ஞாயிறு, 20 அக்டோபர், 2019

ஸ்ரீமத் பாகவதம் - 61

மூன்றாவது ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்

(ஸனகாதிகள் த்வாரபாலர்களைச் சபித்ததற்காக அனுதாபப்படுதலும் பகவான் அவர்களுக்கு ஸமாதானம் கூறுதலும்)

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- அந்த ஸனகாதி முனிவர்கள் பகவானுடைய திவ்யமங்கல விக்ரஹத்தையே எப்பொழுதும் த்யானஞ்செய்யுந் தன்மையர்; மற்றும் பக்தியோகமே முக்யதர்மமாயிருக்கப் பெற்றவர். அவர்கள் இங்ஙனம் ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டிருக்கையில், அம்மொழியைப் புகழ்ந்து வைகுண்டலோகக்தை வாஸஸ்தானமாகவுடைய பகவான் மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஜயனென்றும் விஜயனென்றும் பேருடைய இந்த என்னுடைய வாசற்காப்பவர் இருவரும் என்னை அவமதித்து என்னுடைய பக்தர்களாகிய உங்கள் விஷயத்தில் மிகவும் அபசாரப்பட்டார்கள். முனிவர்களே! என்னைத் தொடர்ந்த பக்தர்களாகிய நீங்கள் இவர்கள் விஷயத்தில் எந்த தண்டனை விதித்தீர்களோ, அந்த தண்டனையையே “இவர்களுக்கு இதுவே இருக்கட்டும்” என்று நானும் அங்கீகரித்தேன். அதற்குக் காரணம் தேவதைகளான உங்களை இவர்கள் அவமதித்தமையே. இங்ஙனம் எமது ப்ருத்யர்கள் உங்கள் விஷயத்தில் அபசாரப்பட்டதைப் பற்றி இப்பொழுது நான் உங்களை அருள்புரிய வேண்டுகின்றேன். “ஆம்! அபராதம் உளதாயினும் மேலோர்களன்றோ அருள்புரிய வேண்டத்தக்கவர்” என்கிறீர்களோ? ஆம்! அது யுக்தமே. எனக்கு ப்ராஹ்மணர்கள் மேலான தெய்வம். ஆகையால் நான் உங்களை அருள்புரியச் செய்ய வேண்டுவது யுக்தமே “ஆயினும் எங்களைப் பொறுப்பிக்கும்படி நீ என்ன அபராதம் செய்தாய்” என்கிறீர்களோ? சொல்லுகிறேன். என்னைச் சேர்ந்தவர்களால் நீங்கள் அவமதிக்கப்பெற்றீர்கள் என்பதை நான் செய்த அபராதமாகவே நினைக்கின்றேன். அது என்னுடைய பிழையாகவே, எனக்குத் தோற்றுகிறது. அன்றியும், ப்ருத்யன், அபராதம் செய்வானாயின், அவனுடைய ஸ்வாமியின் பெயரைச் சொல்லி “இன்னவன் தன்ப்ருத்யன் மூலமாய் இன்னின்ன தவறுகள் செய்தான். ஆகையால் இவன் துஷ்டன்” என்று உலகத்தவர் பழிப்பராயின், வெண்குஷ்டம் முதலிய வ்யாதியானது சரீரத்தின் அழகைப் பாழ்செய்வது போல், அவ்அபவாதம் அந்த ஸ்வாமியின் கீர்த்தியைப் பாழ் செய்யும். ஆகையால், என்னைச் சேர்ந்தவர் செய்யும், பிழையெல்லாம் என் புகழைப் பாழ் செய்யுமென்பதில் ஸந்தேஹமில்லை. ஆனதுபற்றி அவர் செய்த அபராதமெல்லாம் என்னுடையதே. ஆதலால் நான் உங்களைப் பொறுப்பிக்க வேண்டுவது யுக்தமே. அன்றியும், என்புகழ் பரிசுத்தமானது; அம்ருதம்போல் மிகவும் இனிதாயிருக்கும்; அது செவியிற்படுமாயின், சண்டாளன்” வரையிலுள்ள “ஸமஸ்த ஜகத்தையும் உடனே பாவனஞ் செய்யவல்லது. அப்படிப்பட்ட, நான் எவ்விதத்திலும் தடையில்லாதிருப்பவன். இப்பொழுது உங்கள் நிமித்தமாக என்புகழ் நிந்தைக்கு இடமாகுமாயின், (“இவன் ஆஸ்ரிதர்களுக்கு துர்லபன்” என்கிற நிந்தைக்கிடமாகுமாயின்), உங்களுக்கு ப்ரதிகூலமான செயலுடைய என் புஜத்தையும் சோதித்து விடுவேன். என் பாதாரவிந்தங்களின் பராகத்தை அனைவரும் பரிசுத்தமென்று புகழ்கின்றார்களே, இதற்குக் காரணம் நான் பராஹ்மணர்களை ச்ரத்தையுடன் பணிந்து வருகையே. ப்ராஹ்மண ஸேவையால்தான் என்பாத தூசிகள் பாவனமாயின. அன்றியும்,  என்னை நினைத்த மாத்ரத்தில் ஸமஸ்தலோகங்களின் பாபத்தையும் நான் போக்க வல்லனாயிருப்பதும், நான் ஸௌசீல்யமுடையவனாய் இருப்பதும் ஆகிய இக்குணங்களெல்லாம் எனக்கு ப்ராஹ்மண ஸேவையால் தான் உண்டாயின. இப்படிப்பட்ட நான் ஆதரவில்லாதிருப்பினும், என்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி விடாமல் தொடர்ந்திருப்பதற்குக் காரணம் ப்ராஹ்மண ஸேவையே. எந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் சிறிது கிடைப்பதற்காக மற்றை ப்ரஹ்ம ருத்ராதிகள் அனைவரும் பற்பல வ்ரதங்களை ஆசரிக்கின்றார்களோ, அப்படிப்பட்ட ஸ்ரீமஹாலக்ஷ்மி நான் தன்னை ஆதரியாதிருப்பினும் ப்ராஹ்மண ஸேவையின் ப்ரபாவத்தினால் என்னை விடாமல் தொடர்ந்து வருகின்றாள். மற்றும், யாகங்களில் யஜமானன் நெய் ஒழுகும்படி நெய்யில் நனைத்து ஹோமஞ்செய்யும் ஹவிஸ்ஸை அக்னியின் மூலமாய் நானே புசிக்கின்றேன். அங்ஙனமே தனது வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட கர்மங்களைச் செய்து அவற்றின் பலன்களை என்னிடத்தில் ஸமர்ப்பித்து ஸந்தோஷமுற்றிருக்கும் ப்ராஹ்மணன் கபளம் கபளமாய் புஜிக்கும்போது அந்த ப்ராஹ்மணனுடைய வாய்வழியாய் அவ்வன்னத்தை நானே புஜிக்கின்றேன். நான் அந்த ப்ராஹ்மணனது வாய்மூலமாய் எப்படி புஜிக்கிறேனோ, அப்படி அக்னியின் மூலமாய் புஜிக்கிறதில்லை. அத்தகைய ப்ராஹ்மணன் மூலமாய் புஜிக்கும்பொழுது எனக்கு உண்டாகும் திருப்தி அக்னியின் மூலமாய் புஜிக்கும்பொழுது உண்டாகிறதில்லை. ப்ராஹ்மணர்களின் பாததூளியைப் போல் பாவனமானது மற்றொன்றும் இல்லை. அந்த ப்ராஹ்மணர்களின் பாததூளியை நான் கிரீடங்களால் தரிக்கின்றேன். அந்த ப்ராஹ்மணர்கள் திரஸ்காரம் செய்யினும் அவர்களை எவன்தான் பொறுக்கமாட்டான். நான் ஆச்சர்ய சக்தியுடையவன். என் சக்திக்கு எல்லையே கிடையாது. அதற்குத் தடையும் கிடையாது. என்னுடைய விபவங்களும் அப்படிப்பட்டவைகளே. மற்றும், என் ஸ்ரீபாத தீர்த்தமாகிய கங்கை சந்த்ரசேகரனான ருத்ரனையும் அவனோடு கூடின லோகங்களையும் புனிதஞ் செய்கின்றது. இப்படி பரம பாவனனாகிய நானும் அந்த ப்ராஹ்மணர்களின் பாததூளியைச் சிரஸா வஹிக்கின்றேன். ப்ராஹ்மணர்கள் எனக்குச் சரீரம் போன்றவர். அவர்களிடத்தில் நான் ஸர்வகாலத்திலும் மாறாமல் ஸந்நிதானமுடையவனாயிருப்பேன். இங்கனமே பசுக்களும் எனக்குச் சரீரமாயிருக்கும். அவைகளிடத்திலும் நான் நித்ய ஸந்நிதானம் செய்கின்றேன். எவ்விதத்திலும் ரக்ஷிப்பவரில்லாமல் அநாதங்களாகிய ப்ராணிகளும் எனக்குச் சரீரமாயிருப்பவை. அவைகளிடத்திலும் நான் நித்யவாஸஞ் செய்கின்றவன். இம்மூவரையும் எவர் பேதபுத்தியுடன் பார்க்கின்றார்களோ, அவர்கள் பாபதோஷத்தினால் கண்கெட்டவர்கள்; மற்றும், ஸர்ப்பம்போல் மிகுந்த கோபமுடையவர். அன்றியும், அவர்கள் யமதண்டனைக்கும் உட்படுவார்கள். அப்பொழுது என் ப்ருத்யனாகிய யமனது ஆதீனத்திலுள்ள இரும்பு முகமுடைய கழுகுகள் அவரது கண்களைக் குத்திப் பாழ்செய்யும், ஆகையால் ப்ராஹ்மணர்களையும் பசுக்களையும் அந்த ப்ராணிகளையும் “இவர்கள் பகவானைக் காட்டிலும் வேறுபட்டவர்” என்று பேத புத்தியுடன் பார்க்கின்றவர் நரகம் அடைவார்கள் ஆகையால் அவர்களை அங்ஙனம் பேதபுத்தியுடன் பார்க்கலாகாது. அந்த ப்ராஹ்மணர்கள் ஒருக்கால் திரஸ்காரம் செய்யினும், “இவர்கள் பகவன் மூர்த்திகளே” என்னும் புத்தியுடன் அவர்களைப் பூஜித்துச் சிறிதும் விகாரமின்றி அம்ருதம்போன்ற புன்னகையுடன் கூடிய தாமரை மலர்போல் விளங்கும் முகமுடையவராகி அனுராகம் நிறைந்த மொழிகளைப் பேசிக்கொண்டு புத்ரனைப்போல் அழைப்பார்களாயின், அவர்கள் எனக்கு நேரே மஹோபகாரஞ் செய்தவராவார்கள். அவர்கள் எனது அனுக்ரஹத்திற்குப் பாத்ரமாவார்கள். ஆகையால் தங்கள் ப்ரபுவாகிய என்னுடைய அபிப்ராயத்தை அறியாமல் உங்களிடத்தில் இவர்கள் அபராதப்பட்டார்கள். ஆகையால் அதன் பலனாகிய உங்கள் சாபமாகிற தண்டனையை அனுபவித்து மீளவும் என்னிடம் வந்து சேருவார்கள். “நாங்கள் செய்த தண்டனையே உனக்கும் ஸம்மதமாயின், நீ ப்ருத்யர்களிடத்தில், செய்யும் அனுக்ரஹமாவதென்” என்கிறீர்களோ? “என் ப்ருத்யர்களாகிய இவர்களுக்கு நீங்கள் கொடுத்த சாபம் சீக்கிரத்தில் முடிந்து என்னிடம் வந்துசேரும்படி ஏற்படுத்துகை என்னுடைய அனுக்ரஹத்தின் பலனே என்று மொழிந்து நின்றான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- அந்த பகவான் மொழிந்த வார்த்தை வேதத்தோடு ஒத்திருந்தது; அன்றியும் அனைவரும் ஆசைப்படத்தக்கதும் மனுஷ்யர்களால் அங்ஙனம் சொல்லமுடியாததுமாயிருந்தது. அத்தகையதான அந்த பகவானுடைய வார்த்தையைக் கேட்டு அம்முனிவர்கள் அதன் அழகையும் அவனுடைய குணத்தையும் கண்டு “நாம் கோபமாகிற ஸர்ப்பத்தினால் கடியுண்டு மதிமயங்கி என்ன கார்யம் செய்தோம்? சீ! இப்படி மஹானுபாவனாகிய இந்த பகவானுடைய ப்ருத்யர்கள்மேல் கோபங்கொண்டு சாபமிட்டோமே. இது செய்யத்தகுந்த கார்யமா?” என்று மிகவும், மனத்தில் பரிதபித்தார்கள். (“மஹானுபாவனாய இவன் அற்பர்களாகிய நம்விஷயத்தில் இங்ஙனம் மொழிகின்றானே, இது விளையாட்டோ? வாஸ்தவமோ? தெரியவில்லையே” என்று அவனுடைய மொழியின் கருத்துத் தெரியாமையாலும், கோபித்துச் சாபமிட்டமையாலும் அம்முனிவர்கள் மனத்தெளிவற்றிருந்தார்கள்). அந்த பகவான் மொழிந்த வசனங்கள் சுருக்கமாகவே இருந்தனவாயினும் அறியவேண்டிய அர்த்தங்கள் பலவும் அமையப் பெற்றிருந்தன. ஆனது பற்றியே அவ்வசனத்தின் பொருள்கள் ஸாதாரணமாய் அறியக்கூடாதிருந்தன. மற்றும், அவ்வசனங்கள் ஆழ்ந்த கருத்துடையவைகளும் பற்பல ஆழ்ந்த பொருள்கள் அமைந்தவைகளுமாய இருந்தன. அம்முனிவர்கள் பகவான் மொழிந்த அவ்வுரையைக் கேட்டு “இதன்பொருள் இன்னது” என்றும் அவன் மனத்தில் கொண்டிருக்கும் கருத்து இன்னதென்றும் நிச்சயித்துக் கண்டறிய முடியாதிருந்தார்கள். அந்த பகவானுடைய ஆச்சர்ய சக்தியை என்னென்று சொல்லுவேன்? அவனுடைய யோக மாயையின் மஹிமை அற்புதமாயிருக்குமல்லவா, அவன் தனது யோக மாயையால் இந்த ப்ரபஞ்சங்களையெல்லாம் எனக்குள் மறைந்திருந்து ஸ்ருஷ்டித்து, “இவனே ஸ்ருஷ்டித்தான்” என்று எல்லோரும் ப்ரமிக்கும்படி அந்த ப்ரபஞ்சங்களுக்கு என்னை ப்ரபுவாக ஏற்படுத்தினான். அவனுடைய செயல்களெல்லாம் இப்படியே விசித்ரமாயிருக்கும். அவன் மொழிந்த வார்த்தையின் கருத்து அறியமுடியாதிருந்தது. ஆகையால் அம்முனிவர்கள் அதைக்கேட்டு மனம் கலங்கப்பெற்றார்கள். மற்றும், தாம் வெகுகாலமாய் விரும்பியிருந்த பகவானுடைய காட்சியும் அவனோடு ஸம்பாஷணமும் அவனுடைய கருணாகடாக்ஷமும் சேர்ந்தமைபற்றி ஸந்தோஷம் அடைந்து உடம்பு முழுவதும் மயிர்க்கூச்சல் உண்டாகப் பெற்றிருந்தார்கள். அவர்கள் அந்த பகவானுடைய கருத்தை சிரஸா வஹிக்கின்றார்கள். அப்படிப்பட்ட அம்மலர்மங்கையானவள், உன் பாதாரவிந்தங்கள் பாக்யசாலிகளான பாகவதர்களால் புத்தம்புதிய துளஸி மாலைகளை இட்டுப் பூஜிக்கப்படுவதையும் மேலான வண்டுகள் குடிகொண்டிருப்பதையும் கண்டு “ஸ்ரீபாதங்களின் அழகு மேலானது, ஆகையால் நான் மார்பில் வாஸஞ் செய்பவளாயினும் யோகிகள் முதலிய பல ஸேவா ஜனங்களின் நெருக்கத்தையும் பாராமல் துளஸியுடன் பாதாரவிந்தங்களையே பணிகின்றேன்” என்று பெரு விருப்பத்துடன் உன்னை விடாமல் அனுவர்த்திக்கின்றனள். நீயோவென்றால் உன்மனத்திற்கு மிகவும் இனியரான பரம பாகவதர்களின் ப்ரஸங்கத்தினால் ஒழிவில்லாதவனாகி இந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியை அதிகமாக ஆதரிக்கிறதில்லை. ஆகையால் ஸ்ரீமஹாலக்ஷ்மி உன்னை விடாமல் பணிவதற்கு, ப்ராஹ்மண ஸேவை காரணமன்று, உன்னுடைய ஸௌபாக்யமும் அவளுடைய ப்ரீதியும் காரணமேயன்றி வேறில்லை. அவளை ஆதரியாமைக்குக் காரணம் ஒழிவில்லாமையே. “ப்ராஹ்மண ஸேவையால் பரிசுத்தனானேன்! என்றாய். அதுவும் சரியன்று, ப்ராஹ்மணர்கள் நடக்கும் வழிகள்தோறும் படிந்திருக்கின்ற புண்யமான தூளியும் ஸ்ரீவத்ஸமென்கிற அடையாளமும் உன்னைப் பாவனஞ் செய்கின்றனவா? இல்லை. நீ இயற்கையாகவே பாவனமாயிருக்கின்றவன். எல்லையில்லாத ஸௌந்தர்யத்தையுடைய நீ ஸ்ரீவத்ஸமென்கிற அடையாளத்தை ஏதுக்காகத் தரிக்கின்றனை. உனக்கு இல்லாத அழகு அதனால் உண்டாக வேண்டுமோ? உண்டாக வேண்டியதில்லையே. அங்கனமே ஸ்வயம் பரிசுத்தனாகிய நீ ப்ராஹ்மணர்களின் பாததூளியைச் சிரஸாவஹிப்பது சுத்திக்காகவோ? அன்று. லோகசிக்ஷையின் பொருட்டே நீ அங்ஙனம் ப்ராஹ்மனர்களின் பாததூளியைச் சிரஸாவஹிக்கின்றனை. அதற்கு வேறு காரணமில்லை. வாராய் த்ரியுகனே ! (ஜ்ஞானசக்திகள் பல ஐஸ்வர்யங்கள் வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற மூன்று இரட்டைகளையுடையவனே!) நீ தர்மஸ்வரூபன், தவம் தானம் தயை என்கிற இம்மூன்றும் உனக்கு அஸாதாரணமாயிருப்பவை. தர்மஸ்வரூபனாகிய உனக்கு இம்மூன்றும் மூன்று பாதங்கள். நீ அம்மூன்று பாதங்களால் ப்ராஹ்மணர்களிடத்தில் ஸஞ்சரிக்கின்றனை. தமோகுணம் தலையெடுத்துவரும், ரஜோகுணம் தலையெடுத்தவரும் உன்னுடைய பாதங்களாகிய அம்மூன்றையும் அழிக்கப் பார்ப்பார்கள். உனக்கு மேலான தெய்வங்களாகிய அந்த ப்ராஹ்மணர்களைப் பாதுகாக்கும் பொருட்டுச் சுத்த ஸத்வமயமான வடிவங்களைக்கொண்டு ராமக்ருஷணாதி அவதாரங்களைச் செய்து அந்தத் தவம் முதலிய உன் பாதங்களை அழிக்குந் தன்மையரான தாமஸர்களையும் ராஜஸர்களையும் நிக்ரஹித்துத் தவம் தானம் தயையென்கிற அம்மூன்று பாதங்களால் ஜங்கம ஸ்தாவரங்கள் அடங்கின ஜகத்தையெல்லாம் போஷிக்கின்றனை. இதில் ஸந்தேஹம் உண்டோ ? இங்ஙனம் நீ தர்ம ஸம்ஸ்தாபனத்திற்காக அவதரிக்கின்றவனாகையால் உன்னுடைய அனுஷ்டானத்தினால் உலகங்களைத் திருத்தும் பொருட்டு ப்ராஹ்மணர்களின் பாததூளியைச் சிரஸா வஹிக்கின்றனையன்றி, உன் சுத்திக்காகவன்று. ப்ராஹ்மணோத்தமர்களின் குலம் உன்னால் பாதுகாக்கத் தகுந்தது. ஆகையால் எல்லோரிலும் மேன்மையுற்றிருக்கின்ற நீ அந்த ப்ராஹ்மண குலத்தைப் பூஜிப்பதினாலும் ப்ரிய வாக்யத்தினாலும் கௌரவித்துப் பாதுகாக்காதிருப்பாயாயின், அப்பொழுதே நீ ஏற்படுத்தின மங்களகரமான வேதமார்க்கமெல்லாம் பாழாய்விட்டிருக்கும். ஏனென்னில், நீ எல்லோரிலும் மேன்மையுடையவன். நீ எதை அனுஷ்டிக்கின்றனையோ, அதையே உலகமெல்லாம் ப்ரமாணமாகக் கொள்ளும். ஆகையால் நீ ப்ராஹ்மணர்களைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தாது இருப்பாயாயின், ஜனங்களும் அங்கனம் செய்ய முயற்சி கொள்ளமாட்டார்கள். ஆகவே நீ ப்ராஹ்மணர்களை மேன்மைப்படுத்துவது யுக்தமே. ப்ரபூ! நீ சுத்தஸத்வத்திற்கிடமாயிருப்பவன். நீ ஜனங்களுக்கு க்ஷேமத்தை விளைக்க விரும்பிப் பற்பல அவதாரங்களைச் செய்து தர்ம விரோதிகளை வேருடன் களைகின்றனை. வேதமார்க்கம் பாழாய்விடுவது உனக்கு மிகவும் அதிஷ்டமாயிருக்குமன்றோ? நீ மூன்று லோகங்களுக்கும் ப்ரபு. நீ ஜகத்தையெல்லாம் தரிக்கின்றவன். இந்த ஜகத்தைப் போஷிக்கின்றவனும் நீயே. நீ ப்ராஹ்மணர்களின் பாதங்களில் விழுந்து வணங்கி அவர்களுடைய பாததூளியைச் சிரஸா வஹிப்பினும், உன் ப்ரபாவம் குறையாது. நீஅங்ஙனம் ப்ராஹ்மணர்களை வணங்குவது லீலையே. உலகத்திலுள்ளவர் அனைவரும் இங்ஙனம் ஆசரிக்க வேண்டுமென்று அறிவிக்கும் பொருட்டு நீ அவ்வாறு கடக்கின்றனையன்றி வேறில்லை. வாராய் ஜகதீசனே நீ இந்த உன் ப்ருத்யர்களுக்கு நாங்கள் விதித்த தண்டனையை அனுமதி செய்தாலும், அல்லது நீ வேறு தண்டனை விதித்தாலும், அதுவுமின்றி முன்போலவே இவ்வுலகத்தில் இருக்கும்படி அனுக்ரஹம் செய்தாலும், ஸத்யமாகச் சொல்லுகிறோம், அதில் எங்களுக்கு ஸம்மதியேயன்றி, அஸம்மதி இல்லை. இங்ஙனம் நாங்கள் செய்த அபராதத்திற்குத் தகுந்தபடி எங்களுக்கும் ஓர் தண்டனை விதிப்பாயாக. “நீங்கள் என்ன அபராதம் செய்தீர்கள்” என்கிறாயோ? நாங்கள், நிரபராதிகளான உன் த்வாரபாலர்களுக்குப் பாபிஷ்டமான சாபம் கொடுத்தோமல்லவா. புதிதாக நுழைகிறவர்களைத் தடுப்பது த்வாரபாலர்களுக்கு இயற்கையே. ஆகையால் அவர்கள் எங்களைத் தடுத்தது தோஷமாகாது. நாங்கள் அவர்களுக்குச் சாபங்கொடுத்தது எங்களுக்கு தோஷமே. ஆகையால் அபராதிகளான எங்களுக்கு தண்டனை விதிப்பாயாக என்றார்கள்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- இந்த என் ப்ருத்யர்கள் அஸுரர்களாகப் பிறந்து அது முதல் (ஜன்மமே பிடித்து) என்னிடத்தில் கோபங்கொண்டு அதனால் என்னை எப்பொழுதும் பாவனை செய்து (த்யானஞ் செய்து) அதன் மூலமாய் என்னுடைய ஸம்பந்தம் எப்பொழுதும் மாறாமல் தொடரப்பெற்று அதன் ப்ரபாவத்தினால் சீக்ரமாகவே மீண்டு என்னிடம் வந்து சேருவார்கள். வாரீர் அந்தணர்களே ! நீங்கள் இந்த த்வாரபாலகர்மேல் சாபங் கொடுத்தீர்களே. அதுநானே உங்கள் வாய் மூலமாய் நடத்தின கார்யம். (நானே உங்கள் வாயிலிருந்து இவர்களுக்கு இந்தச் சாபங் கொடுத்தேனன்றி நீங்கள் புத்திபூர்வகமாகச் சாபங் கொடுத்தீர்களல்லீர்). ஆகையால் இந்த உண்மையை அறிந்து நீங்கள் பரிதவிக்காதிருப்பீர்களாக என்றான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- அப்பால் அந்த முனிவர்கள், கண்களுக்கு ஆனந்தம் விளைக்கின்ற வைகுந்தனையும், . ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கின்ற அவனுடைய வாஸஸ்தானமான வைகுண்ட லோகத்தையும் கண்டு பகவானை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து விடைபெற்று பகவானுடைய ஸம்பத்தைப் புகழ்ந்துகொண்டு ஸந்தோஷமுற்றவராகிப் புறப்பட்டுப் போனார்கள். இங்ஙனம் முனிவர்கள் போனபின்பு ஸ்ரீபகவான் தன் ப்ருத்யர்களை ஸமாதானப்படுத்த முயன்று இங்ஙனம் மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நீங்கள் போவீர்களாக, பயப்படவேண்டாம். நீங்கள் போயினும், உங்களுக்கு ஸுகமே உண்டாகுமாக. “இப்படி நீ எங்கள்மேல் அனுக்ரஹம் செய்வாயாயின், ப்ராஹ்மண சாபத்தைத் தடுத்து எங்களை இங்கேயே ஏன் நிறுத்திக் கொள்ளலாகாது” என்கிறீர்களோ? ப்ரஹ்ம தண்டனா ரூபமான தேஜஸ்ஸை நான் தடுக்கவல்லனாயினும், அங்ஙனம் நான் விருப்பம் கொள்ளமாட்டேன். ஏனெனில், எனக்கு அதுவே ஸம்மதம். நீங்கள் இவ்விடத்தினின்று வெளிப்பட்டுப் போவதை முன்னமே எனது மனைவியாகிய மலர்மங்கை ஒரு காலத்தில் கோபமுற்று நிரூபித்திருக்கின்றாள். ஆகையால் இது எனக்கு மாத்ரமேயன்றி ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸம்மதமே. “முன்பு எப்பொழுது?” என்னில், அதையும் சொல்லுகின்றேன், கேட்பீர்களாக, நான் ப்ரணய கலஹத்தினால் வெறுமனே சயனித்துக்கொண்டிருக்கும் பொழுது என்னுடைய வாஸஸ்தானத்தினின்று ஸ்ரீதேவியானவள் வெளியில்சென்று மீளவும் உள்ளே வரும்பொழுது வாசலில் காத்திருக்கின்ற நீங்கள் அவளைத் தடுத்தீர்கள். அப்பொழுது அவள் கோபித்து இந்த அம்சத்தை நிர்த்தேசித்திருக்கின்றாள். ஆகையால் நீங்கள் என்னிடத்தில் ஸர்வகாலமும் மாறாமல் கோபம் உடையவராகி ப்ரஹ்மவித்துக்களான அந்தணரிடத்தில் பட்ட அபராதத்தின் பயனான சாபத்தைக் கடந்து அற்பகாலத்திலேயே மீண்டு “என்னிடம் வந்து சேருவீர்கள்” என்றான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:-  இங்ஙனம் பகவான் தன் த்வாரபாலர்களுக்கு ஆஜ்ஞாபித்து ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் தன்னுடைய வாஸஸ்தானம் போய்ச்சேர்ந்தான், அந்த வாஸஸ்தானம் விமானங்களின் வரிசைகளால் நிறைந்து அவ்விமானங்களே ஆபரணங்களாகப் பெற்றுச் சிறந்த செல்வப் பெருக்குடன்கூடி அன்பிற்க்கிடமாகி அழகாயிருந்தது. தேவர் ச்ரேஷ்டர்களாகிய அந்த த்வார பாலர்கள் எவ்விதத்திலும் கடக்கமுடியாத ப்ராஹ்மண சாபத்தினால் வைகுண்டலோகத்தில் இருக்கும்பொழுதே ஒளிமழுங்கப் பெற்றவராகி (பல்பிடிங்கின பாம்புபோல்) கர்வம் தொலைத்து நின்றார்கள். வாரீர் குழந்தைகளே! அவர்கள் வைகுண்டலோகத்தினின்று விழுந்தார்கள். அப்பொழுது விமானங்களின் நுனியில் வீற்றிருப்பவர் ‘ஹா ஹா' என்று உரக்கக் கூச்சலிட்டார்கள். அதனால் பெரிய ஹாஹாகாரம் உண்டாயிற்று. ஸ்ரீவிஷ்ணுவின் த்வாரபாலர்களாகிய அந்த தேவர் ச்ரேஷ்டர்களே திதியின் கர்ப்பத்தில் ப்ரவேசித்திருப்பதும் உக்ரமுமாகிய கஸ்யபருடைய வீர்யத்தில் இப்பொழுது புகுந்திருக்கின்றார்கள். அவ்விருவரும் ஒரே தடவையில் அந்த கர்ப்பத்தில் ப்ரவேசித்தார்கள். அவர்கள் யமளர்களான அஸுரர்களாகப் பிறக்கப் போகின்றார்கள். இப்பொழுது கர்பத்திலிருக்கின்ற அவர்களுடைய தேஜஸ்ஸினால் உங்களுடைய தேஜஸ்ஸு பரிபவிக்கப்பட்டிருக்கின்றது (மறைந்திருக்கின்றது). இப்பொழுது பகவான் அவர்களைக் கொன்று உங்களுடைய தேஜஸ்ஸை நிலை நிறுத்துவான். “அந்த பகவான் எப்போது செய்யப் போகிறான்? அவன் இங்ஙனம், செய்ய வல்லனா?” என்று சங்கிக்கிறீர்களோ? சொல்லுகிறேன் கேளுங்கள். அவனே ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்தும் காரணவஸ்து; மூன்று லோகங்களுக்கும் அதிபதி. அவனே நமக்கு க்ஷேமங்களைச் செய்வான். . இங்ஙனம் ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனும் ஸர்வஜகத்காரணனுமாகிய பகவானுக்கு நம்முடைய இஷ்டத்தை நிறைவேற்றுவது ஒரு பொருளோ? இது ஒரு வருத்தமோ? அவன் ஆச்சர்யமான யோக மாயையுடையவன். அவனுடைய மாயையை மஹாயோகிகளுக்கும் கடக்க முடியாது. அவன் விஷயத்தில் நீங்கள் சங்கிக்க வேண்டாம். அவன் எதை எப்பொழுது நினைப்பானோ, அதை அப்பொழுதே நிறைவேற்ற வல்லவன். அவன் நமது இஷ்டத்தை அனாயாஸமாக நிறைவேற்றுவான். 

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக