மூவருடைய உருவம் கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருக்கும் வரையில் சுமந்திரனும் குகனும் அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். கண்ணுக்கு மறைந்து போனதும் அவர்கள் இருவரும் துக்கத்தில் மூழ்கிக் குகனுடைய நகரம் சென்றார்கள். பிறகு அங்கிருந்து சுமந்திரன் குகனிடம் விடை பெற்றுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பினான்.
அயோத்தியா நகரத்தை அணுக அணுக வழக்கமாக நகரத்திலிருந்து கிளம்பி வரும் சப்தங்களுக்கும் காட்சிகளுக்கும் பதிலாக நகரம் பாழடைந்த ஊர்போல் தென்பட்டது. சுமந்திரனுடைய தேரானது கோட்டை வாயிலைக் கடந்து ஊருக்குள் பிரவேசித்ததும் “ராமன் எங்கே? ராமன் எங்கே?” என்று ஊரார் தேரைச் சுற்றிக் கொண்டார்கள்.
“அருமை ஜனங்களே! ராம லக்ஷ்மணர்கள் கங்கையைத் தாண்டி விட்டார்கள். என்னை ஊருக்குத் திரும்பு என்று சொல்லிவிட்டு அவர்கள் வனத்தில் கால்நடையாகச் சென்றார்கள்” என்று கூறினான்.
“ஐயோ!” என்று கதறினார்கள்.
அங்கேயும் அரண்மனை வாயிலில் ஒரே ஜனக் கூட்டமாயிருந்தது. “ராமனை வனத்தில் விட்டு விட்டு வரும் இவர் கௌசல்யைக்கு என்ன சொல்லப் போகிறார்? அவள் எப்படி உயிரை வைத்துக் கொண்டிருப்பாள்?” என்றெல்லாம் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்கக் கேட்கச் சுமந்திரன் துக்கம் அதிகரித்தவனாக மெள்ள அந்தப்புரத்துக்குள்ளே சென்றான்.
அங்கே குற்றுயிராகக் கிடந்த அரசனைப் பார்த்தான். ராமன் அரசனிடம் கூறும்படி சொல்லியிருந்ததையெல்லாம் பக்கத்தில் நின்று மெதுவாகச் சொன்னான். தசரதன் ஒன்றும் பேசவில்லை.
அப்போது கௌசல்யா தேவி துக்கம் தாங்காமல் தசரதனைப் பார்த்துக் கடுமையாகப் பேசினாள்:
“மகா பாக்கியவானே! உலகம் வியக்கும்படியான விரதத்தை ஒப்புக்கொண்ட என் குழந்தையைக் காட்டில் விட்டுவிட்டுத் திரும்பி வந்த தங்களுடைய அமாத்தியர் இதோ நிற்கிறார். ஏன் அவரிடம் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்? கைகேயிக்கு வரம் தந்தது அப்போது எளிதாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இப்போது ஏன் வெட்கப்படுகிறீர்? வரத்தின் பயன் இதுவாகும், என்று உமக்குத் தெரியாதோ? நீர் என்னவோ உம்முடைய சத்தியத்தைக் காப்பாற்றிக் கொண்டீர். உமக்கு என்ன குறை? என் துக்கத்தில் யார் பங்கு எடுத்துக் கொள்ள முடியும்? அதை நான்தான் அனுபவிக்க வேண்டும். நீர் துக்கப்படுவதைப் பார்த்து எனக்குத் திருப்தி ஏற்பட முடியுமா? துக்கப்பட வேண்டியது முறையாயிற்றே என்று நீர் துக்கப்பட வேண்டியதில்லை. ஏன் பேசாமல் இருக்கிறீர்? இங்கே கைகேயி இல்லை. பயப்பட வேண்டாம். ராமனைப் பற்றி அவனை வனத்தில் விட்டுத் திரும்பிய சுமந்திரரை விசாரித்துக் கேட்பீராக. பயப்படவேண்டாம். இயற்கையை ஏன் வழியடைக்கிறீர்? கைகேயி இல்லை.”
துக்கத்தைத் தாங்க முடியாமல் புருஷனை இவ்வாறு குறை கூறிப் பேசினாள் கௌசல்யை.
கோபமும் துக்கமும் பதிபக்தியும் எல்லாம் ஒன்று சேர்ந்து அவள் உள்ளத்தை வேதனை செய்தன.
அந்த வேகத்தைத் தாங்காமல் மூர்ச்சையடைந்தாள். இதைக் கண்டு உயிர் போய்விட்டதோ என்றே. அந்தப்புரம் முழுதும் பயந்தார்கள். அலங்கோலமாயிற்று.
புத்திர சோகத்தினால் கௌசல்யா தேவி தன்னுடைய புருஷனின் உடல் நிலையையாவது மன நிலையையாவது சரியாக உணரவில்லை. அவனுடைய துக்கத்தைக் குறைப்பதற்குப் பதில் அதிகமாக்கினாள். தசரதன் மூர்ச்சை தெளிந்த பிறகு, சுமந்திரனை விசாரித்தான். சுமந்திரனும் இராமன் சொல்லியனுப்பியவாறு எல்லாருக்கும் சொல்ல வேண்டியதைச்
சொல்லித் தன் கடமையைச் செய்து முடித்தான்.
*
கௌசல்யா தேவியைச் சுமந்திரன் பலவாறாகத் தேற்றிச் சமாதானப்படுத்தப் பார்த்தான். “ராமன் இருக்குமிடத்தில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டோமே! என்னால் துக்கம் பொறுக்க முடியவில்லை. தண்டகாரண்யத்தில் சீதையுடன் நானும் இருப்பேன்” என்று கௌசல்யை அழுது கொண்டேயிருந்தாள்.
“தேவி, இந்த மனக் குழப்பத்தை அகற்றிவிட்டுத் தைரியமாக இருக்கவேண்டும். அயோத்தியிலிருந்ததைக் காட்டிலும் வனத்தில் ராமன் மிக ஆனந்தமாகக் காலம் கழித்து வருகிறான். துக்கப்படவே இல்லை. லக்ஷ்மணனும் ராமனுக்குப் பணிவிடை செய்து கொண்டு தரும் வாழ்க்கையின் பயனை அடைந்து வருகிறான். அவனுக்கு ஒரு குறையுமில்லை. சீதையோ அரண்மனையில் இருந்தது போலவே வனத்திலும் தன் பிராணனை ராமனிடத்தில் நாட்டிப் பயம், விசனம் ஒன்றுமில்லாமல் மிகச் சந்தோஷமாக இருக்கிறாள். பிறந்தது முதல் காட்டில் வளர்ந்தவளைப் போலவே விளையாட்டாகக் காலங் கழிக்கிறாள். அயோத்தியையில் உத்தியான வனத்தில் ராமனுடன் விநோதமாகக் காலம் கழிப்பது போல் வனத்திலும் சந்தோஷமாகவே இருக்கிறாள். உதய சந்திரனைப் போன்ற அவளுடைய முகத்தின் அழகு கொஞ்சமும் குறையவில்லை. குழந்தையைப் போல் கவலையாவது பயமாவது கொஞ்சமும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாள். ராமன் பக்கத்திலிருப்பதால் அவளுக்கு வருத்தம் என்பது அணுவளவுமில்லை. செல்லும் வழியில் கிராமங்கள், ஊர்கள், ஆறுகள், மரம், செடி, புஷ்பம் இவைகளைப் பற்றியெல்லாம் விசாரித்தவாறு லக்ஷ்மணனோடும் ராமனோடும் சம்பாஷித்துக் கொண்டு உல்லாசமாக நடந்து போகிறாள். வனவாசம் அவளுக்கு ஒரு தோட்டத்தில் விளையாடுவது போலிருக்கிறது. எழில் எள்ளளவும் குன்றவில்லை. நடப்பதினால் அவள் பாதங்கள் மருதோன்றி இட்டுக் கொள்ளாமலேயே சிவந்து தாமரையைப் போல் பொலிவு அடைந்து வருகின்றன. வனத்தில் ஆனந்த நர்த்தனம் செய்வது போலவே நடக்கிறாள். கால்களில் சலங்கைகள் இல்லையென்பதுதான் வித்தியாசம். நான் சொல்லுவது எல்லாம் உண்மை. நீங்கள் விசனப்படவேண்டாம். அவர்கள் மூவரும் உலகத்துக்கொரு பாடமாகத் தருமத்தை நடத்தி வருகிறார்கள். சக்கரவர்த்தியின் பிரதிக்ஞையை நிறைவேற்றி வருகிறார்கள். பித்ரு வாக்கிய பரிபாலனம் செய்கிறார்கள். அவர்களுடைய தவம் உலகத்தில் பெரும் புகழுடன் என்றென்றும் நிற்கும். துக்கப்படுவதற்குக் காரணமில்லை.”
இவ்வாறெல்லாம் பல சொல்லித் தேற்றிப் பார்த்தான் சுமந்திரன். ஆனாலும் கௌசல்யை கொஞ்ச நேரம் சமாதானப்படுவாள். பிறகு “ஐயோ, ராமா!” “ஐயோ, குழந்தாய்!” என்று கதறுவாள். காட்டில் ராமனை விட்டுவிட்டு வந்த சுமந்திரனைப் பார்த்த பிறகு அவள் துக்கம் அதிகரித்தது.