லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட ராமன் மெதுவாகச் சொன்னான்.
இலக்குவ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவை என்பது கருதினால் அது
விலக்குவ(து) அரிது. அது விளம்பல் வேண்டுமோ?
புலக்குறித்(து) ஒருபொருள் புகலக் கேட்டியால்.
இது கம்பர் பாட்டு. வால்மீகியும் இப்படியே சொல்லுகிறார்.
“நீ வெற்றி வீரன். பரதனுடைய பெருஞ்சேனையை நாசமாக்கித் தீர்ப்பாய். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு விஷயம் யோசிக்க வேண்டியது இருக்கிறது. அதைச் சொல்லுகிறேன், கேள்!” என்று ஆரம்பித்து, கோபத்தில் லக்ஷ்மணன் விஷயங்களைச் சரியாகக் காணவில்லை என்பதை விளக்கினான்.
“லக்ஷ்மணா! பரதனே நேரில் வருகிறான் என்கிறாய். அப்படியானால் நம்முடைய வில்லுக்கும் அம்புக்கும் கத்திக்கும் என்ன வேலை? தந்தையின் ஆணையை அழித்தும் பரதனைக் கொன்றும் ராஜ்யமும் பழியும் சம்பாதித்து நாம் என்ன பிரயோஜனத்தைப் பெறுவோம்? பந்து மித்திரர்களை அழித்து விட்டுச் சம்பாதிக்கும் சொத்தானது விஷம் கலந்த பணியாரத்தைப் போலாகும். என்னத்துக்காக ராஜ்யம் அல்லது தனம் சம்பாதிக்க விரும்புகிறோம்? யாருக்குச் சுகமும் சந்தோஷமும் தந்து அதனால் நாமும் சந்தோஷம் அடையலாம் என்று சம்பாதிக்கிறோமோ அவர்களை அழித்துவிட்டு அந்தப் பொருளை நாம் அடைவதில் என்ன பயன்? அதர்ம வழியில் சம்பாதிக்கும் ராஜ்யம் நமக்கு வேண்டாம், லக்ஷ்மணா! நீயும், பரதனும், சத்ருக்னனும் என்னுடன் இருந்து அனுபவிக்க முடியாத சுகம் எனக்கு வேண்டாம். இது நிச்சயம்.”
மேலும் சொன்னான்: “நான் சொல்வதைக் கவனித்துக் கேள். பரதன் இப்போது இங்கே ஏன் வருகிறான் என்பதை நான் அறிவேன். அவன் எள்ளளவும் தருமம் தவறாதவன். நம்மில் யாருக்காவது அவன் எப்போதாவது தீமை செய்ததுண்டா? ராஜ்யத்தை எனக்குக் கொடுத்து விடுவதற்காகவே அவன் வருகிறான். கைகேயியைக் கோபித்து, தந்தைக்கும் ஏதோ சொல்லிச் சமாதானப்படுத்திவிட்டு, என்னைத் திருப்பி அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறான் என்பது நிச்சயம். பரதனை நான் அறிவேன். நீ அவனைப் பற்றிக் கோபாவேசமாகப் பேசியதெல்லாம் அதருமம். அப்படிப் பேசலாகாது. ராஜ்யத்தைச் சம்பாதிக்கவா ஆசைப்படுகிறாய்? அப்படியானால் சொல். பரதன் வந்ததும் அவனுக்குச் சொல்லுகிறேன், ‘லக்ஷ்மணனுக்கு ராஜ்யம் வேண்டுமாம். அவனுக்குக் கொடுத்து விடு’ என்று. நான் இப்படிச் சொன்ன மாத்திரத்தில் பார், 'எடுத்துக் கொள்' என்று உனக்கு உடனே, தந்துவிடுவான், சந்தேகமில்லை” என்று சொல்லிச் சிரித்தான் ராமன்.
லக்ஷ்மணன் வெட்கத்தால் உடல் குறுகிப் போனான்.
“ஒரு வேளை நம்முடைய தந்தை சக்கரவர்த்தியே நம்மைப் பார்க்க வந்திருக்கலாம்” என்றான் லக்ஷ்மணன்.
இத்தனை சேனையும் ஆர்ப்பாட்டமும் யுத்தத்துக்குத்தான் இருக்கும் என்று முதலில் எண்ணினான். ராமன் சொன்னதைக் கேட்டதும், அது அசம்பாவிதம் என்கிற தீர்மானத்துக்கு உடனே வந்தான். மற்று என்ன காரணம் இருக்கக்கூடும் என்று யோசித்து ஒரு வேளை தசரதனே வந்திருக்கலாம், அவனுடன் இந்தச் சேனையும் பெரும் பரிவாரமும் வருவது சகஜமே என்று சமாதானம் பண்ணிக் கொண்டான்.
தான் பரதனைப் பற்றிப் பேசிய பேச்சுக்கள் தகாதவை என்று உணர்ந்து, வெட்கப்பட்டு இம்மாதிரித் தடுமாற்றமாகப் பேசினானோ என்றும் உரையாசிரியர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.
லக்ஷ்மணன் வெட்கப்பட்டுப் போனான் என்பதையறிந்த ராமன், “அப்படியுமிருக்கலாம்! வனவாசத்தில் கஷ்டப்படுகிறோமென்று எண்ணிச் சக்கரவர்த்தி நம்மையும் முக்கியமாக சீதையையும் ஊருக்கு அழைத்துப் போக வந்திருக்கலாம். ஆனால் மன்னனுடைய வெண்கொற்றக் குடையைக் காணவில்லையே? தந்தை வந்திருந்தால் அது இருக்குமே? எப்படியாயினும் சரி, நீ சாந்தமடைவாய்” என்றான்.
லக்ஷ்மணன், ராமசந்திரன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகே போய்க் கைகூப்பிய வண்ணம் நின்றான்.
*
சேனையைத் தொலைவில் நிறுத்திவிட்டு, புகை கிளம்பிய இடத்தைச் சரியாகப் பார்த்து வர பரதன் சில ஆட்களை அனுப்பினான். சற்று நேரம் கழித்து அவர்கள் சமாசாரம் கொண்டு வந்தார்கள். அதுவே பரத்வாஜர் குறிப்பிட்ட இடம். அங்கே காணப்படும் பர்ணசாலை ராமனுடைய பர்ணசாலை என்பது நிச்சயம் என்று தெரிந்தவுடன் பரதன் புறப்பட்டான்.
தன்மேல் வந்த பழியை நினைத்து நினைத்துப் பயந்து, இன்னது செய்ய வேண்டியது, இப்படிச் சொல்ல வேண்டியது என்று யோசித்துக் கொண்டே போனவன், ராமன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் எல்லாம் மறந்து விட்டான். புல் தரையில் உட்கார்ந்திருந்த ராமனைக் கண்டதும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அண்ணன் இருந்த இடம் நோக்கி ஓடினான்.
துக்கம் மேலிட்டுக் கண்களில் நீர் பெருக, ஒன்றும் பேச முடியாமல் “அண்ணா!” என்று கதறிக் கொண்டு ராமன் காலடியில் விழுந்தான். 'அண்ணா‘ என்ற ஒரு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொள்ள, விம்மி அழுதான். இதற்குள் சுமந்திரனும் குகனும் வந்து சேர்ந்தார்கள்.
ஜடையும் மரவுரியும் தரித்துத் தன் முன் கை கூப்பிய வண்ணம் தரையில் விழுந்து கிடந்த பரதனைப் பார்த்தான் ராமன். துக்கத்தாலும் உபவாசத்தாலும் தேகம் மெலிந்து, நிறம் மாறிப் போய்க் கிடந்த பரதனை வாரியணைத்து, உச்சி மோந்து மடியின் மேல் உட்கார வைத்து, “குழந்தாய், தந்தை சக்கரவர்த்தியைத் தனியாக விட்டுவிட்டு நீ இப்படி வெகு தூரம் வனத்துக்கு வந்து விடலாமா? ஏன் இந்த மாதிரி இளைத்துப் போயிருக்கிறாய்?” என்று ராமன் கேட்டான்.
பரதன் பேச்சிழந்து கிடந்தான். பரதனுடைய நிலையைப் பார்த்து ராமன் மெதுவாக, ராஜ்யத்தின் யோக க்ஷேமத்தைப் பற்றி வழக்கப்படி அரச குலத்தவர்கள் சந்திக்கும் சமயங்களில் கேட்பது போல் கேட்டான். கொஞ்ச நேரம் கழித்துச் சமாளித்துக்கொண்டு பரதன் பேசலானான்.
“ராஜ தர்மத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது, அண்ணா? சிம்மாசனம் ஏறி ராஜ்ய பரிபாலனம் செய்யவேண்டியவன் நீ இருக்க நான் எவ்வாறு அரசனாவேன்? அல்லது, அரசனுக்குரிய தருமத்தை அனுசரிப்பேன்? எனக்குரிய தருமம் உனக்கு அடிமை செய்வது. அது எனக்குப் பிராப்தமாகவில்லை. மூத்தவன் ராஜ்யப் பொறுப்பைத் தாங்க வேண்டியவன். இது ராஜகுலப் பொது தருமம். நம்முடைய குலத்திலும் இதுவே முறை. அயோத்தியைக்கு என்னுடன் வந்து, பட்டம் சூடிக்கொண்டு குலத்துக்கும் ஜனங்களுக்கும் மங்களம் அருள்வாய். மகாராஜாவான தந்தை அவர் செய்யவேண்டிய வேள்விகளையெல்லாம் செய்து முடித்து, புகழ் பெற்ற மகாவீரர், சுவர்க்க லோகம் புகுந்தார். நான் கேகய தேசத்திலிருக்கும் போதே நீங்கள் அயோத்தியை விட்டு வனம் சென்று விட்டீர்கள். அந்தப் பிரிவின் துக்கத்தைத் தாங்க மாட்டாமல் உயிர் நீத்தார். வருந்தாதே! எழுந்து நம் தந்தைக்குச் செய்யவேண்டிய கிரியைக் கடனைத் தீர்ப்பாயாக! நானும் சத்ருக்னனும் செய்தாயிற்று. அண்ணா! தந்தைக்கு மிகப் பிரியமாக வளர்ந்தாய். உன் ஞாபகமாகவே தந்தை உயிர் நீத்தார். நீ விட வேண்டிய எள்ளும் நீருமே அவருக்குச் சாந்தி தரும்” என்று கம்பீரமாகச் சொன்னான்.
கௌசல்யா தேவி, குகன், பரத்வாஜர் இவர்களிடம் பரதன் சொல்ல நேரிட்ட சமாதானங்கள்— அதாவது நடந்த அனர்த்தங்களில் தனக்கு ஒரு சம்பந்தமுமில்லை என்கிற சமாதானங்கள்- ராமனிடத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இருக்கவில்லை. துக்கத்தால் பீடிக்கப்பட்டு, தேகம் மெலிந்து, முகம் வாடி நின்ற அந்தப் பரதனைப் பார்த்ததே போதுமல்லவா? சமாதானங்களுக்கு அவசியமே இருக்கவில்லை. ராமனை அயோத்தியைக்கு அழைத்துப் போகிற விஷயம் ஒன்றே பரதனுடைய காரியமாக நின்றது. அதையே பேசினான். தன்னைப் பற்றிப் பேசவில்லை.
தந்தை இறந்தார் என்ற சொல்லைக் கேட்டதும் ராமன் கோடரியால் வெட்டப்பட்ட மரம்போல் கீழே விழுந்தான்.
நந்தா விளக்கனைய நாயகனே, நானிலத்தோர்
தந்தாய், தனியறத்தின் தாயே, தயா நிலையே!
எந்தாய், இகல்வேந்தர் ஏறே, இறந்தனையே
அந்தோ இனிவாய்மைக்(கு) ஆருளரே மற்றென்றான்.
ராஜகுமாரர்களும் சீதையும் சுமந்திரனுடன் ஆற்றுக்குச் சென்றார்கள். அங்கே ஸ்நானம் செய்து, கை நிறைய ஜலத்தை எடுத்துத் தந்தையைத் தியானித்து ஆற்றில் விட்டான். பிறகு வழக்கப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து விட்டு பர்ணசாலைக்கு வந்து ராஜகுமாரர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து நின்று தந்தையை நினைத்துப் பெருங் குரலில் அழுது துக்கம் தீர்த்துக் கொண்டார்கள்.
இவ்விடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பரதன் வந்து ராமனைப் பார்த்த கட்டத்தில் ராமன் பரதனுக்கு உபதேசித்ததாக ஒரு நீண்ட ராஜ தரும உபதேசம் வால்மீகி எழுதியிருக்கிறார். நம்முடைய இதிகாச புராணங்களில் இவ்வாறு ராஜநீதியும், தருமோபதேசமும் அடிக்கடி வரும். தற்காலத்து நூல்களில் ஆசிரியர்கள் முக்கியமாகக் கருதி வருவது நிகழ்ச்சி வேகமும் நாடகத்துக்குரிய வியப்பு, அதிர்ச்சி முதலிய லக்ஷணங்களும். பழைய நூல்களில் இந்த ரஸங்கள் வேண்டிய அளவு இருந்தாலும் கூடவே மக்களின் சீலத்தை வளர்க்கும் உபதேசங்களும் மத்தியில் தாராளமாகச் சேர்க்கப்பட்டிருக்கும்.
மேலும் இந்தக் கட்டத்தில் வால்மீகி ராமாயண அத்தியாயங்கள் கிரமம் தவறி முன்னும் பின்னுமாக அமைந்து விட்டிருக்கின்றனவென்று பழைய உரை ஆசிரியர்களே கண்டிருக்கிறார்கள். கம்பர் இதையெல்லாம் கவனித்துத் தற்கால ரீதியாகவே ஒழுங்காகப் பாடி விட்டிருக்கிறார். துளசிதாஸருடைய ராமாயணமோ இந்த ராம-பரதச் சந்திப்புக் கட்டத்தில் ஒரே பக்தி சாகரமாக அலைகள் மோதிப் பருவ காலக் கடலைப் போல் பொங்குகிறது. அதில் எந்தச் சிக்கலுக்கும் இடமே இல்லை.