ஞாயிறு, 20 அக்டோபர், 2019

திருவரங்கப் பெருமாள் அரையர் - ஸ்ரீமான் R. கண்ணன் (பெங்களூரு)

எம்பெருமான் ஸாமகான பிரியன், சிறந்த இசைக்கு வயப்படுபவன். நம் பாணநாதனும், நம் பாடுவானும் எம்பெருமானுக்கு உகந்தவர்களன்றோ - ஸ்ரீமந் நாதமுனிகளும் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திற்கு இசையமைத்து - தன் மருமகன்கள் மூலம் அதனை உலகிற்கு ப்ரகாசப்படுத்தினார் பாடவல்ல நாச்சியாரும் பூமாலையுடன் பாமாலையைப் பாடிக் கொடுத்தாள் - அதனால் தான் தன் திருப்பாவையில் பலமுறை ''பாடி'' என்ற சொல்லை அருளிச் செய்துள்ளார். இப்படி இசையின் பெருமையிருக்க, அதனுடன் சொல்லின் பொருள் விளங்க அபிநயம் பிடித்தால், மாயவனும், மயங்குவான். பாடலுடன், அபிநயமும் பிடித்து எம்பெருமானை மகிழ்விக்கச் செய்பவர்தான் அரையர் என்று அழைக்கப்படுபவர். இன்றும் திருவரங்கம், திருக்குறுங்குடி, ஸ்ரீ வில்லிப்புத்தூர் போன்ற திவ்ய தேசங்களில் இவர்களுடைய கைங்கர்யங்களை அனுபவித்து மகிழலாம். அப்படிப்பட்ட அரையர்களில் முதன்மையானவர் திருவரங்கப் பெருமாள் அரையர் ஆவர். இம்மஹான் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில், திருவரங்கனுக்குக் கைங்கர்யம் செய்து தன் வாழ்நாட்களைக் கழித்தவர். இவரைச் சற்று அனுபவித்து மகிழ்வோம்.
திருவரங்கப் பெருமாள் அரையர், ஸ்ரீ ஆளவந்தாரின் திருக்குமாரராக திருவரங்கத்திலே வைகாசி மாதம் கேட்டைத் திருநாளில் (957 A.D.) அவதரித்ததாக, சரித்திரத்தினின்றும் அறியலாம். இவர் தம் திருத்தகப்பனாராகிய ஸ்ரீ ஆளவந்தாரிடம் சிஷ்யராக அடிபணிந்து, ஆத்மாத்மீய விஷயங்களை நன்குக் கற்று நேர்ந்தவர் - இவர் ப்ராசார்யரான மணக்கால் நம்பியிடமும் காலக்ஷேபம் கேட்டதாக பூர்வர்கள் அருளிச் செய்வர்.
ஸ்ரீ ஆளவந்தாருக்குத் தன் சிஷ்யனும், குமாரனுமாகிய திருவரங்கப் பெருமாள் அரையரிடம் பெருமதிப்புண்டு.
ஒரு சமயம் அரையர், திருவாய்மொழியில் ''கெடும் இடராயவெல்லாம்'' (10.2) என்ற பதிகத்திற்கு திருவரங்கன் முன்பு அபிநயம் பிடித்து - பாசுரங்களை இசையுடன் அநுஸந்தித்து வந்தார்). 
'அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேரனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்ககப் பணி செய்வர் விண்ணோர் நமர்களோ சொல்லக்கேண்மின் நாமும் போய் நணுகவேண்டும் குமரனார்த்தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே'' (10.2.6) என்றும், 10.2.8ம் பாசுரத்தில் 
"அனந்தபுரம் படமுடையரவில் பள்ளிபயின்றவன் பாதம் காண 
நடமினோ நமர்களுள்ளீர் ! நாம் உமக்கு அறியச் சொன்னோம்"
என்ற பாசுரங்களின் அபிநயம் நடந்த போது, ஆளவந்தார், தமக்கு ஆழ்வாரே நியமனம் செய்ததாக நினைத்து, உடனேத் தன் சிஷ்யர்களோடு திருவனந்தபுரம் சென்றார் என்று சரித்திரத்தின் மூலம் அறிகிறோம். இதனை வித்வான்கள் ஸாதித்ததுண்டு.
மேலும், ஆளவந்தார், தன் சிஷ்யர்களிடம், அரையர் திருவரங்கனிடம் மிகவும் பக்தி கொண்டவர். அவர் க்ருபைக்கு ஆளானவர் - ஆகவே அவரிடம் பெருமதிப்புடன் நடந்து கொள்ளவேண்டும்'' என்று பணித்ததாகப் பூர்வர்கள் அருளிச் செய்வர். எம்பெருமானார், உடையவர், யதிராஜர் என்றெல்லாம் போற்றப்பெறும் பகவத் ராமாநுஜர் ஐந்து ஆசார்யர்களிடம் காலக்ஷேபம் செய்தவர் - அவர்கள் பெரிய நம்பி (மஹாபூர்ணர்) திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருவரங்கப் பெருமாள் அரையர், திருமலை நம்பி ஆவர். (திருக்கச்சி நம்பிகள் மூலம், தேவப் பெருமாளிடம் ஆறு வார்த்தையும் கேட்டருளியதுண்டு). அவர்களில் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் - திவ்ய ப்ரபந்தங்களும் நல் வார்த்தைகளும் (ஸத் ஸம்ப்ரதாய விஷயங்கள்) கேட்டருளினார்.
''பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்" (திருவாய்மொழி 1.5.11) என்ற நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள பாசுரத்தில் "இசை காரர்'' என்பது திருவரங்கப் பெருமாள் அரையர்போல்வாரைக் குறிக்கும் என்று கூரத்தாழ்வான் அருளிச் செய்வாராம்.
திருவரங்கப் பெருமாள் அரையருக்கு - எம்பெருமான் பேரில் அத்யந்த பக்தியும், தன் இசைத் திறமையில் உறுதியான நம்பிக்கையும் கொண்டிருந்தார். ஒரு சமயம் அரையருக்கும் வேறு சிலருக்கும் கருத்து வேற்றுமை எழுந்தபோது, அரையர், தம் கையில் இருந்த தாளத்தைப் பொகட்டு ''வாலிமாவலத்து'' என்னும் திருமொழியை (பெரிய திருமொழி 1.2) என்னுடன் பாடமுடியுமானால் பாடுங்கள் பார்க்கலாம்'' என்று மனத் திண்மையுடன் கூறினாராம். இதனை ஒரு ஐதிஹ்யமாக, உரையாசிரியர்கள் அருளிச் செய்துள்ளனர்.
எம்பெருமான் திருவரங்கனின் திருமுன்பே அரையர் சேவை செய்யும் போது உடையவர் எழுந்தருளியிருந்து, இவருக்கு அபிநயங்களில் மாற்று யோசனை கூறியதுண்டு என்று உரையாசிரியர்கள் அருளிச் செய்வர்
அரையர் எம்பெருமானின் நடையழகில் அதிக ஈடுபாடு உடையவர். வடநாட்டிலிருந்து வந்த ஒரு பக்தரை, தானே அழைத்துச் சென்று திருவரங்கனின் நடையழகைக் காட்டியருளியதுண்டு. இந்த ஐதிஹ்யத்தை - திருவாய்மொழி - ''நின்றவாறும் இருந்த வாறும்'' (5.10.6.) மற்றும் - 'ஞாலத்தூடே நடந்தும் நின்றும் (6.9.3) ஆகியவற்றின் ஈடு வ்யாக்யானங்களில் காணலாம்.
அரையர் திருவரங்கன் முன்பு - பாசுரங்களைப் பாடும் போது அப்பாசுரங்களில் உணர்ச்சி பூர்வமாக, மிகவும் ஈடுபட்டுப் பாடுவாராம். நம்மாழ்வாரின் ''ஒழிவில் காலமெல்லாம்'' (3.3.1) என்ற பாசுரத்துக்கு அபிநயம் பிடித்துப் பாடத் தொடங்கினால், ''ஒழிவில் காலமெல்லாம் .... காலமெல்லாம்'' என்று இதனையே நெடு நேரம் கண்ணீர் மல்கி, நாத்தழுதழுக்க விண்ணப்பம் செய்து கொண்டு, மேலே பாசுரம் தொடராமலிருந்து விடுவாராம். இதனையும் உரையாசிரியர்கள் வ்யாக்யானங்களில் அருளிச் செய்துள்ளனர்.
அரையர் தன்னுடைய இறுதிக் காலத்திலும் திருவரங்கத்தைப் பற்றியே நினைத்திருந்தார். இவரைக் காணவந்த உடையவர் ''தேவரீர் திருவுள்ளத்தில் என் நினைத்துக் கொண்டிருக்கிறீர்'' என்று விண்ணப்பம் செய்ய ''எம்பெருமானுக்கு எவ்வளவோ திருநாமங்கள் இருந்த போதிலும், திருவரங்கத்தின் பெருமைதான் என்னே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்'' என்று கூறினாராம். தன் ஆசார்யர்களில் ஒருவரான திருவரங்கப் பெருமாள் அரையர் பக்தியுடன் விரும்பிய 'திருவரங்கன்'' என்று திருநாமத்தைத் தானும் போற்றி உகந்தாராம் எம்பெருமானார்
எம்பெருமானார் இவருக்கு ஆறு மாதங்கள் கைங்கர்யம் செய்து திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்றார் என்பர் குருபரம்பரையில். அப்போது திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தார் அருளியதாக எம்பெருமானாருக்கு அருளிய நல் வார்த்தைகளில் மிக முக்கியமானவை, ஆசார்ய: ஹரி: ஸாக்ஷாத் சர ரூபீ ஸம்ஸய:, திருவரங்கத்தில் உறங்கும் பெருமாளே - உலாவும் பெருமாளாக ஆசார்ய ரூபத்தில் வருகிறார். ஆசார்யர் மூலம் பெருமாளிடம் ஆத்ம பரந்யாஸம் செய்து கொள்பவனுக்கு முக்தி நிச்சயம். இங்கிருக்கும் நாளில் யதாஸக்தி ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டு, த்வயத்தை அர்த்தானுஸந்தானம் செய்து கொண்டு, பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யங்களை நிரபராதமாகச் செய்துவர வேண்டியது' என்பதாம்.
பகவத், பாகவத, ஆசார்யர்களின் அநுக்ரஹத்துடன், வித்வான்கள் உபந்யாஸத்தில் கேட்ட சில விஷயங்களை விண்ணப்பம் செய்தேன் - நம் தர்சன ஸ்தாபகரான திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமியின் அநுக்ரஹம் அனைவருக்கும் கிட்டவேண்டும்.
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா ஜனவரி 2015


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக