ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 15 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

பங்குனி உத்திரமும் ஆழ்வார்கள் போற்றிய பிராட்டி வைபவமும்


வைஷ்ணவ சம்பிரதாயம் ஸ்ரீயோடு இணைந்த சம்பிரதாயம். திரு என்கிற வார்த்தையை இணைக்காது வைணவத்தில் எதுவுமில்லை. பெருமாளுக்கு வெறும் மால் என்று பெயர் இல்லை. திருமால் என்றே பெயர். திரு என்பது பிராட்டியைக் குறிக்கும். பகவானின் திருமண வைபவத்தைச் சொல்லும்போது கூட ஆண்டாள் கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், பத்மாவதி கல்யாணம் என்று பிராட்டியின் பெயரிட்டுச் சொல்வது வழக்கு.


வைணவ ஆலயங்களில் முதலில் நாம் சேவிக்க வேண்டியது பிராட்டியைத் தான். தாயார் சன்னதிக்குச் சென்று சேவித்து அவள் புருஷகாரத்தோடு பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பது வைணவ மரபு.


பகவானுக்கு என்னென்ன ஏற்றம் உண்டோ அவ்வளவு ஏற்றமும் பிராட்டிக்கும் உண்டு, "தேவத்வே தேவம் தேஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷி" (ஸ்ரீவிஷ்ணு புராணம்) என்று பகவான் அவதரிக்கும் போதெல்லாம் அவன் திவ்ய மகிஷியாக இவளும் அவனுக்கேற்றவாறு அவதரிக்கிறாள். வாமனனாக வரும் போது தனியாகத் தானே சென்றான் என்ற கேள்வி வரும். அப்போதும் அவன் திருமார்பில் திருமகள் இருந்தாள். அதை மான் தோலால் (கிருஷ்ணார்ஜினம்) மறைத்துக் கொண்டு சென்றான்.


முதலாழ்வார்கள் இதனை நமக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் நடுநாடு என்று போற்றப்படும் திருக்கோவலூரில் ஓர் அதிசயம் நிகழ்கிறது. ஒரு மழை நாள். பொழுது சாயும் நேரம். இருட்டு. சடசடவென்று இருள் கவிந்து பொழியும் பெருமழை. மழையில் நனைந்தபடி ஓடி வருகிறார் ஒரு பெரியவர். சட்டென்று அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் நுழைகிறார். கதவைத் தட்டுகிறார். வீட்டுக்கு உரியவர் வந்து கதவைத் திறக்கிறார். வாருங்கள்! இப்படி வந்து இடைகழியில் இருக்கலாம். சிறிய இடம்தான். ஆயினும் உங்களுக்குப் போதும். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். காலையில் போகலாம். மகிழ்ச்சி ஐயா! என்று சொல்லிய பெரியவர், அந்த சிறிய இடைகழியில் சற்று படுக்கலாம் என்று துண்டை உதறும் நேரம். ஐயா என்று குரல் கேட்கிறது. பெரியவருக்குப் புரிகிறது. யாரோ வந்திருக்கிறார்கள். வாருங்கள்! அடியேனும் உங்களைப் போல ஒதுங்க வந்தவன் தான்! உள்ளே வாருங்கள்: ஒருவர் படுக்கலாம் இவ்விடத்தில். ஆனால் என்ன? இருவர் அமரப் போதுமே! வந்து அமருங்கள்! என்று சொல்லி வாய்மூடு முன் சொல்லி வைத்தாற்போல அடுத்த குரல் ஐயா என்று அழைக்கிறது. இப்பொழுது இருவருமே சேர்ந்து மூன்றாமவரை வரவேற்கிறார்கள். “வாருங்கள்! வெளியே தான் மழை கொட்டுகிறதே! உள்ளே வாருங்கள்! இருவர் அமரக் கூடிய இவ்விடம் மூவர் நிற்கப் போதுமே!". 


வெளியே மழையின் வேகம் இன்னும் அதிகரிக்கிறது. உள்ளே மூவரும் நின்று கொண்டிருக்கின்றனர். பொழுது போக வேண்டுமே! இறைவனின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சட்டென்று இனம் புரியா நெருக்கம். மூவரும் சற்று விலகி நிற்க முயல்கின்றனர். ஆயினும் நெருக்கம் அதிகரிக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் நான்காமவராக ஒருவர் வந்திருப்பதாக உணர்கின்றனர் மூவரும். 


ஒரு விளக்கு இருந்தால் யார் வந்து இப்படி நெருக்குவது என்று பார்க்கலாம். என்ன செய்வது இப்போது என்று யோசிக்கும் போது, எப்படி விளக்கேற்றுவது என்ற யோசனை முதலாழ்வாருக்கு எழுகிறது.


வையத்தை அகலாக்கி, வார்கடலை நெய்யாக்கி, வெய்யக்கதிரோனை விளக்காக்கி செய்யச் சுடராழியானுக்கு இடராழி நீங்க இன்தமிழ் பாமாலை சூட்டுகிறார்.


இரண்டாமவர் பார்க்கிறார். அன்பை அகலாக்குகிறார். ஆர்வத்தை நெய்யாக்குகிறார். இன்புருகும் சிந்தையை இடுதிரியாக்குகிறார். நன்றாகப் பக்தியால் உருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றுகிறார். 

அங்கே ஞானம் பிறந்தது. அது முற்றி பக்தியானது. அதன் விளைவாக இதோ சாட்சாத்காரம் கிடைத்து விட்டது. நாரணனின் தரிசனம் கண்ணெதிரே மலர்ந்து விட்டது. நாரணனின் தரிசனம் கிடைத்தது முக்கியமல்ல. அது எப்படி கிடைத்தது என்பது தான் முக்கியம். முதலில் அவர் கண்டது பெருமாளை அல்ல. பிராட்டியைத் தான்.


ஆம். "திருக்கண்டேன்'' என்று மார்பில் அகலா மங்கையைக் காண்கிறார். உருக்கிய பொன்மேனி காண்கிறார். புரிசங்கம் காண்கிறார். இருவர் ஏற்றிய விளக்கால் மன்னிய பேரிருள் மாண்டது. இறைவனின் தரிசனமும் கிடைத்தது. இராமாநுச நூற்றந்தாதியில் அற்புதமாக இந்தக் காட்சியை
“மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் 
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவர்" என்று பாடுகிறார் திருவரங்கத்து அமுதனார். 


பிராட்டியின் பெருமை அளவிட முடியாதது. எம் பெருமானின் பெருமை முழங்கும் வேதங்களில் மிக குறைவாகவே பிராட்டியின் வைபவம் தென்படுகிறது என்கிற கருத்துக்கு வைணவச் சான்றோர் கூறும் பதில் அற்புதமானது. ஆழமானது.


“யதோ வாசே நிவர்த் தந்தே” என்று வேதம் பெருமானின் பெருமையை ஓரளவு கூற முயற்சி செய்து தோற்றது. ஆனால் பிராட்டியின் பெருமையை வேதத்தால் பூரணமாக கூற முடியாததால் அத்தகைய முயற்சியும் செய்யவில்லை என்பதால் வேதத்தில் பிராட்டி பற்றிய அதிகமான பகுதிகள் இல்லை.


பிராட்டியின் வைபவம் இல்லை என்பதல்ல செய்தி. பிராட்டியின் பெருமையைப் பேசும் சக்தி இல்லை என்பதே செய்தி. அதனால் பிராட்டி பற்றிய நேரடியான வைபவம் வேதங்களில் அதிகம் காணப்படுவதில்லை. வேதத்தின் அமைப்பிலேயே தமிழ் மறையான ஆழ்வார்களின் அருளிச் செயல் அமைந்திருப்பதால் மிக விரிவான முறையில் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் பிராட்டிக்கென்றே பாடப்பட்ட தனிப் பாசுரங்களைக் காண முடியாது. ஆயினும் எம்பெருமானின் பெருமையைச் சொல்லும் இடங்களிலும் அப்பெருமானின் பெருமைக்கு ஆதாரமான விஷயங்களிலும் பிராட்டியின் பெருமையே பேசப்படுவதை ஆசாரியர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். திருப்பல்லாண்டு துவக்கத்திலேயே பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறார்.


“வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று. இதற்கு எத்தனையோ பொருள் இருப்பினும், நீ வேறு; எங்கள் தாயார் வேறல்ல; உன்னை பார்க்கும்போது அவளும், அவளைப் பார்க்கும்போது உன்னையும் காண்கின்றோம். உன்னைச் சேவிக்கும் போது உன் வடிவாய் உன் மார்பில் உறையும் தாயார் தானே காட்சி அளிக்கிறார் என்கிற தொனி பெரியாழ்வார் பாசுர வரிகளில் தொக்கி நிற்கிறது.


பெருமானின் பெருமையை முழங்கிக் கொண்டே வந்த புருஷசூக்தம், “ஹ்ரீச்சதே லக்ஷ்மீச்ச பத்ன்யொள” என்று, திருமகளோடு இருப்பதால்தான் அந்த வேத புருஷன் பெருமை நிலைபெற்றிருப்பதாகக் கூறித் தலைக்கட்டுகிறது. திருக்கோவலூர் இடைகழியில் “வையம் தகளியா” என்று விளக்கேற்றி எம்பெருமானைத் தரிசித்து முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் எம் பெருமான் தனி ஆளாக வரவில்லை; பிராட்டியோடு சேர்ந்துதான் வந்து காட்சியளித்தான் என்கிற செய்தியை “நீயும் திருமகளும் நின்றாயால்” என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.


அதையே இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் “வடிக்கோலநெடுங்கண் மாமலராள்” என்று வழி மொழிகிறார். ஒருவனுக்கு ஆறும் பேறும் பிராட்டி மூலமாகவே கிடைக்கப்பெறுகின்றன. அவளின்றி எதுவும் - எம்பெருமான் உட்பட - அசைவது கிடையாது என்ற தத்துவ உண்மையை "திருக்கண்டேன்" என்ற தொடரில் ஆரம்பித்த பேயாழ்வார் தனது அந்தாதியை முடிக்கும் போது "காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண் தேனமரும் பூமேல் திரு" என்றே முடிக்கின்றார். முதல் திருவந்தாதியில் அருமையான பாசுரம்.


"பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும் 
உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு"
(முதல் திருவந்தாதி 67) தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்ற தொடரால் பெருமானுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பினை உணர்த்துவதோடு பிராட்டியுடன் கூடியிருக்கும் எம் பெருமான் மட்டுமே நமது தொண்டினை ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான் என்பதால் பிராட்டியின் சம்பந்தமின்றி கைங்கரியம் பூரணமாவதில்லை என்று தெரிவிக்கிறார்.


அடுத்து உறையிலிடாதவர் என்று போற்றப்படும் திருமழிசை ஆழ்வார் பாசுரத்திற்கு வருவோம். வேதத்தின் இறுதியான கருத்தை தனது உறுதியான பாசுரத்தால் பேசுகிறார். பிராட்டி இல்லாவிட்டால் நீ எப்படி தேவனாக முடியும் - "திருவில்லாத் தேவரை தேறேன் மின் தேவு" என்று பெருமானிடத்திலேயே பேசும் கம்பீரம் நம்மை வியக்க வைக்கிறது.


திருவரங்கநாதன் நின்ற இடம் திருமலை. அத்திருமலையில் தனக்கு ஏதேனும் ஒரு பொருளாக இருக்க வேண்டிய பேற்றினை அளிக்க குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார். பிராட்டியின் புருஷகார பலத்தால் அல்லவோ ஓர் சேதனனின் வினைகள் தீர முடியும் என்பதை விளக்கும்போது ஆழ்வார் செடியாய வல்வினைகள் தீர்க்கும் “திருமாலே” என்றே பெருமாளை அழைக்கிறார். பொதுவாக வைணவ தத்துவத்தின்படி ஓர் சேதனனை (அடியாரை)ப் பெற பகவான் முயற்சிக்கிறான். அது தான் அவன் நோக்கம். “சேதன லாபம் ஈஸ்வரனுக்கு” என்று சொற்றொடர் இதனை விளக்கும். இந்த சேதன லாபம் எம் பெருமானுக்கு அவனுடைய முயற்சியால் மட்டும் கிடைப்பதில்லை. பிராட்டியின் புருஷகாரத்தால் தான் கிடைக்கிறது.


பிரணவமாகிய ஓங்காரத்தில் “அ” காரமாகிய பெருமானுக்கு “ம” காரமாகிய சேதனனை அதாவது ஜீவாத்மாவை ஓர் ஆசாரியனாகவும் இருவரையும் சேர்த்து வைக்கும் பாலமாகவும் “உ” காரத்திற்குரிய பிராட்டி திகழ்கிறாள். இது தான் “திருமந்திரத்தின் ஸாரமான பொருள்”. த்வய மகாமந்திரத்தின் ஸாரமான பொருளும் இதுதான்.


