35. பரதனுடைய உறுதி (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பரதன் வந்துவிட்டான் என்கிற சமாசாரம் அந்தப்புரமெல்லாம் பரவிவிட்டது. தன் துக்கத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த கௌசல்யை இதைக் கேட்டதும் “பரதனிடம் போகலாம், வா!” என்று சுமித்திரையையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். அவர்கள் இரண்டு அடிகூட எடுத்து வைத்திருக்க மாட்டார்கள், அதற்குள் பரதனே, உன்மத்த கோலத்தில் ராமனுடைய தாயிடம் சரணம் அடைய வந்துவிட்டான்.


கௌசல்யை எண்ணினாள், ராஜ்யம் எளிதில் தனக்குக் கிடைத்து விட்ட களிப்பில் மூழ்கி, பட்டாபிஷேகம் செய்து கொள்ள பரதன் அவசரமாகவே கேகய நாட்டிலிருந்து வந்து விட்டான் என்று. எவ்வளவு பிசகு!


வசிஷ்டர் தலைமையில் மந்திரிகளும் சபைகூடி, இறந்துபோன மன்னனுக்குப் பரதனைக் கொண்டு உத்தரகிரியைகளை நடத்தி விட்டு அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தார்கள் அல்லவா? ஆகையால் பரதனைக் கண்டதும் வீர புருஷனையும் அருமை மகனையும் இழந்த கௌசல்யை தீனஸ்வரத்தில் இவ்வாறு சொன்னாள்:


“பரதனே, யாதொரு இடையூறும் பயமும் இல்லாமல் செய்யப்பட்ட ராஜ்ய பதவி உனக்காக இதோ, காத்திருக்கிறது. கைகேயி சம்பாதித்து உனக்குத் தந்திருக்கிறாள். பெற்றுக் கொண்டு சுகமாக ஆள்வாயாக, தந்தைக்காக நீ மூட்டும் தீயில் நானும் விழுந்து மன்னன் சென்ற உலகத்துக்குப் போய்விடுகிறேன்” என்றாள்.


கொடிய விஷம் போன்ற இந்த மொழிகளைக் கேட்ட பரதன் கீழே விழுந்து அவள் பாதங்களைப் பிடித்துக் கொண்டு பேச முடியாதவனாகக் கிடந்தான். “பரதனே, நீயே என்னை அழைத்துப் போய் என் வீர குமாரன் எங்கே தவ வாழ்க்கை நடத்துகிறானோ அங்கே கொண்டுபோய் விட்டுவிடு” என்றாள் கௌசல்யை.


தாய் கௌசல்யையின் கொடிய மொழிகளைக் கேட்டு வேதனை தாங்காமல் மூர்ச்சையடைந்த பரதன், சற்று நேரம் கழித்துக் கொஞ்சம் தெளிந்ததும் எழுந்து, “தாயே, ஒரு பாவமும் அறியாத என்னை ஏன் இப்படியெல்லாம் துன்பப்படுத்துகிறாய்? வெகு தூரத்தில் ஒரு விஷயமும் தெரியாதவனாக இருந்தேன் என்பது உனக்குத் தெரியாதா? இங்கே நடந்த சூழ்ச்சியும் பாவமும் எனக்கு ஏதும் தெரியாது. அண்ணன் ராமனிடம் நான் வைத்துள்ள அன்பு உனக்குத் தெரியாதா? இந்தக் கொடுமையை நான் அவனுக்குச் செய்திருப்பேனா? இது உனக்குத் தெரியாதா? நான் அடைந்த சகல அறிவும், பெற்ற ஞான சம்பத்தும் எல்லாம் நாசமாகப் போகட்டும். இந்தத் தீச்செயலில் எள்ளளவாவது எனக்குப் பங்கிருக்குமானால் உலகத்தில் யார் எந்தப் பெரும் பாவம் செய்து அதன் பயனை அனுபவிக்கிறார்களோ, அந்தப் பாவமும் கர்ம பலனும் எனக்கு வந்து சேரட்டும். சத்தியம் செய்கிறேன், தாயே! ஒரு நாளும் இந்த விஷயத்தில் நான் கலந்தவன் அல்ல; ஆசைப்பட்டவன் அல்ல!”


இரு கைகளையும் உயரத் தூக்கி துஷ்ட மனிதன் செய்யக்கூடிய சகலவித பாவங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி அந்தப் பாவம் தன் மேல் விடியக் கடவது, இந்தச் சூழ்ச்சிக்குத் தான் சம்மதித்திருந்தால், என்று கோர சபதம் செய்தான்.


தன்னைப் பெற்ற தாய் செய்த சூழ்ச்சியின் பயனாகப் பெரிய லாபத்தைப் பெற்ற ஒரு மகன் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று நிரூபிப்பது அந்தக் காலத்திலும் கடினமாகத்தான் இருந்தது. இந்த நிலையில் அப்பாவியான பரதன் சபதங்கள் செய்து அலறி அலறி அழுதான். அரசு இழப்பதை விடவும் வனம் போவதை விடவும் இவ்வளவு நாட்கள் பிரியமாயிருந்த தாயான கௌசல்யை சாட்டிய பழி குற்றமற்ற பரதனுக்குப் பயங்கர நரக வேதனையைத் தந்தது. ராமனுக்குச் செய்யப்பட்ட அநீதியினால் ராமன் துக்கப் படவில்லை. பரதனுக்குச் செய்த அநீதி மிகப் பெரிது. 


பரதனுடைய உள்ளத்தை இப்போது கௌசல்யை கண்டாள். தான் எண்ணியது தவறு என்று உணர்ந்தாள். தன் மடியின்மீது அவன் தலையை எடுத்து வைத்து, “அன்புக்குரிய மகனே! உன் தூய உள்ளத்தில் உண்டாகியிருக்கும் துக்கத்தைப் பார்த்து என் சோகம் இரு மடங்காகப் பொங்குகிறது. நாம் என்ன செய்ய முடியும், குழந்தாய்? விதியின் வசப்பட்டவர்களாக இருக்கிறோம்.


புண்ணியவான்களுக்குரிய பதவிகளெல்லாம் உனக்கு இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் உண்டாகக் கடவது” என்று ஆசீர்வதித்து ஆறுதல் அடைந்தாள்.


முதலில் சந்தேகப்பட்டாள் - சூழ்ச்சியில் பரதனும் கலந்திருப்பான் என்று அல்ல - பரதனுடைய மனத்தில் ஆசையிருந்திருக்கும், அதை அடைந்ததில் பரதனுக்குத் திருப்தி இருக்கும் என்று. பின்னர் பரதனுடைய உள்ளத்தின் கல்மஷமற்ற பான்மையைக் கண்டு இரு மடங்கு திருப்தி அடைந்தாள். ஒரு மகன் காட்டுக்குப் போனாலும் இத்தகைய ஒரு மகன் கிடைத்தான் என்று மகிழ்ச்சியடைந்தாள். இந்த இடத்தில் கம்பர் மிக அழகாகச் சொல்லுகிறார்:


தூய வாசகம் சொன்ன தோன்றலை

தீய கானகம் திருவின் நீங்கி, முன்

போயினான் தன்முன் போந்துளான் என

ஆய காதலால் அழுது புல்லினாள்.


பட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, காட்டுக்குப் போன ராமனே திரும்பி வந்து அவனைக் கட்டித் தழுவிக் கொள்வதாகவே எண்ணிக் கோசலை பரதனை எடுத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, அணைத்துக் கொண்டாள்.


மக்களின் உள்ளத்தில் ஏற்படும் பலவித உணர்ச்சிகளைக் கவிஞர்கள்தான் காண்பார்கள். அவற்றைப் பளிச்சென்று காண்பிக்கத் தகுந்த மொழிகளையும் அவர்கள்தான் காண்பார்கள்.

“உன் முன்னோர்கள் பலர் அரசு புரிந்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அரசு வேண்டாம் என்று சொல்லும் உனக்குச் சமானமானவர் அவர்களில் ஒருவருமே இல்லை. நீதான் மன்னர்களுக்குள் மன்னன், பரதனே!” என்று சொல்லி, கோசலை விம்மி விம்மி அழுதாள்.


‘முன்னை நும்குல முதலுளோர்கள் தாம்

நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?

மன்னர் மன்னவா!’ என்று வாழ்த்தினாள்

உன்ன உன்னநைந்(து) உருகி விம்முவாள்.


கம்பர் கண்ட கோசலையும் பரதனும் பாரத நாட்டு மக்களின் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்க! அந்தப் பண்பும் நீடூழி வாழ்க!


இறந்து போன மன்னனுக்கு வழக்கப்படி செய்ய வேண்டிய உத்தர கிரியைகள் கிரமமாகச் செய்து முடித்தார்கள். ஆறாத துக்கத்தில் மூழ்கிய பரத சத்ருக்னர்களை வசிஷ்டர் முதலான அறிஞர்கள் சமாதானப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.


மன்னன் இறந்த பதினான்காவது நாள் மந்திரிகள் முதலியவர்கள் சபை கூட்டி பரதனை வணங்கி, “நம்முடைய பெருந்தகை மன்னன் சுவர்க்கம் சென்று விட்டான். ராம லக்ஷ்மணர்கள் ராஜ்யத்தை விட்டு விட்டுப் போய் வனத்திலிருக்கிறார்கள். நாயகனற்ற இந்த ராஜ்யத்தின் தலைமையை இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் ஏற்றுக் கொள்ளுவதில் தவறு ஒன்றுமில்லை. ஆகவே ஒப்புக் கொண்டு எங்கள் அரசனாகப் புகழ் பெற்று விளங்குவீராக! மகுடாபிஷேகத்துக்கு வேண்டிய எல்லா மங்களப் பொருள்களைச் சேர்த்து வைத்தும், மற்ற சகல ஏற்பாடுகள் செய்தும், நகரத்துப் பிரமுகர்களும் ராஜ குலத்தவர்களும் காத்திருக்கிறார்கள். ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வீராக. இது உம்முடைய முன்னோர்களின் ராஜ்யம். அபிஷேகம் செய்து கொண்டு எங்களைக் காப்பாற்றுவீராக!” என்றார்கள்.


இதைக் கேட்ட பரதன் பட்டாபிஷேகத்துக்காக வைக்கப்பட்டிருந்த சாமக்கிரியைகளையெல்லாம் வலம் செய்து கை கூப்பி வணங்கிவிட்டு, அவ்விடம் கூடியிருந்த மகாஜனங்களுக்குச் சொன்னான்:


“மூத்த குமாரனுக்கு உரிமையான ராஜ்யத்தை என்னை ஒப்புக் கொள்ளும்படி குல வழக்கத்துக்கு விரோதமாக நீங்கள் விரும்புவது நியாயமில்லை. உங்களுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகுக. ராமசந்திரன் எனக்கு மூத்தவன். அவன் இருக்கும் அரண்யத்துக்கு நான் சென்று அவனுக்கு அங்கேயே ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து, ராம லக்ஷ்மணர்களை அயோத்தியைக்கு அழைத்து வரத் தீர்மானித்திருக்கிறேன். இதற்கு வேண்டிய பரிவாரங்களைத் திரட்டி எல்லா ஏற்பாடுகளையும் செய்வீர்களாக. இவ்விடமிருந்து வனத்துக்குப் போகப் பாதை சீராக அமைக்க வேண்டும். எல்லாத் தொழிலாளர்களையும் திரட்டுங்கள். நான் அபிஷேகம் செய்து கொள்ள மாட்டேன். இது என் பிரதிக்ஞை” என்றான்.


ராஜகுமாரன் சொன்னதைக் கேட்டு, சபையில் கூடியிருந்தவர்கள் எல்லாரும் தங்களையும் அறியாமல் பெரு மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தார்கள்.


எல்லாரும் பரதனுடைய யோசனையை ஒப்புக் கொண்டு பெரும் படை பரிவாரத்தோடு ராஜகுமாரன் வனம் சென்று ராமனைச் சந்திக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள்.

*

வனப் பிரதேசத்தை நன்றாய் அறிந்தவர்கள், கிணறு, வாய்க்கால் வெட்டுகிறவர்கள், சுரங்கம் போடுகிறவர்கள், தெப்பம், படகு முதலியவற்றைக் கட்டத் தெரிந்தவர்கள், கல் தச்சர்கள், யந்திரம் செய்பவர்கள், சீக்கிரமாகப் பெரு மரங்களை வெட்டத் தெரிந்தவர்கள், மேடு பள்ளங்களை ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்கள், சுண்ணாம்பு வேலைக்காரர்கள், காட்டு வழியில் செல்லப் பயிற்சி பெற்றவர்கள், இன்னும் இத்தகையோர் பலரும் கூடிய ஒரு பெரிய தொழிலாளர் கூட்டம் வேண்டிய ஆயுதங்களோடு முன்னால் சென்று எல்லா வேலைகளும் துரிதமாகச் செய்தார்கள். 'ராமனை அழைத்து வருவோம்' என்று எல்லா வேலையாட்களுக்கும் உற்சாகம். வெகு வேகமாகப் பாலங்கள் கட்டப்பட்டு வந்தன. மரங்கள் வெட்டப்பட்டன. வெகு துரிதமாகச் சேனையோடு ராஜகுமாரன் போவதற்குத் தகுந்த பாதை அமைக்கப்பட்டது. அங்கங்கே மேடு பள்ளம் சமப்படுத்தி, ஈரப் பிரதேசங்களில் ஜலம் வற்ற வெட்டிவிட்டு, வழியில் பெரும் படை தங்குவதற்கு விடுதிகளும் குடிக்கும் தண்ணீர் வசதிகளும் எல்லாவித சௌகரியங்களும் செய்துவிட்டார்கள்.

*

இவ்விதம் வனம் செல்ல எல்லா ஏற்பாடுகளும் பரதன் சொல்லியபடி நடந்து கொண்டிருந்தாலும், வசிஷ்டரும் மந்திரிகளும் முறைப்படி பெரிய மந்திரி சபை கூட்டினார்கள். கூட்டி பரதனுடைய மாளிகைக்குத் தூதர்களை அனுப்பி அவனை அழைத்தார்கள். அழைப்புக்கு வந்த பரிவாரத்தின் நாத கோஷங்களைக் கேட்டு பரதன் மிகவும் வருந்தினான். “அதை நிறுத்துங்கள்” என்று சொல்லியனுப்பிவிட்டு, தம்பி சத்துருக்னனைப் பார்த்து, “ராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட என்னை இவ்விதம் துன்புறுத்துகிறார்களே! தாய் செய்த சூழ்ச்சியின் பயனைப் பார்! இந்தப் பழியைச் சுமக்க என்னைத் தனியே விட்டுவிட்டு தந்தை தசரதர் சொர்க்கம் போய்விட்டாரே. இந்த ராஜ்யம் அரசனில்லாமல் தவிக்கிறது. மாலுமியில்லாத கப்பலைப்போல் அலைந்து ஆடுகிறது” என்று சொல்லித் துக்கப்பட்டான்.


களங்கமற்ற பரதன் வருகிறான் என்று மிக்க ஆவலுடனும் சந்தோஷ ஆரவாரத்துடனும் சபையில் எல்லாரும் வாயிலைப் பார்த்தவண்ணமாக இருந்தார்கள். சந்திரோதயமானாற்போல் பரதன் சபையில் பிரவேசித்தான். கூடியிருந்த பெரியோர்களை நமஸ்கரித்து, பரதன் தனது ஆசனத்தில் போய் அமர்ந்தான். 


“மேன்மை பெற்ற மகாராஜாவான தந்தையும் உங்கள் சகோதரன் ராமசந்திரனும் உங்களுக்கென்று தந்திருக்கும் ராஜ்யத்தை ஒப்புக்கொண்டு முறைப்படி எங்களை ரட்சிப்பீர்களாக" என்று வசிஷ்டர் சொன்னதைக் கேட்டதும், பரதன் உள்ளம் ராமனிருக்குமிடம் சென்றுவிட்டது. அவன் கண்களினின்று கண்ணீர் பெருகிற்று.


வாலிபனான பரதன் சபை நடுவில் உரக்க அழுதுவிட்டு வசிஷ்டரைப் பார்த்து நிந்தித்துப் பேசினான்:


“நான் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன். குலத்துக்குரிய பண்பாட்டையும் பெற்றவன். எனக்கு உரிமையற்ற பொருளை நான் எப்படி அபகரிப்பேன்? தகாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிறீர்களே, இது வியப்பாக இருக்கிறது. தசரதனுடைய புத்திரன் ஒருவன் இதைச் செய்ய ஒப்புக்கொள்ளுவானா? இந்த ராஜ்யம் ராமனுடையது. மூத்தவன், மேலானவன், தர்மாத்மா, திலீபன் நஹூஷன் ஆகியவர்களுக்குச் சமானமானவன், அவனல்லவோ இந்த ராஜ்யத்துக்கு உரிய அரசன்? ஆரியனுக்குத் தகாத ஒரு காரியத்தை என்னைச் செய்யச் சொல்லுவது சரியல்ல. இங்கிருந்து வனத்திலிருக்கும் ராமனுக்குக் கைகூப்பி வணங்குகிறேன். அவனே அரசன், அவனே அரசனாகத் தக்கவன், நானல்ல!”


இந்தப் பேச்சைக் கேட்ட சபையோர் இவனல்லவோ பெருந்தகை என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்.


மீண்டும் பரதன் சொன்னான்: “அரசனான ராமனை என் பேச்சால் சம்மதிக்கும்படி செய்ய முடியாவிட்டால், நான் அங்கேயே வனத்திலிருந்து தவமிருப்பேன். நீங்கள் பெரியோர்கள் எல்லோரும் எப்படியோ சகல உபாயங்களையும் உபயோகித்துப் பலவந்தமாகவேனும் ராமனை அயோத்திக்குக் கொண்டு வந்து பட்டம் சூட்ட வேண்டியது உங்கள் கடமை.”


இப்படிச் சொல்லிவிட்டு அருகிலிருந்த சுமந்திரனைப் பார்த்து வனம் போவதற்குத் துரிதமாக எல்லா ஏற்பாடுகளும் செய்யும்படி கட்டளையிட்டான். நகரமெல்லாம் ஆரவாரித்து மகிழ்ந்தது. ராமன் வந்தே விட்டான் என்கிற உணர்ச்சி பெற்று மகிழ்ந்தார்கள். பரதன் எப்படியாவது ராமனை அழைத்து வருவான் என்று நம்பினார்கள்.








கருத்துரையிடுக (0)
புதியது பழையவை