சீதையை இழந்ததனால் ராமன் படும் துக்கத்தைப் பார்த்து சுக்ரீவன் அவனுக்குப் பலவிதமாகத் தைரியம் சொன்னான்.
“லக்ஷ்மணன் சொன்னதிலிருந்து எல்லாம். அறிந்தேன். நீ சிந்திக்க வேண்டாம், எப்படியாவது சீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்போம். அவளை எங்கே மூடி வைத்திருந்தாலும் கண்டு பிடித்துத் தருவோம். நீ சந்தேகப் படவேண்டாம். வெகு நாள் காத்திருக்க வேண்டியதுமில்லை. சீக்கிரமே இந்தக் காரியத்தை முடித்துத் தருவோம்.
“ஆகாய மார்க்கமாய் ஒரு ஸ்திரீயை அரக்கன் தூக்கிப் போனதை நானும் என்கூட இருந்தவர்களும் பார்த்தோம். அவள் துடிதுடித்து அழுது கொண்டும் ‘ராமா! லக்ஷ்மணா’ என்று கூக்குரலிட்டுக் கொண்டும் போனதைக் கண்டோம். எங்களை அவளும் கண்டாள். கண்டு தன் உத்தரீயத்தை எடுத்துத் தன் மேலிருந்த ஆபரணங்களைக் கழற்றி அதில் முடித்துக் கீழே போட்டாள். அதை எடுத்து வைத்திருக்கிறோம். நீ இது உன் மனைவி சீதையின் ஆபரணங்களா என்று பார்க்கலாம்” என்றான்.
இதைக் கேட்டதும் ராமன் தாங்க முடியாத பரபரப்புடன் “கொண்டு வா, கொண்டு வா” என்றான்.
குகையில் வைத்திருந்த அந்தத் துணி மூட்டையைக் கொண்டு வந்தார்கள். வஸ்திரத்தைப் பார்த்தவுடனே ராமனுடைய துக்கம் பொங்கி, பொறுக்க முடியாமல் போய் விட்டது. சிறு முடிப்பாகக் கட்டியிருந்த சீதையின் உத்தரீயத்தைப் பார்த்ததும் அரக்கன் கையில் சிக்கித் தவித்த சீதையின் சங்கட நிலை ராமன் கண்முன் நின்றது.
“லக்ஷ்மணா! இந்த மூட்டையை அவிழ்த்துப் பார், என்னால் பார்க்க முடியவில்லை” என்று கண்களை மூடிக் கொண்டான்.
லக்ஷ்மணன் துணி முடிப்பை அவிழ்த்து, “இவை சீதையின் நூபுரங்களே. சந்தேகமில்லை” என்றான்.
கால்களுக்கு இட்ட ஆபரணங்களை முதலில் எடுத்து லக்ஷ்மணன் அடையாளம் கண்டதைப் பற்றி பக்தர்கள் ரொம்ப ரசித்து அதை எடுத்துக் கொண்டு உபந்நியாசம் செய்வது வழக்கம்.
பிறகு எல்லா ஆபரணங்களையும் எடுத்து ராமன் நன்றாக அடையாளம் கண்டு கண்ணிலே ஒற்றிக் கொண்டான். “புல்லில் விழுந்தபடியால் அப்படியே எல்லாம் கெடாமலிருக்கிறது பார், லக்ஷ்மணா” என்றான் ராமன்.
பிறகு துக்கத்துக்கு மேல் அடங்காத கோபம் மூண்டவனாக ராமன் “சீதையைத் தூக்கிப் போன இந்த அரக்கனுக்காக யமன் வீட்டு வாயில் திறந்து கிடக்கிறது. அவனையும் அவன் குலம் முழுதையும் இப்போதே அழிப்பேன், நிச்சயம்” என்றான்.
*
இப்படி ராமனுக்குத் தன் மனைவியையிழந்த துக்கமும் அரக்கன்மேல் உண்டான கோபமும் வளர்ந்து பொங்கி வந்ததை சுக்ரீவன் பார்த்துக் கொஞ்சம் கவலைப் பட்டான்.
பரஸ்பர சிநேகத்தைப் பற்றியும் சகாயத்தைப் பற்றியும் பிரதிக்ஞை அக்கினி சாக்ஷியாக எடுக்கப் பட்டிருந்த போதிலும் எந்தக் காரியம் முன் நடைபெற வேண்டும், எது பின்னால் நடைபெற வேண்டும் என்கிற பிரச்னை சுக்ரீவன் மனத்தில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. ராமனுடைய கோபாவேசத்தையும் துக்கத்தையும் சுக்ரீவன் நன்றாக உணர்ந்தான். அவனோடு வாதம் செய்வதில் பயனில்லை. அப்படிச் செய்தால் ராமன் மனத்தில் தன்னைப் பற்றிச் சந்தேகங்கூட உண்டாகலாம், புதிதாக ஏற்பட்ட நட்பு சேதப்படும் என்று எண்ணினான். உடனே சீதையைத் தேடுவதிலும் ராவணனைத் தாக்கும் வேலையிலும் புகுந்து விட்டால் வாலி என்ன செய்வானோ? அண்ணன் வாலி வானர ராஜ்ய பதவியிலிருக்கும் போது சுக்ரீவனுடைய பலம் எந்த மட்டுக்குச் செல்லும்? ராமனுடைய காரியம் வெற்றியடைவது கூடச் சந்தேகமாகப் போகும் என்றெல்லாம் யோசித்தான். ஆனபடியால் முதல் வேலையாக வானர ராஜ்யத்தை மறுபடி தான் அடைந்துவிட வேண்டும். இருவருடைய காரிய சித்திக்கும் இது அவசியம் என்ற முடிவுக்கு வந்தான். நீதி சாஸ்திரமும் ராமனுடைய மன நிலையையும் உணர்ந்து சமத்காரமாக நடந்து கொள்ளத் தீர்மானித்தான்.
“இந்த மகா பாபி அரக்கனுடைய பலபராக்கிரமமும் இருப்பிடமும் நான் நன்றாக அறியேன். அவன் சீதையை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறான் என்பது தெரியாது. ஆயினும் நான் உனக்குச் சத்தியம் செய்து வாக்குறுதி கொடுக்கிறேன். சீதையை எங்கே வைத்திருந்தாலும் கண்டு பிடித்து, அவன் இருக்குமிடமும் கண்டு, அரக்கனை வதம் செய்யும் மார்க்கத்தையும் தேடி முடிக்கப் போகிறேன். உனக்குச் சந்தேகம் வேண்டாம். துக்கப்படாதே. தைரியம் இன்றியமையாத மனநிலை. அரக்கனைக் கண்டு பிடித்து அவனையும் அவன் குலத்தையும் வேரோடு அறுத்து அழிப்போம். உன் வீரம் வீண் போகாது. அரக்கனை ஹதம் செய்து, உன் பௌருஷத்தை நாட்டிப் புகழடைவாய். மனச் சோர்வு வேண்டாம்.
என்னைப் பார். நானும் உன்னைப் போல் மனைவியை இழந்தும் ராஜ்யத்திலிருந்து துரத்தப்பட்டும் அவமானப்பட்டு வருகிறேன். ஆயினும் துக்கத்தின் வேகத்தை அடக்கிக் கொண்டு தைரியத்தைக் காத்து வருகிறேன். நான் ஒரு வானரன், என்னால் தைரியமாக இருக்க முடியுமானால் உனக்கு இது ஒரு கஷ்டமா? கண்ணீர் விடாதே. பொங்கும் துக்கத்தைத் தடுத்துக் கொள். உன்னைப் போன்ற ஜிதேந்திரியர்கள் பயம், துக்கம் இவற்றால் உள்ளம் தளர்ந்து போகாமல் மனத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் சோகத்தில் சிக்கிக் கொண்டு சமுத்திரத்தின் நடுவில் பெருங்காற்றால் அலைக்கடிக்கப்பட்ட ஓடத்தைப்போல் கவிழ்ந்து போவோம். சோகத்துக்கு இரையாகப் போனோமானால் ஒரு காரியமும் சாதிக்க முடியாது. ஆன்படியால், நண்பனே, துக்கத்தை அடக்கியாள்வாய். உன்னை நான் வருந்திக் கேட்டுக் கொள்ளுகிறேன். துக்கம் நம்மை இழுத்துக்கொண்டே போய்த் தோல்விப் பள்ளத்தில் தள்ளி விடும். உள்ளத்தில் தைரியத்தை நிலை நிறுத்திக் கொள். நான் உனக்கு உபதேசம் செய்யும் தன்மை பெற்றவனல்ல. நண்பன் என்கிற உரிமையில் எனக்கு எது உசிதம் என்று தோன்றுகிறதோ அதைச் சொல்லுகிறேன். உனக்குத் தெரிந்த விஷயத்தையே ஞாபகப் படுத்துகிறேன். அவ்வளவே.”
இப்படிச் சுக்ரீவன் மிகப் பிரியமாகச் சொன்னதெல்லாம் ராமன் உள்ளத்தில் பதிந்தது. கண்ணீர் நிறைந்து பெருகிய கண்களைத் துடைத்துக் கொண்டு சுக்ரீவனை ஆலிங்கனம் செய்து கொண்டான். சீதையின் மேல் வஸ்திரத்தையும் ஆபரணங்களையும் கண்டதினால் உண்டான மனக் கலக்கத்தை நிறுத்திக் கொண்டு தனக்குரிய மனோதிடத்தைத் திரும்ப அடைந்தான்.
“உன்னுடைய சிறந்த நட்பை அடைந்தேன், சுக்ரீவனே! உன் யோசனைப்படி நடப்பேன். சீதையைத் தேடும் காரியத்தைப் பற்றி நன்றாக யோசிப்பாய். உன் காரியத்தை என் காரியமாகவே நான் எண்ணி எல்லாம் செய்வேன். இது உறுதியென்று நம்புவாய். இது வரையில் நான் எப்போதும் பொய் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதில்லை. நம்முடைய நட்பு என்றைக்கும் பொய்யாகாது. சத்தியம் செய்கிறேன். உன் கஷ்டத்தைத் தீர்க்கும் வழியைக் கூசாமல் சொல்; நான் செய்து முடிப்பேன்” என்றான் ராமன்.
ராமனுடைய சொற்களைக் கேட்ட சுக்ரீவனும் அவனுடைய மந்திரிகளும் எல்லை கடந்த மகிழ்ச்சியடைந்தார்கள். தங்களுடைய கஷ்டங்கள் முடிந்து, சுக்ரீவன் மீண்டும் வானர ராஜ்யம் பெறுவது நிச்சயம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
கருத்துரையிடுக