பரதனும் பரிவாரமும் வெகு துரிதமாகவே புறப்பட்டு, வேகமாகப் பிரயாணம் செய்தார்கள். குதிரைகளுக்கு ஆங்காங்கு குளிப்பாட்டித் தீனி போட்டு இரவில் சில இடங்களில் தங்கி எட்டாவது தினம் அதிகாலையில் அயோத்தியா நகரம் வந்து சேர்ந்தார்கள்.
“இதென்ன சாரதியே, நகரம், நான் ஊரை விட்டபோது இருந்த மாதிரி இல்லை. எப்போதும் கலகலவென்று சந்தோஷமாக இருக்குமே? இன்று அப்படி இல்லை. காலையில் நகரத்திலிருந்து ஜனங்கள் வெளியே வருவதும் உள்ளே புகுவதுமாக எப்போதுமுள்ள காட்சி இன்று காணவில்லையே?”
இவ்வாறு பரதன் சந்தேகப்பட்டுச் சாரதியுடன் பேசிக்கொண்டே போனான்.
“ஊருக்கு வெளியே தோட்டங்களில் சந்தோஷ முகங்களுடன் இருக்க வேண்டிய மகளிரும் யுவர்களும் இன்று ஏன் துக்கக் குறிப்புகளோடு காணப்படுகிறார்கள்? எல்லாம் ஏதோ துயர நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது” என்றான்.
“மங்கள வாத்தியங்கள் ஏதும் முழங்கவில்லை; புஷ்பம் அணிந்து, சந்தனம் பூசி உல்லாசமாக இருக்கும் நகரவாசிகள் யாரையும் காணவில்லை. ஊரில் வழக்கமாகக் கேட்கும் பேரிகை மிருதங்க ஒலி காதில் விழவில்லை. இது என்ன ஆச்சரியம்! பல கெட்ட சகுனங்கள் காணப்படுகின்றனவே! என் கவலையை அடக்க முடியவில்லை” என்றான்.
வைஜயந்தம் என்ற கோட்டை வாயில் வழியாகப் பரதனுடைய ரதம் நகரத்துக்குள் பிரவேசித்தது. கடைத்தெருவுகளும் மாளிகைகளும் கோயில்களும் எவ்வித அலங்காரமுமில்லாமல் சரியாக மெழுகிக் கோலமிடாமலும் இருந்ததைப் பார்த்தான். ஜனங்கள் பட்டினி கிடந்த முகங்களோடு காணப்பட்டார்கள். கெட்ட நிமித்தங்களே மேலும் மேலும் காணப்பட்டன. எல்லாவற்றையும் பார்த்து பரதன், ஏதோ பெரும் விபத்துத்தான் நடந்திருக்கிறது என்று நிச்சயித்துக் கொண்டான். அதற்காகவே இவ்வளவு அவசரமாக உடனே வரவேண்டும் என்று சொல்லியனுப்பினார்கள் என்றும் கண்டான்.
தசரதனுடைய மாளிகைக்குள் பிரவேசித்தான். அங்கே தந்தையைக் காணவில்லை. கவலை இன்னும் அதிகரித்தது. உடனே தாய் கைகேயியைப் பார்க்கலாம் என்று அவளுடைய மாளிகைக்குள் புகுந்தான். ஊரிலிருந்து திரும்பி வந்த தன் மகனைப் பார்த்ததும் கைகேயி அவனைக் கட்டியணைத்துக் கொள்ளத் தன் தங்க ஆசனத்தை விட்டுக் குதித்து இறங்கினாள்.
அவனும் அவள் கால்களைத் தொட்டு வணங்கினான். மகனை அணைத்து உச்சி மோந்து, “வந்தாயே, அப்பனே! மகாராஜனாக இருப்பாய்! பிரயாணம் சுகமாக இருந்ததா? மாமன் முதலானோர் க்ஷேமமா? அங்குள்ளவர்கள் எல்லோரையும் பற்றிச் சொல்!” என்று மடியின் மீது உட்கார வைத்துக் கொண்டு மிக்க பரிவுடன் கேட்டாள்.
“நான் வந்து சேர ஏழு நாள் ஆயிற்று. அங்கே எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள். பாட்டனார், மாமன் யுதாஜித் எல்லோரும் உன் சுகத்தை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள். நிறையச் சன்மானங்கள் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் பின்னால் வரும். நான் அவசரமாக முன் ரதத்தில் வேகமாக வந்தேன். மிக முக்கியமான காரியம், உடனே வரவேண்டுமென்று இங்கிருந்து வந்த தூதர்கள் என்னை மட்டும் வேகமாக முன்னால் அழைத்து வந்தார்கள். இதற்கென்ன காரணம், அம்மா? மகாராஜாவைப் பார்த்து வணங்க அவருடைய மனைக்குச் சென்றேன். அவர் அங்கே இல்லை. இங்கேயும் அவருடைய ஆசனம் காலியாக இருக்கிறது. இங்கேதானே வழக்கமாகப் படுத்திருப்பார். ஒரு வேளை பெரிய தாயார் மனைக்குப் போயிருக்கிறாரோ? நான் உடனே அவரைத் தரிசித்து வணக்கம் செலுத்த வேண்டும்” என்றான்.
நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் அறியாத தன் மகனுடைய இந்தக் கேள்விக்கு ராஜ்யாதிகார ஆசையால் மதியிழந்து போன கைகேயி பதில் சொல்லுகிறாள் :
“குழந்தாய்! உன் தகப்பனார் உலகத்தில் பிறந்தவர்கள் அடையவேண்டிய சுகபோகங்களையெல்லாம் அடைந்தார். அரசர் மகா பாக்கியவான். பெரும் புகழ் பெற்றவர். செய்ய வேண்டிய பெரிய வேள்விகளையெல்லாம் செய்து தீர்த்தார். நல்வழியில் நின்றவர்களுக்குப் புகலிடமாயிருந்தார். அவர் அடையவேண்டிய பரமபதத்தை அடைந்துவிட்டார்!” என்றாள்.
இதைக் கேட்டதும் பரதன், “ஐயோ! நான் செத்தேன்” என்று கதறி, அழகிய நீண்ட கைகளை விரித்துக் கொண்டு கீழே விழுந்தான்.
பின்னர் எழுந்து, அரசனுடைய படுக்கையைப் பார்த்து, “இந்தப் படுக்கை சூனியமாகப் போயிற்றே!” என்று அங்கவஸ்திரத்தால் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் தாரை தாரையாகப் பெருக, அரசகுமாரன் ஏழை அநாதையைப் போல் அழுதான். இளம் யானையைப் போன்ற தேகமும், சந்திரனைப் போன்ற முகமும் கொண்ட வீரன் பூமியில் விழுந்து புரண்டு அழுதான். காட்டில் கோடரியால் வெட்டித் தள்ளப்பட்ட பெரிய ஆச்சா மரம் போன்று தரையில் கிடந்த மகனைப் பார்த்து கைகேயி, “எழுந்து நில், அரசனே! எழுந்து நில்! தரையில் ஏன் கிடக்கிறாய்? இது அரசனுக்குத் தகாது. பெரியோர்களுடைய பெரு மதிப்பும் நல்ல கீர்த்தியும் பெற்றிருக்கிறாய். சனாதன வேத வழியில் நின்று தருமமும் வேள்வியும் செய்யும் பதவியை அடைந்திருக்கிறாய். உன் மதி ஜோதிமய சூரியனைப் போல் பிரகாசிக்கிறது. உனக்கு ஒரு குறையுமில்லை. மனக் கலக்கத்தையொழித்து, தைரியம் பூண்டு எழுந்து நில்!” என்றாள்.
களங்கமென்பது துளிகூட இல்லாத உள்ளத்தைப் பெற்ற மகான் பரதன். வெகு நேரம் அழுது புரண்டு அலறிய பின் எழுந்து தாயைப் பார்த்து, “அரசன் ராமனுக்கு யுவராஜ்ய அபிஷேகம் வெகு விமரிசையாகச் செய்வான்; திரும்பி வந்து அதையெல்லாம் பார்க்கலாம் என்கிற ஆசையோடல்லவா நான் மாமன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனேன். இப்போது இப்படியாகிவிட்டதே. ஐயோ! என்னால் பொறுக்க முடியவில்லையே! தந்தையின் பிரிய முகத்தைக் காணவில்லையே! என்ன வியாதி, எப்படி வந்து விட்டது? நான் பக்கத்தில் இல்லாமல் போய்விட்டேனே, என் அம்மா! ராமனும் மற்றவர்களும் அல்லவோ புண்ணியம் செய்தவர்கள். தந்தையை உபசரித்து நோயின் உபத்திரவத்தைத் தணித்து வந்தார்கள். அவர்கள் பாக்யசாலிகள். எனக்கு அந்த பாக்கியம் இல்லாமற் போய்விட்டதே! என் உடம்பில் பட்ட மண்ணைத் தன் கையால் பிரியமாகத் துடைப்பாரே. அவர் கைகள் என் உடலில் படும்போது அந்த ஸ்பரிசம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்ததே! நான் அவருக்குக் கொஞ்சமும் உதவாமல் போய்விட்டேனே! அம்மா! அண்ணன் ராமன் எங்கே? அவனே எனக்குப் பிதாவும் குருவும். உடனே அவனைக் கண்டு அவன் பாதத்தில் விழவேண்டும். இனி அவனே அல்லவோ எனக்குக் கதி? அம்மா, கடைசியாகத் தந்தை எனக்காக என்ன சொல்லிவிட்டுப் போனார்? அவருடைய கடைசிச் சொற்கள் என்னவென்று அவர் சொன்ன மொழிகளாகவே நான் கேட்க விரும்புகிறேன்” என்று இவ்வாறு அழுதுகொண்டு பரதன் கேட்டான். உண்மைக்கு மாறாக ஏதுமில்லாமல் தன் எண்ணத்தை நிறைவேற்றும் கருத்தாகவே கைகேயி பதில் சொன்னாள். பண்பாட்டின் தடை ஒருபுறம், ஆசையின் வேகம் ஒருபுறம் இவற்றிற்கு இடையில் பேசினாள். பரதனுக்காக அரசன் அந்திக் காலத்தில் ஏதும் சொல்லவில்லை என்கிற பொருள்படவும் இன்னும் சொல்லித் தீரவேண்டிய கொடிய நிகழ்ச்சிகளைச் சொல்வதற்கு வசதி ஏற்படவும் பேசினாள் :
“உன் பிதா, ‘ஹா ராமா! ஹா, லக்ஷ்மணா! ஹா, ஜானகீ!’ என்று கதறிக் கொண்டு பிராணனை விட்டார். உன் பிதாவானவர் அந்திம காலத்தில் சொன்னது இவ்வளவே. ‘ராமனும் லக்ஷ்மணனும் சீதையும் திரும்பி வருவதை நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. பார்ப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்’ என்று சொல்லி அரசர் இறந்தார்” என்றாள்.
இதைக் கேட்டதும், “ஐயோ, பக்கத்தில் ராம லக்ஷ்மணர்களும் இருக்கவில்லையா?” என்று பரதனுடைய துக்கம் இரு மடங்காயிற்று.
“அவர்கள் எங்கே, என்ன காரியமாகப் பக்கத்தில் இல்லாமல் போய்விட்டார்கள்?” என்று பரதன் கைகேயியைக் கேட்டான்.
அதன் மேல் எல்லாவற்றையும் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தலாம் என்று எண்ணி, “அப்பா, உன் அண்ணன் ராமன் லக்ஷ்மணனையும் சீதையையும் அழைத்துக் கொண்டு தண்டகாரண்ய வனத்துக்குத் தவ வேஷம் பூண்டு சென்றுவிட்டான்” என்றாள்.
அதைக் கேட்ட பரதன் வியப்படைந்து, “இது என்ன எனக்கு ஒன்றும் விளங்கவில்லை? ராமன் என்ன குற்றம் இழைத்து இந்தத் தவம் செய்யச் சென்றான்? எந்தப் பிராமணன் சொத்தை அபகரித்தான்? அவன் எந்த நிரபராதியை இம்சித்தான்? அவன் எந்த அந்நிய ஸ்திரீயை விரும்பிப் பிழை செய்தான்? எதற்காக ராமன் தண்டகாரண்ய வனம் போக வேண்டியதாயிற்று? யார் இந்தப் பிராயச்சித்தம் விதித்தது?” என்று கேட்டான்.
அந்தக் காலத்தில் வனம் போகும் தண்டனை இவ்விதப் பெருங் குற்றங்களுக்குத்தான் விதிப்பது முறையாக இருந்தது. இதன் மேல் கைகேயி விஷயங்கள் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லத் தைரியங் கொண்டு ஆரம்பித்தாள்:
“ராமன் எந்தத் தவறான காரியமும் செய்யவில்லை. யாருடைய பொருளும் அபகரிக்கவில்லை; யாரையும் இம்சிக்கவில்லை. எந்த அந்நிய ஸ்திரீ முகத்தையும் கண்ணெடுத்துப் பார்த்ததில்லை. ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்துவதாக ஏற்பாடுகள் செய்வதையறிந்து நான் உனக்காக உன் தந்தையை வரம் கேட்டுப் பெற்றேன். உனக்கு ராஜ்யாதிகாரம் தந்துவிட்டு ராமன் ஊரைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று உனக்காக நான் கேட்டேன். சத்தியத்துக்கு உட்பட்டு முன் கொடுத்த தம் வாக்கை நிறைவேற்றித் தம் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மகாராஜா நான் சொன்னதுக்கு ஒப்புக் கொண்டார். சீதையையும் லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு ராமன் வனம் சென்றுவிட்டான். அந்தப் பிரிவைப் பொறுக்க முடியாமல் தந்தை உயிர் நீத்தார். நீ இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்பதை யோசிப்பாய். தருமம் தெரிந்தவனாக இருக்கிறாய். ராஜ்ய பாரத்தை ஒப்புக் கொள்ளவேண்டும். உனக்காகவே இதையெல்லாம் செய்தேன். துக்கப்படாதே. மனத்தை நிலையில் நிறுத்திக் கொள். இந்த நகரமும் ராஜ்யமும் உன் ஆதீனத்துக்குச் சுகமாக வந்திருக்கின்றன. கிரமப்படி வசிஷ்டர் முதலிய பிராமண உத்தமர்களைக் கொண்டு தந்தையாரின் உத்தரகிரியைகளைத் தாமதமின்றிச் செய்து முடித்து ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளுவாய். நீ க்ஷத்திரிய வீரன், தந்தை கையிலிருந்து ராஜ்யம் பெற்ற அரச குமாரன், உன் கடமையைச் செய்” என்றாள்.