31. உயிர் நீத்தான்! (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

“அன்று அதற்குப் பிறகு நடந்ததையும் சொல்லுகிறேன், கேள்!” என்றான் தசரதன்.

“மகா பாவ காரியத்தைச் செய்துவிட்டு ரிஷி குமாரர் உயிர் நீத்ததையும் பார்த்து விட்டு இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி, இவர் சொன்னபடி செய்வதே கடமையும் நன்மையும் என்று தீர்மானித்தேன். அவருடைய குடத்தை எடுத்துச் சுத்தமான தண்ணீர் மொண்டு கொண்டு அவர் சொன்ன ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று ஆசிரமத்தையடைந்தேன். அங்கே வயது முதிர்ந்த தாயும் தந்தையும் தங்கள் மகனுடைய வருகைக்காகக் காத்திருந்ததைக் கண்டேன். சிறகிழந்த இரண்டு பட்சிகளைப் போல் சுருங்கிப்போன தேகங்களோடு இருந்த இடத்திலிருந்து நகர முடியாதவர்களாக ஆசிரமத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் கண் பார்வையிழந்தவர்கள். ஏன் தண்ணீர் கொண்டுவரப் போனவன் இத்தனை நேரமாகியும் இன்னும் வரவில்லை என்று தங்கள் மகனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தார்கள். ‘ஐயோ! இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனை நான் கொன்றுவிட்டு இவர்களை அநாதைகளாக்கி விட்டேனே!’ என்று பயமும் துயரமும் அடைந்து மெள்ள நடந்து போனேன். என் காலடிச் சத்தத்தைக் கேட்டதும் தந்தையானவர், ‘அப்பனே, சீக்கிரம் தாகத்துக்குத் தா. ஏன் இவ்வளவு நேரம்? ஆற்றில் விளையாடிக்கொண்டு காலம் கழித்தாயா? உன் தாயார் தாகத்துக்குத் தவிக்கிறாள். அப்பனே! ஏன் பேசமாட்டேன் என்கிறாய்? நானாவது உன் தாயாராவது ஏதாகிலும் குற்றம் செய்தோமா? நீ எங்கள் பேரில் கோபங் கொள்ளலாகாது. நீ ஒழுக்கம் குறையாத தரும சீலன். நீதான் எங்களுக்குக் கதி என்பதை நீ அறிவாய். பார்வையிழந்த எங்களுக்கு நீ நீதான் கண்ணாவாய். மகனே, எங்கள் இருவருடைய உயிரும் நீயேதான்! ஏன் பேசாமலிருக்கிறாய்? நான் இப்படிச் சொல்லுகிறேன் என்று கோபமா?’ இப்படி அந்தப் பல்லில்லாத கிழவர் குழ குழ வென்று பேசினார். நானோ சாப பயத்தால் நடுங்கினேன். மெள்ள தைரியப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன்:


“சுவாமி, நான் தசரதன்; உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்ட க்ஷத்திரியன். உங்களுடைய குமாரன் அல்ல. என் பூர்வ ஜன்ம பாவத்தின் பயனாக யாவராலும் வெறுக்கத் தக்க பெரும் பாவச் செயலைச் செய்து விட்டு உங்கள் முன் வணங்கி நிற்கிறேன். பகவானே! நான் யானையோ புலியோ வேறு காட்டு மிருகம் ஏதேனும் வரும் என்று நதிக்கரையில் இரவில் வேட்டையாடப் போனவன், குடத்தில் தண்ணீர் மொள்ளும் சப்தத்தைக் கேட்டு, காட்டு யானை தண்ணீர் குடிக்கிறது என்று எண்ணி, இருட்டில் பாணத்தை எய்து உங்கள் அருமைக் குமாரனைத் தெரியாமல் கொன்று விட்டேன். எய்த சரம் மார்பில் பாய்ந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்ததை நான் போய்ப் பார்த்ததும், ஐயோ, என் அறியாமையால் நடந்து விட்டதே என்று துயரமும் திகிலும் அடைந்து இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். உங்களுடைய குமாரர் வேண்டுகோளின்படி அவருடைய வேதனை தீருவதற்காக மார்பில் பாய்ந்த அம்பை நான் இழுத்து எடுத்து விட்டேன். உங்கள் குமாரர் மேலுலகம் சென்று விட்டார். நான் அஞ்ஞானத்தில் செய்துவிட்ட பாதகத்தைச் சொன்னேன். இனி உங்கள் திருவுள்ளம் எப்படியோ அப்படி, சாபத்துக்குக் காத்திருக்கிறேன் அடியேன்” என்றேன்.


“நான் சொன்ன பயங்கர விருத்தாந்தத்தைக் கேட்ட கிழவர்கள் பேச்சிழந்தனர். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிற்று. பிறகு கிழவர் சொன்னார்: 'அரசனே, நீ செய்தது மிகப் பெரிய பாவம். ஆயினும் தெரியாமல் செய்தாய். நீயே வந்து சொல்லவும் செய்தாய். ஆதலினால் பிழைத்தாய். எங்களிருவரையும் அங்கே கொண்டுபோய்ச் சேர்ப்பாயாக. மகனைத் தொட்டுத் தடவி தருமராஜன் வசம் போய்ச் சேர அனுப்பி விடுவோம்' என்றார்.


“அப்படியே அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு ஆற்றங்கரையில் ரிஷி குமாரர் விழுந்து கிடக்கும் இடத்துக்குச் சென்றேன். உயிர் நீத்த உடலைத் தடவி, அழுது, அவர்கள் தங்கள் துக்கத்தைத் தீர்த்துக் கொண்டு பிறகு குமாரனை ஆசீர்வதித்து, தகனக் கிரியைகள் செய்து முடித்தார்கள்.”


'”எங்களுக்கு நீ விளைத்த துக்கம் அரசனே நீயும் அனுபவிப்பாய். புத்திர சோகத்தால் நீயும் மாள்வாய்” என்று சொல்லிவிட்டு இருவரும் சிதையிலேறித் தீக்கிரையாகிச் சுவர்க்கம் சென்றார்கள். நான் அன்று செய்த பெரும் பாவம் இன்று என்னைப் பற்றிக் கொண்டது.


“பத்தியத்திற்கு மாறான உணவையுண்ட நோயாளியின் வியாதி அதிகரித்து அவனைக் கொல்லுவது போல அந்தப் பாவம் இப்போது என்னைக் கொல்லப் போகிறது. அந்தக் கண் தெரியாத கிழவர் தம் துக்கத்தைப் பொறுக்க மாட்டாமல் சொன்ன சொல் உண்மையாயிற்று. என்னாலேயே என் அருமை மகன் வனத்துக்குத் துரத்தப்பட்டான். அந்தத் துக்கத்தில் இன்று யமாலயம் செல்லப் போகிறேன்.”


“எதிர்பாராதபடியும் சுபாவத்துக்கு விரோதமாகவும் நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கு வேறு காரணமில்லை. நான் ஏன் இப்படி மோசம் போக வேண்டும்? நான் ராமனைக் காட்டுக்குப் போ என்றாலும் அவன் ஏன் என் வார்த்தையைச் சிரமேற்கொண்டு வனம் போக வேண்டும்? கௌசல்யே, பார்வையை இழந்தேன். நீ என் கண்களுக்குத் தெரியவில்லை: மரணம் நெருங்குகிறது. அருகில் வா. எல்லாம் முடிந்தது. யமதூதர்கள் புறப்படு என்கிறார்கள். ராமன் வருவானா? அவனைப் பார்த்துவிட்டு உயிர் நீப்பேனா? மார்பு அடைக்கிறது. இனி ஏதும் மிச்சம் இல்லை. விளக்கில் எண்ணெய் வற்றிப் போயிற்று, கௌசல்யே! சுமித்ரே!” என்று சொல்லி, வரவரப் பேச்சு அடங்கிப்போய் அன்றிரவே உயிர் நீத்தான் அரசன்.

*

வால்மீகி முனிவர் ராமாயணத்தை ஆரம்பிக்கும் போது ‘எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஓதியவன், தீர்க்கதரிசி, தேஜஸ் அடைந்தவன், யுத்தங்களில் வெற்றி பெற்ற வீரன், யாகங்கள் செய்து முடித்தவன், தருமத்தில் ஈடுபட்டவன், ரிஷியைப் போன்றவன், மூவுலகங்களிலும் புகழ் பெற்றவன், பகைவர்களையொழித்தவன், பல அரசர்களின் நட்பை அடைந்தவன், புலன்களையடக்கியாளும் திறமை கொண்டவன், பெருஞ் செல்வம் திரட்டியதில் இந்திரன் குபேரன் இவர்களுக்குச் சமானமானவன், ராஜ்ய பரிபாலனத்தில் மனுவைப் போன்றவன்’ என்று சொல்லுகிறார், தசரதனைப் பற்றி. அந்தத் தசரதன் புத்திர சோகத்தால் கர்ம விதிப்படி தாங்க முடியாத துக்கத்தையடைந்து உயிர் நீத்தான்.


அடிக்கடி மூர்ச்சை போவதும் பிறகு பிரக்ஞை வருவதுமாக இருந்த தசரதன் உயிர் நீத்த விஷயம் பக்கத்திலிருந்த கௌசல்யை, சுமத்திரைக்குக் கூடத் தெரியவில்லை. அவர்களும் அவர்களும் சோகத்தாலும் கண் விழித்த களைப்பாலும் அந்தப்புரத்தில் ஒரு மூலையில் அயர்ந்து கிடந்தார்கள். பொழுது விடியும் காலத்தில் சூத மாகத காயகர்கள் அந்தப்புர வாயிலில் வழக்கம் போல் கூடி அவரவர்களுடைய கிரமப்படி அரசனையெழுப்ப சுப்பிரபாதம் பாடவும் வாத்தியம் வாசிக்கவும் செய்தார்கள். அரசன் எழுந்திருந்ததாகக் காணவில்லை. அரசன் எழுந்ததும் அவன் தேவைகளைக் கவனிக்க வேண்டிய பணியாட்கள் வெகு நேரம் காத்திருந்துவிட்டு, ‘இன்று அரசன் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை?’ என்று சந்தேகத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள். அரசன் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டார்கள்.


பிறகு அரண்மனை முழுவதும் விஷயம் தெரிந்து ஒரே துயரக் கடலாயிற்று. மூவுலகும் புகழ் பெற்ற தசரத மகாராஜாவின் மனைவியர் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு துக்கம் தாங்காமல் அநாதைகள் போல் அழுதார்கள்.








கருத்துரையிடுக (0)
புதியது பழையவை