32. பரதனுக்குச் செய்தி (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

கெளசல்யா தேவி இறந்து போன அரசனைக் கட்டிக்கொண்டு, “இன்றே நானும் அரசனோடு கட்டை ஏறுவேன். புத்திரனில்லாமலும் புருஷனில்லாமலும் அனாதையாக என்னால் ஜீவித்திருக்க முடியாது” என்று அழுது கொண்டேயிருந்தாள். அரண்மனையில் கூடிய பெரியோர்களும் உத்தியோகஸ்தர்களும் கஷ்டப்பட்டு அவளை மெதுவாக விலக்கி அழைத்துச் சென்றார்கள்.

பிறகு உத்தர கிரியைகளைப் பற்றி யோசித்தார்கள். அரசனுடைய புதல்வர்கள் யாருமே பக்கத்திலில்லை; ராம லக்ஷ்மணர்கள் வனம் சென்று விட்டார்கள்; பரதனும் சத்ருக்னனும் மாமன் வீட்டில் வெகு தூரத்திலிருந்தார்கள். என்ன செய்வதென்று யோசித்து முடிவில் பரதனுக்குச் சொல்லியனுப்புவது என்று தீர்மானித்தார்கள். அவன் வந்து சேரும் வரையில் தேகம் கெடாமலிருக்க ஏற்பாடுகள் செய்தார்கள்.


உலகமெல்லாம் புகழ் பரவிப் பல்லாண்டு அரசு புரிந்த மகாராஜாவினுடைய உடலானது எண்ணெய்க் கொப்பரையில் கிடந்தது! அயோத்தியா நகரம் தன் பிரபாவத்தை இழந்து இருளில் ஆழ்ந்தது. எங்கும் அழுகுரலும் கண்ணீருமாக இருந்தது. ஜனங்கள் ஆண்களும் பெண்களும் கூடிக் கூடிக் கைகேயியை நிந்தித்துப் பேசினார்கள். ஊர் முழுவதும் பெருங் கவலையில் மூழ்கிற்று. இளவரசனாக வேண்டியவன் காடு சென்றான். பரதன் நகரத்தில் இல்லை. ராஜ்யத்துக்குப் பெரும் ஆபத்து வரும் என்று திகிலடைந்தார்கள். அரசனில்லாமல் ஒரு மக்கட் கூட்டம் இருக்க முடியும் என்பதை அந்த நாளில் யாரும் கண்டதில்லை.


அன்றிரவு எப்படியோ கழிந்தது. மறுநாள் காலை மந்திரிகளும் காரியஸ்தர்களும் பெரியோர்களும் சபா மண்டபத்தில் கூடினார்கள். மார்க்கண்டேயர், மௌத்கல்யர், வாமதேவர், காசியபர், காத்தியாயனர், கௌதமர், ஜாபாலி இன்னும் பல வேதியர்களும் சுமந்திரன் முதலிய மந்திரிகளும் வசிஷ்டரை வணங்கி, “சுவாமி, ஒரு ராத்திரி ஒரு நூற்றாண்டாக இருந்தது. மகாராஜா சுவர்க்கம் சென்றார். ராமனும் லக்ஷ்மணனும் வனம் சென்று விட்டார்கள். பரதனும் சத்ருக்னனும் கேகய நாட்டில் பாட்டன் வீட்டில் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். தேசம் அராஜக நிலையிலிருக்கிறது. உடனே யாரையாவது ராஜ்யப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அரசன் இல்லாத தேசம் பாழாகப் போகும் அல்லவா?


அரசன் இல்லாத நாட்டில் நியாயமிருக்காது. தகப்பன் சொற்படி மகன் கேட்க மாட்டான். மனைவி புருஷனுக்குக் கட்டுப்படமாட்டாள். மழை கூடப் பெய்யாது. நாடெல்லாம் திருட்டும் கொள்ளையுமாக இருக்கும். ஜனங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் இருக்காது. பயிர்த் தொழில், வியாபாரம் எதுவுமே சரிவர நடக்காது. அரசனுடைய காப்பின்றி எப்படிப் போக்குவரவு, வியாபாரம், அல்லது பயிர்த் தொழில் நடக்கும்? செல்வம் குன்றிப் போகும். தேவாலயங்களில் திருவிழாக்களும் பூஜைகளும் சரியாக நடைபெறாமல் நாட்டில் மக்களுடைய வாழ்க்கை எல்லாம் கெட்டுப்போகும். இதிகாசங்களையும் புண்ணிய கதைகளையும் சொல்லுவோரும் இருக்கமாட்டார்கள், கேட்போரும் இருக்க மாட்டார்கள். கதவைத் திறந்து வைத்துத் தூங்க முடியாது. நாகரிகம் என்பது தேய்ந்து தேய்ந்து ஒழிந்தே போகும். தவம், விரதம், ஆனந்தம் ஏதுமே இருக்காது. சாஸ்திரம் படிப்போர் இருக்க மாட்டார்கள். அரசன் ஒருவன் இருந்து நாட்டின் அமைதியைக் காத்தால் அல்லவோ இவை யாவும் நடைபெறும்? அரசனில்லாவிடில் பெண்களுடைய இயற்கை அழகும் அலங்காரமுங்கூட ஒழிந்து போகும். தன் பொருள், தனது என்கிற உறுதியில்லாமல் போகும். மீன்களைப் போல் ஒருவரையொருவர் தின்று சாவார்கள். கொடுமையும் துன்பமும் வளர்ந்து கொண்டு போய் நாடு பாழாகப்போகும். நாட்டில் நிலைத்து நிற்க வேண்டிய எல்லாவித நன்மைகளுக்கும் ஒரு அரசன் வேண்டும்.” 


இவ்வாறெல்லாம் அந்தச் சபையில் கூடிய பெரியோர் அராஜகத்தின் அபாயங்களைப் பற்றிப் பேசியதாக வால்மீகி அழகாக வர்ணித்திருக்கிறார். “நாடெல்லாம் இருள் மூடிவிட்டாற் போலாகிவிட்டது. தருமம் அழிந்தே போகும் போலிருக்கிறது. உடனே அரசனை அமைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்கள்.


சாமர்த்தியமான தூதர்களை அழைத்து வசிஷ்டர் “உடனே புறப்படுங்கள். நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். எங்கும் நிற்காமல் அதிவேகமாகப் போய்க் கேகய தேசம் சேரவேண்டும். உங்கள் முகங்களிலாவது நடவடிக்கைகளிலாவது துக்கக் குறிகள் ஏதும் இருக்கக் கூடாது. பரதன் தாங்கமாட்டான். அரசன் இறந்துபோன விஷயத்தை வெளியிடாமல் இருக்க வேண்டும். ‘குலத்தின் குருவும் மந்திரிகளும் உங்களை உடனே அயோத்தியைக்கு வரும்படியாகச் சொல்ல எங்களை அனுப்பியிருக்கிறார்கள்’ என்று மட்டும் பரதனுக்குச் சொல்லுங்கள். உடனே புறப்பட்டு வரச்சொல்லி அழைத்து வரவேண்டும். ராமனும் சீதையும் வனம் போன விஷயமாவது, அரசன் துக்கப்பட்டு மரணமடைந்ததைப் பற்றியாவது ஒன்றும் சொல்ல வேண்டாம். துக்கக் குறிப்பு இல்லாமலிருப்பதற்காக ஆபரணங்களும் ஆடைகளும் எடுத்துக் கொண்டு போய்க் கேகய ராஜனுக்கு வழக்கம் போல் தந்து மரியாதை செய்யுங்கள்” என்றார்.


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 

தீமை இலாத சொலல்


பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 

நன்மை பயக்கு மெனின்


என்று குறளாசிரியர் சொல்லியிருப்பதின் பொருள் இதனின்று அறியலாம்.


தூதர்களும் உடனே தாமதமின்றிப் பிரயாணத்துக்கு வேண்டிய உணவு, உடையெல்லாம் கட்டிக் கொண்டு மரியாதைப் பரிசுகளும் எடுத்துக்கொண்டு வேகமாகச் செல்லும் குதிரைகளில் ஏறிக் குறுக்கு வழியாகக் காடும் மலையும் ஆறுகளும் கடந்து சென்றார்கள்.


கேகய தேசம், அயோத்தியையிலிருந்து வெகு தூரத்திலிருந்தது. அது தற்காலத்துப் பஞ்சாப் தேசமும் அதற்கும் மேற்கிலிருக்கும் பிரதேசமுமாக வைத்துக் கொள்ளலாம். மலைகளும் ஆறுகளும் தாண்டிக் குதிரைகள் மிகவும் களைத்துப் போய்த் தூதர்கள் கேகய ராஜாவின் பிரதான நகரமான ராஜக்கிரகம் போய்ச் சேர்ந்தார்கள். மறுநாள் காலை பரதனைப் பார்க்க ஏற்பாடு செய்தார்கள்.


தூதர்கள் போய்ச் சேர்ந்த அன்று, இரவில் பரதன் பயங்கரமான கனவுகளைக் கண்டு, அதனால் காலை எழுந்தபோது கவலை கொண்டு, முகம் வாடி எழுந்தான். அவனுடைய சினேகிதர்கள் இதைக் கண்டு நர்த்தனமும் ஹாஸ்யமும் செய்து இன்னும் பலவிதத்தில் அவன் கவலையைப் போக்கி வாடிய முகத்தை மலரச் செய்ய முயன்றார்கள். ஆயினும் அவன் கவலைப்பட்ட நிலையிலேயே இருந்தான்.


அன்பின் ரகசிய வேகங்களை நாம் இன்னும் முற்றிலும் காணவில்லை. தசரதனுடைய மனோவேதனையும் மரண சங்கடமும் வெகு தூரத்திலிருந்த பரதனுடைய உள்ளத்தையடைந்து தாக்கிக் கனவை உண்டாக்கியதாகக் கருதலாம்.


“என் பிரிய சகோதரனான ராமனோ, அல்லது லக்ஷமணனோ அல்லது நானோ மரணம் அடையப்போவதாகத் தோன்றுகிறது. அதிகாலையில் கண்ட கனவு வீண் போகாது என்று சொல்லுவார்கள். பயங்கரமான ஸ்வப்பனத்தைக் கண்டேன். என் மனம் விவரிக்க முடியாத கலவர நிலையிலிருக்கிறது. ரொம்பவும் திகிலாக இருக்கிறது. என்ன செய்வேன்?” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். அச்சமயம் தூதர்கள் தாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்து, சந்நிதானத்துக்கு வர அனுமதி கேட்டார்கள்.


கேகய ராஜனும் அவனுடைய குமாரன் யுதாஜித்தும் தூதர்களை வெகு மரியாதையுடன் வரவேற்றார்கள். அவர்களும் செலுத்தவேண்டிய வணக்கங்களை முறைப்படி செலுத்திய பிறகு பரதனை நோக்கிச் சொன்னார்கள்: 


“புரோகிதர்களும் மந்திரிகளும் தங்களுக்கு மங்கள வாழ்த்துக்கள் சொல்லி, உடனே அயோத்தியா நகரத்துக்கு அழைத்துவர எங்களை அனுப்பியிருக்கிறார்கள். மிக அவசரமான காரியம் என்று சொல்லியனுப்பியிருக்கிறார்கள். இந்த வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் தாங்கள் தொட்டு அரசனுக்கும் மாமனுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அவர்கள் கொண்டு வந்த ஆடையாபரணப் பொருள்களைப் பரதன் முன் வைத்தார்கள்.


அவனும் அவற்றைப் பெற்றுக்கொண்டு, “தந்தை தசரதன் க்ஷேமமா? ராமனும் லக்ஷ்மணனும் சுகமா? அனைவரும் நோயொன்றுமில்லாமல் சுகமாக இருக்கிறார்களா?” என்று விசாரித்தான்.


“அனைவரும் நோயின்றி இருக்கிறார்கள் ராஜ குமாரனே! உன் மங்களத்தை எல்லாரும் கோருகிறார்கள். அதற்காகவே சீக்கிரம் வரச் சொன்னார்கள் என்றார்கள்.


உண்மையை மறைத்துப் பேசினார்கள். ஆயினும் அவர்களுடைய பேச்சு பரதனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதைத் தொனிக்கச் செய்தது.


தூதர்களுடைய விருப்பப்படியே அயோத்தியை போக ராஜகுமாரன் தன்னுடைய பாட்டனார், மாமன் முதலியவர்களுடைய அனுமதியைக் கேட்டுப் பெற்றான். பரதன் அயோத்தியைக்கு உடனே போவதற்கான ஏற்பாடுகளைக் கேகய ராஜனும் யுதாஜித்தும் செய்தார்கள். அயோத்தியையில் தசரத மகாராஜாவுக்கும் ராமனுக்கும் மற்றவர்களுக்கும் தருவதற்கென்று கேகய ராஜ்யத்தில் கிடைக்கக்கூடிய மிக விலை உயர்ந்த சன்மானப் பொருள்களைத் திரட்டித் தேர்களில் வைத்து, பரதனையும் சத்ருக்கனனையும் பெரும் பரிவாரத்துடன் அனுப்பி வைத்தார்கள். தேர்கள் வேகமாக அயோத்தியை நோக்கிச் சென்றன.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை