சுக்ரீவன் தன் சகோதரன் வாலிக்கும் தனக்கும் உண்டான விரோதத்தின் கதையை ராமனிடம் விவரமாகச் சொன்னான்.
“என் அண்ணன் வாலி வானர ராஜ்ய பட்டாபிஷேகம் பெற்று, கிஷ்கிந்தையில் அரசு புரிந்து வந்தான். மகா பராக்கிரமசாலி. அவனிடம் அன்பும் பக்தியும் குறைவின்றிச் செலுத்திக்கொண்டு நான் யுவராஜனாக இருந்து வந்தேன். வாலிக்கும் மாயாவி என்கிற அசுரனுக்கும் பழைய விரோதம். ஒரு நாள் ராத்திரி அந்த அசுரன் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைப் போருக்கு அழைத்தான்.
அவன் இரவில் போட்ட கர்ஜனையைக் கேட்டுக் கோபங் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த வாலி எழுந்து அவனை உடனே எதிர்க்க வெளியேறினான். நானும் அவனுக்கு உதவியாகக் கூடவே சென்றேன். நிலா வெளிச்சத்தில் நாங்களிருவரும் வருவதைப் பார்த்து மாயாவியானவன் ஓடி ஒரு கைக்குள் நுழைந்தான். வாலியும் அவனைத் துரத்திக் கொண்டு குகைக்குள் புகுந்தான். நானும் உள்ளே புகப் போனேன். வாலி என்னை வேண்டாம் என்று தடுத்து விட்டான். தான் ஒருவனாகவே அந்தத் துஷ்டனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லி, என்னை அந்தக் குகையின் வாயிலில் வெளியே நிற்கச் சொன்னான். சொல்லிவிட்டு அவன் உள்ளே புகுந்து சென்றான்.
உள்ளே சென்றவன், பல நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் குகைக்குள் அசுரர்களுடைய பெருங் கூக்குரல் கேட்டது. அதன் கூடக் குகையிலிருந்து ரத்த வெள்ளம் பெருகி வந்தது. இதைக் கண்டதும் வாலியை மாயாவியும் பல அசுரர்களும் சூழ்ந்து கொன்று விட்டார்கள் என்று தீர்மானித்துக் கொண்டேன். அசுரர்கள் வந்து என்னையும் தாக்குவார்கள் என்று எண்ணி ஒரு பெரும் பாறாங்கல்லைக் குகை வாயிலில் வைத்து மூடி விட்டேன்.
கிஷ்கிந்தைக்கு வருத்தத்தோடு திரும்பினேன். வாலி இறந்தான் என்று யாருக்கும் சொல்லாமலே ராஜ காரியங்களைப் பார்த்து வந்தேன். பிறகு வானரப் பிரஜைகள் நிர்ப்பந்தித்தார்கள். 'அரசனில்லாமல் போனால் ராஜ்யம் பாழாகப் போகும், வெகு நாளாகியும் வாலி திரும்பவில்லை; நீயே பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசு புரிவாய்' என்று வற்புறுத்தினார்கள். நானும் அதற்கு இணங்கினேன்.
சில காலம் கழித்து மாயாவியையும் அவனுடைய துணையாட்களாகவிருந்த அசுரர்களையும் கொன்று ஒழித்துவிட்டு வாலி திரும்பினான். குகை அடைபட்டிருப்பதைப் பார்த்து, “சுக்ரீவா! சுக்ரீவா!" என்று உள்ளேயிருந்து கத்திப் பார்த்தான். நான் அவ்விடமில்லையானபடியால் எனக்கு இது ஒன்றும் தெரியாது. அவன் என்மேல் மகா கோபங் கொண்டு கற்பாறையை உதைத்துத் தள்ளிவிட்டுக் கிஷ்கிந்தைக்குள் பிரவேசித்தான்.
நான் ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசு புரிவதைப் பார்த்ததும் அடங்கா சினம் மேலிட்டு என்னைப் பலவாறாகத் திட்டினான். நான் நடந்ததை நடந்தது போலச் சொன்னேன். ‘அரக்கன் உன்னைக் கொன்றுவிட்டான் என்று எண்ணி இவ்விதம் செய்தேன். பிரஜைகளுடைய நிர்ப்பந்தத்துக்காக அபிஷேகம் பெற்றேன். இந்த ராஜ்யம் உன்னுடையது, திரும்பப் பெற்றுக்கொள். உன் அடிமையாக நான் முன்போல் இருப்பேன்' என்று சொல்லி அவன் காலில் விழுந்தேன். அவனோ நான் சொன்னதை லட்சியமே செய்யவில்லை. நான் துராசைப் பட்டுக் குகை வாயிலை அடைத்து விட்டு அக்கிரமமாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டேன் என்றே அவன் நினைத்து, என்னை நகரத்திலிருந்து வெளியே துரத்தி விட்டான். 'திரும்பி இந்தப் பக்கம் வந்தால் உன்னைக் கொல்வேன்' என்று சொல்லி என்னைத் துரத்தி விட்டான். அப்போது நான் உடுத்தியிருந்த வஸ்திரத்துடன் வெளியே ஓடினேன். அதுமுதல் காடும் மலையுமாக மறைந்து திரிந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன். எல்லாம் இழந்து இந்த நிலையிலிருக்கிறேன். இந்த நான்கு வானரர்களே எனக்குத் துணையாக இருந்து வருகிறார்கள். கோபத்தால் உண்மையையறியமாட்டாமல் என் அண்ணன் இம்மாதிரி அக்கிரமம் செய்து வருகிறான். மகா பராக்கிரமசாலியான அந்த வாலியை ஹதம் செய்து என்னைக் காப்பாற்றுவாய்” என்றான் சுக்ரீவன்.
சுக்ரீவனுடைய பரிதாப நிலையை ராமன் கண்டு கருணை மேலிட்டு, “உனக்கு நான் தந்த சபதம் உறுதி. பயப்படாதே. என் அம்பு வாலியின் உடலைத் துளைக்கும். உனக்குப் பகையாகிவிட்ட சகோதரனைக் கொன்று உன் கவலையை நீக்குவேன்” என்று மறுபடியும் பிரதிக்ஞை செய்தான்.
*
இந்த வாலி-சுக்ரீவ நிகழ்ச்சியானது புராணங்களில் செய்யப்படும் உபதேசத்துக்கு நல்ல உதாரணம். வாலியின் நடவடிக்கையிலும் பெருங் குற்றமில்லை, சுக்ரீவனுடைய காரியங்களிலும் பெருங் குற்றம் சொல்வதற்கில்லை. கோபத்தால் புத்தி மழுங்கிப் போகும். கோபத்துக்கு வசப்பட்டு விட்டால் உண்மையைக் காணும் சக்தியை இழந்து விடுகிறோம். அதனின்று பிறகு நாசம் அடைவோம் என்பது சாஸ்திரம். இதற்கு வாலியின் கோபாவேசமும் முடிவும் உதாரணம் தருகின்றன. சுக்ரீவன் தான் செய்த காரியங்களை வணக்கமாகவும் உண்மையாகவும் சொல்லிப் பார்த்தான். ஆனாலும் அது வாலியின் புத்தியில் ஏறவில்லை. காரணம், வாலியின் அடங்காக் கோபம்.
சுக்ரீவனும் அவசரப்பட்டுத் தன் தமையன் மாண்டான் என்று தீர்மானித்து விட்டான். அசுரர்கள் வந்து தன்னையும் கொன்று விடுவார்கள் என்று பயந்து குகை வாயிலை அடைத்துப்போட்டு ஊர் திரும்பிவிட்டான். ராஜ்யாதிகாரம் பெற வேண்டும் என்று முதலில் ஆசைப்படவில்லை. ஆயினும் பிரஜைகள் நிர்ப்பந்தித்ததால் பிறகு உடன்பட்டு விட்டான். ஆசை வலையில் சிக்கினான். தீர ஆலோசியாமல், நடந்து கொண்டான். அதனால் கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டான். தீர ஆலோசிக்காமல் செய்யும் காரியங்கள் அனர்த்தத்தில் முடியும் என்பது சுக்ரீவனுடைய கதையினின்று அடைய வேண்டிய உபதேசம்.
பிறர் சொத்தை ஆசைப்படலாகாது. ஆசையை அடக்கியாள்வது மிகக் கடினம். இதில் முழு வெற்றியடைவதற்கு வெகு வகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பரதனையும் பட்டம் கட்டிக்கொள் என்று மந்திரிகளும் பிரஜைகளும் அயோத்தியில் வற்புறுத்தினார்கள். ஆயினும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை. இது பரதனுடைய சிறப்பு. சுக்ரீவனோ ஒப்புக்கொண்டு விட்டான். அதனால் துன்பம் அடைந்தான். பரதன் வேண்டாம் என்று மறுத்துப் பெருங் கீர்த்தி அடைந்தான்.
இராமாயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சாதாரண வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய தருமம் விளக்கப்படுகிறது. விளக்கம் சில இடங்களில் நேர்முகமான விளக்கமாக இருக்கும். சில இடங்களில் நேராக எடுத்துக் காட்டாமல் குறிப்பாகக் கிடக்கும். பக்தியோடு சிந்தனை செய்தால் விளங்கும்.
கருத்துரையிடுக