30. முன்னாள் நிகழ்ச்சி (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

கௌசல்யை, தசரதனை நிந்தித்துக்கொண்டேயிருந்தாள். அப்படிப் பேசுவதில் புத்திரனை இழந்த தன் பெருந் துக்கத்துக்கு ஒருவித ஆறுதலைக் கண்டாள்.

தசரதன் நிலைமையோ, ஒரு சிக்கலில் அகப்பட்டுப் போய்ப் பெருங் குரூரத்தைச் செய்ய வேண்டியதாக நேரிட்டது. தான் செய்த பிழையும் அதனால் ஏற்பட்ட அக்கிரமமும் அவன் அறியாதவன் அல்ல. ஆயினும் தரும சங்கடத்தினின்று தப்பும் வழியை அவன் காண வில்லை. தகப்பன் உத்தரவை மீறி ராஜ்யத்தை விட மாட்டேன் என்று ராமன் எதிர்த்துப் போர் செய்திருந்தால் தசரதனுக்குச் சந்தோஷமாகவே இருந்திருக்கும். தான் பிடிப்பட்ட வலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருப்பான். ஆனால் ராமனோ “தந்தையினுடைய உத்தரவை மீற மாட்டேன், காட்டுக்குப் போவதே என் கடமை” என்று தருமப் பிடிவாதம் செய்து காட்டுக்குப் போய்விட்டான். சீதையும் லக்ஷ்மணனும் ராமனோடு காட்டுக்குப் போவதே தங்களுடைய கடமை என்று யாருடைய யோசனையையும் கேட்காமல் தீர்மானித்துக் கொண்டு வனம் சென்று விட்டார்கள்.


இவ்வாறு ஏற்பட்ட நிலைமையில் அரசன் இன்னது செய்வது என்று தெரியாமல் தத்தளித்து, அரை ஜீவனாக இருக்கும் சமயத்தில் கௌசல்யை தனக்குத் தோன்றின நியாயத்தையெல்லாம் சொல்லித் தசரதனுடைய குற்றத்தை வெகு கடுமையான முறையில் குத்திக்குத்திக் காட்டிப் பேசினாள்.


“யாரைப் பற்றி உமக்கு என்ன கவலை? நீர் சத்தியம் தவறாமல் இருந்து விட்டால் உமக்குப் போதும். இளம் பெண்ணோடு சுகமாக இருப்பதில் உமக்குத் திருப்தி ஆகிவிட்டது. எனக்கு யார் கதி? ஸ்திரீக்குப் புருஷன்தான் கதி. நான் அடைந்த புருஷனே வேறு மனைவியுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கைவிட்டு விட்டான். என் மகனோ காட்டுக்குப் போய்விட்டான். என் பிறந்தகத்து பந்துக்கள் தூர தேசத்திலிருக்கிறார்கள். புருஷன் உயிரோடிருக்க அங்கே போய் நான் எப்படிப் பந்துக்களை அண்டிப் பிழைக்க முடியும்? நிர்க்கதியாக நிற்கிறேன். உமக்கு இதைப் பற்றியெல்லாம் என்ன கவலை? கைகேயியும் பரதனும் சுகமாக இருந்தால் உமக்குப் போதும். நீர் ஒன்றும் யோசிக்க வேண்டாம். ராமன் காட்டில் பதினான்கு வருஷங்கள் கழித்துத் திரும்பி வந்தாலுங்கூட உம்முடைய சுகத்தை அவன் கெடுப்பான் என்று பயப்பட வேண்டாம். ராமன் திரும்பி வந்தாலும் பரதன் ஆண்ட ராஜ்யத்தை அவன் மறுபடி தீண்டமாட்டான். வேறு மிருகம் கொன்று தின்ற மாமிசத்தின் மிகுதியைக் காட்டுப் புலி தீண்டாது. மீன் தன் குஞ்சுகளைக் கொன்று தின்று விடுவது போல் பெற்ற பிள்ளையைக் கொன்றீர்.”


இவ்விதமாகக் காயம் பட்ட புண்ணில் குத்திக் குத்தி வேதனை செய்யும் முறையில் புருஷனைத் தாக்கிப் பேசிக் கொண்டேயிருந்தாள் கௌசல்யை.


இந்தப் பேச்சைக் கேட்டு வேதனைப் பட்ட அரசன், “என்னுடைய கதி ஏன் இப்படியாயிற்று?” என்று பால்ய காலத்து நிகழ்ச்சிகளை மனத்துக்குக் கொண்டு வந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்துப் பெருமூச்சு விட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான்; பக்கத்தில் கௌசல்யை இருக்கக் கண்டான்.


பூர்வகாலத்து நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்து தசரதனுடைய துக்கம் இருமடங்காயிற்று. இந்தப் பரிதாப நிலையில் மனைவியைப் பார்த்து இரு கைகளும் கூப்பி, “கௌசல்யே, என்பேரில் இரக்கம் கொள்!” என்று அழுதான்.


“அந்நியர்கள் செய்த குற்றத்தைக் கூட நீ எப்போதும் மன்னித்து விடுவாயே? ஏன் என்பால் இப்படி நடந்து கொள்கிறாய்? புருஷனானவன் கெட்டவனாயிருந்தாலும் மனைவிக்கு அவனே தெய்வம் என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லுகிறார்களே. பெருந் துக்கத்தை நீ அடைந்தாய் என்பது உண்மை. ஆயினும் என்னை இப்படிப் பேசி நீ இம்சிக்கலாமா?” என்றான்.


இதைக் கேட்ட கௌசல்யை, “படையெடுத்து வரும் சத்துருவால் ஏற்படும் துன்பங்களை விட உள்ளே வேலை செய்யும் துக்கத்தால் உண்டாகும் தாபம் பெரிது. என்னால் தடுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னிப்பீராக! ராமன் வனம் சென்று ஐந்து ராத்திரியாயிற்று என்று கணக்குச் சொல்லுகிறார்கள். ஐந்து வருஷங்கள் ஆனதைப் போல் அல்லவா எனக்குத் தோன்றுகிறது. அவனை நினைந்து நினைந்து எனக்கு உண்டாகும் துக்கம், நதிகளில் வெள்ளம் பொங்கிப் பெருகுவது போல் அதிகரிக்கிறது! நான் என்ன செய்வேன்? இந்தத் துயர வெள்ளத்தில் நான் என் வசமிழந்தேன். என்னை மன்னிப்பீராக” என்றாள்.


இவ்வாறு கௌசல்யை பேசிய அன்பான மொழிகளைக் கேட்டுத் தசரதன் கொஞ்சம் ஆறுதலடைந்தான். அந்தச் சமயம் சூரியன் மறைந்து இருள்மூட ஆரம்பித்தது. வேதனையால் ஓய்ந்துபோன அரசன் மெள்ளத் தூங்கிப் போனான்.

*

அர்த்த ராத்திரியில் மறுபடியும் தசரதன் விழித்துக் கொண்டு பக்கத்தில் கௌசல்யாதேவி இருப்பதையறிந்தான்.


“பிரியமானவளே! இருக்கிறாயா பக்கத்தில்? கர்ம பலனை மாற்ற முடியாது. நான் செய்த பாவத்தின் விளைவை இப்போது அனுபவிக்கிறேன். அற்ப சந்தோஷங்களுக்காகப் பெருந்தீமை விளைவிக்கக் கூடிய காரியத்தை அறியாமையால் மக்கள் செய்து விடுகிறார்கள். பிறகு பயனை அனுபவிக்கும் போது வருந்துகிறார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்தில் குறியைப் பார்க்காமல் ஓசையைக் கேட்டு அம்பு எய்யும் திறமை பெற்றிருந்தேன். இந்தச் சாமர்த்தியத்தின் அற்ப சந்தோஷத்துக்காக ஒரு காலத்தில் நான் பெரும் பாவத்தைச் செய்ய நேர்ந்தது. அந்த நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன், கேள்” என்று ஆரம்பித்தான்.


“அக்காலத்தில் நீ என்னை வந்து அடைந்திருக்கவில்லை. ஒருநாள் இரவில் தேர் ஏறிச் சரயூ நதிக்கரையில் வேட்டையாடப் போனேன். மழை பெய்து மலை தாதுக்களும் புது மண்ணும் கலந்து பலவித நிறங்களில் ஜலம் எங்கு பார்த்தாலும் ஆறுகளாக ஓடிக் கொண்டிருந்தது. பட்சிகளின் சப்தம் ஒடுங்கிப் போய் வனம் தூங்கினாற் போல் இருந்தது. இரவில் தண்ணீர் குடிக்கப் புலி, கரடி முதலிய மிருகங்கள் வரும் சப்தத்தை வைத்துக் குறி பார்த்து அம்பு எய்யும் பயிற்சி எனக்கு இருந்தபடியால் அதைப் பயன்படுத்திப் பரீட்சிக்கலாம் என்று ஆசை தோன்றிற்று. நல்ல இருட்டு. அந்தச் சமயம் ஒரு யானை தண்ணீர் குடிக்கும் சத்தம் போல் “பொளு” “பொளு” வென்று கேட்டது. உடனே சாமர்த்தியமாகச் சப்தத்தைக் குறி வைத்து அம்பை எய்தேன். என்னுடைய அம்பு விஷ சர்ப்பம்போல் பாய்ந்து சரியாகவே போய்க் குறியைத் தாக்கிற்று. “ஐயோ! செத்தேன்!” என்று ஒரு மனிதக் குரல் கிளம்பியதைக் கேட்டுத் திடுக்கிட்டேன்.”

“என் பேரில் யாருக்குத் துவேஷம்? நான் யாருக்கும் ஒரு குற்றமும் செய்யவில்லையே. தண்ணீர் மொண்டு கொண்டு போக வந்த என்னை எவனோ கொன்றானே! என்ன பயனைக் கருதி என்னைக் கொன்றான்? நான் ஒரு பாவமும் செய்யவில்லையே. விரத வாழ்க்கை வாழும் தபஸ்வியான என் பேரில் யாருக்கு என்ன விரோதம்? கண்ணில்லாத என் கிழத்தாயும் தகப்பனாரும் இனி என்ன செய்வார்கள்? என்னையே நம்பியிருந்தார்களே, அவர்கள் இனி எப்படி உயிர் வாழ்வார்கள்? ஐயோ, நான் இப்படி அநியாயமாய்க் கொல்லப்பட்டேனே!” என்று பரிதாபக் குரலில் ஒருவன் அழுத வார்த்தைகளைக் கேட்டேன். பெருந் திகிலடைந்து என் வில்லும் கையிலிருந்த அம்பும் கீழே நழுவி விழுந்தன.

“அழுகுரல் வந்த இடம் நோக்கிச் சென்றேன். தலைமுடி விரிந்து சிதறி, உடல் எல்லாம் ரத்தமும் சேறுமாகத் தரையில் புரண்டு கொண்டிருந்த ஒரு தபஸ்வியைக் கண்டேன். பக்கத்தில் தண்ணீர்க்குடம் உருண்டு கிடந்தது. என்னைப் பார்த்ததும் அவர் கண்களிலிருந்து வீசிய ஒளி என்னைச் சுடும்போலிருந்தது.


பாவி, நீயா என்னைக் கொன்றது? தண்ணீர் மொள்ள வந்த என் பேரில் ஏன் அம்பு எய்து கொன்றாய்? கண்ணிழந்த வயோதிகப் பெற்றோர் ஆசிரமத்தில் தாகத்தோடு காத்திருக்கிறார்களே! நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவேன் என்று இப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அடே பாவி! ஏன் என்னைக் கொன்றாய்? ஐயோ தெய்வமே! என் தவமும் விரதமும் வேத அத்யயனமும் வியர்த்தமாய்ப் போயிற்றா? நான் இப்படி அடிபட்டுக் கிடக்கிறேன் என்பது என் வயோதிகத் தாய் தந்தையருக்குத் தெரியாதே! வருவான், வருவான் என்று எதிர்பார்த்த வண்ணமாகவே இருப்பார்கள். விஷயம் தெரிந்தாலும் நடக்க முடியாத கபோதிகள் என்ன செய்வார்கள்? நீ யார்? கோசல தேசத்து அரசன் அல்லவா? என்னை அரசனா கொன்றான்? சரி, அரசனே! நீயே போய் அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி அவர்கள் காலில் விழுந்து சரணமடைவாய். இல்லாவிடில் அவர்களுடைய கோபம் உன்னை எரித்துவிடும். அவர்களுடைய சாபம் உன்னைச் சாம்பலாக்கி விடும். தாமதமின்றி அவர்கள் கிடக்கும் ஆசிரமத்துக்கு நேராகப் போவாய்.


இங்கிருந்து அவ்விடத்திற்கு ஒற்றையடிப் பாதை போகிறது. அதன் வழியாகச் சீக்கிரம் சென்று உன்னைக் காப்பாற்றிக் கொள். ஐயோ, இந்த அம்பு என் பிராணனை வேதனை செய்கிறது. இதை இழுத்து எடுத்து விட்டுப் போ என்றார் தபஸ்வி.


தபஸ்வியின் உடலில் பாய்ந்திருந்த அம்பைப் பிடுங்கினால் அவருடைய வேதனை தீரும். ஆனால் என் கையால் உடனே அவர் உயிரும் போய்விடும்படியான காரியத்தைச் செய்ய மனம் வரவில்லை. இந்தத் தரும சங்கடத்தில் நான் ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஒரு கணம் திகைத்து நின்றேன்.


அப்போது அந்த முனி குமாரர், “யோசிக்க வேண்டாம். அம்பைப் பிடுங்கி விட்டு என் வேதனையைத் தீர்த்து விடு. ஸ்திர சித்தமடைந்து விட்டேன். உன் பாவத்தைப் பற்றி யோசிக்காதே. தைரியமாக அம்பைப் பிடுங்கி யெறிந்து என் உயிர் வெளியேறச் செய்வாய் என்று சொன்னார்.


அம்பைப் பிடித்து மெதுவாக இழுத்து விட்டேன். உடனே தரையில் புரண்டு வேதனைப் பட்டுக் கொண்டிருந்த தபோதனர் என்னைப் பார்த்த வண்ணம் பெருமூச்சு விட்டு உயிர் நீத்தார்.


இந்தப் பாவமல்லவா என்னை இப்போது வாட்டுகிறது. கபோதியான அந்தப் பெற்றோர்கள் பட்ட துக்கத்தை. நான் இப்போது அனுபவிக்கிறேன்” என்றான்.





கருத்துரையிடுக (0)
புதியது பழையவை