36. குகனுடைய சந்தேகம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

நிஷாத மன்னன் குகன் பார்த்தான். கங்கை எதிர்க்கரையில் என்றும் காணாத கோலாகலம். ஒரு பெரும் படை வந்து நதிக்கரையில் தங்கியிருப்பதாகத் தெரிந்தது. பக்கத்தில் நின்ற தன் குலத்தார்களுக்கும் காட்டி, “இது யார், என்ன காரணம் பற்றி இங்கே பெருஞ்சேனை வந்து கங்கையைத் தாண்டப் பார்க்கிறது? கொடியைப் பார்த்தால் அந்தக் கைகேயியின் மகன் பரதன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறான் போல் தோன்றுகிறது. தேரின் மேல் காற்றில் திருவாத்தி மரக்கொடி ஆடுவது நன்றாகத் தெரிகிறது. அது அயோத்தி மன்னருடைய கொடி. இப்போது ராமனுடைய பகைவன் பரதனல்லவா அயோத்தி அரசன்? கைகேயியின் மகன் அக்கிரம வழியில் ராஜ்யத்தை அடைந்துவிட்டு, இப்போது ராமனைக் கொல்லவும் வந்திருக்கிறான் போல் தோன்றுகிறது. நம்முடைய வீரர்களையும் இன்னும் கங்கைக் கரையில் நமக்குச் சேர்ந்தவர்களையும் உடனே திரட்டிக் கங்கையை ஜாக்கிரதையாகக் காத்து நிற்க ஏற்பாடு செய்யுங்கள். ஓடங்களைக்கூட்டி அதில் ஆயுதங்களோடு வீரர்களை ஏற்றி யுத்தத்துக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். பார்க்கலாம், இவர்கள் ராமனிடம் நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் நதியைக் கடக்க உதவி செய்வோம். அல்லது கெட்ட எண்ணத்தோடு வந்திருப்பவர்களாகத் தெரிந்தால், இவர்களை இங்கேயே தடுத்துவிட வேண்டும். கங்கையைக் கடக்க விடக்கூடாது” என்றான்.


அவ்வாறே எல்லா ஆயத்தமும் செய்துவிட்டு, மரியாதைக்கு வேண்டிய பரிசுகளை எடுத்துக் கொண்டு குகன் ஒரு படகிலேறி பரதனைச் சந்திக்கச் சென்றான்.

*

எதிர்க் கரையில் அதே சமயத்தில் சுமந்திரன், “அதோ! நம்முடைய நண்பன் குகன், ராமனிடம் அளவிலாத அன்புகொண்ட நிஷாத ராஜன், தன்னுடைய ஜனங்களோடு நம்மை மரியாதை செய்து வரவேற்க வருகிறான். இவன் இந்தப் பிராந்தியத்துக்குத் தலைவன். இவனுக்கும் இவனுடைய குலத்தார்களுக்கும் இந்த வனத்தின் மூலை முடுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ராமசந்திரன் தற்போது இருக்குமிடத்தை நமக்குச் சொல்லுவார்கள். அவ்விடத்துக்கு நம்மை க்ஷேமமாகவும் சீக்கிரமாகவும் சீக்கிரமாகவும் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்” என்று பரதனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.


இதற்குள் குகன் நதியைத் தாண்டிவந்து பரதனை நமஸ்கரித்தான்.


“சொல்லாமல் வந்துவிட்டீர்கள். ஆயினும் என் பொருளெல்லாம் உமது என்று பாவித்து என்ன வேண்டுமோ அதை உத்தரவிடுங்கள். உங்களையும், உங்கள் சேனையையும் உபசரிப்பது என் பாக்கியம்!” என்றான்.


“எண்ணிய எண்ணமே விருந்து” என்று உபசாரம் சொல்லிவிட்டு, பரதன் மேலும் சொன்னான்: “நான் இராமன் இருக்கும் இடம் போகவேண்டும். பரத்வாஜ ஆசிரமம் எங்கே இருக்கிறது? அதற்கு வழி எப்படி?”


இவ்வாறு கேட்டதற்குக் குகன் அஞ்சலி செய்து, “சுவாமி, நானும் என் ஆட்களும் தங்களுடன் கூடவே வந்து தங்களை ராமசந்திரனிருக்குமிடத்துக்கு அழைத்துப் போவதில் தடையொன்றுமில்லை. எந்த அபாயமும் கஷ்டமுமில்லாமல் கொண்டுபோய்ச் சேர்த்து விடுவோம். ஆனால் மன்னிக்க வேண்டும், ஒரு சந்தேகம். என் மனத்தில் எழும் ஐயத்தைத் தீர்க்கவேண்டும், அரசகுமாரரே! இவ்வளவு பெரிய சேனையுடன் வந்திருக்கிறீர்கள். இது ஏன் என்று எனக்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது” என்றான்.


இந்த மொழிகளைக் கேட்டதுமே பரதன் “ஆஹா! இதைவிட என்ன அவமானம் எனக்கு வேண்டும்? ஜனங்கள் என்னைக் கண்டு ராமன் விஷயமாகப் பயப்படும் காலம் வந்துவிட்டதே! குகனே, நீ சந்தேகப் படவேண்டாம். தகப்பனை இழந்த எனக்கு ராமனே தந்தையாவான். அவனை எப்படியாவது வேண்டிக் கொண்டு அயோத்திக்கு அழைத்துப் போக வந்திருக்கிறேன். தெய்வத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். என் உள்ளத்தில் வேறு எண்ணம் இல்லை” என்றான்.


பெருந்துக்கமும் ராமனிடமுள்ள அவன் அன்பும் பரதனுடைய முகத்திலும் பேச்சிலும் கண்டு குகன் உள்ளம் பூரித்தான்.


“ஐயனே! உம்மைப் போன்ற மகான் வேறு யார் இருக்கிறார்கள் உலகத்தில்? தானாக வந்த பெரும் சம்பத்தை வேண்டாம் என்று துறக்க வல்லவர் தாங்களன்றி வேறு யாருளர்? தங்களுடைய புகழ் என்றென்றும் உலகத்தில் பரவி விளங்கும்” என்றான் குகன்.


இரவாயிற்று. பரதனுடைய சேனைக்கு வேண்டியதெல்லாம் நிஷாதராஜன் ஏற்பாடு செய்து முடித்தான். அனைவரும் படுத்தார்கள்.


குகனைச் சந்தித்த பிறகு பரதனுக்குத் துக்கம் முன்னிருந்ததைவிட அதிகரித்தது. பரிசுத்த சுபாவத்தை ஜன்ம சம்பத்தாகப் பெற்றவன் பரதன். ‘இப்படியாயிற்றே!’ என்று அவன் ராமனை நினைந்து பெருமூச்சு விட்டு உடம்பெல்லாம் வேர்த்துத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனுக்கு நேர்ந்த பெரும் பழியும், தந்தை இறந்த துக்கமும், ராமனைப் பிரிந்த துயரமும் எல்லாம் சேர்ந்து நெருப்பைப் போல் அவன் உயிரை எரித்தன. குகனும் அவனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லிக் கூடிய அளவு அவன் துயரத்தைத் தணித்து வந்தான். பரதனும் குகனும் கங்கைக் கரையில் சந்தித்து, துயரத்தைப் பங்கிட்டுக் கொண்டது ஆழ்வார்களும் பக்தர்களும் மிகவும் அனுபவிக்கும் கட்டம்.


“ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு உட்கார்ந்தான்? எங்கே படுத்தான்? என்ன சொன்னான்?” என்றெல்லாம் பரதன் விசாரிக்க குகனும் அன்போடு எல்லாவற்றையும் சொல்லி இடங்களைக் காட்டியும் வந்தான்.


முடிவில் லக்ஷ்மணன் எங்கே தூங்கினான் என்று கேட்டபோது அந்தக் கதையையும் சொன்னான்.


“ராமனும் ஜனகன் மகளும் தரையில் அங்கே படுத்திருப்பதைப் பார்த்து எனக்குத் தூக்கமும் வருமா என்று கண்ணீர் சொரிந்து அழுது இரவு முழுவதும் வில்லும் கையுமாக என்னைப் போலவே படுக்காமல் நின்று காத்து வந்தான்” என்று குகன் சொன்ன போது பரதன் துயரம் தாங்க முடியாமல் வருந்தினான்.


ராமனும் சீதையும் தரையில் கிடந்த இடத்தை பரதன் பார்த்து மூர்ச்சையடைந்தான். கோத் தாய்களுக்கு அதைக் காட்டி, “இதுவே என் பொருட்டு ராமன் தரையில் படுத்த இடம். புல்லும் அமுங்கிக் கிடக்கிறது,பாருங்கள்” என்றான்.


என்ன உண்டார்கள் என்று கேட்டபோது குகன் சொன்னான்: “அப்பனே! அன்றிரவு விரதமிருந்து லக்ஷ்மணன் கொண்டு வந்த ஜலத்தை ராமன் அருந்தி மீதியைத் தம்பியும் அருந்தினான். நான் இட்ட ஆகாரத்தை அப்படியே திருப்பிவிட்டு உபவாசமாகத் தூங்கினார்கள். மறுநாள் காலை தலைமயிரைச் சடையாகத் திரித்துக்கொண்டு காலால் நடந்து சென்றார்கள்” என்றான்.


ராமனை அயோத்திக்கு எப்படியாவது அழைத்துப் போய் முடிசூட்டுவது என்று தீர்மானித்திருந்ததால் ஓரளவு மகிழ்ச்சியடைந்திருந்த பரதனுடைய உள்ளம் கங்கைக்கரை வனத்தில் குகனுடன் பேசிய பேச்சுக்களாலும் பார்த்த காட்சிகளாலும் மறுபடியும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.


“என் பொருட்டு நீ புல்மேல் படுத்தாய். நான் இதைக் கண்டும் உயிருடன் இருக்கிறேன். நான் கிரீடமும் சூட்டிக்கொள்ள வேண்டுமாம்!” என்றான்.


“எப்படியாவது ராமனைத் திருப்பி அழைத்துப் போய்ச் சிம்மாசனத்தில் அமரச் செய்வேன். வேண்டுமாயின் அவன் கொண்ட பிரதிக்ஞையைப் பதினான்கு வருஷம் நான் அவனுக்குப் பதிலாகக் காட்டிலிருந்து முடிப்பேன். இதில் குற்றமில்லை. சத்தியம் குலையாது ஒப்புக் கொள்வான்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு ஆறுதல் அடைந்தான்.


மறுநாள் காலை சீக்கிரமாகவே பரதன் சத்ருக்னனை எழுப்பினான். “என்ன இன்னும் தூங்குகிறாய்? விடிந்து விட்டது. பரிவாரமும் சேனையும் கங்கை தாண்ட வேண்டுமல்லவா? சீக்கிரம் குகனுக்குச் சொல்லி எல்லாம் செய்து முடிக்கவேண்டும்” என்றான்.


“அண்ணனே! நான் தூங்கவில்லை. எனக்கும் உன்னைப் போலவே இரவெல்லாம் ராமனைப் பற்றிய நினைவுதான்” என்றான் சத்ருக்னன்.


இப்படிப் பேசும்போதே குகன் வந்து சேர்ந்தான். “சுகமா? இரவு சரியாகக் கழிந்ததா? உங்களுடைய பரிவாரமெல்லாம் சுகமா?” என்றெல்லாம் போய்ப் கேட்டு உடனே விடைபெற்றுக்கொண்டு பெரியதொரு படகுப் படை தயார் செய்தான். வெகு விமரிசையாக எல்லாம் நடந்தது. பார மூட்டைகளும், வண்டிகளும், பரதனுடன் வந்த பெரிய சேனையும் படகுகளில் ஏற்றப்பட்டன. கங்கா நதியில் பரதனுடைய பரிவாரம் ஏறிய படகுகளைக் கடத்தினார்கள். அப்போது எழுந்த ஆரவாரம் ஒரு பெரிய திருவிழாப் போலிருந்தது. பரதனுக்கிருந்த துக்கம் கூட்டத்துக்கு இல்லை. பரதன் எப்போது புறப்பட்டானோ அப்போதே அவர்கள் ராமன் திரும்பி வந்து விடுவான் என்று நிச்சயமாகத் தீர்மானித்துக் கொண்டு விட்டார்கள். ராமன் திரும்பி வந்து பட்டாபிஷேகமும் நடக்கும், தீர்ந்துபோன துயரங்களெல்லாம் கனவாக மறையும் என்று எண்ணிச் சந்தோஷமாகச் சென்றார்கள். தற்போது திருவிழாக் காலங்களில் பெரிய ரயிலடியில் நடைபெறும் கோலாகலமாக அன்று கங்கைக்கரையில் நடந்ததைப் போலவே வால்மீகி சித்திரித்திருக்கிறார். சேனை முழுதும் நதியைத் தாண்டியாயிற்று என்று கண்ட பின் பரதனும் தனக்காக அமைத்திருந்த படகில் ஏறிச் சென்றான். கங்கையைக் கடந்து எல்லாரும் பரத்வாஜ முனிவருடைய ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்கள்.


பரதனுடைய கதை ஒன்று போதும் ராமாயணம் படித்து நாம் மேம்பட்ட நிலையடைவதற்கு. சக்கரவர்த்தித் திருமகனும் பரதனும் ஆண்டவனுடைய திருவவதாரம் என்றாலும் சரி, இல்லை இவர்கள் வால்மீகி முனிவருடைய கற்பனைச் சிருஷ்டியாகவே இருந்தாலும் சரி, முனிவருக்கு அதற்காகக் கோயில் கட்டித் தலைமுறை தலைமுறையாகப் பூஜிக்கத் தகும். இத்தகைய சிருஷ்டி முனிவருடைய கற்பனையில் உண்டாவதற்கு முனிவர் உள்ளத்தில் எத்தகைய ஞானமும் பக்தியும் இருந்திருக்க வேண்டும்! அது மட்டுமல்ல. அதை நாம் படித்துப் பெரு மகிழ்ச்சியடைகிறோமே அதுவும், நம்முடைய உள்ளத்தில் மறைந்து கிடக்கும் நல்லறிவும் கடவுள் பக்தியுமே. நாமே அறியாமல் பக்தியும் ஞானமும் நாம் பிறக்கும்போதே அடைந்திருக்கிறோம். அது உள்ளே பெருஞ் செல்வமாகக் கிடக்கிறது. இல்லாவிடில் இந்த மக்கள் சமூகம் மிருகக் கூட்டமாகத்தானே இருந்து நம்மைவிடப் பெரிய மிருகங்களுக்கு இரையாகி அழிந்தும் போயிருப்போம்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை