ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 117

ஐந்தாவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(மான் சரீரத்தைத் துறந்த பரதன் ப்ராஹ்மண குமாரனாய்ப் பிறத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு ஆங்கிரஸ கோத்திரத்தில் பிறந்தவர்களில் சிறந்தவரும் சமம், தமம், தவம், வேதங்களை ஓதுகை, ஓதுவிக்கை, தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் ஸந்தோஷமுற்றிருக்கை, ஸுக துக்காதிகளைப் பொறுத்திருக்கை, வணக்கம், தானம், சாஸ்த்ரஜ்ஞானம், பிறரிடத்தில் தோஷங்களை ஏறிடாமை, ஆத்மஜ்ஞானம், ப்ரஹ்மாநந்தத்தை அனுபவிக்கையாகிற பக்தியோகம் இவையெல்லாம் அமைந்தவருமான ஓர் அந்தணருக்கு மூத்த பார்யையிடத்தில் கேள்வி (அறிவு), சீலம் (ஒழுக்கம்), ஆசாரம் (நன்னடத்தை), உருவம் (உடல் அழகு, ப்ரகாசம்), ஔதார்யம் (வள்ளல் தன்மை) முதலிய குணங்களில் தன்னோடொத்த ஒன்பது புதல்வர்களும் இளைய பார்யையிடத்தில் ஓர் பெண்ணும் ஓர் பிள்ளையும் பிறந்தார்கள்.

இளையவளுக்குப் பிறந்த பிள்ளையே பாகவதச்ரேஷ்டனும் ராஜரிஷிகளில் சிறந்தவனும் மான் சரீரத்தை அடைந்து அதைத் துறந்தவனுமாகிய பரதனென்றும், அவனுக்கு அதுவே சரம (இறுதி) சரீரமென்றும் அவனே அங்கனம் ப்ராஹ்மணனாய்ப் பிறந்தானென்றும் அத்தோடு மோக்ஷம் பெற்றானென்றும் சொல்லுகிறார்கள். அந்த ஜன்மத்திலும் பகவானுடைய அனுக்ரஹத்தினால் பூர்வ ஜன்மங்களின் பரம்பரையைப்பற்றின நினைவு மாறப்பெறாமல் பந்துக்களோடு (உறவினர்களோடு) ஸஹவாஸம் செய்தால் (சேர்ந்து வசித்தால்) என்ன கெடுதி நேரிடுமோ என்று பயந்து கேள்வி, நினைவு குணங்களைச் சொல்லுகை இவற்றில் ஏதேனுமொன்று செய்யினும் கர்ம பந்தங்களையெல்லாம் போக்கும் திறமையமைந்த அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களையே மனத்தில் த்யானித்துக்கொண்டு உலகத்தவர் தன்னைப் பித்தம் (பைத்தியம்) பிடித்தவனாகவும் மூடனாகவும், குருடனாகவும், செவிடனாகவும் நினைக்கும்படி தன்னிடத்தில் அத்தன்மைகளை ஏறிட்டுக் கொண்டிருந்தான். அந்த ஆங்கிரஸராகிய அந்தணர் தன் பிள்ளை அங்கனம் பித்தம் பிடித்தாற் போலிருப்பினும் புத்ர ஸ்நேஹத்தினால் மனம் தொடரப்பெற்று அவனுக்கு ஸமாவர்த்தனம் (ப்ரஹ்மசாரியாய் குருகுலத்தில் அங்கங்களுடன் கூடிய வேத அத்யயனம், வேதாந்த விசாரம் முதலிய கல்வி பயின்று முடித்து வீடு திரும்புதல்) வரையிலுள்ள ஸம்ஸ்காரங்களையெல்லாம் செய்ய முயன்று, உபநயனம் செய்து, அவனுக்குப் பூர்வ வாஸனையால் எல்லாம் தெரியுமாகையால் ஒன்றும் கற்பிக்க வேண்டிய அவச்யமில்லையாயினும் அதை அறியாமல் தகப்பன் பிள்ளைக்குக் கற்பிக்க வேண்டியது கடமையென்பதை நினைத்து, சௌசம்(தூய்மை), ஆசமனம் முதலிய கர்ம நியமங்களையெல்லாம் கற்பித்தார். அவனும் தந்தையின் நிர்ப்பந்தத்தை விடுவித்துக்கொள்ள விரும்பி அவரது ஸமீபத்திலேயே ஒன்றுக்கொன்று முரணான கார்யங்களைச் செய்து மூடன் போல் நடித்து வந்தான். அவர் அவனுக்கு வேதங்களை ஓதுவிக்க முயன்று வ்யாஹ்ருதி, ப்ரணவம், சிரஸ்ஸு என்னும் இவற்றோடு கூடி மூன்று அடிகளையுடைய காயத்ரியை வஸந்தம், க்ரீஷ்மம் ஆகிய நான்கு மாதங்கள் சொல்லிக்கொடுத்தும் அவனுக்கு அதை நன்றாய்க் கற்பிக்க முடியாதிருந்தார். ஸ்வரங்களும் எழுத்துக்களும் மாறாட்டமாகவே ஒன்று ஒன்றாக அவன் அதைச் சொன்னானன்றி எவ்வளவு கற்பித்தும் அதை அறியாதவன் போலவே இருந்தான். இங்கனம் பிள்ளையிடத்தில் பெரும் ப்ரீதியுடைய அவ்வந்தணர் ப்ரஹ்மசாரிக்கு வேண்டிய சௌசம், ஆசமனம் மற்றுமுள்ள நியமங்கள் குரு சுச்ரூஷை (பணிவிடை), அக்னி சுச்ரூஷை முதலிய இவையெல்லாம் ஜன்மாந்தர ஸம்ஸ்காரத்தினால் எல்லாம் உணர்ந்த அவனுக்கு வேண்டாதவையாயினும் அதை அறியாமல் பிள்ளைக்குத் தகப்பன் கற்பிக்க வேண்டுமென்னும் பிடிவாதத்தினால் அவனைச் சீர்திருத்த வேண்டுமென்று எவ்வளவு வருந்தி ப்ரயத்னப்பட்டும் தன் மனோரதம் நிறைவேறப் பெறாமலே, இல்லற வாழ்க்கையில் இழிந்து மரணத்தைப் பற்றின சிந்தையே இல்லாதிருக்கையில் மன ஆக்கமுடைய ம்ருத்யுவினால் அவ்வளவில் முடிக்கப்பட்டார். அவருடைய பார்யைகளில் இளையவள் தன் பெண்ணையும் பிள்ளையையும் மூத்தவளிடம் ஒப்புவித்துத் தான் அனுமரணம் செய்து (கணவனுடன் தானும் இறந்து) பதிலோகத்தை அடைந்தாள். 


கர்மங்களை அறிவிக்கிற வேதமார்க்கத்திலேயே முடிந்த மதியுடையவர்களும், வேதாந்த வித்யையில் செல்லாதவர்களுமாகிய அவருடைய பிள்ளைகள் ஒன்பதின்மரும் தந்தை மரணம் அடைந்த பின்பு அந்த பரதனுடைய மஹிமையை அறியாமல் இவன் ஜடனென்று (அறிவற்ற ஜடம் என்று) நினைத்து ப்ராதாவாகிய அவனுக்குக் கற்பிக்கையாகிற நிர்ப்பந்தத்தினின்று நீங்க விரும்பினார்கள்; அந்த ஜடபரதன் இரண்டு கால்களையுடைய பசுக்களாகிய ப்ராக்ருத ஜனங்களால் (ஸாதாரண மக்களால்) “அட பித்தா! மூடா! செவிடா!” என்று அழைக்கப்பெற்று அத்தன்மைகளுக்குரிய பேச்சுக்களைப் பேசிக்கொண்டு தான் செய்யவேண்டிய செயலற்றவனாயினும் பிறருடைய தூண்டுதலால் வெட்டிக்கு வேலை செய்வதும் கூலிக்கு வேலை செய்வதுமாயிருந்தான். வெட்டியாகவும் செய்தவேலைக்குக் கூலியாகவும் யாசிதமாகவும் தெய்வாதீனமாகவும் கிடைத்த அன்னாதிகளைப் பெற்று அவை அற்பமாயினும் வெகுவாயினும் ருசியாயிருப்பினும் ருசியற்றிருப்பினும் எதையும் பாராமல் தேஹ (உடல்) தாரணத்திற்காக (நிலைத்திருக்க) அவற்றைப் புசித்து (உண்டு) வந்தானன்றி இந்திரியங்களின் ப்ரீதிக்காக அவன் அவற்றைப் புசிக்கவில்லை. அவன் ஆத்ம ஸ்வரூபத்தை மறைப்பவைகளும் ஸுகதுக்கங்களுக்குக் காரணங்களுமான புண்ய பாப கர்மங்கள் அடியோடு தொலையப்பெற்றவன். 

நித்யஸித்தனும் ராகம் முதலிய தோஷங்கள் எவையுமின்றிப் பரிசுத்தனும் ஜ்ஞானாநந்த ஸ்வரூபனுமாகிய ஆத்மாவின் உண்மையை அறிந்து குளிர் வெய்யில் முதலியவற்றால் விளையும் ஸுகதுக்கங்களில் தேஹத்தில் சிறிதும் அபிமானம் உண்டாகப்பெறாதவன். அவன் குளிர் வெய்யில் காற்று மழை இவைகளில் வ்ருஷபம்போல் உடம்பை மூடாதிருப்பினும் அவனுடைய அவயவங்களெல்லாம் பருத்து உறுதியாகவேயிருந்தன. அவன் வெறும் தரையிலேயே படுப்பான்; உடம்புக்கு எண்ணெய் தேய்த்து அழுக்குப் போகும்படி ஸ்னானம் செய்தறியான். ஆகையால் அவனது சரீரம் அழுக்கேறியிருந்தது. ஆனதுபற்றி அவன் ப்ரஹ்ம தேஜஸ்ஸு வெளித்தோன்றாமல் அழுக்கடைந்த மஹாரத்னம் போன்று அரையில் (இடுப்பில்) ஒன்றுக்கும் வழங்காத கந்தல்துணியை உடுத்து மிகவும் அழுக்கேறின யஜ்ஞோபவீதம் உடையவனாய் அவன் மஹிமையை அறியாத மூடர்களால் கேவல ப்ராஹ்மணனென்றும் துர்ப்ராஹ்மணனென்றும் அவமதிக்கப் பெற்றுத் திரிந்துகொண்டிருந்தான். அவன் பிறரிடத்தில் ஆஹாரத்திற்காகக் கூலிவேலை செய்வது கண்டு அவனுடைய ப்ராதாக்களும் கூலி கொடுப்பதாகச் சொல்லி அவனைக் கழனி (வயல்) வேலையில் நியோகிக்க அவன் அதையும் செய்வான். ஆனால் மேடென்றும் பள்ளமென்றும் குறைவென்றும் நிறைவென்றும் அவன் அறியான். அவர்கள் நொய், பிண்ணாக்கு, தவிடு, கொள்ளு, காந்தல் முதலியவற்றைக் கொடுப்பினும் அவற்றை அம்ருதம்போல் புசிப்பான். விஷ்ணுராதனே! அந்த ஜடபரதனுடைய ஆச்சர்யமான ஒரு வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறேன் கேள்.

திருடர்களில் தலைமையுள்ள ஒரு சூத்ரன் தனக்குப் பிள்ளையில்லாமையால், “எனக்குப் பிள்ளை பிறந்தால் நரபலி கொடுக்கிறேன்” என்று பத்ரகாளியை வேண்டிக்கொண்டான். அப்பால் அவனுக்குப் பிள்ளை பிறக்கையில், அவன் தெய்வாதீனமாய்க் கிடைக்கும் நரபசுவைக் கொண்டு வாருங்களென்று தன் வேலைக்காரர்களுக்குச் சொல்ல, அவர்களும் இருள் மூடின ராத்ரியில் அதிலும் அர்த்த ராத்ர ஸமயத்தில் தெய்வாதீனமாய்ப் பசு கிடைக்கும் வழியைப்பற்றி வெகுதூரம் தேடிக்கொண்டு சென்றும் பசு அகப்படாமல் தெய்வச்செயலால் மஞ்சத்தின் மேல் வீராஸனத்தில் உட்கார்ந்து மான் பன்றி முதலியவை வரவிடாமல் கழனிகளைப் (வயல்களைப்) பாதுகாத்துக் கொண்டிருக்கும் ஆங்கிரஸ குமாரனாகிய ஜடபரதனைக் கண்டார்கள். அவன் லக்ஷணங்களெல்லாம் அமைந்திருப்பதைக் கண்டு அவர்கள் ஸந்தோஷத்தினால் முகம் மலரப்பெற்றுத் தமது பர்த்தாவின் (முதலாளி, ஸ்வாமி) கார்யம் நிறைவேறிற்று என்று நினைத்து அவனைக் கயிற்றால் கட்டிக் காளியின் கோயிலுக்குக் கொண்டுபோனார்கள். பிறகு அந்தத் திருடர்கள் அவனுக்கு விதிப்படி அபிஷேகம் செய்வித்துப் புதிய ஆடை உடுத்தி ஆபரணம், சந்தனம், பூமாலை, திலகம் முதலியவற்றால் அலங்கரித்துப் போஜனம் அளித்துத் தூபம், தீபம், மாலை, பொரி, தளிர்முளை, பழம் முதலிய உபஹாரங்களைக் கொண்டு பலி கொடுக்கும் விதிப்படி பாட்டு ஸ்தோத்ரம் ம்ருதங்கம் உடுக்கை முதலிய பெரிய கோஷத்துடன் அந்த நரபசுவைப் பத்ரகாளியின் முன்னே கொண்டுபோய் உட்காரவைத்தார்கள். அந்தச் சூத்ரராஜனுக்குப் புரோஹிதனாகிய ஒரு சூத்ரன் அந்நரபசுவின் ரக்தமாகிற மத்யத்தினால் (கள்ளால்) பத்ரகாளியை ஆராதிக்க முயன்று அக்காளி மந்த்ரத்தினால் மந்திரிக்கப்பட்டதும் கூரிய நுனியுடையதும் பயங்கரமாய் இருப்பதுமாகிய கத்தியை எடுத்துக்கொண்டான். ரஜோ குணமும், தமோகுணமுமே இயற்கையாகப் பெற்றுப் பணக்கொழுப்பாகிற தூசி படிந்து கர்வமுற்ற மனமுடையவரும் பகவானுடைய அம்சம் அமைந்த தபோவீரர்களான ப்ராஹ்மணர்களின் குலத்தைச் சிறிதும் பொருள் செய்யாமல் தவறான வழியில் இழிந்து மனம்போனபடி விளையாடுகின்றவரும் பரஹிம்ஸையிலேயே (பிறரை துன்பறுத்துவதிலேயே) ஆனந்தம் அடைபவருமாகிய அச்சூத்ரர்கள் பரப்ரஹ்மத்தோடு ஸாயுஜ்யத்தை அடைய ஸித்தமாயிருக்கின்றவனும் ப்ரஹ்ம ரிஷியாகிய ஆங்கிரஸருடைய புதல்வனும் ஸமஸ்த பூதங்களிடத்திலும் வைரமின்றி (விரோதம், வெறுப்பு இன்றி) நன்மனமுடையவனுமாகிய அந்த ஜடபரதனை வெட்ட முயன்றமையாகிற அதிபயங்கரமான கார்யத்தைக் கண்டு ஹிம்ஸையிலும் அங்கனம் வெட்டுவது நிஷித்தமாகையால் பத்ரகாளி பொறுக்க முடியாத ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் தஹிக்கப்பெற்றுத் (எரிக்கப்பட்டு) திடீரென்று உருவத்துடன் தோன்றினாள். அவள் பெருங்கோபாவேசத்தினால் புருவங்களை நெரித்துக்கொண்டு கோணலான கோரைப்பற்களாலும் சிவந்த கண்களின் கொடுமையாலும் பயங்கரமான முகமுடையவளாகி இந்த ஜகத்தையெல்லாம் வதிக்க முயன்றவள் போன்று பெரிய பரபரப்புடன் மஹத்தான அட்டஹாஸம் செய்து அவ்விடத்தினின்று கிளம்பி அதே கத்தியைப் பிடுங்கிக்கொண்டு பாபிஷ்டர்களும் கொழுத்தவர்களுமாகிய அச்சூத்ரர்களின் தலைகளையெல்லாம் அறுத்து அவர்களுடைய கழுத்தினின்று மிக்க உஷ்ணமாய்ப் பெருகும் ரக்தமாகிற மத்யத்தைத் தன் கூட்டத்தாருடன் பானம் செய்து அந்த மதத்தினால் மெய்மறந்து தன் கூட்டத்துடன் உறக்கப்பாடிக் கூத்தாடி அவர்கள் தலைகளாகிற பந்துகளைக் கொண்டு விளையாடினாள். இங்கனமே பெரியோர்களிடத்தில் அபராதப்படுவார்களாயின், அதெல்லாம் அவர்களுக்கே பலிக்கும். 

பரீக்ஷித்து மன்னவனே! தேஹத்தில் ஆத்மாபிமானமும் (இவ்வுடலே ஆத்மா என்ற தவறான எண்ணமும்) அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்தில் மமதையுமாகிற (தன்னுடையது என்கிற) உறுதியான ஹ்ருதய க்ரந்தியை (மனதின் முடிச்சை) அறுத்துக் கொண்டவர்களும் ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸ்நேஹம் நிறைந்த மனமுடையவர்களும் வைரமற்றவர்களும் (வெறுப்பு அற்றவர்களும்) மன ஆக்கமுடைய கால சக்ரத்தையும் மற்றும் அந்தந்த வஸ்துக்களையும் கொண்டு பகவானால் நேரே பாதுகாக்கப் பெற்றவர்களும் எவ்விதத்திலும் பயமில்லாத அந்த பகவானுடைய பாதமூலத்தையே சரணம் அடைந்தவர்களுமாகிய பரிசுத்தரான யோகிகள், தலையை அறுக்க வரினும் பரபரப்பின்றி நிர்ப்பயமாயிருக்கும் (பயமின்றி இருக்கும்) இது ஓர் ஆச்சர்யமன்று. 

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக