"லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்"
“குரு” என்கிற பதத்தில் “கு” என்கிற அக்ஷரம் அக்ஞானம் என்கிற இருளைக் குறிக்கிறது. “ரு” என்கிற அக்ஷரம் அதைப் போக்குவதைச் சொல்லுகிறது. குரு அல்லது ஆசார்யன் என்கிற பதத்திற்கு அர்த்தம் அக்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுப்பவர் என்பதாகும். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் முதல் ஆசார்யனான ஸ்ரீமந்நாராயணன் பெரிய பிராட்டியான ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு உபதேசிக்க, பின்பு ஸ்ரீவிஷ்வக்சேனர் முதலான ஆசார்யர்கள் அதைத் தொடர்ந்தனர். குருபரம்பரை என்பது ஒரு நீண்ட தொடர் சங்கிலி. அந்த ஆசார்யர்களின் வழியிலே வந்து, பரம்பொருளைத் தேடி அலைந்து, எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெற்று, “விசிஷ்டாத்வைதம்” என்கிற சித்தாந்தத்தை ஸ்தாபித்து, அகிலம் முழுவதும் போற்றுகின்ற ஆசார்யர் ஆனவர் ஸ்ரீபகவத் இராமாநுஜர். 12,000 சீடர்கள், 700 துறவிகள், கோடிக்கணக்கான அடியார்களைக் கொண்டவராக 120 ஆண்டுகள் இந்த பூவுலகத்தில் வாழ்ந்து தானே ஒரு நல்ல சிஷ்யனாகவும், பின்பு திறமையான குருவாகவும், இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே என்கிற சமத்துவவாதியாகவும், திருக்கோயில் விவகாரங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்து சிறந்த நிர்வாக அதிகாரியாகவும் பன்முகங்களைக் காட்டியவர் ஸ்ரீ இராமாநுஜர். அவரைப் பின்பற்றி அவரிடம் சிஷ்யனானவர்களில் அதிமுக்கியமாக குறிப்பிடப்படுபவர். கூரேசர் என்கிற கூரத்தாழ்வான். ஒரு சன்யாசிக்கு முக்கியமானவை தண்டும், பவித்ரமும். ஸ்ரீராமாநுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் “திருமந்திரம்”, “த்வயம்” இரண்டுக்குமான இரஹஸ்யார்த்தங்களை உபதேசமாகப் பெறச் சென்றபோது, “தண்டும், பவித்ரமும்” மட்டும் தாங்கி வர வேண்டும்” என்று நம்பிகள் கூற, தனது சிஷ்யர்களான முதலியாண்டானையும், கூரேசரையும் தன்னுடன் அழைத்துச் சென்றாராம் இராமாநுஜர். “உம்மைத் தனியாகத்தானே வரச் சொன்னோம்” என்று நம்பிகள் கேட்ட போது, “ஸ்ரீ இராமாநுஜர் பணிவுடன், “தண்டும் பவித்ரமும் தாங்கி வரச் சொன்னீர்கள். எனக்கு முதலியாண்டான் தண்டு, கூரேசர் பவித்ரம்” என்று மொழிந்தாராம். ஆசார்யரின் மனதில் அத்தனை ஆழமாகப் பதிந்துபோன அந்த இரு சிஷ்யர்களில் இராமாநுஜருக்கும், கூரத்தாழ்வாருக்கும் இருந்த குரு, சிஷ்ய அநுபந்தத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
காஞ்சியை அடுத்த கூரம் என்கிற ஊரில் வாழ்ந்த பெரும் செல்வந்தரின் புதல்வர் கூரேசன். திருமறு மார்பன் என்பது அவருடைய இயற்பெயர். அவர் செய்து வந்த அன்னதானம் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. அன்னதானத்திற்காகப் பொழுது புலரும் முன்பாகவேத் திறக்கப்படும் அவரது மாளிகையின் கதவுகள் இரவு ஸ்ரீவரதராஜப் பெருமாளின் திருக்கோவிலின் கதவுகள் மூடிய பிறகே அடைக்கப்படும் “அடையா நெடுங்கதவு” என்று அவரது இல்லத்தைச் சொல்லுவார்கள். “பசி” என்று வந்தவர்கள் தங்கள் “பசி” ஆறாமல் அவரது இல்லத்திலிருந்து போனதே இல்லை. ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் கூரேசர் செய்து வரும் அன்னதான கைங்கர்யத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்ட பெருந்தேவித்தாயார் கூரேசரைக் காண விரும்பினராம். நம்பிகளும் கூரேசரின் மாளிகைக்குச் சென்று இந்த விவரத்தைக் கூற, இதைக் கேட்ட கூரேசர் திகைத்து போனாராம். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் தரிசனம் கிட்டாதா என இந்திரன் முதலான தேவர்கள் தவமிருக்க, அந்த ஸ்ரீமகள் என்னைக் காண வருவதா? அப்படியானால் அந்த திருமகளைவிடச் செல்வந்தன் என்று பறைசாற்றும் படி நான் நடந்து கொண்டு விட்டேனா? என்று நொந்தவராய் தனது பொன், பொருள், வீடு, வாசல் அனைத்தையும் துறந்து விட்டு சாதாரண உடையுடன் மனைவியுடன் புறப்பட்டு காஞ்சிக்கு வந்து ஆசாரியரான ஸ்ரீஇராமாநுஜரிடம் ஆச்ரயித்து அவரிடம் சிஷ்யரானார். அவர்களுக்கு முறைப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து, தனது பிரதம சிஷ்யர்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார் இராமாநுஜர்.
கூரத்தாழ்வான் வீதிகளில் எம்பெருமானின் நாம சங்கீர்த்தனத்தைச் செய்து கொண்டு, தனது ஆசார்யரைப் போலவே வீடுகளில் “பிக்ஷை” ஏற்றுத் தான் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் விடாது மழை பெய்ததால் பிக்ஷைக்கும் போக முடியவில்லை . தம்பதிகள் இருவரும் பட்டினியாகவே படுத்துக் கொண்டனர்.
இரவு அரங்கனின் திருக்கோவிலில் தளிகைக்கான மணியோசை கேட்டபோது கூரேசரின் துணைவியார், “அரங்கநாதப் பெருமானே! உமது அடியார் இங்கு பசியுடன் இருக்கும்போது நீ மட்டும் நைவேத்யம் ஏற்கலாமா?” என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாளாம். உடனே ஸ்ரீரங்கநாதர் அசரீரியாக அர்ச்சகரிடம், கூரேசனுக்குக் கோயில் பிரசாதங்களைக் கொண்டு கொடுக்குமாறு கூறிமறைந்தாராம். அந்த பெரு மழையில் கூரேசரின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அண்டா, அண்டாவாகப் பிரசாதங்களைக் கொண்டு அர்ச்சகர் இறக்க கூரேசர் திகைத்துப் போனாராம். “இது பகவான் உத்திரவு” என்று வந்தவர் சொல்ல, கூரேசர் தனது மனைவியிடம், “நீ ஏதாவது பெருமாளைக் கேட்டாயா?” என்று கேட்க, அவள் தான் மனதில் நினைத்ததைச் சொன்னாளாம். “இனி இப்படி பகவானைக் குறை சொல்லாதே. நம்மையெல்லாம் படைத்து இந்த பூலோகத்துக்கு அனுப்பியவருக்கு நமக்கு எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாதா? ஈ, எறும்புக்கும், புழு, பூச்சிக்கும் உணவளிக்கும் எம்பெருமான் நம்மை மறந்து விடுவாரா?” என்று கடிந்து கொண்டு தங்கள் இருவருக்கும் வேண்டிய பிரசாதங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியைத் திருப்பி அனுப்பி விட்டாராம்.
ஆசார்யர் ஆளவந்தாரின் கட்டளைப்படி “ஸ்ரீபாஷ்ய உரை” எழுத முற்பட்டாராம் இராமாநுஜர். உபநிஷத்துகளின் அர்த்த விசேஷங்களை விவரிக்கும் ஒரு நூல் காஷ்மீர மன்னரிடம் இருப்பதை கேள்விப்பட்ட உடையவர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் காஷ்மீரத்துக்குப் பயணமானார். அவருக்கு உதவியாக இருக்க கூரேசரும் சென்றார். ஆயினும் அந்த மன்னரின் சபையில் இருந்த வடதேச பண்டிதர்களுக்கு அந்தப் புத்தகத்தை மன்னர் இராமாநுஜருக்குத் தருவதில் விருப்பமில்லை. ஆகவே அவர் அறியாதபோது அதைக் களவாடிச் சென்று விட்டனர். நடந்ததை அறிந்து இராமாநுஜர் மனம் வருந்தியபோது, அருகிலிருந்த சிஷ்யரான கூரேசர் தனது குருநாதரின் கவலையைப் போக்கும் வண்ணமாக, “ஆசார்யரே! அதிகப் பிரசங்கித்தனமானால் மன்னிக்க வேண்டும். நான் அந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடித்து விட்டேன். உங்களுக்கு உரை எழுதுகின்ற சமயத்தில் எந்த சந்தேகங்கள் வந்தாலும் அதற்கு அந்த நூலில் இருக்கும் தீர்வை நான் உரைப்பேன்” என்று தன்னடக்கத்தோடு பேசிய போது இராமாநுஜர் அவரது மேதா விலாசத்தையும், ஒரு சீடருக்குண்டான தன்னடக்கத்துடன் அவர் இருப்பதையும் பார்த்துப் பிரமிப்பும், சந்தோஷமும் ஒரு சேர அடைந்தாராம். “நீரல்லவோ எனக்கு உண்மையான சிஷ்யன்!” என்றுகூரேசரை அணைத்து ஆசிர்வதித்தாராம். குருவின் ஆதங்கத்தைத் தீர்ப்பதுதானே ஒரு சிஷ்யரின் முதல் கடமை.
ஸ்ரீஇராமாநுஜர் அன்னை ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருவாயிலேயே “பாஷ்யகாரர்” என்கிற விருதினைப் பெற்றுப் பல திவ்ய தேசங்களையும் தரிசித்துக் கொண்டுத் தென்னகம் திரும்பினார். வைணவமதம் இப்படிப் பெருகுவது கண்டுச் சோழ மன்னர்களுள் ஒருவனான குலோத்துங்கன் சினம் கொண்டான். தனது அமைச்சர்களுள் ஒருவனான நாலூரான் என்பவனின் துர்வார்த்தைகளால் கவரப்பட்டு, “இப்படியே விட்டால் சைவ மதம் நசிந்து விடும். ஆகவே இராமாநுஜரை சைவமே உயர்ந்தது என்று கையெழுத்து இடச் சொல்லி வற்புறுத்த வேண்டும்; மறுத்தால் இராமாநுஜரைக் கைது செய்து ராஜசபைக்கு கொண்டு வரும்படி” ஆணையிட்டான். உடனே காவலர்கள் திருவரங்கத்திற்கு விரைந்தனர். அப்போது இராமாநுஜர் ஸ்நானம் செய்ய காவேரிக் கரைக்குப் போயிருந்தார். “இராமாநுஜர் எங்கே! கூப்பிடுங்கள் அவரை” என்று காவலர்கள் கேட்டபோது பணியாள் கூரத்தாழ்வாரிடம் சென்று ரகசியமாக அவர்கள் வந்திருக்கும் நோக்கத்தை உரைத்தான். அரச கோபம் எந்த அளவிற்குப் போகும் என்பதை உணர்ந்திருந்த கூரேசர் நொடியில் காஷாயத்தையும், திரிதண்டத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் வந்து “நான் தான் இராமாநுஜர். எதற்காக என்னைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்க, “இது அரச கட்டளை. எதுவும் பேசாமல் எங்களுடன் வாரும்” என்று அவரைக் கையோடு அழைத்துச் சென்றனர்.
கூரத்தாழ்வாரை இராமாநுஜர் என்றெண்ணிய அரசன், “சிவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வ மில்லை” என்று எழுதிக் கையெழுத்திடும்” எனக் கட்டளைப் பிறப்பித்தான். “ஸ்ரீமந்நாராயணன் மூவுலகங்களையும் அளந்தபோது அவரது திருப்பாதங்களைப் பிரம்ம தேவர் ஸத்ய லோகத்தில் கங்கை நீரால் அபிஷேகம் செய்தார். அந்த கங்கையைத் தனது தலையில் தாங்கிக் கொண்ட சிவன் எப்படி மேம்பட்டவராகி விட முடியும்” என்று கூரேசர் துணிவுடன் கேட்க, “சிவ அபராதம் செய்கின்ற இவனது விழிகளைப் பிடுங்கி எறியுங்கள்” என்று கோபத்துடன் உத்தரவிட்டான் அரசன். கூரேசரை அழைத்துச் செல்ல வந்த சேவகர்களைக் கண்ட கூரத்தாழ்வார், சீறி எழுந்தார். “உன்னைப் போன்ற பஞ்சமகா பாதகனைப் பார்த்த இந்த ஊனக் கண்களை நீயே வைத்துக் கொள்” என்றுத் தன்னுடைய கூரிய நகங்களால் தனது இருகண்களையும் பிடுங்கி மன்னனை நோக்கி வீசினார். என்னே அவரது மனவலிமை! தனது ஆசார்யனைக் காப்பாற்றத் தனது விழிகளையே இழந்த அவரது ஆசார்ய பக்தியை எப்படிப் போற்றுவது?
இது ஏதும் அறியாத இராமாநுஜர் நீராடிவிட்டு மடத்துக்குத் திரும்பிய பின் விவரம் அறிந்தார். “கூரேசன் அவசரப்பட்டு விட்டானே. அவனை அரச தண்டனைக்கு ஆளாக்கிவிட்டு நான் ஒளிய வேண்டுமா? சிஷ்யனைப் பரிதவிக்க விட்ட நானும் ஒரு ஆசார்யனா?” என்று புலம்ப அங்கே இருந்தவர்கள்! இப்போது வாதாடவோ, வேதனைப் படவோ நேரமில்லை. கூரேசரின் தியாகம் வீணாகக் கூடாது” என்று கெஞ்ச வேறு வழியின்றி வெள்ளாடை தரித்து சீடர்களுடன் மேற்கு நோக்கிச் சென்றார்.
மேல்கோட்டையிலும், மைசூரிலும் தனது திருப்பணிகளையெல்லாம் வெற்றிகரமாக முடித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்பினார் இராமாநுஜர் கூரத்தாழ்வாரைக் கண்டு மனம் வெதும்பி, துக்கம் மேலிட அவரைத் தழுவினார். “கூரேசரே! காஞ்சியில் பேரருளாளனான ஸ்ரீவரத ராஜப்பெருமாள் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரத்தை அருளுபவர். நீர் எமக்காக அவரைத்தரிசித்து உமது கண் பார்வையை வரமாக கேளும். உம்மைக் காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுகிறது” என்று வற்புறுத்தினார். கூரேசரும் தனது குருநாதரின் வேண்டுகோளின்படி காஞ்சிக்கு வந்து ஸ்ரீவரதராஜரைத்தரிசித்து “வரதராஜ ஸ்தவம்” என்கிற துதியைப் பாடினார். எம்பெருமான் அவர் முன்பு பிரத்தட்சயமாகி வேண்டும் வரம் என்னவென்று கேட்க “யான் பெற்ற பேற்றை நாலூரானும் பெற்று நல்ல கதி அடைய வேண்டும்” என்று யாசித்தாராம். எத்தனை பெருந்தன்மை அவருக்கு? தன்னுடைய விழிகள் போகக் காரணமாயிருந்த நாலூரானுக்கும் மோட்சமளிக்க வேண்டும் என்று வரம் கேட்டாரே, இதைக் கண்டு ஆசார்யர் இராமாநுஜர் புளகாங்கிதமடைந்தாராம்.
இராமாநுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவதரித்தவர் கூரேசர். மிகப்பெரிய தனவந்தராகப்பிறந்து, அன்னதான கைங்கர்யத்தில் ஈடுபட்டு, பின்னால் அனைத்தையும் துறந்து, ஸ்ரீ இராமாநுஜரின் மகிமையால் கவரப்பட்டு, தன்னை விட சிறியவர் ஆனாலும் அவரை ஆசார்யராகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு, “இராமாநுஜரே கதி” என்று வாழ்ந்தவர் கூரத்தாழ்வார். ஒருநாள் கூரேசர் நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதர் முன்பு நின்று கொண்டு பிரார்த்தித்தாராம். “யாது வேண்டும்?” என்று பெருமாள் கேட்க, “கேட்டால் நிச்சயம் கிடைக்குமா?” என்று பதில் கேள்வி கேட்டாராம் கூரேசர். “கட்டாயம் அளிக்கிறேன். உன் இராமாநுஜன் மேல் ஆணை” என்றாராம் பெருமான். “அவ்வாறானால் இப்போதே எனக்குப் பரமபதம் வேண்டும்”, என்று ஆழ்வான் கேட்க, “சரி, தந்துவிட்டேன்”, என்று கூறி மறைந்தார் நம்பெருமாள். செய்தியறிந்த இராமாநுஜர் திடுக்கிட்டார். பரிதவித்தார். “இது நியாயமா? என்னை விட்டு விலக வேண்டும் என்று ஏன் நிச்சயித்தீர்” என்று புலம்ப, அதற்கு கூரேசர், “தேவரீர் வைகுந்தம் வரும் போது தங்களை வரவேற்க சிஷ்யனான நான் முன்னால் போய் சித்தமாக இருக்க வேண்டாமா?” என்று பதிலுரைக்க வாயடைத்துப் போனாராம். ஆசார்யரான இராமாநுஜர் அன்றிரவே கூரேசர் பரமபதமடைய அவருடைய அந்திமக்கிரியைகளைச் சிறப்பாக நடத்தி வைத்தார் இராமாநுஜர்.
குரு, சிஷ்ய அனுபந்தத்திற்கு இவர்கள் இருவரையும் விட வேறு சான்று வேண்டுமா?
“சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பாஷ்யத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நிலை நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கும் முக்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையிலத்தத்திங்கு தித்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே.”
நன்றி - சப்தகிரி ஜனவரி 2017