37. பரத்வாஜ ஆசிரமம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பரதன் பரிவாரத்துடன் பரத்வாஜ ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். பிரயாகவனம் போய்ச் சேர்ந்ததும் சிறிது தூரத்தில் ரம்மியமான ஒரு சோலையும் அதன் மத்தியில் பர்ணசாலையும் இருக்கக் கண்டார்கள். அதுவே பரத்வாஜ ரிஷியின் ஆசிரமம் என்று அறிந்து பரதன் தன் பரிவாரக் கூட்டத்தை நிற்கச் சொல்லி விட்டு வசிஷ்டர் முதலிய சில முக்கியமான பெரியவர்களுடன் அடக்கமாகச் சென்றான். தன்னுடைய பட்டாடை, வில், அம்பு, கத்தி முதலிய க்ஷத்திரிய வேஷங்களைக் கழற்றி வைத்துவிட்டு வசிஷ்ட முனிவரை முன்னிட்டுக் கொண்டு காலால் நடந்து சென்றான். பிறகு மந்திரிகளையும் ஓர் இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டான். வசிஷ்டரை மட்டும் கூட அழைத்துச் சென்றான். வசிஷ்டரைக் கண்டதும் பரத்வாஜர் ஆசனத்திலிருந்து எழுந்தார். சிஷ்யர்களை ராஜகுமாரனுடைய பாதத்துக்கு ஜலம் கொண்டு வரச் சொல்லி வசிஷ்ட முனிவரை எதிர் கொண்டார். 

பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். அவரும் இவன் யார் என்பதை அறிந்து கொண்டார். ராஜகுமாரனுக்குச் செய்ய வேண்டிய உபசாரத்தை முறைப்படி செய்வித்து க்ஷேம சமாசாரம் விசாரித்தார். ஏற்கனவே தெரிந்த துயரமான விஷயமானபடியால் தசரதனைப் பற்றிக் கேட்கவில்லை.

*

நான் 'சக்கரவர்த்தித் திருமகன்' எழுதுவது வால்மீகி ராமாயணத்தின்படி. குகன் எப்படி பரதனுடைய பரிவாரத்தைக் கண்டு சந்தேகித்தானே அப்படியே பரத்வாஜ ரிஷியும் பரதனுடைய எண்ணத்தைச் சந்தேகித்துக் கேட்டதாக வால்மீகி இந்த இடத்தில் பாடியிருக்கிறார். துளசி ராமாயணத்தில் இப்படி இல்லை. துளசி ராமாயணம் முற்றிலும் பக்தி மயம். ரிஷிகளுக்குத் தெரியாத ஒரு விஷயமில்லை. ஆனபடியால் துளசி ராமாயணத்தில் பரதனைப் பற்றிப் பரத்வாஜருக்குச் சந்தேகம் எப்படியிருக்க முடியும்? ஆனால் கம்பர் பாடியிருப்பது வால்மீகி முனிவரைப் பின்பற்றியே இருக்கிறது. இந்தக் கட்டத்தில் மட்டிலுமல்ல, இன்னும் பல இடங்களிலும் நன்றாகக் காணப்படுகிறது. கம்பர் வால்மீகி ராமாயணத்தை மிகக் கவனமாகப் பின்பற்றியே தம்முடைய தனிச் செல்வமான கற்பனா சக்தியையும் உபயோகித்து அபார அழகுடன் தம் ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். ஏதும் மாற்றாமலே அநேக இடங்களில் சாமர்த்தியமாகச் சிக்கல்களைச் சரிப்படுத்தி விட்டிருக்கிறார். மாற்றிப் பாடியிருப்பது வெகு சில இடங்களிலேயே.


துளசி ராமாயணம் அப்படியில்லை. ஏராளமான மாறுதல்கள் செய்திருக்கிறார். தம் சொந்தச் சொத்தாகவே பாவித்துத் துளசிதாஸர் ராமனைப் பாடியிருக்கிறார். அது அவருடைய அபார பக்தியினால் உண்டான உரிமை.


கம்பர், பரத்வாஜ பரத சம்பாஷணையை வால்மீகி சொல்லியபடியே வைத்துக்கொண்டு ரிஷி சொன்னதைக் கேட்ட பரதன் பெரும் சினங்கொண்டு பதில் சொன்னதாக மிக அழகாகப் பாடியிருக்கிறார்.


எப்படியாயினும் பரத்வாஜ ரிஷி பரதனைச் சந்தேகப்பட்டுக் கேட்டது நமக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. குகன் கேட்டதில் தனியழகு பொதிந்து கிடக்கிறது. பரத்வாஜர் சந்தேகித்தது நியாயமாகத் தோன்றவில்லை. இதற்குச் சமாதானம், “அப்பனே, உன்னை நான் அறியாதவனா? உன்னுடைய குணத்தைத் திண்ணமாக்கி, விளக்கிக் காட்டி உன்னைப் புகழ் பெறச் செய்வதற்காகவே பரீக்ஷையாகக் கேட்டேன். பரிசுத்தமான எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்துவதற்காகவே கேட்டேன்” என்று என்று வால்மீகி ராமாயணத்தில் ரிஷி சொன்னதாகக் காணப்படுகிறது.


நம்முடைய காலத்தில் ரிஷிகளைப் பற்றி நாம் கொண்டுள்ள சித்திரம் வேறு; வால்மீகி காலத்தில் வேறு. எப்படி ஸ்ரீராமன் சாக்ஷாத் பகவானுடைய திருவவதாரமாயினும், வால்மீகி ராமாயணத்தில் ஒரு வீர புருஷனாகச் சித்திரிக்கப்படுகிறானோ, அப்படியே பரத்வாஜ ரிஷியும் அவர் ராமனிடம் வைத்த வாத்ஸல்யத்தினால் பரதனைச் சந்தேகித்ததாகச் சொல்லப்படுகிறது. "ராகவ ஸ்நேக பந்த"த்தால் ரிஷி இவ்வாறு கேட்டதாகவும் பிறகு பரதன் வருந்தியதைக் கண்டு சமாதானமாகச் சில மொழிகளைச் சொன்னதாகவும் வால்மீகி பாடியிருக்கிறார். வால்மீகி ராமாயணத்தில் எல்லாப் பாத்திரங்களும் அபூர்வ குணங்கொண்ட மானிடர்கள். தெய்விகத் தன்மை இளம் சூரியனைப் போல லேசாக வீசுகிறது, அவ்வளவே. மானிட இயல்பு அதிகம். பின்னால் வந்த துளசிதாஸர் காலத்தில் பக்தி ரசம் நடுப்பகல் போல் விளங்குகிறது. வேறு எதற்கும் இடமில்லாமல் பூரண ஒளி பெற்றுவிட்டது. கம்பருடைய சித்திரத்தில் பக்தி பிரதானமாகவே இருந்தாலும் வால்மீகி சித்திரத்தினுடைய மானிட வண்ணம் அழிந்து போகாமல் பக்தியைப் பின்னால் எழில் வீசும்படி வைத்து, மானிட சித்திரத்தை இன்னும் பேரழகு படும்படி செய்திருக்கிறார்.

*

பரதனைக் கண்டதும் பரத்வாஜர் க்ஷேம சமாசாரம் விசாரித்து விட்டு, “பரதனே, நீ ஏன் ராஜ காரியத்தை விட்டு விட்டு இங்கே வந்தாய்? உன் பொறுப்பு. அயோத்தியில் அல்லவா இருக்கிறது? எனக்குக் கொஞ்சம் சந்தேகம் தோன்றுகிறது. இளைய மனைவியின் பேச்சைக் கேட்டுத் தசரதன் ராமனைப் பதினான்கு வருஷம் காட்டில் வசிக்கும்படி ஆணையிட்டதனால் அவன் தன் தம்பியையும் மனைவியையும் அழைத்துச் சென்று வனத்திலிருக்கிறான். உன் ராஜ்ய பரிபாலனத்துக்கு இன்னும் கொஞ்சம் இடையூறு இருக்கிறதென்று எண்ணினாயா? அதை நீக்குவதற்காக ஏதாவது இன்னும் யோசனையா?” என்று கேட்டார்.


இந்த மொழிகள் முனிவர் வாயினின்று வர பரதன் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகிற்று. பேச்சு குளறிப் போயிற்று.


“ஐயோ, நான் செத்தேன்!” என்றான். “தாங்களே என்னைச் சந்தேகித்துவிட்டீர்களா? பகவானே வேண்டாம். என்னைப் பெற்றவள் நான் எங்கேயோ இருந்த சமயத்தில் எனக்குத் தெரியாமலும், என் சம்மதம் கொஞ்சமும் இல்லாமலும் செய்துவிட்டதை என் பேரில் சுமத்தலாகாது. எப்படியாவது ராமனுக்குச் சமாதானம் சொல்லி அயோத்திக்கு அழைத்துப் போய் அவனை அரசனாக்கி அவனுக்கு நான் ஆயுள் முழுதும் அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டுமென்றல்லவா வந்திருக்கிறேன்? ராமன் இருக்குமிடம் தங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவனைப் பிரார்த்தித்து அழைத்துப்போக வந்திருக்கிறேன். என்னை இப்படிச் சொல்லாதீர்!” என்று பரதன் அழுதான்.


அதன் மேல் பரத்வாஜர், “பரதனே, உன் உள்ளத்தின் பான்மை எனக்குத் தெரியும். ரகு வமிசத்தில் பிறந்த நீ வேறு எப்படியிருக்க முடியும்? ராமனிடத்தில் உனக்குள்ள பக்தி எப்போதும் உறுதியாக இருந்து உன் கீர்த்தி வளர்ந்து ஓங்குவதற்காகவே நான் இவ்வாறு கேட்டேன், வருத்தப்படவேண்டாம். சக்கரவர்த்தித் திருமகன் சித்திரகூட மலையில் இருந்து வருகிறான். இன்று இங்கே தங்கி நாளை மந்திரிகளுடன் அவ்விடம் போவாயாக. இந்த ஆசிரமத்தில் இன்று தங்குவதற்கு ஒப்புக்கொண்டு என்னை மகிழச் செய்வாய்!” என்றார்.


“சுவாமி, தாங்கள் எனக்குச் செய்த அர்க்கியம், பாத்யம் இவை போதாதா? எல்லா அதிதி பூஜையும் பெற்றுப் பெரிய விருந்தும் உண்ட மாதிரி அடியேன் திருப்தி யடைந்து விட்டேன்” என்றான் பரதன்.


வனத்தில் வசிக்கும் ஏழைத் தவசிக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று அரசகுமாரன் எண்ணுகிறான் என்பதை பரத்வாஜர் தெரிந்து கொண்டு புன்சிரிப்புச் சிரித்து, “அப்படியில்லை, உன் பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று சொல்லி, “உன் சேனை பரிவாரம் எல்லாரும் ஏன் தூரத்தில் நின்று விட்டார்கள்? ஏன் நீ அவர்களை அழைத்து வரவில்லை?” என்று கேட்டார்.


“பரிவாரங்களோடு ரிஷிகளுடைய ஆசிரமத்தின் அருகில் போகக்கூடாது என்கிற நியமப்படி அவ்வாறு செய்தேன். என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப் பெரிது. அது இங்கே வந்தால் உங்களுக்குப் பெரிய தொல்லையாகவிருக்கும்” என்றான் பரதன்.


“அப்படியில்லை. எல்லாரையும் வரச் சொல்லி உத்தரவிடுவாய்!” என்றார்.


அவ்வாறே பரதனும் தன் பரிவாரத்துக்குச் சொல்லியனுப்பினான்.


பரத்வாஜர் தம் ஹோம சாலைக்குச் சென்று மூன்று தரம் மந்திரத்தோடு நீர் அருந்தி முகத்தைத் துடைத்துக் கொண்டு, “ஏ விசுவகர்மாவே! ஏ, மயனே!” என்று தேவாசுர சிற்பிகளைக் கூவியழைத்தார். “பரதனுக்கும் அவன் பரிவாரத்துக்கும் நான் விருந்து செய்ய விரும்புகிறேன். அதற்கு வேண்டியனவெல்லாம் நடைபெற வேண்டும்” என்றார் பரத்வாஜர்.


யமன், வருணன், குபேரன், அக்னி முதலிய தேவர்களையும் வரவழைத்து, “உங்கள் உதவியைக் கொண்டு பரதனுக்கு நான் அதிதி பூஜை செய்ய விரும்புகிறேன்” என்றார்.


அற்புதமான நிகழ்ச்சி நடந்தது. முன் விசுவாமித்திரருக்கு வசிஷ்டர் செய்த விருந்து போல் பரத்வாஜரின் ஆசிரம வனத்தில் நடந்தது. ஆனால் அப்போது விசுவாமித்திரர் நடத்தியது போல் பரத்வாஜர் ஆசிரமத்தில் ஒரு விவகாரமும் கலகமும் நடைபெறவில்லை. எல்லாருக்கும் தகுந்த விடுதிகள், ஸ்னானாதி விஷயங்களுக்குச் சௌகரியங்கள், சந்தனம் புஷ்பம், அன்ன பானாதிகள், பணியார வகைகள், அப்ஸரஸு களின் நிருத்தியம், கந்தர்வ சங்கீதம் எல்லாம் நினைக்க முடியாத தெய்விக ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு எல்லாரும் மெய்ம்மறந்து அனுபவித்தார்கள். பரதனுடைய சேனையிலுள்ள படை வீரர்கள் மகிழ்ச்சி மயக்கத்தில் ‘இனி நாம் தண்டகாரண்யம் போக வேண்டியதில்லை, அயோத்திக்கும் திரும்பப் போவதில்லை, இங்கேயே இருந்து விடுவோம்’ என்று எண்ணினார்கள். பரத்வாஜருடைய விருந்து தினந்தோறும் நடக்கும் என்று எண்ணி விட்டார்கள்! கூத்தாட்டவையானது ஆட்டம் முடிந்ததும் மறைவது போல், காலையில் எல்லாம் மறைந்து போகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை!


எல்லையில்லாத சம்பத்தையடைந்த ஒரு மகாராஜாவுக்கும் அவன் பரிவாரத்துக்கும் தன் ராஜதானியில் நடத்தும் ஒரு பெரிய விருந்தைப் போல் பரத்வாஜர் வசித்த ஆசிரம வனத்தில் விடுதிகள், வாகனங்கள், பணியாட்கள் உள்பட எல்லாம் ஒரு கணத்தில் உண்டாகி அனைவரும் எல்லை மீறி அனுபவித்து மெய்ம்மறந்து தூங்கிவிட்டார்கள்.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை