பிறகு பரத்வாஜரைத் தாய்மார்கள் மூவரும் வலம் செய்து வணங்கினார்கள். “இவர்களை எனக்கு அறிமுகப் படுத்துவாய்” என்று கேட்டார் ரிஷி.
பரதன் அவ்வாறே கோசலை, சுமித்திரை, கைகேயி இவர்களை ஒருவர் பின் ஒருவராகப் பெயர்கள் சொல்லி ரிஷியிடம் ஆசி பெறச் செய்தான்.
“இதோ, துக்கப்பட்டு, பட்டினி கிடந்து, இளைத்து நிற்கிறாள் மகாராஜாவின் பட்டமகிஷி கௌசல்யா தேவி. இந்திரனைப் பெற்ற அதிதிக்குச் சமானமான இவளோ, சக்கரவர்த்தித் திருமகனைப் பெற்றவள். வலது புறத்தில், கோசலையைத் தாங்கிக் கொண்டு, வாடிய புஷ்பங்கள் நிறைந்த கொடியைப் போல் துக்கப்பட்டு நிற்பவள் அரசனுடைய இரண்டாவது பட்டமகிஷி, லக்ஷ்மண சத்ருக்னர்களைப் பெற்ற பாக்யவதி. இதோ நிற்கிறாள் எங்களுடைய துக்கத்துக்கெல்லாம் காரணமான என் தாய், ஆர்ய வடிவம் கொண்ட ‘அனார்யை’ என்று கைகேயியைச் சுட்டிக் காட்டினான். அவளும் மற்றவர்களைப் போலவே ரிஷியை வலம் செய்து நமஸ்கரித்து விட்டு வெட்கம் படர்ந்த முகத்துடன் மகன் பரதன் பக்கத்தில் வந்து நின்றாள்.
அப்போது பரத்வாஜ ரிஷி பரதனுக்குச் சொன்னார்.
“தாயை அப்படிச் சொல்லாதே! உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தன” என்றார்.
தாய்மார்களை இனம் காட்டும் இந்த நிகழ்ச்சியைக் கம்பர் இடம் மாற்றி வெகு அழகாகக் குகப் படலத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். குகன் பணிவுடன் விசாரிக்க பரதன் ஒவ்வொருவராகச் சொல்லி அறிமுகப்படுத்துகிறான். பரத்வாஜ ரிஷி ஆசிரமத்தில் நடந்ததாக வால்மீகி சொல்லும் நிகழ்ச்சியைக் கவிக் கண்ணால் பார்த்து அதன் சரியான இடம் எங்கே என்று கண்டு கொண்டு அமைத்துத் தம் அசாதாரணத் திறமையோடு கம்பர் பாடியிருக்கிறார்.
அதை இந்த இடத்திலேயே எடுத்துச் சொல்லுவது குற்றமாகாது.
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற
கோசலையைத் தொழுதுநோக்கி,
வெற்றித்தார்க் குரிசில், இவர் யாரென்று
குகன்வினவ 'வேந்தர் வைகும்
முற்றத்தான் முதல்தேவி மூன்றுலகும்
ஈன்றானை முன்ஈன்றானைப்
பெற்றத்தால் பெரும்செல்வம் யான்பிறத்த
லால்துறந்த பெரியாள்' என்றான்.
“ராமன் என்கிற செல்வத்தைப் பெற்ற கோசலை, பரதன் என்று ஒரு மகன் நான் பிறந்ததால் அந்தச் செல்வத்தை இழந்தாள். அவளே இவள்” என்று கூறினான் பரதன்.
அறந்தானே என்கின்ற அயல் நின்றாள்
தனைநோக்கி, 'ஐயஅன்பின்
நிறைந்தாளை உரை’யென்ன ‘நெறிதிறம்பாத்
தன்மெய்யை நிற்பதாக்கி
இறந்தான் தன் இளந்தேவி யாவர்க்கும்
தொழுகுலமாம் இராமன்பின்பு
பிறந்தானும் உளன்என்னப் பிரியாதான்
தனைப்பயந்த பெரியாள்’ என்றான்.
“நான் அடையாத பாக்கியத்தை லக்ஷ்மணன் பெற்றான். அந்த உண்மைத் தம்பியின் தாய் இவள்.”
“படர்எலாம் படைத்தாளைப் பழிவளர்க்கும்
செவிலியைத்தன் பாழ்த்தபாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும்
உயிர்ப்பாரம் குறைந்துதேய
உடரெலாம் உயிரிலா எனத்தோன்றும்
உலகத்தே ஒருத்தி அன்றே
இடரிலா முகத்தாளை அறிந்திலையேல்
இந்நின்றாள் என்னைஈன்றாள்.”
வால்மீகி ராமாயணத்தில் இருப்பது போலவே கம்பருடைய சித்திரத்திலும் பரதன் கைகேயியைக் கடுமையான மொழிகளைச் சொல்லித்தான் அறிமுகப் படுத்துகிறான்.
*
பரதனும் பெரும் பரிவாரமும் பரத்வாஜர் சொன்ன வழியைப் பிடித்துச் சென்றார்கள். சித்திர கூட மலையும் தெரிந்தது. ஓர் இடத்தில் இலேசாகப் புகை கிளம்புவதையும் கண்டார்கள். அதுவே சக்கரவர்த்தித் திருமகன் ஆசிரமம் என்று ஊகித்துக் கொண்டார்கள். உடனே பரிவாரத்தில் பெரிய மகிழ்ச்சி கோஷம் கிளம்பிற்று. அனைவரையும் அங்கேயே நிறுத்திவிட்டு சுமந்திரன், வசிஷ்டர், பரதன் மூவர் மட்டுமே புகை தெரிந்த இடம் நோக்கிச் சென்றார்கள்.