மூன்றாவது ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்தியாயம்
(திதியின் கர்ப்பத்திலுள்ள காச்யபருடைய வீர்யத்தின் தேஜஸ்ஸினால் தேவதைகள் ஒளி மழுங்கப்பெற்று அதன்காரணத்தை ப்ரஹ்ம தேவனை வினவுதலும், அவன் காரணத்தை விஸ்தாரமாகக் கூறுதலும்.)
மைத்ரேயர்சொல்லுகிறார்:- திதியானவள் தன்பர்த்தாவான காச்யப ப்ரஜாபதியினுடையதும் பிறருடைய தேஜஸ்ஸைப் பாழ்செய்வதுமான அந்த வீர்யத்தை “எந்த வேளையில் என் செய்வானோ” என்று இந்திரனிடத்தினின்று சங்கித்தவளாகி நூறு வர்ஷம் வரையில் கர்ப்பத்தில் தரித்திருந்தாள். அந்த கர்ப்ப தேஜஸ்ஸினால் உலகம் முழுவதும் ஸுர்யன் வெளிச்சமெல்லாம் மழுங்கப்பெற்றார். லோகபாலர்கள் அனைவரும் தமது ப்ரபாவமெல்லாம் பாழடையப்பெற்றுத் திசைகளெல்லாம் இருள்மூடப்பெற்றிருக்கையால் “இது கிழக்கு, இது மேற்கு” என்கிற விவேகமற்றவராகி ப்ரஹ்மாவினிடம் சென்று அவனுக்கு இந்த துரவஸ்தையைத் (கெட்ட ஸ்திதியைத்) தெரிவித்தார்கள்.
தேவதைகள் சொல்லுகிறார்கள்:- வாரீர் வல்லமை அமைந்த ப்ரஹ்மதேவனே! நாங்கள் இப்பொழுது எந்தக் காரணத்தினால் மிகவும் பயந்திருக்கின்றோமோ, அதை நீரே அறிவீர். “நானும் உங்களைப்போன்றவனே. ஆகையால் எப்படி அறிவேன்” என்னில், சொல்லுகின்றோம். நீர் காலத்தினால் தீண்டப்பெறாத ஜ்ஞானமுடையவர். உம்முடைய அறிவு காலத்தினால் மழுங்கப்பெறுகிறதில்லை. பகவான் உம்மிடத்தில் ஆவேசித்து ஸ்ருஷ்டியை நடத்துகின்றானாகையால் நீர் எல்லாம் அறியும் திறமையுடையவர். இங்ஙனம் பகவானுக்குச் சரீரமாயிருக்கின்ற உமக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. தேவர்க்கும் தேவனே! உலகங்களைப் படைப்பவனே! அவற்றைப் பாதுகாப்பவர் அனைவரிலும் சிறந்தவனே! எங்களுக்கு மேற்பட்டவருடைய அபிப்ராயத்தையும் கீழ்ப்பட்டவருடைய அபிப்ராயத்தையும் நீர் நன்றாக அறிவீர். தேவமனுஷ்யாதி காமரூபங்களுக்கு இடமாகிக் கார்ய தசையை அடைந்த ஜகத்திற்கெல்லாம் காரணன் நீரே. “ஜகத்காரணன் பரமாத்மாவேயன்றி நானன்றே” என்கிறீரோ ? ரஜோ குணத்தை முக்யமாகவுடைய ப்ரஹ்மதேவனைச் சாரமாகக் கொண்டு உலகங்களைப் படைக்கின்ற பரமாத்மா நீரே. “ ஆனால் நானே பரமாத்மாவாயின், அவன் கர்மத்திற்குட்பட்டவனோ” என்னில், ரஜோகுணம் தலையெடுக்கப்பெற்ற நான்முகனாகிய உம்மை சரீரமாகக்கொண்டு உமக்கு அந்தராத்மாவாயிருக்கின்ற பரமபுருஷன் கர்மத்தினால் உம்மைச் சரீரமாகக் கொண்டவனல்லன். அவன் தன்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால், ப்ரஹ்மதேவனென்னும் பேருடைய இந்த உம்மைச் சரீரமாகக் கொண்டவன். அவன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தையே பலமாக உடையவன். இங்ஙனம் பரமாத்ம ஸ்வரூபியான உமக்கு நமஸ்காரம். ஜீவாத்மாக்களை நீர் தேவமனுஷ்யாதி உருவங்களைப் பெறச்செய்கின்றீர். ஜகத்தெல்லாம் உம்மிடத்தில் அடங்கியிருக்கின்றது. நீர் கார்யமாயும் காரணமாயுமிருப்பவர். வாஸ்தவத்தில் கார்ய தசையையும் காரண தசையையும் அடைந்த சேதனாசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டவர். இப்படிப்பட்ட உம்மை எவர் என்றும் மாறாத பக்தியுடன் உபாஸிக்கினறார்களோ; மற்றும், எவர் ப்ராணன்களையும் ஜ்ஞானேந்த்ரிய கர்மேந்த்ரியங்களையும் மனத்தையும் ஜயித்து நன்றாக பக்தியோகம் கைகூடப்பெற்று உமது அனுக்ரஹம் பெற்றவருமாய் இருப்பார்களோ, அத்தகையவர்களுக்கு எவ்விதத்திலும் அவமதி உண்டாகாது. (இப்படியிருக்க உம்முடைய ப்ரஜைகளும் உமது கட்டளையின்படி நடப்பவர்களுமாகிய எங்களுக்குப் பிறரால் பரிபவம் நேரிடுவது யுக்தமன்று). வேதமென்கிற உமது வாக்கினால் ஸமஸ்த ப்ரஜைகளும் தாமணிக்கயிற்றால் பசுக்கள் போல் கட்டுண்டு உமக்கு அதீனங்களாகிப் பூஜை செய்கின்றன. இங்ஙனம் மேன்மையுடைய உமக்கு நமஸ்காரம். உம்முடைய ஸம்பாதமுடைய நாளும் உம்முடைய ஆஜ்ஞையைத் தொடர்ந்தவருமாய் இருப்பவர்க்குப் பிறரால் பரிபவம் நேரும்படி நீர் பார்த்துக் கொண்டிருப்பது யுக்தமன்று. வாரீர் மிகுந்த மஹிமையுடையவரே இப்படிப்பட்ட வண்ணங்களையுடைய நீர் உலகம் முழுவதும் இருள் மூடப்பெற்று இரவென்னும் பகலென்னும் பிரிவில்லாமையால் கர்மங்களெல்லாம் லோபிக்கப்பெற்ற எங்களுக்கு ஸுகத்தை விளைவிப்பீராக. இங்ஙனம் ஆபத்தில் அழுந்தி இருக்கின்ற எங்களை நீர் மிகவும் தயை பெருகப் பெற்ற கண்ணோட்டத்தினால் கடாஷிக்கக் கடவீர். உலகம் முழுவதும் பேரிருள் நிரம்பியிருக்கின்றமையால் ராத்ரியென்றும் பகலென்றும் பிரிவே பாழாய்விட்டது. அதனால் அஹோரத்ரங்களில் நடத்த வேண்டிய கார்யங்களெல்லாம் பாழடைந்தன. இப்படி நாங்கள் வருந்துகின்றோம். நீர் மிகுந்த தயை வழியப்பெற்ற உமது கண்களால் எங்களைக் கடாக்ஷிப்பீராக. உங்களுக்கு இப்பொழுது என்ன ஆபத்து நேரிட்டது” என்னில் சொல்லுகின்றோம். வாரீர் தேவனே! திதியின் கர்ப்பத்தில் வைக்கப்பட்ட காச்யபருடைய வீர்யமானது திசைகளையெல்லாம் இருள் மூடச் செய்துகொண்டு, கட்டையில் பற்றின அக்னி போல் வளர்ந்து வருகின்றது. இதாலே எங்களுக்கு நேர்ந்த பெரிய ஆபத்தென்று அறிவீராக.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- நீண்ட அழகிய பாஹுதண்டங்களை உடைய விதுரனே! வேத சப்தங்களால் அறியத் தகுந்தவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனும் ஸ்வயம்புவும் (தானே - தோன்றினவனும்) ஆகிய அந்த ப்ரஹ்மதேவன் சிரித்து இனிய வார்த்தையால், ஸந்தோஷப் படுத்திக்கொண்டு தேவதைகளைக் குறித்து இங்ஙனம் மொழிந்தான்.
ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- வாரீர் மனத்தினால் உண்டான தேவர்களே! உங்களுக்கு முன்னே உண்டானவர்களும் என் புதல்வர்களுமாகிய ஸனகாதிகள் உலகத்திலுள்ள சப்தாதி விஷயங்களில் விருப்பற்றவர்களாயினும் அவ்வுலகம் முழுவதும் ஆகாய மார்க்கத்தினால் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஸனகாதிகள் ஒருகாலத்தில் சுத்வஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹமுடையவனும் எவ்விதத்திலும் எக்காலத்திலும் எவ்விடத்திலும் குறைவுபடாத ஐஸ்வர்யமுடையவனுமாகிய பகவானுடைய வாஸஸ்தானமும் ஸமஸ்த லோகங்களாலும் நமஸ்கரிக்கப்பட்டதுமாகிய விஷ்ணுலோகத்திற்குப் போனார்கள். அந்த விஷ்ணுலோகத்திற்கு வைகுண்டலோகமென்றும் பெயர் உண்டு. இந்த வைகுண்ட லோகத்தில் வாஸம் செய்யும் புருஷர்கள் அனைவரும் ஒரு பலனையும் எதிர்பாராமல் தர்மத்தை ஆனுசரித்து அதனால் பரமபுருஷனை ஆராதிக்கும் தன்மையர். அவர்கள் எல்லோரும் பகவானுடைய ஆகாரத்தை நிகர்த்த ஆகாரமுடையவர். இவ்வுலகத்தில் கேவலம் சாஸ்த்ரத்தினால் அறியக் கூடியவனும் ஜ்ஞானம் சக்தி முதலிய குணங்கள் நிறைந்தவனும் ஜகத்திற்கு முக்யகாரணனும் ஸர்வஸ்மாத்பரனுமாகிய பரமபுருஷன் ரஜோகுணமும் தமோகுணமும் தீண்டப் பொறாமல் சுத்த ஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹத்தைத் தரித்துத் தன்னைச் சேர்ந்தவர்களாகிய நம்மை மனக்களிப்புறச் செய்துகொண்டு வீற்றிருக்கின்றான். அன்றியும், இவ்வுலகத்தில் நிச்ரேயஸமென்னும் பேருடைய ஓர் வனம் இருக்கின்றது. அவ்வனம் அந்தந்த ருதுக்களில் எவ்வகையான புஷ்பங்களும் காய்களும் பழங்களும் விளையக் கூடுமோ, அவையெல்லாம் ஸர்வகாலத்திலும் மாறாதிருக்கப்பெற்று மிருத் சோபை அமைத்திருப்பவைகளும் விரும்பின இஷ்டங்களைப் பெய்பவைகளுமாகிய பற்பல வ்ருக்ஷங்களால் மிகுதியும் விளக்கமுற்றுக் கைவல்யமே (போக்யத்தமமான இவ்வனுபவமென்னும் மோக்ஷமே) இங்ஙனம் அந்தப் பறவைகளனைத்தும் அதையே கேட்டுக்கொண்டிருக்கும். மற்றும், இவ்வனத்தில், மந்தாரம் குருக்கத்தி மருதாணி நெய்தல் செண்பகம் அரணம் புன்னை நாககேஸரம் மகிழ்தாமரை பாரிஜாதம் ஆகிய இவையெல்லாம் துளஸியை ஆபரணமாக அணிந்த பகவான் அந்தத் துளஸியின் கந்தத்தை வெகுமதித்திருக்கக் கண்டு அந்தத் துளஸியின் தவத்தைக் கொண்டாடுகின்றன. இவ்வனத்திலுள்ள பாரிஜாதாதி வ்ருக்ஷங்களும் நெய்தல் முதலியவைகளும் “ஆ! நன்மணமுடைய தமது புஷ்பங்கள் இருப்பினும், பகவான் துளஸியை அணிந்து அதை வெகுமதிக்கின்றானே. ஆ! துளஸி ஜன்மாந்தரத்தில் செய்த தவமே தவம்” என்று மனத்தில் த்வேஷமில்லாமல் துளஸியைப் புகழ்கின்றன. இங்ஙனம் திர்யக் ஜர்தாக்களும் ஸ்தாவரங்களும் பகவானுடைய ஸம்பந்தத்திற்கு ஆசைப்படும்படியான இவ்வனத்தில் விவேகிகளான புருஷர்கள் போகஸ்தானத்தையும் போக்ய வஸ்துக்களையும் போகக் கருவிகளையும் அனுகரித்து மதிமயங்கப் பெறாமல் பகவானுடைய குணங்களைப் பாடுவது ஓர் ஆச்சர்யமன்று. அன்றியும், இந்த வைகுண்டலோகம் பகவானுடைய பாதாரவிந்தங்களில் தலை வணங்கி நமஸ்காரம் செய்வது மாத்ரத்தினால் கிடைத்தவைகளும் வைடூர்யம், மரகதம், ஸ்வர்ணம் இவற்றால் இயற்றப் பெற்றவைகளுமான பக்தர்களின் விமானங்களால் முழுவதும் நிறைந்திருக்கும். இந்த விமானங்களில் வீற்றிருக்கும் புருஷர்களுக்கு, மிகவும் பருத்த இடையின் பின்புறமுடையவரும் புன்னகையால் விளங்கும் முகத்துடன் திகழ்கின்றவருமாகிய மங்கையர் மணிகளும் தமது பரிஹாஸம் முதலிய விலாஸங்களால் காம விகாரத்தை விளைவிக்க வல்லராகவில்லை. ஏனென்னில், அவர்கள் பகவானிடத்தில் ஆழ்ந்த மனமுடையவர். ஆகையால் அவரது மனத்தை இழுக்க இவர்கட்கு ஸாத்யமில்லை. சிறந்த உருவமுடையவரும் சிலம்புத் தண்டையால் பாதங்களை ஒலிக்கச் செய்கின்றவளும் ராகம் முதலிய தோஷங்களற்றவளுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியானவள் இந்த வைகுண்ட லோகத்தில் ஸ்படிக ரத்னங்களால் இயற்றின சுவர்களுடையதும் அழகுக்காக இடையிடையில் ஸ்வர்ணத்தினால் அலங்காரம் செய்யப்பெற்றதுமாகிய பகவானுடைய க்ருஹத்தில் விளையாட்டிற்காகக் கையிலேந்தின தாமரை மலருடன் அந்த ஸ்படிக ரத்னமயமான சுவர்களில் ப்ரதிபலித்தவளாகித் தன்கையிலுள்ள தாமரை மலரால் அந்தச் சுவர்களைத் துடைத்துச் சித்ரஞ் செய்பவள் போல் புலப்படுவாள். எந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அனுக்ரஹம் பெறுவதற்காக மற்றவரெல்லோரும் அவளை ஆராதிக்கையாகிற ப்ரயத்னங்களைச் செய்கின்றார்களோ, அப்படிப்பட்ட ஸ்ரீமஹாலக்ஷ்மி இங்கு பகவானுடைய க்ருஹத்தில் தன்கையிலுள்ள லீலாரவிந்தத்தினால் விளக்கிறவள் போல் புலப்படுவாள். வாரீர் தேவதைகளே! இந்த லோகத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மி தனது லீலோத்யானத்தில் பவழங்களால் இயற்றின கரைகளை உடையவைகளும் அம்ருதம் போன்ற நிர்மல நீர் நிறைந்தவைகளுமாகிய நடைவாவிகளில் தனக்குப் பணிவிடை செய்கின்ற மாதர்களோடு கூடின துளஸிகளால் பகவானைப் பூஜித்துக் கொண்டிருக்கையில், அப்பொழுது அழகிய முன்னெற்றி மயிர்களுடையதும் உயர்ந்த மூக்குடன் விளங்குவதுமாகிய தன்முகம் அந்த நடைவாவியின் ஜலத்தில் ப்ரதிபலிக்கக் கண்டு அதை பகவானுடைய முகமாக ப்ரமித்து அந்த ஜல ஸமீபத்தில் தன்முகத்தை வைத்து அதைப் பகவானே சும்பனம் பண்ணுகின்றானென்று (முத்தமிடுகிறானென்று) நினைத்துக் கொண்டாள். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் மடப்பம் இத்தகையது. பாபங்களைப் போக்கும் தன்மையுள்ள பகவானைக் காட்டிலும் வேறான அர்த்த காமாதி விஷயங்களைப் பற்றினவைகளும் அந்த அர்த்தம் காமம் முதலியவற்றை நிறைவேற்றிக்கொடுக்கும் உபாயங்களை அறிவிக்கின்ற கண்ட நீதி காம தந்த்ரம் முதலியவைகளை ஆராய்ந்துரைத்துப் பொழுது போக்கச் செய்வதினால் புத்தி ப்ரமத்தை விளைப்பவைகளும் பரமபுருஷார்த்தமான பரமபுருஷனுடைய கதைகளைக் கேட்கும்பாக்யமற்ற மதிகேடரான மனிதர்களால் ஆதரவுடன் கேட்கப் பெற்றவைகளும் கேட்ட மாத்ரத்தில் கேட்பவர்களின் புண்யத்தைப் பறித்துக் கொண்டு போனவைகளும் அங்ஙனம் கேட்பவர்களை எவ்விதத்திலும் பிடிப்பில்லாத பாழ் நரகங்களில் விழத் தள்ளுகின்றவைகளுமாகிய குத்ஸித கதைகளை எவர்கள் கேட்கின்றார்களோ, அவர்கள் வைகுண்டனுடைய வாஸஸ்தானமாகிய இந்த லோகத்தை அடையமாட்டார்கள். இங்ஙனம் அர்த்தத்திலும் காமத்திலும் கால்தாழப் பெற்று பாக்யமற்றவர்களாகிய மனிதர்கள் தேவதைகளும் ஆசைப்படும்படியான மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றும் நிவ்ருத்தி தர்மத்துடன் கூடின தத்வ ஜ்ஞானத்தைப் பெறாதவராகிக் கடக்க முடியாததான பகவானுடைய மாயையால் மதிமயங்கப்பெற்று பரமபுருஷார்த்த ஸித்தியைக் கையிலங்கு நெல்லிக்கனியாக்கவல்ல இந்தப் பரமபுருஷனுடைய ஆராதனத்தைச் செய்யாமல் பாழாகின்றார்களே. ஆ! இதென்ன வருத்தம். பலன்களை விரும்பிச்செய்யும் தர்மங்களை எல்லாம் துறந்து எல்லாம் பகவானுடைய ஆராதனங்களே என்று நினைத்து அவனுடைய முகமலர்த்தியே ப்ரயோஜனமாகச் செய்யும் தர்மமாகிய நிவ்ருத்திதர்மத்துடன் “ஈச்வரனே நாம் வருந்திப்பெற வேண்டிய புருஷார்த்தமும், அதைக் கைகூடுவிக்கும் உபாயமுமாவான்” என்கிற தத்வஜ்ஞானத்தை எதனால் அனாயாஸமாகப் பெறக்கூடுமோ, அப்படிப்பட்ட மனுஷ்ய ஜன்மத்தைப்பெற்றும் பகவானுடைய மாயையால் மதி மயங்கி அவனுடைய ஆராதனத்தைச் செய்யாமல் பாழாகின்றார்களே. அப்படிப்பட்ட பாக்யஹீனர்களுக்கு இந்த வைகுண்டலோகம் பெறக்கூடியதன்று. நெடுநாள் யமம் நியமம் முதலிய அஷ்டாங்க யோகத்தை அப்யஸிப்பதனால் படிந்திருப்பதும், அனைவரும் ஆசைப்படத்தகுந்ததுமாகிய நல்லியற்கையுடையவர்களும் ஸகல ஜகத் ரக்ஷகனான பகவானுடைய நற்புகழை ஒருவருக்கொருவர் பாடுவதனால் அவனிடத்தில் அனுராகம் தலைக் கொண்டு அதனால் தழதழப்புற்றுக் கண்ணீர் பெருகப் பெற்று உடம்பு முழுவதும் மயிர்க்கூச்சல் உண்டாயிருப்பார்களோ, அப்படிப்பட்ட பாக்யசாலிகள் தேவச்ரேஷ்டனான பகவானிடத்தில் மிகுந்த பக்தி உண்டாகப் பெற்றவராகி இந்த லோகத்தைப் பெறுவார்கள். இவ்வுலகம் பகவானிடத்தில் பக்தி செய்பவர்க்குப் பெறக்கூடியதேயன்றி மற்றவர்க்கு நெஞ்சிலும் நினைக்க முடியாதது. அப்படிப்பட்ட வைபவமுடையதும் தாங்கள் ஒருநாளும் பாராததும் தேவச்ரேஷ்டர்களின் விமானங்களால் ப்ரகாசிப்பதும் அற்புதமும் திவ்யமும் (அமானுஷ்மாயிருப்பதும்) ஸமஸ்த லோகங்களாலும் முக்யமாக வெகுமதிக்கத் தகுந்ததும் ஜகத்குருவான பரமபுருஷனால் நித்யவாஸம் செய்யப்பெற்றதுமாகிய அந்த வைகுண்டலோகத்திற்கு ஸனகாதிமுனிவர்கள் தமது யோக மாயாபலத்தினால் (யோகமஹிமையால் கிடைத்த ஆச்சர்ய சக்தியாகிய அணிமாதி ஐஸ்வர்ய பலத்தினால்) சென்று நிரம்பவும் சிறந்த ஸந்தோஷத்தை அடைந்தார்கள்.
அப்பால் அம்முனிவர்கள் அந்த வைகுண்டலோகத்தில் ஆறு கோட்டை வாசற்களைக் கடந்து பகவானைப் பார்க்க வேண்டுமென்னும் குதூஹலத்தினால் ஆங்காங்குள்ள ஆச்சர்யங்களில் சிறிதும் கண்வைக்காமல் சென்று ஏழாவது கோட்டையுள் நுழைந்து, அங்கு ஒருவர்க்கொருவர் நிகர்த்த வயதுடையவர்களும் கையில் கதை ஏந்தினவர்களும் தோள்வளை குண்டலம் கிரீடம் முதலிய சிறந்த ஆபாணங்களால் அழகிய வேஷமுடையவர்களுமாகிய இரண்டு தேவர்களைக் கண்டனர். அவ்விருவரும் பருத்த நான்கு புஜங்களுடையவர்; அந்த புஜங்களின் இடையாகிய மார்பில் வனமாலை என்னும் பூமாலையை அணிந்திருப்பவர். அப்பூமாலையில் மதித்த வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும். அவர்கள் புருவம் வணையப் பெற்று ஸ்பஷ்டமாய் விளங்குகின்ற நாஸிகைகளாலும் சிவந்த கேத்ரங்களாலும் முகம் சிறிது உக்ரமாயிருக்கப் பெற்றவர். இத்தகையரான அவ்விரண்டு தேவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்களை அனாதரித்து அவர்களைக் கேளாமலே ஸவர்ணத்தினாலும் வஜ்ர மணிகளாலும் இயற்றின கதவுகளையுடைய கீழ் வாசற்களை எங்ஙனம் தாண்டி வந்தார்களோ, அங்ஙனமே இந்த ஏழாவது வாசலையும் தாண்டிச் சென்றார்கள். “அவர்கள் அங்ஙனம் கேளாமலே நுழைந்ததற்குக் காரணம் என்” என்னில் சொல்லுகிறேன். அம்முனிவர்கள் வைஷம்யமில்லாத தம்முடைய த்ருஷ்டியால் சங்கையற்றிருப்பவர்; ஆனதுபற்றியே (ஜீவாத்மஸ்வரூபத்தையும் ப்ரக்ருதி ஸ்வரூபத்தையும் ஈச்வர ஸ்வரூபத்தையும் நன்கறிந்தவர். ஆனது பற்றியே வித்யை விநயம் முதலிய குணங்கள் நிறைந்த ப்ராஹ்மணன் அவையொன்று மில்லாத பசு யானை நாய் புலையன் முதலிய எல்லா இடங்களிலும் ஆத்மாக்கள் ஜ்ஞான ஸ்வரூபராகி ஒருவராகவே இருப்பவராகையால் அவற்றையெல்லாம் அவர்கள் ஸமமாகவே பார்க்குந் தன்மையர். மற்றும், ப்ராஹ்மணன் பசு, யானை, நாய், புலையன் முதலிய சரீரங்களெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களேயாகையால் ஒரு படிப்பட்டவைகளே. அவற்றில் அந்தராத்மாவாயிருக்கிற பரமாத்மாவும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்து ஒருபடிப்பட்டவனே. அவர்கள் இதை அறிந்தவராகையால் எல்லாவற்றையும் எல்லாவிதத்திலும் ஸமமாகப் பார்த்திருந்தமையால் வைஷம்யமில்லாத த்ருஷ்டியுடையவர். அத்தகைய திருஷ்டியால் நிர்ப்பமாய் நுழைந்தார்களென்று கருத்து) எல்லா இடங்களிலும் தடையில்லாமல் ப்ரவேசிப்பவர். ஆகையால் நம்மைத் தடுப்பாரில்லையென்றும் நமக்கு நுழையத்தகாத இடமில்லையென்றும் நினைத்து அவர்கள் அந்த துவாரபாலகர்களைக் கேளாமலே நுழைந்தார்கள். அப்பொழுது, பகவானுக்கு ப்ரதிகூலமான ஸ்வபாவமுடைய அந்த வாசற்காக்கும் தேவர்கள் இருவரும் திகம்பரர்களாகி வயது சென்றவர்களாயினும் ஐந்து வயதுள்ள பாலர்கள் போல் தோற்றுகின்றவரும் பரமாத்மாவின் உண்மையை அறிந்தவருமாகிய அந்த நான்கு முனிவர்களும் நுழைவதைக்கண்டு “ஆ! உங்களுக்கு இங்குங்கூட தைர்யமா” என்று அவருடைய ப்ரபாவத்தைப் பரிஹஸித்து, அங்கனம் தடுக்கத் தகாதவர்களாகிய அவர்களைப் பிரம்பினாலும் வாக்கினாலும் தடுத்தார்கள். அம்முனிவர்கள் பூஜிக்கத் தகுந்தவராயினும் மற்ற தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீவிஷ்ணுவின் வாசற்காப்பவராகிய அந்த தேவதைகளால் அங்ஙனம் தடுத்துப் பரிபவிக்கப் பெற்றவராகத் தமக்கு மிகவும் நண்பனாகிய பரமபுருஷனைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பத்திற்கு பங்கம் (தடை) நேர்ந்தமையால் சிறிது கோபம் உண்டாகி அதனால் சீக்ரமாகக் கண்கள் கலங்கப் பெற்று மேல்வருமாறு மொழிந்தார்கள்.
