விடாததற்குக் காரணம் சொல்லுகிறேன். நீயும் வாலியும் அலங்காரம், வேஷம், உயரம், பருமன், நடை எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தீர்கள். போர் ஆரம்பித்து விட்ட பிறகு உங்களில் யார் வாலி, யார் சுக்ரீவன் என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் திகைத்து நின்றேன். நான் பாணத்தை விட்டு வாலிக்குப் பதில் உன்னைக் கொன்று விட்டேனானால் என்னவாகும்? சகோதரர்களாகிய நீங்கள் போட்ட கர்ஜனைகள், முகத்தின் காந்தி, யுத்தம் செய்த முறை எல்லாவற்றிலும் ஒருவனைப் போலவே மற்றொருவனுமாகக் கொஞ்சங் கூட வித்தியாசமின்றி இருந்தீர்கள். இந்த நிலையில் நான் ஏதும் செய்ய முடியாமல் நிற்க வேண்டியதாயிற்று. வாலி என்று எண்ணி உன்னைக் கொன்று விட்டேனானால் அப்புறம் என் கதி என்ன? பிழைப்பிக்க வந்து கொன்று விட்ட மூடனும் பாவியும் ஆவேனல்லவா? கோபிக்காதே சுக்ரீவா! மறுபடியும் வாலியை அறைகூவியழைப்பாய். வாலியை நிச்சயமாகக் கொல்வேன். லக்ஷ்மணா, அதோ அந்த அழகிய பூப் பூத்த கொடியைக் கொண்டு வா. சுக்ரீவன் கழுத்தில் அதை மாலையாய் அமைத்துக் கட்டுவாய். யுத்தத்தில் யார் வாலி, யார் நம்முடைய நண்பன் என்று அதனால் நான் நன்றாகக் காண்பேன். நாம் எண்ணிய காரியத்தை நிறைவேற்றுவோம். இன்றே வாலி பூமியில் விழுந்து புரள்வதைப் பார்ப்பாய், சுக்ரீவனே!” என்றான்.


சுக்ரீவன் சமாதானமடைந்து மறுபடியும் உற்சாகம் அடைந்தான். லக்ஷ்மணன் பூங்கொடியைச் சுக்ரீவன் கழுத்தில் மாலையாக அமைத்துக் கோத்தான். மாலையை அணிந்த சுக்ரீவன் முன்னைவிட அழகாகத் தோன்றினான். உடனே கிஷ்கிந்தை வாயிலுக்கு மறுபடியும் போனான். கூடவே ராமலக்ஷ்மணரும் பின்னால் சென்றார்கள்.


Post a Comment

புதியது பழையவை