சதுர் வேதத்தின் சாரம் சாந்தோக்கிய உபநிடதம். அதன் சாரம் திருவாய்மொழி. எனவே திருவாய்மொழியை “யாழினிசை வேதத்தியல்” என்றார் பராசர பட்டர். அந்தத் திருவாய்மொழியை பிராட்டியை முன்னிட்டு “உ”காரத்தில்தான் துவக்குகிறார் நம்மாழ்வார். (உயர்வற உயர்நலம்) ஏன் வேதாந்தமான உபநிடதம் “உ”காரத்தில் தானே இருக்கிறது. அது தானே (பிராட்டி சம்பந்தம்) சேதனனை அருளால் திருத்தி, ஈஸ்வரனை அழகால் திருத்தி இருவரையும் சேர்த்து வைத்து மகிழ்கிறது.


சுவாமி நம்மாழ்வார் தமது பாசுரங்களில் எங்கெங்கு முடியுமோ அங்கங்கே திருமகளின் ஏற்றத்தை சொல்லாமல் இருந்ததில்லை. எல்லா திவ்ய தேசங்களிலும் பெருமாளுக்கு என்னென்ன வைபவங்கள் உண்டோ அவை எல்லாம் பிராட்டிக்கும் உண்டு. வைணவத்தில் குறிப்பிட்ட சில திவ்ய தேசங்களில் பிராட்டிக்கு தனிப் பெருமையும் உண்டு. திருநறையூர், திருஉறையூர் போன்ற திவ்ய தேசங்கள் “நாச்சியார் கோயில்” என்றே அழைக்கப்படுவதையும் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசம் “ஆண்டாள் கோயில்” என்று அழைக்கப்படுவதையும் பார்க்கும் போது, பிராட்டியின் வைபவம் எவ்வளவு அருமையானது என்று உணரலாம்.


பிராட்டியின் ஏற்றத்தின் மீது மிகுந்த மதிப்பு கொண்ட பெருமாள், பிராட்டியின் பெருமைக்கு தகுந்தபடி தானும் முயல்கிறானாம். சரணாகதி தத்துவமான அபயபிரதான ஸாரத்தைச் சொல்ல வந்த இராமாயணம் இராமனின் பெருமையை விட, சீதையின் ஏற்றத்தையும், தியாகத்தையும் சொல்ல வந்ததாகக் கூறி விட்டார் வான்மீகி மகாமுனிவன்.


“தனிச் சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள்” என்று அதையே ஆழ்வாரும் கொண்டாடுகிறார். இராமாயணத்தில் பரதன், முனிவர்கள், சுக்ரீவன், வீடணன் போன்று தன்னை நாடி வந்து சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் காப்பாற்றினான். “சரணம் புகாதவர்களையும் அதுவும் தன்னை மிகவும் துன்புறுத்திய அரக்கர்களையும் சீதை காப்பாற்றினாள்.” வேடர் குலத்திலே பிறந்தவன் குகன். முதன்முதலில் அவன் பெற்ற கருணை யாரிடமிருந்து தெரியுமா? சீதையிடமிருந்து, அதனாலேயே ராமன் அவனை தன் தம்பியருள் ஒருவனாக ஏற்றுக் கொண்டார். 


“ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவர்க்கு இன்னருள் சுரந்து 
மாழை மான்மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்றொழிந்திலை உகந்து 
தோழன் நீ எனக்கு” என்று சொல்கிறான் ராமன். (திருமங்கையாழ்வார்)


“சீதையின் புருஷகாரத்தால் கொடும் பழி புரிந்த காகாசுரன் தப்பித்தான். அது கிடைக்காமையாலே தசமுகனான இராவணன் தலை அறுப்புண்டான்.” சீதை சிறையிலிருந்து பெற்ற பெருமையை தானும் பெற வேண்டும் என்று விரும்பிய பெருமான் அடுத்த அவதாரமாகிய கிருஷ்ண அவதாரத்தில் தன் அவதார இருப்பிடமாகவே சிறையை ஏற்றுக் கொண்டான்.


பிள்ளை லோகாசாரியர் மிகச் சிறந்த ரகசிய நூலான முமுட்சுப்படியில் பிராட்டியின் வைபவத்தை விவரிக்கும் ஒரு உயர்ந்த சூத்திரத்தை அருளிச் செய்திருக்கிறார். அதில் அவன் உபாயமாமிடத்தில் தான் புருஷகாரமாயிருக்கும். அவன் ப்ராப்யனாமிடத்தில் தான் பிராப்யையுமாய் கைங்கர்ய வர்த்தையுமாய் இருக்கும் என்று சூர்ணிகையை அருளிச் செய்திருக்கிறார். திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள் கோயில்) சீர்காழி பகுதியில் உள்ள திவ்ய தேசத்தில் ஒன்று. திருமங்கையாழ்வாரை ஆழ்வார் ஆக்கிய பெருமை படைத்த குமுதவல்லி நாச்சியாரின் அவதாரத் தலம் இது. திருமங்கையாழ்வார் எம் பெருமானை “அண்ணா அண்ணா” என்று வாய் குளிர அழைத்த தலம்.


இத்தலத்தில் “பூவார் திருமாமகள் புல்கிய மார்பா” என்று திருவெள்ளக்குளத்து ஸ்ரீநிவாசனின் திருமார்பில் அமர்ந்த பிராட்டியின் திருவடி பலம் கொண்டு சரணம் புகுகிறார். திரு அரிமேய விண்ணகரம் என்று ஒரு திவ்ய தேசம். அடியார்களின் பகைவர்களை நீக்க விரும்பிய பகவான் இங்கு ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கிறான். இத்தலத்தை இப்போது குடமாடு கூத்தர் கோயில் என்றே அழைக்கிறார்கள்.


இவ்வாலயத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் எடுத்த எடுப்பிலேயே மகாலட்சுமி தாயாரையும் பூமாதேவித்தாயாரையும் துதித்தே பாசுரத்தை ஆரம்பிக்கிறார்.


“திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ 
தீவினைகள் போயகல அடியவர்க்கு என்றும் அருள் நடந்து
இவ்வேழுலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏற்ற இருந்த இடம்” என்று மங்களாசாசனம் செய்கிறார்.


அடியார்களின் தீவினை அகலவும், அடியவர்களுக்கு அருள் பெருகவும், ஏழுலகத்தவர் பணியவும் எம் பெருமான் மகிழ்வோடு அமரக் காரணம், அவன் இருபுறமும் புருஷகார பூதைகளான ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருப்பதுதான் என்பது ஆழ்வாரின் திண்ணமான எண்ணம்.


மற்ற ஆழ்வார்களுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் பெரிய வேறுபாடு உண்டு. திருவோடு மங்கையையும் தன் பெயரிலேயே கொண்ட ஆழ்வார் அல்லவா. திருவாகிய மகாலட்சுமி தாயாரும் மங்கையாகிய குமுதவல்லி நாச்சியாரும் சேர்ந்துதான் இவரை ஆழ்வாராக்கினர். அதனாலே இவர் திரு+மங்கை +ஆழ்வார் = திருமங்கை ஆழ்வார். தாயாரும் பெருமானும் சேர்த்தியாக வந்து திருவெட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்த பெருமை பெற்றவர் திருமங்கையாழ்வார். “பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில்” தான் இந்த திருவஷ்ட்டாச்சர மந்திரம் மூலம் ஆழ்வார் ஞானம் பெற்றார். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் ஆழ்வாரின் ஜென்ம நட்சத்திர பிரம்மோற்சவமாக திருநகரியில் கொண்டாடப்படுகிறது.


திருமங்கையாழ்வாருக்கு ஞான ஜென்மம் கிடைக்கப்பெற்ற பங்குனி உத்திரம் அன்று திருநகரிக்கு அருகேயுள்ள வேதராஜபுரத்தில் இன்றும் வேடுபறித் திருவிழாவாக உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.


பங்குனி உத்திரம் என்பதே தாயாரின் வைபவத்தைச் சொல்லும் பெருவிழாவிற்கான நாள்தான். வேத வியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்திற்கு உரை அருளிய சுவாமி ராமானுஜர் அதன் மங்கள சுலோகத்தில் “பிரஹ்மணி ஸ்ரீனிவாச” என்று பிராட்டியை முன்னிட்டே எம்பெருமானைப் பற்றுகிறார்.


ஆளவந்தாரின் சதுஸ்லோகியும் கூரத்தாழ்வானின் ஸ்ரீஸ்தவமும் பராசரபட்டரின் குணரத்ன கோசமும் வேதாந்த தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் பிராட்டியின் வைபவத்தை பரக்கப் பேசுகின்ற நூல்களாகும். 


ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் லக்ஷ்மி அதாவது பெரிய பிராட்டியாரான மகாலட்சுமியோடு (ஸ்ரீ) சேர்ந்திருக்கும் பரம்பொருளாகிய நாராயணனையே வணங்குபவன் என்று பொருள். இதனை அடிப்படையாகக் கொண்டதே விசிஷ்டாத்வைத சித்தாந்தம். எல்லா ஆழ்வார்களும் ஒரே குரலாக எம் பெருமானைக் குறிப்பிடும் பொழுது “திரு”மால், “திரு”வாழ்மார்பன், “திரு”மகள் கேள்வன் என்றே குறிப்பிடுகின்றனர்.


பெருமாளோடு ஒரு கணமும் அகலாது பிராட்டி விளங்கும் தன்மையை சுவாமி நம்மாழ்வார் “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா” என்று குறிப்பிட்டு அந்த திவ்ய தம்பதிகளின் திருவடிகளில்தான் சரணாகதி சாத்தியமாகும் என்று நிரூபித்துக் காட்டினார். அதனை ஒட்டியே சுவாமி ராமானுஜர் தன் சரணாகதி கத்தியத்தை பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து சேவை சாதிக்கும் “பங்குனி உத்திரத் திருநாளில்” அரங்கேற்றி உபய விபூதி ஐச்வர்யத்தை சன்மானமாகப் பெற்றார்.


முதலில் சரணாகதி கத்தியத்தை அருளிச் செய்த ராமானுஜர், நம்மாழ்வார் காட்டிய அதே வழியை பின்பற்றி அடுக்கடுக்காக பிராட்டியின் பெருமையைச் சொல்லி "அகில ஜகன்மாதாவே! அடியேனுக்கும் தாயே! வேறுபுகல் இல்லாத அடியேன், உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்" என்று உருக்கமான விண்ணப்பத்தை வைக்கிறார்.


(பகவந் நாராயண அபிமதாநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐச்வர்ய சீலாத் யநவதிக அஸங்க்யேய கல்யாண குணகணாம், பத்ம வநாலயாம் பகவதீம் ச்ரியம் தேவீம், நித்யாநயபாயிநீம் நிரவத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம் அகில ஜகந்மாதரம் அஸ்மந் மாதரம் அசரண்ய சரண்யாம் அநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே. - முதல் சூர்ணிகை)


தாயாரும் மனமுவந்து உன் சரணாகதி பலிதமாகட்டும் (அஸ்துதே) என்று கருணை புரிந்தார்.


எம்பெருமானாராகிய ராமானுஜரின் வைபவத்தைச் சொல்ல வந்த திருவரங்கத்தமுதனார் தொடங்கும்போதே பிராட்டியின் பெருமையோடு தான் தொடங்குகிறார். “பூமன்னு மாது பொருந்திய மார்பன்” என்று திருமகள் சேர்த்தியைப்பாடி பலம் பெறுகின்றார். மந்திர ரத்னமாகின த்வயத்தின் முதல் பதம் “ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே” என்பது. இதன் பொருள், பெரிய பிராட்டி யாரை முன்னிட்டு எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளையும் பற்றுகிறேன். இரண்டாவது தொடர் “ஸ்ரீமதே நாராயணாய நம:” பெரிய பிராட்டியும் பெருமானும் ஆகிற சேர்த்தியில் என்றும் கைங்கரியத்தை புரிவேனாக என்கிறது. பகவானின் பெருமையை சொல்லும் இடம் அத்தனைக்கும் பிராட்டிக்கும் சேர்த்து தான் என்பதே வைணவ மரபு. பிராட்டியின் பெருமை பேசும் பங்குனி வெகு சிறப்பான மாதம். பிராட்டியின் ஏற்றத்துக்கே உரிய மாதம்.


பிராட்டியின் வாழித் திருநாமம் தொடங்கும் போது "பங்குனியில் உத்திரநாள் பார் உதித்தாள் வாழியே" என்று பங்குனி உத்திரத்தை சொல்லியே தொடங்குகிறது. பங்குனி உத்திரத்தில் ஸ்ரீயாகிய பிராட்டியும் விஷ்ணுவாகிய பெருமாளும் ஒன்று சேர்ந்து சேர்த்தி உற்சவம் கண்டருளுவதால் அந்த நாள் ஸ்ரீவைஷ்ணவ உலகெங்கும் பொன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.


ஒவ்வொருவருக்கும் இந்த மிதுனமே (பிராட்டியும் பெருமாளும் சேர்ந்த நிலை) உத்தேச்யமாகும். அந்தத் திவ்யத் தம்பதிகளின் திருவடிகளில் சரண் புகுவோம்.


வாழ்க்கை நெறிகள் வளரும்.....


நன்றி - சப்தகிரி மார்ச் 2019


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக