34. சூழ்ச்சி வீணாயிற்று! (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பரதனுக்கு விஷயம் இப்போது விவரமாகத் தெரிந்தது. எவ்வளவு பெரிய அநியாயம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து, தாங்க முடியாத கோபமும் துக்கமும் மேலிட்டுத் தன் தாயைப் பார்த்துச் சொல்லலானான்:

“என்ன காரியம் செய்துவிட்டாய்? இந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி எனக்குச் சொல்லவும் உனக்குத் தோன்றிற்றே! தகப்பனையும் அண்ணனையும் இழந்துவிட்ட பிறகு எனக்கு ராஜ்யாதிகாரம் என்ன வேண்டியிருக்கிறது? தந்தையை உயிர் மாள வைத்து, ராமனையும் காட்டுக்கு அனுப்பிவிட்டு என்னை அரசு புரியச் சொல்லுகிறாயே! ரணகாயப் படுத்தி விட்டு அதன் மேல் உப்புப் போட்டு வேதனை செய்கிறாயே! தசரத மகாராஜாவுக்குப் பத்தினியாக வந்து சேர்ந்தாயே! புத்தி கெட்டுப் போய் உன்னை அவர் அடைந்தார். நெருப்பை மடியில் கட்டிக்கொண்டார். என் தந்தையைக் கொன்று விட்டாயே! கௌசல்யையும் சுமித்திரையும் இறக்கத்தான் போகிறார்கள். உன்னிடம் அவ்வளவு அன்போடிருந்த ராமனை, ஆஹா! நீ எப்படித்தான் வனத்துக்கு அனுப்பினாயோ! பெரிய தாயார் கௌசல்யை உன்னை உடன் பிறந்த சகோதரி போல எண்ணி நடத்தி வந்தாளே. அவளுடைய வயிற்றில் பிறந்த அருமை மகனைக் காட்டுக்கு அனுப்பி விட உனக்கு எப்படித்தான் எண்ணம் உண்டாயிற்றோ? ராமனிடத்தில் நான் வைத்திருக்கும் அன்பு உனக்குத் தெரியாமல் போய்விட்டதா? உன் துராசை உன் மூளையை நாசம் செய்துவிட்டதே. என் உயிரைப் போலுள்ள ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு எனக்குச் சந்தோஷம் ஊட்டப் பார்த்தாயே, உன் மடமையை என்னென்று சொல்லுவேன்! மகா பராக்கிரமசாலியான தந்தை மன்னன், ராம லக்ஷ்மணர்களைத் தாம் பெற்ற பெரும் பக்கபலமாக எண்ணி வந்தாரே? அவர்களைக் காட்டுக்குத் துரத்திவிட்டு, என்னை இந்த ராஜ்யப் பொறுப்பை ஏற்று நடத்தச் சொல்லுகிறாயே, இது என்னால் முடியுமா? முடிந்தாலுங்கூட நான் ஒப்புக் கொள்வேனா? ஒருநாளும் உன் ஆசை நிறைவேறாது. நான் நிறைவேற்றவும் மாட்டேன்! நீ இவ்வளவு பெரிய பாவச் செயல் புரிந்துவிட்டபிறகு உன்னை என் தாயாகப் பாவிக்க முடியாது. உன்னை நான் நீக்கி விட்டேன். பரம்பரையாக ராஜ குலங்களில் வழங்கி வரும் முறையைப் புறக்கணித்து இளையவனுக்குப் பட்டம் கட்டும் எண்ணம் உனக்கு எப்படித் தோன்றிற்று என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. உலகமெல்லாம் நம்மைக் குற்றம் கூறும் என்பது உனக்குத் தெரியவில்லையே! ராஜாக்களுக்கெல்லாம் இது பொது விதி. நம்முடைய குலத்திலும் இதுவே முறை. உன் எண்ணத்தை நான் ஒருநாளும் பூர்த்தி செய்யமாட்டேன். வனம் போய் அண்ணனைத் திரும்ப அழைத்து வரப் போகிறேன். அவனுக்கே பட்டம் சூட்டி என் உள்ளம் மகிழ நான் அவனுக்கு அடிமை செய்து வருவேன். உன் எண்ணம் நிறைவேறாது.”


இவ்வாறு பரதன் தாயைப் பார்த்துக் கோபத்தினால் வாய் குளறப் பேசினான். வரவரத் துக்கம் அதிகரித்து விட்டது. இப்படிச் செய்துவிட்டாளே, தனக்கு. அழியாப் பழி உண்டாக்கி விட்டாளே என்ற பெரும் ஆத்திரத்தில், அவள் தாய், தான் அவள் மகன் என்ற உணர்ச்சியைத் தன் மனத்திலிருந்து முற்றிலும் அகற்றிவிட்டான். அதன் காரணமாகவே துக்கமும் கோபமும் பரதனுக்கு அதிகரித்துவிட்டன. குகையில் சிங்கம் கர்ஜிப்பது போல் கர்ஜித்து, தாயை மிகக் குரூரமான மொழிகளால் நிந்திக்கலானான். பரதனுடைய சுபாவமும், ராமனிடம் அவனுக்கிருந்த அளவிலாத அன்பும், தந்தையை இழந்த துக்கமும், என்றும் எதிர்பாராத பெரும்பழி வந்துவிட்ட சங்கட நிலையும் ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் பரதனுடைய உணர்ச்சி வேகமும் அதனின்று பிறந்த வசை மொழிகளும் நமக்குப் பொருள்படும். ஏதோ சாஸ்திரம் படித்த கல் மனப் பண்டிதர்களைப் போல் நாம் பரதன் பேசியதை அளந்து பார்க்கக் கூடாது. இம்மாதிரியான கட்டங்களிலேதான் கவியுள்ளம் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இதை வால்மீகியிலும் பார்க்கலாம்; கம்பர் கவியிலும்

பார்க்கலாம்.

*

பொறுக்க முடியாத கோபாவேசத்தில் எழுந்து, தாயைப் பார்த்து உரத்த குரலில் மீண்டும் பரதன் பேசலானான்:


“நீ நாட்டுக்கு உதவாதவள்; நாட்டை விட்டு வெளியேற வேண்டியவள், கொடியவள், கெட்ட வழியைப் பின்பற்றி தருமத்தைக் கைவிட்டவள், நான் உன்னைப் பொறுத்தவரை செத்தேன் என்று வைத்துக் கொள். அரசனை யமனிடமும், ராமனைக் காட்டுக்கும் அனுப்பிய உன்னை வெறுக்காதவர் யார்? கொலையாளியாய்ப் போனாய். இந்தக் குலத்தைப் பாழாக்கி விட்டாய். நீ நரகமேயடைவாய். எனது அன்புக்குரிய தந்தை சென்ற உலகத்துக்கு நீ போகமாட்டாய். கோர பாதகம் செய்த உன்னைக் காண உன் மகனான நானே நடுங்குகிறேன். தாயுருவத்தில் வந்த என் மகா சத்துருவே! புருஷனைக் கொன்ற கொலை பாதகியே! உனக்கும் எனக்கும் இனி பந்தம் அறுந்து விட்டது. தர்மராஜாவான பாட்டனார் அசுவபதியரசனுடைய பெண்ணல்ல நீ, ஒரு அரக்கி. குலத்தைக் கெடுக்க அவர் வயிற்றில் நீ பிறந்தாய். சத்தியமும் தருமமும் மனித உருக்கொண்ட என் அண்ணனைக் காட்டுக்குத் துரத்திவிட்டாய். என் தந்தையும் உயிர் நீத்தார். இரு விதத்தில் எனக்குத் தீங்கிழைத்தாய்.


“கௌசல்யா தேவியின் ஒரே குழந்தையான ராமனைக் காட்டுக்குப் போகச் செய்த நீ எந்த நரகத்துக்குப் போவாயோ! தாயின் உள்ளம் உனக்குத் தெரியாமற் போயிற்றே! புத்திரன் தாயின் உடலில் ஒரு பாகம் அல்லவா? தாயின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு பகுதியைக் கொண்டு உண்டான ஜீவனாயிற்றே! தாய்க்கும் மகனுக்கும் உள்ள இந்த உயிர்த் தொடர்பு உனக்குத் தெரியாதா? உயிரின் உயிராகிய மகனைக் காட்டுக்கு அனுப்பித் தாய் உள்ளத்துக்கு நீ விளைவித்த பெருந்துக்கத்துக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?”


“காமதேனுவுக்குக் கோடிக் கணக்கில் புத்திரர்கள் இருக்க, ஏதோ இரண்டு மாடுகள் ஏருக்குக் கட்டப்பட்டு, ஒரு மூர்க்கக் குடியானவனால் துன்புறுத்தப் படுவதைக் கண்டு, 'ஐயோ! இந்தக் குழந்தைகள் வெயிலின் கொடுமை தாங்காமல் வயலில் கீழே விழுந்துவிட்ட போதிலும், இந்த மூர்க்கன் இன்னும் இம்சிக்கிறானே' என்று காமதேனு கண்ணீர் சிந்தியது உனக்குத் தெரியாதா? தேவராஜன் மீது அந்தக் கண்ணீர்த் துளி விழுந்து அதன் சுவாசனையைக் கண்டு இது சுரபியின் கண்ணீராகவே இருக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டு வருந்தினானல்லவா? கோடிப் புத்திரர்களைப் படைத்த சுரபி இரண்டு புத்திரர்களின் கஷ்டத்தைப் பொறுக்க முடியவில்லையே! கௌசல்யைக்கு நீ செய்த கொடுமை உனக்குத் தெரியவில்லையா? ஒரு மகனைப் பெற்றாள்; அந்த மகனை வனத்துக்கு அனுப்பிவிட்டு, அதனால் நீயும் நானும் சுகம் அடைவோம் என்று எண்ணினாய், அரக்கியே! நீ பெரும் துக்கம் அடைந்து சாவாய் என்பது நிச்சயம். இறந்த பின்னும் துக்கமே உன் பங்கு. தந்தைக்குச் செய்ய வேண்டிய உத்தர கிரியைகளை முடித்து விட்டு, நான் வனம் சென்று, வீரன் ராமன் காலில் விழுந்து இராஜ்யத்தை ஒப்பித்துவிட்டு, நீ எனக்குச் சம்பாதித்துத் தந்த பெரும் பழியைப் போக்கிக் கொள்வதற்காக ராமனுக்குப் பதில் நான் தண்டகாரண்யத்தில் விரதம் பூண்டு வாசம் செய்வேன். நீ செய்த பாவத்தின் பாரத்தை என்னால் தாங்க முடியவில்லை. நீ உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நீ என்ன பிராயச்சித்தம் செய்து தப்புவாய்? கழுத்துக்கு உறி போட்டுக் கொண்டு உயிர் துறப்பாயா? அல்லது நெருப்பில் விழுந்து உயிர் விடுவாயா? அல்லது நீயே வனவாசம் செய்து தண்டகாரணியத்தில் ஆயுள் முழுதும் கழிப்பாயா? எப்படியானாலும் சரி, ராமனிடம் சென்று இந்தப் பூமண்டலாதிபத்யத்தை அவனிடம் ஒப்பித்து எனக்கு நீ ஏற்படுத்தித் தந்த தோஷத்தைத் தீர்த்துக் கொள்ளப் போகிறேன்.”


இப்படித் தாயைக் கோபித்து மிகக் கொடிய முறையில் வசை மொழிகள் பொழிந்தான். காட்டில் புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் பெரு மூச்செறிந்தான். அவன் கண்களினின்று ரத்தக் கண்ணீர் பெருகிற்று.


இன்னணம் இனையன இயம்பி யானும் இப்

பன்னரும் கொடுமனப் பாவி மா(டு)இரேன்

துன்னரும் துயர்கெடத் தூய கோசலை

பொன்னடி தொழுவென்என்(று) எழுந்து போயினான்


“இவள் பக்கத்தில் நிற்க முடியவில்லை. என் துக்கத்தைச் சொல்லிக் கொள்ளக் கோசலைத் தாயிடம் போகிறேன்” என்று பெரிய அன்னையின் இல்லம் சென்றான்.


கைகேயியினுடைய மனக்கோட்டை அழிந்தது. தன்னுடைய ஆசை ஒரு வினாடியில் புகைந்து போனதைக் கண்டாள். கீழே விழுந்து பரிதபித்தாள்.

*

ராமாயண பாத்திரங்களில் பரதனைப் போன்ற ஒரு பரிசுத்த விக்கிரகம் வேறு இல்லை. வட நாட்டுக் கிராமங்களில் மக்கள் மிகவும் அனுபவிப்பது சித்திரகூடத்தில் ராம, பரத சந்திப்புத்தான். ராமாயண கதையில் இதுவே முக்கியமான பாகமாக அவர்கள் கருதி, பெரிய திருவிழாக் கொண்டாடுகிறார்கள். யார் எத்தனை பாவச் செயல்கள் செய்யத் துணிந்தாலும், ஒரு சிலர் தருமத்தைக் காக்க இருக்கவே செய்கிறார்கள். பேராசையும் புனைசுருட்டும் நிறைந்த உலகத்தில் பரஸ்பர நம்பிக்கையும் தைரியமும் அன்பும் உண்டாக்கித் தந்து மக்களை அறவழியில் நிறுத்தச் சில ஆத்மாக்கள் இருந்து கொண்டே வருவார்கள். தருமத்துக்கு ஆபத்து இல்லை.