குமாரர்கள் சொல்லுகிறார்கள்:- நெடுநாள் பகவானை ஆராதித்து அதன் மஹிமையால் இந்த வைகுண்டலோகம் சேர்ந்து இங்கு வாஸம் செய்கின்றவரும் அந்த பகவானோடொத்த தர்மங்களை உடையவருமாகிய உங்களுக்கு ஏன் ஸ்வபாவம் இப்படி விபரீதமாயிருக்கின்றது? நெடுநாள் பகவானை ஆராதித்து இந்த வைகுண்டலோகத்திற்கு வந்துசேர்ந்தீர்கள். கறுத்த மேனியும் நான்கு புஜங்களும் கிரீடமும் சங்கு சக்ரங்களும் ஆபரணமும் வனமாலையும் முதலிய பகவானுடைய தர்மமெல்லாம் அமையப் பெற்றிருக்கின்றீர்கள். இத்தகையராகி இவ்வுலகத்தில் வஸிக்கின்ற உங்களுக்கு இந்த விஷம ஸ்வபாவம் பொருந்தாது. “ஆமாம் நாங்கள் வாசற்காப்பவர். எங்களுக்கு இதுதர்மமே. புதிதாக வந்தவர்களைத் தடுப்பதும் பழகினவர்களைத் தடுக்காமல் நுழைய விடுவதும் த்வார பாலர்களாகிய எங்களுக்கு ஏற்றவைகளே. இல்லையாயின் எங்கள் மேல் ப்ரபுவின் தண்டனை வருமே” என்கின்றீர்களோ? அதில்லை. இந்த வைகுண்டலோகத்திலுள்ள புருஷர்களெல்லோரும் மிகவும் சாந்தியுடையவராயிருக்கின்றார்கள். இங்குக் கலஹமென்பது கிடையாது. இப்படிப்பட்ட இந்த லோகத்தில் குடிலபுத்தியர்களான உங்களுக்கு உங்களைப்போல் சந்தேகிக்கத் தகுந்தவன் எவன் இருக்கின்றான்? எவனேனும் குடிலபுத்தியன் நுழைவனோ என்னவோ என்கிற சங்கையாலன்றோ நீங்கள் தடைசெய்கின்றீர்கள். உங்களைப்போல் குடிலபுத்தியனாகி ஸந்தேஹிக்கத் தகுந்தவன் எவனேனும் இங்கு உளனாகிலன்றோ எங்களைச் சங்கித்துத் தடுக்கவேண்டும். இந்தலோகத்திற்கு அப்படிப்பட்டவன் எவனும் வரமுடியாது. ஆகையால் நீங்கள் இங்ஙனம் சங்கிக்க இடமில்லை. “இவ்வுலகம் இத்தகையதே. இங்கு வஞ்சனை செய்பவன் எவனும் வசப்படான் ஆயினும் நீங்கள் நுழைவது பகவானுக்கு அனிஷ்டமாயிருக்குமென்று நினைத்து நாங்கள் தடுக்கின்றோம்” என்கிறீர்களா? பகவான் ப்ரபஞ்சத்தையெல்லாம் தன் குக்ஷியில் வைத்துக்கொண்டு பாதுகாக்குந் தன்மையன். அவனுக்கு “இவன்தான் உள்ளே நுழையத் தகுந்தவன். இவன் உள்ளே நுழையத் தகுந்தவனல்லன்” என்கிற வைஷம்யம் இல்லை. பகவான் ஜகத்தையெல்லாம் தன்வயிற்றில் வைத்து ரக்ஷிப்பதையும் நீங்கள் தடுப்பீர்கள் போலும். பெரிய ஆகாசத்தினைக் காட்டிலும் கடம் முதலியவற்றிலுள்ள ஆகாசம் எங்ஙனம் வேறுபட்டதன்றோ, ஒன்றாகவேயிருக்குமோ, அங்ஙனமே பரமாத்மாவைக் காட்டிலும் ஜீவாத்மாவை வேறுபட்டவன் என்றும் பரமாத்மாவுக்கு உட்பட்டு அவனோடு அவனாயிருப்பவன் என்றும் பண்டிதர்கள் அறிகின்றார்கள். ஆனால் பெரிய ஆகாசமும் கடாதி பதார்த்தங்களிலுள்ள ஆகாசமும் ஒன்றாயிருப்பதுபோல் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரேபொருள் தானோ என்னில், ஒரேபொருளன்று. பெரிய ஆகாசமும் கடாதிகளின் ஆகாசமும் ஒரு பொருளாயிருப்பதுபோல் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளென்னும்படி பிரிக்க முடியாதிருப்பார்கள். ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவையொழிந்து நிலைமையே கிடையாது. எப்பொழுதும் பரமாத்மாவுக்குச் சரீரமாய் அவனால் தரிக்கப்பட்டு அவனுடைய ஸங்கல்பத்தின்படியே நடப்பவனாயிருப்பான், ஆகையால் ஒரு பொருள்போல் தோற்றுவரேயன்றி வாஸ்தவத்தில் ஜீவாத்ம பரமாத்மாக்கள் வேறுபட்டவரே. ஆயினும் ஜீவாத்மா பரமாத்மாவையொழியச் செல்லாமையால் ஒரு பொருள் போலவே தோற்றுவான். ஆகையால் ஸர்வாத்மகனாகையாலே (ஸர்வவஸ்து ஸ்வரூபனாகையாலே) அவனுக்கு வைஷம்யம் இல்லை. ராகம் த்வேஷம் முதலிய தோஷங்களுக்கு ப்ரஸக்தியில்லாத இத்தேசத்தில் பிறரைத் தடுக்கையாகிற இந்த ஏற்பாடு தேவவேஷம் பூண்ட உங்களால் ஏற்படுத்தப்பட்டதாயென்? அனுகூலமான வேஷமுடையவர் போல் தோற்றுகின்றீர்கள். வாஸ்தவத்தில் நீங்கள் தேவதைகளல்லர் போலும். மேலுக்கு மாத்ரமே தேவவேஷம் பூண்டவர்போல் தோன்றுகிறீர்கள். இவ்விடத்தில் இங்ஙனம் பிறரைத் தடுக்கும்படியான வழக்கத்திற்கு அவகாசமேயில்லை. இது உங்களால்தான் ஏற்பட்டதாய் இருக்கவேண்டும். உலகத்தில் ஒருவன், வயிற்றில் ஆஹார வைஷம்யத்தினால் மாறுபாடுண்டாகி அதனால் விளையக்கூடிய ரோகத்தினின்று பயப்படுவது போல், நீங்கள் எதைப்பற்றி பயப்படுகிறீர்களோ, அந்தக் காரணம் யாது? அத்தகைய காரணம் ஒன்றும் இல்லையே, நீங்கள் என் பயப்படுகிறீர்கள்? சரீரங்கள் தோறும் அந்தர்யாமியாயிருந்து அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதவனாகி நிர்ப்பயனாயிருக்கின்ற பரமபுருஷனுக்குப் பிறரால் பயம் உண்டென்று நீங்கள் நினைப்பதற்குக் காரணம் யாதோ தெரியவில்லை. அதைப்பற்றியன்றோ நீங்கள் எங்களைத் தடுக்கின்றீர்கள். ஆகையால் தன்னோடொத்தவர்களும் தனக்கு மேற்பட்டவர்களும் இன்றி வைகுண்டநாதனாகிய பகவானுக்கு வாசற்காப்பவராகி மந்தபுத்தியராயிருக்கின்ற உங்களுக்கு எது யுக்தமோ அதை விசாரிக்கின்றோம். அது என்னென்னில், நீங்கள் இந்த லோகத்தினின்று தன்னினம் பிறவினமென்கிற வைஷம்ய புத்தியால் மிகவும் பாபிஷ்டங்களான காம க்ரோத லோபங்களென்கிற மூன்று சத்ருக்கள் எந்த லோகங்களில் மாறாதிருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட லோகங்களுக்குப் போய்ச் சேருவீர்களாக.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ப்ராஹ்மண சாபமாகையால் எப்படிப்பட்ட அஸ்த்ர ஸமூஹங்களாலும் தடுக்கமுடியாதபடி அம்முனிவர்கள் இங்ஙனம் மொழிந்ததைக் கேட்டு, அந்த க்ஷணமே ஸ்ரீவிஷ்ணுவின் ப்ருத்யர்களான அந்த தேவர்கள் அம்முனிவர்களின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, “ஆ! என்ன செய்தோம்? நிரபராதிகளான பக்தர் விஷயத்தில் நாம் இப்படி சாபங் கொடுத்து அபராதப்பட்டோமே, இந்த பாகவதாபசாரத்தினால் நாமும் ஸம்ஸாரத்தில் விழுவோமோ”! என்று மிகவும் பயத்தினால் நடுங்குகின்ற அம்முனிவர்களுக்கு தண்டனிட்டு, இங்ஙனம் விண்ணப்பம் செய்தார்கள்.
த்வார பாலகர் சொல்லுகிறார்கள்:- அபராதம் செய்தவனுக்கு எத்தகைய தண்டனை விதிக்கத்தகுமோ, அதையே நீங்கள் நடத்தினீர்கள். ஆகையால் இவ்விஷயத்தில் உங்கள்மேல் ஒரு பிழையும் இல்லை. இந்த தண்டனை எங்களுக்கு உண்டாகுமாக. தேவஸ்வபாவரான உங்கள் விஷயத்தில் நாங்கள் பட்ட அபராதத்தையெல்லாம் இது போக்குமாக. நாங்கள் உங்களை அவமதித்தமையாகிற எங்கள் பாபமெல்லாம் தீருமாகையால் இந்தச் சாபம் எங்களுக்கு ஸம்மதமே. ஆனால் நாங்கள் ஒன்று வேண்டிக் கொள்கின்றோம். நீங்கள் எங்களிடத்தில் “ஐயோ” என்றிரங்கிச் சிறிதாயினும் அனுதாபம் பிறக்கப் பெற்றிருப்பீர்களாயின், அதனால், நாங்கள் எப்படிப்பட்ட மூடஜன்மங்களில் பிறக்கினும் எங்களுக்கு பகவத் விஷயத்தில் நினைவை அழிக்கும்படியான மதிமயக்கம் உண்டாகாதிருக்குமாக. இங்ஙனம் அருள்புரிவீர்களாக.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் தன்னுடைய ப்ருத்யர்கள் பெரியோர்களிடத்தில் அபராதப்பட்டதை அந்த க்ஷணமே அறிந்து, தன்னிடத்தில் பக்தியுடைய பெரியோர்களின் மனத்திற்கினியனும் தாமரையுந்தியனுமாகிய பகவான் பரம ஹம்ஸர்களான மாமுனிவர்களால் கூசிப் பிடிக்கத்தகுந்த தன் மெல்லடிகளால் மலர் மங்கையுடன் நடந்து வந்தான். அம்மஹானுபாவன் நடந்து வரும்பொழுது அவனுடைய பாரிஷதர்கள் (ப்ருத்யர்கள்) குடை சாமரம் விசிறி பாதுகை முதலியவைகளை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அந்தப் பரமபுருஷன் தன்னுடைய பக்தர்கள் செய்யும் தவத்தின் பயனே இங்கனம் கண்ணுக்குப் புலப்படும்படி ஓர் அற்புதவடிவங்கொண்டு வந்தாற்போல் தோன்றினான். அந்த பகவானுக்கு இருபுறங்களிலும் ஹம்ஸங்கள் போல் திகழ்கின்ற இரண்டு சாமரங்களை அவனுடைய ப்ருத்யர்கள் வீசிக் கொண்டு வந்தார்கள். அவனுடைய சிரஸ்ஸுக்கு நேராகச் சந்த்ரன்போல் வெளுத்தழகிய கொற்றக்குடை பிடித்தார்கள். அந்தக் குடையின் ஓரங்களில் முத்துச் சரங்களால் இயற்றின சாளரங்கள் சாமரக்காற்றினால் அசைந்து கொண்டிருந்தன. அந்த முத்துச் சாளரங்களின் நுனிகளினின்று நீர்த்துளிகள் பெருகின. அதனிடையில் அவ்வழகன் மிகவும் அழகாக ப்ரகாசித்தான். அவன் பரிபூர்ணமான அனுக்ரஹத்தினால் மிகவும் தெளிந்து அழகாயிருக்கின்ற முகமுடையவன்; ஆசைப்படத் தகுந்த ஒளி மென்மை முதலிய குணங்களுக்கு இருப்பிடம்; ஸ்னேஹம் நிறைந்த கண்ணோக்கத்தின் வெள்ளத்தினால் மனத்தைப் பறிக்கின்றவன்; கறுத்து அகன்ற தன்மார்பில் விளங்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மியால் ஸ்வர்க்கலோகத்திற்குச் சூடாமணி போன்றதும் தனக்கு வாஸஸ்தானமுமாகிய வைகுண்டலோகத்தையெல்லாம் விளங்கச் செய்பவன் போன்றிருப்பான். அன்றியும், அவன் பருத்த இடையின் புறத்தில் தரித்திருக்கின்ற பீதாம்பரத்தின் “மேல் விளங்குகின்ற அரை நூல்மாலையாலும் தேனைப் பருகி மதித்துப்பாடும் வண்டினங்கள் நிறைந்த வனமாலையாலும் திகழ்வுற்று மணிக்கட்டுக்கைகளில் அழகிய கடகங்களை அணிந்து ஸ்ரீகருடனுடைய தோளின்மேல் கையை வைத்துக் கொண்டு மற்றொரு கையினால் தாமரை மலரைப் பிடித்து லீலையாகச் சுழற்றிக் கொண்டிருந்தான். அவன் ஒளியின் மிகுதியால் மின்னலையும் அவமதிக்கின்ற மகர குண்டலங்களாகிற அலங்காரத்தினால் அழகிய கபோலங்களும் உயர்ந்த மூக்குடைய திருமுகமும் அமைந்து ரத்னங்கள் இழைத்த கிரீடம் தரித்து புஜ தண்டங்களின் இடையில்விளங்குவதும் மனத்தைப் பறிப்பதும் சிறப்புற்றதுமாகிய முத்துமாலையாலும் கழுத்தில் அணியப்பெற்ற கௌஸ்துப மணியினாலும் ப்ரகாசித்தான். “எனக்கு மேற்பட்ட அழகு மற்றொருவர்க்கும் இல்லையென்கிற ஸ்ரீமஹாலக்ஷ்மியின் கர்வமெல்லாம் இந்த பகவானுடைய திவ்யதேஹ ஸௌந்தர்யத்தில் அடங்கிற்றென்று தன்னுடைய பக்தர்கள் மனத்தினால் ஊஹிக்கும்படி பலவகையான ஸௌந்தர்யங்களெல்லாம் நிறைந்தவனும் நான்முகனாகிய பிரம்மனும் ருத்ரனும் தேவதைகளாகிய நீங்களுமாகிய நம்மனைவராலும் பஜிக்கத்தகுந்தவனுமாகிய அந்தப் புருஷோத்தமன் வரக் கண்டு ஸனகாதி முனிவர்கள், பார்த்தது போதுமென்கிற த்ருப்தி உண்டாகப் பெறாத கண்களுடையவராகிச் சிரங்களை வணங்கி நமஸ்காரம் செய்தார்கள். செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களின் தாதுகள் போன்ற விரல்களின் பராகத்தோடு கூடின துளஸியின் தேன் மணம் கொண்டு வீசும் காற்றானது நாஸிகைகளின் அந்த்ரத்தினால் உட்புகுந்து” அம்முனிவர் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவராகையால் மனம் கலங்கப் பெறாதவராயினும், அவர்களுடைய மனத்தையும் சரீரத்தையும் கலங்கச் செய்தது. அவர் மனது ஆனந்தத்தின் மிகுதியால் ஒன்றும் தெரியாமல் கலங்கிற்று. சரீரம் மயிற்க்கூச்சல் உண்டாகப் பெற்றது. அம்முனிவர்கள் மிகவும் அழகியதும் சிவந்திருப்பதுமாகிய கீழ் அதரத்தில் படிந்ததும் குருக்கத்தியின் புஷ்பத்தை நிகர்த்துமாகிய புன்னகை அமைந்திருப்பதும் கறுத்த கமலம் போன்றதுமாகிய அந்த பகவானுடைய முகத்தைக் கண்டு மனோரதம் நிறைவேற்றப்பெற்று, மீளவும் நகங்களாகிற செம்மணிகள் நிறைந்ததாகிய அந்த பகவானுடைய பாதங்களைக் கண்டு ஒரே தடவையில் அவனுடைய ஸமஸ்த அவயவங்களின்அழகையும் கண்டு அனுபவிக்கவல்லர் அல்லாமையால் இங்ஙனம் அடிக்கடி அவனுடைய அங்க ஸௌந்தர்யங்களையெல்லாம் தனித்தனியே கண்டு பிறகு மனத்தில் தியானித்து நிலைநிறுத்திக் கொண்டார்கள். இவ்வுலகத்தில் கர்மயோகம் ஜ்ஞானயோகம் பக்தியோகம் முதலிய உபாயங்களின் ப்ரகாரங்களுடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்தறியும் புருஷர்களின் தியானத்திற்கு விஷயமாயிருப்பதும் மிகவும் ப்ரீதிக்கிடமானதும் கண்களுக்கு அழகியதும் புருஷாகாரமுடையதுமாகிய சரீரத்தைக் காட்டுகின்றவனும் தனக்கு அஸாதாரணங்களும் ஸ்வாபாவிகங்களுமான முதலிய அஷ்ட ஐச்வர்யங்களோடு கூடினவனுமாகிய அந்த பகவானை அம்முனிவர்கள் ஸ்தோத்ரஞ் செய்தார்கள்.
குமாரர்கள் சொல்லுகிறார்கள்:- நீ துர்ப்புத்திகளுடைய ஹ்ருதயத்தில் எப்பொழுதும் இருப்பவனாயினும் அவர்க்குத் தோற்றாமல் மறைந்தேயிருப்பாய். அப்படிப்பட்ட நீ, ஆதியந்தமில்லாத பரமபுருஷனே! எங்கள் கண்ணுக்கு விஷயமாயினை, நாங்கள் உன் புதல்வனும் எங்கள் தகப்பனுமாகிய நான்முகனால் வர்ணிக்கப்பெற்ற உன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை எப்பொழுது கேட்டோமோ அப்பொழுதே நீ எங்கள் காதுவழியாய் ஹ்ருதய குஹையில் பிரவேசித்தனை. எங்கள் தகப்பனிடத்தில் நாங்கள் உன் ஸ்வரூபத்தைக் கேட்டது முதல் இது வரையில் உன்னை த்யானித்துக் கொண்டிருந்தோம். அங்ஙனம் த்யானிக்கப்பெற்ற நீ இப்பொழுது எங்கள் கண்ணுக்குப் புலப்பட்டன. ஆகையால் நாங்கள் ப்ரயோஜனம் கைகூடப்பெற்றோம். வாராய் பரமனே! (அனைவரிலும் மேன்மையுற்றவனே!) பகவானே! சுத்த ஸத்வமயமான தேஹத்தினால் இந்த பக்தர்களுக்கு க்ஷணந்தோறும் மேலான அனுராகத்தை விளைவிக்கின்ற நீயே எங்கள் தகப்பன் உபதேசித்த ஆத்ம தத்வமென்று நாங்கள் அறிந்தோம். எங்களுக்கு எங்கள் தகப்பனாகிய ப்ரஹ்மதேவன் உபதேசித்த பரமாத்ம தத்வம் நீயேயென்று நாங்கள் நிச்சயித்துக் கொண்டோம். ஸம்ஸாரத்தில் வெறுப்பு உண்டாகப்பெற்று அதனால் மாறாமல் விளைந்த பக்தியோகங்களால் சப்தாதி விஷயங்களில் விருப்பம் தொலைந்து அஹங்காரமற்றுப் புகழ்பெற்ற முனிவர்கள் தமது மனத்தில் எந்த ஆத்ம தத்வத்தை உபாஸிப்பார்களோ, அப்படிப்பட்ட பரவஸ்து நீயே என்றறிந்தோம். வாராய் பகவானே! உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றி ஸ்வரூபத்திற்கு இணங்காதவைகளும் வருந்தி அனுஷ்டிக்கத் தக்கவைகளுமான மற்ற உபாயங்களையெல்லாம் துறந்து வல்லராயிருப்பவர் அனைவராலும் பாடத் தகுந்ததும் பரிசுத்தமுமான புகழ் அமைந்ததுமான உன்னுடைய கதையின் ரஸத்தை அறிந்தவர்கள் உன்னுடைய அனுக்ரஹத்தினால் விளைவதாகிய மேலான மோக்ஷத்தையும் ஒரு பொருளாக நினைக்கமாட்டார்கள். உன்னுடைய புருவநெரிப்புக்களால் விளைபவைகளும் பயத்திற்கிடமாயிருப்பவைகளுமாகிய மற்ற ஸ்வர்க்காதி ஸம்பத்துக்களை அவர்கள் விரும்பமாட்டார்களென்பதில் ஸந்தேஹம் உண்டோ? இப்படியிருக்க, வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய உன்னை ஸாக்ஷாத்கரித்த நாங்கள் மற்றொன்றை விரும்புவதற்கு ப்ரஸ்கதி உண்டோ! பகவானே! எங்கள் மனம் உன்னுடைய பாதாரவிந்தங்களில் மதுகரம்போல் (வண்டுபோல்) களிப்புற்றிருக்குமாயின் எங்களுடைய வாய்மொழிகள் துளஸியைப் போல் உன்னுடைய பாதார விந்தங்களில் படிந்து அவற்றிற்கு மேன்மையை விளைப்பவைகளாயிருக்குமாயின் (உன் பாதாரவிந்தங்களைத் துதிசெய்யுமாயின்), எங்கள் காதுகளும் உன் குண கணங்களால் நிறைந்திருக்குமாயின், எங்கள் பாபங்களுக்குத் தகுந்தபடி எங்களுக்கு எப்படிப்பட்ட நீசயோனிகளில் ஜன்மம் உண்டாயினும் உண்டாகுமாக. அதைப்பற்றி எங்களுக்கு விசாரம் இல்லை. எங்கள் மனது வாக்கு முதலிய இந்த்ரியங்களெல்லாம் உன்னிடத்தில் படிந்து வேறு விஷயங்களில் செல்லாதிருக்குமாயின், நீசஜாதிகளில் நேரிடும் பிறவியைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோமல்லோம். ஸமஸ்த வேதாந்தங்களாலும் வேதங்களாலும் மற்ற ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலும் அறியத் தகுந்தவனே! சுத்தஸத்வமயமான எந்த உருவத்தை இப்பொழுது எங்களுக்கு விளங்கக் காட்டினையோ அந்த உருவத்தைக் கண்டதனால், ஜகதீசனே! எமது நேத்ரங்கள், மிகவும் ஸுகத்தை அடைந்தன. புத்தி ஸ்வாதீனமாயிருக்கப்பெறாத குத்ஸித யோகிகளால் அறிய முடியாத எந்த பகவானை நாங்கள் இங்ஙனம் காணப் பெற்றோம். அப்படிப்பட்ட பரமபுருஷனாகிய உனக்கு இதோ நமஸ்காரம் செய்கின்றோம்.
பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.