“லக்ஷ்மணனும் சீதையும் பக்கத்திலிருக்க எனக்கு என்ன குறை?” என்று எண்ணினான் ராமன்.
மலையின் கம்பீரமும், வனத்தின் அழகும், பக்ஷிகளின் மதுரமான பாட்டும் விளையாட்டும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. ஊரையும் உறவினரையும் விட்டுப் பிரிந்த துக்கத்தை மறந்தான்.
சீதா, அதோ, பறவைகள் விளையாடுவதைப் பார்! மலைப் பாறைகளைப் பார்! அவற்றில் தாதுக்கள் நீலமும் மஞ்சளும் சிவப்புமாக எப்படி மின்னுகின்றன! வனத்தில் செடிகளையும் கொடிகளையும் பார். புஷ்பங்களைப் பார். நாம் என்னவோ எண்ணினோம், இந்த வனவாசம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! என்னைப் போன்ற பாக்கியவான் யார்! இந்த மகிழ்ச்சி ஒரு பக்கம், தந்தையின் ஆணையை நிறைவேற்றும் பெரிய லாபம் ஒரு பக்கம். தந்தைக்குச் செலுத்தவேண்டிய கடமையைச் செய்து தீர்ப்பதோடு தம்பி பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் மகிழ்ச்சியையும் அடைந்தேன்.
இவ்வாறு சொல்லிக் கொண்டு ராமன் தன் துக்கத்தை அகற்றியும், சீதைக்கு உற்சாகம் உண்டாக்கியும் பிரதிக்ஞையை நிறைவேற்றி வந்தான்.
மலையிலிருந்து சில சமயம் சீதையுடன் மந்தாகினி ஆற்றுக்குப் போவான். அங்கே இருவரும் ஸ்நானம் செய்வார்கள். நதியின் அழகை அநுபவிப்பார்கள். “மணல் குன்றுகளைப் பார்! அன்னங்களும் பறவைகளும் தாமரைக் கொடிகளிடையில் விளையாடுவதைப் பார்! ஆற்றின் அழகு உன் அழகைப் போலவே இருக்கிறது, காதலி!” என்பான் ராமன்.
“இந்த நதிக்கரை எவ்வளவு மனோகரமாக இருக்கிறது! மிருகங்கள் இறங்கி நீர் குடிக்கும் துறைகளில் ஜலம் சிவந்து எவ்வளவு அழகாக இருக்கிறது! இதற்குச் சமானம் குபேரனுடைய ஸௌகந்திக ஸரஸ்ஸும் இல்லை. அதோ, பார்! ரிஷிகள் நீராடுகிறார்கள். சிலர் சூரியனை உபாசித்து நிற்கிறார்கள். புஷ்பங்கள் மரக் கிளைகளினின்று நீரில் விழுவதைப் பார். அதோ, முத்துக்களை வாரி எறிவது போல் மந்தாகினி துள்ளிக் குதித்து விளையாடி வரும் அழகைப் பார்! பட்டண வாசத்தைவிட இந்த வனவாசம் எவ்வளவோ இன்பமாக இருக்கிறது. இது நம்முடைய பாக்கியம். ரிஷிகளும் சித்தர்களும் இங்கே நதியில் தினமும் நீராடுகிறார்கள். இந்தக் காட்சி நமக்கு நகரத்தில் கிடைக்குமா? இந்த மலையே நம்முடைய அயோத்தி. கூட்டம் கூட்டமாகப் பறக்கும் இந்தப் பக்ஷிகளும் வன விலங்குகளும் நம் பிரஜைகள். இந்த மந்தாகினியே நம்முடைய ஸரயூ நதி. லக்ஷ்மணனும் நீயும் என்னுடன் இருக்கும்போது வேறு என்னவேண்டும்? ஆற்றில் மிருகங்கள் ஒன்றையொன்று பார்த்துப் பயமின்றி நீர் குடித்து வருவதைப் பார்த்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. இந்த நதியில் நீராடி இங்கே கிழங்கும் பழங்களும் புசித்து உன்னுடன் காடும் மலையும் சுற்றி மகிழ்ச்சியடையும்போது நான் அயோத்தியையாவது ராஜ பதவியையாவது ஏன் நினைக்க வேண்டும்?”
இவ்வாறு சக்கரவர்த்தித் திருமகன் ஜானகியுடனும் தம்பி லக்ஷ்மணனுடனும் ஆற்றங்கரையிலும் மலையிலும் வனத்திலும் சஞ்சரித்துக் கொண்டு சந்தோஷமாகக் காலங் கழித்து வந்தான்.
*
மலைச் சாரலில் ஓர் இடத்தில் நிம்மதியாக உட்கார்ந்திருந்தார்கள்.
திடீர் என்று தூரத்தில் தூசி கிளம்பி ஆகாய மளாவி நின்றது. இத்துடன் பெரிய ஜன சமுத்திரத்தின் கம்பீரப் பேரொலியும் கேட்டது. பரதனுடைய சேனை காட்டில் பிரவேசித்ததின் காரணமாகக் காட்டுப் பிராணிகள் பயந்து இங்கு மங்கும் கூட்டமாக அலைந்து கொண்டிருந்ததையும் ராமன் பார்த்தான்.
லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னான் ராமன்.
“தம்பி, கேள்! ஏதோ பெரிய கோஷம் கேட்கிறது. யானைகளும் காட்டெருமைகளும், மான்களும் நாலா பக்கமும் ஓடுகின்றன. என்ன விஷயம் என்று நன்றாகப் பார்! யாராவது அரச குலத்தார் வேட்டையாட வந்திருக்கிறார்களா அல்லது சிங்கம், புலி இவற்றின் காரியமா என்று பார்த்துச் சொல்வாய்” என்றான்.
உடனே லக்ஷ்மணன் மிக உயர்ந்த ஒரு ஆச்சா மரத்தின் மேல் ஏறினான். நான்கு பக்கமும் நன்றாகப் பார்த்தான். வட திசையில் பெரியதொரு சதுரங்க சேனை வந்து கொண்டிருந்ததைக் கண்டான். மரத்தின் மேலிருந்தே ராமனுக்கு எச்சரிக்கை செய்தான்:
“அண்ணா! ஒரு பெருஞ்சேனை துவஜங்களைப் பறக்க விட்டுக் கொண்டு, தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட்படை எல்லாமாக வந்து கொண்டிருக்கிறது. அபாயம்! உடனே நெருப்பை அணைத்து விட்டு, சீதையை அழைத்துச் சென்று மலைக் குகையில் பத்திரமாக இருக்கச் செய்து விட்டு, கவசம் பூண்டு வில்லும் அம்பும் எடுத்து யுத்தத்துக்கு ஆயத்தமாவோம்!” என்றான்.
“அப்பனே, நன்றாகப் பார்த்துச் சொல். இந்தப் படை எந்த அரசனுடையது என்று தேர்க் கொடியைக் கவனித்துப் பார்!” என்றான் ராமன்.
அவ்வாறே பார்த்தான் லக்ஷ்மணன். பார்த்து விட்டு ஒரே கோபாவேசமாகி விட்டான்.
“அண்ணா! ராஜ்யத்தைப் பெற்றதோடு நிற்காமல் நம்மை எதிர்த்துக் கொல்லவும் வருகிறான் பரதன் தேரில் திருவாத்திக் கொடி காற்றில் ஆடுவது நன்றாகக் காணப்படுகிறது. இன்று கைகேயி மகன் என் கையில் அகப்பட்டு விட்டான். அவனை விடப்போவதில்லை. அற நெறியிலிருந்து விலகிய இவனைக் கொல்வதில் என்ன பாவம்? இந்தச் சேனையை இங்கிருந்து எதிர்க்கலாமா, அல்லது மலைமேல் ஏறி நின்று எதிர்ப்போமா? நமக்கு இவன் செய்த கொடுமைக்கு இன்று பழி வாங்கி விடலாம். நம்மைக் கொல்ல வரும் பகைவனைக் கொல்வதில் என்ன பாவம்? முதலில் இவனல்லவோ அதருமத்தில் இறங்குகிறான். அவனை எதிர்த்துக் கொல்வது தருமமேயாகும். இவனை வதம் செய்து விட்டுத் துராசையில் வீழ்ந்த இவன் தாயின் எண்ணத்தை இன்று முற்றிலும் அழித்துத் தீர்ப்போம். இந்த வனத்தில் ரத்த வெள்ளம் ஓடச் செய்யப் போகிறேன். யானை ஒடித்த பெரிய மரம் போல் இன்று பரதன் வீழ்வான். இந்தச் சேனையை நிர்மூலமாக்குவோம். இந்தக் காட்டிலுள்ள பிணம் தின்னும் மிருகங்களுக்கு நிறைய உணவு கொடுப்போம்.”
இவ்வாறு லக்ஷ்மணன் கோபத்தில் தன்னையும் மறந்து பேசினான்.