28. சித்திரகூடம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பரத்துவாஜருடைய ஆசிரமத்தில் ஒரு ராத்திரி படுத்துத் தூங்கி, காலையில் எழுந்து ராம லக்ஷ்மணர்களும் சீதையும் மகரிஷியை வணங்கி விட்டுச் சித்திரகூட மலைக்குப் போகப் புறப்பட்டார்கள். தம் சொந்தக் குழந்தைகளை ஆசீர்வதிப்பது போல் வேறு துணையின்றி வனம் செல்லும் ராஜகுமாரர்களை முனிவர் மிக்க அன்புடன் மந்திர பூர்வமாக நற்செலவு கூறி வழி அனுப்பினார். போகும் வழியை நன்றாக விளக்கிச் சொன்னார். அவர் குறிப்பிட்ட மார்க்கமாகவே மூவரும் சென்றார்கள். முனிவர் சொல்லியபடி வேகமாக ஓடும் காளிந்தியாற்றைக் கடப்பதற்கு ஒரு தெப்பம் கட்டினார்கள். அதற்கு வேண்டிய மரக்கட்டைகளும் மூங்கில்களும் வெட்டிச் சேர்த்துக் காட்டுக் கொடிகளால் நன்றாகக் கட்டினார்கள். அதில் சீதை உட்காருவதற்காக லக்ஷ்மணன் இலைகளும் சிறு கிளைகளும் பரப்பி நன்றாக அமைத்தான். தெப்பத்தில் சீதையை ராமன் உட்காரச் சொன்னபோது கொஞ்சம் கூச்சத்தோடு ஏறி உட்கார்ந்தாள். பிறகு சீதையின் துணி மூட்டையையும், கிழங்கு வெட்டுவதற்கான குந்தாலி, கூடை முதலியவற்றையும் சரியாகத் தெப்பத்தில் வைத்துத் தாங்களும் ஏறினார்கள். ஏறி மெதுவாக ஆற்றைத் தாண்டினார்கள்.

ஆற்றின் நடுவில் செல்லும்போது சீதை நதியை வணங்கி, நாதனுடைய பிரதிக்ஞை க்ஷேமமாக முடிந்து மூவரும் ஊர் திரும்பும்படி அருள்வாயாக என்று வேண்டிக் கொண்டாள்.


இவ்வாறே இன்னும் சில ஆறுகளையும் கடந்து சென்றபின் பரத்துவாஜ முனிவர் குறிப்பிட்ட பெரிய ஆலமரத்தைக் கண்டார்கள். அந்த ஆலமரத்தடியிலும் சீதாதேவி பூஜை செய்தாள். “என் புருஷனுடைய விரதம் முடிவடைய வேண்டும் மரமே! கௌசல்யை, சுமித்திரை இவர்களை நான் திரும்பிப் பார்க்கும்படி அருள்வாய்” என்று பிரார்த்தனை செய்தாள்.


“லக்ஷ்மணா! நீ முன்னால் சீதையுடன் செல்வாய். நான் பின்னால் ஆயுதபாணியாய் நடப்பேன். வழியில் அவள் கேட்கும் பூவோ பழமோ எதை இஷ்டப்பட்டாலும் அதைப் பறித்துக் கொடுத்து அவளை உற்சாகப் படுத்திக் கொண்டே நடப்பாய்” என்றான் ராமன்.


அவ்வாறே சீதையும், 'அந்த மரம் என்ன மரம்?' 'இந்தச் செடி என்ன செடி?' 'அதோ அந்தக் கொடி யைப் பாருங்கள்; அதில் புஷ்பங்களைப் பாருங்கள்”! என்று மிக ஆனந்தமாய் ராமனையும் லக்ஷ்மணனையும் கேட்டுக் கொண்டும், அதற்கு முன் தான் பார்த்திராத புஷ்பங்களையும் பழங்களையும் பார்த்து மகிழ்ந்து கொண்டும் சென்றாள்.


பிறகு ஓர் ஆற்றங்கரையை அடைந்தார்கள். வனத்தில் அனேக வித மிருகங்களையும் பட்சிகளையும் சீதைக்குக் காட்டிச் சந்தோஷமாக உலாவிவிட்டு இரவில் ஆற்றங்கரையில் தங்கினார்கள்.


இவ்விடத்திலும், இன்னும் பலவிடங்களிலும் ராம லக்ஷ்மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த, அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த, வேட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் வியக்தமாக எழுதியிருக்கிறார். இதைப் பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை. காலத்துக்கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துப் பொது தருமம்.

*

மறுநாள் காலையில் ராமன் லக்ஷ்மணனை எழுப்பி, “தம்பி, மரங்களில் பறவைகள் மதுரமாகச் சப்திப்பதைக் கேள்! புறப்படுவதற்கு நேரமாயிற்று” என்றான்.


லக்ஷ்மணன் வனவாச காலம் முழுவதும் சாப்பிடாமலும் தூங்காமலும் விரதம் காத்தான் என்கிற கதை வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படவில்லை. ஆன படியால் லக்ஷ்மணனை அதிகாலையில், இன்னும் கொஞ்சம் தூக்க மயக்கத்திலிருந்த சமயம் ராமன் எழுப்பினான் என்று இவ்விடத்தில் சொல்லியிருப்பதில் முரண் ஒன்றுமில்லை.


உடனே லக்ஷ்மணன் தூக்கம் தெளிந்து எழுந்தான். எல்லாரும் ஸ்நானம், ஜபம் முதலிய காரியங்களை முடித்துக்கொண்டு கிளம்பினார்கள்.


பரத்துவாஜர் குறிப்பிட்டிருந்த வழியிலேயே சென்றார்கள். அப்போது வசந்த காலம். மரங்களும் செடிகளும் சித்திர விசித்திர வண்ணப் புஷ்பங்களைப் பூத்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போல் பிரகாசித்தன. சில மரங்களில் கனிகளும் துளிர்களும் கிளைகள் தாங்க முடியாத பெரும் பாரமாகத் தொங்கின. “மனிதர்களால் சேதப்படுத்தாத விருக்ஷங்களின் அழகைப் பார்! தேன் கூடுகள் தொங்குவதைப் பார்! புஷ்பங்கள் உதிர்ந்து, புஷ்பப் படுக்கையாக விளங்கும் தரையைப் பார்! கூவும் பறவைகளின் குரலைக் கேட்டாயா? எவ்வளவு மனோகரமாக ஒன்றுக்கொன்று பிரதி நாதம் செய்து கொண்டு, ஆனந்தமாக வசிக்கின்றன! இதையெல்லாம் அநுபவித்துக் கொண்டு நம்முடைய வன வாசத்தைச் சுகமாகக் கழித்து விடலாம்” என்று ராமன் லக்ஷ்மணனுக்கும் சீதைக்கும் அவ்வப்போது சொல்லிக் கொண்டே நடந்தான்.


அதற்குள் சித்திர கூடமலை தென்பட்டது. அதைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்து வேகமாக நடந்தார்கள்.


“இந்த மலைப் பிரதேசத்தின் அழகு பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டே போகிறது! கிழங்குகளும், பழங்களும் நிறைந்த வனமாக இருக்கிறது. ஜலம் எவ்வளவு சுத்தமாகவும் ருசியாகவும் இருக்கிறது! ரிஷிகளும், ஆசிரமவாசிகளும் இருக்கும் இந்த வனத்தில் நாமும் சந்தோஷமாக இருக்கலாம்” என்றான் ராமன்.

*

பிறகு வசிப்பதற்கு ஆசிரமம் கட்டத் தீர்மானித்தார்கள். லக்ஷ்மணன் மிக சாமர்த்தியசாலி. எல்லாச் சௌகரியங்களும் கொண்ட வசதியான குடிசையைக் காற்றுக்கும் மழைக்கும் அசையாதபடி கட்டி முடித்தான். சாளரமும் கதவுகளும் அமைத்துப் பாய்களும் வேய்ந்து தொங்கவிட்டு எல்லாம் அழகாக லக்ஷ்மணன் ஒருவனாகவே செய்து முடித்து விட்டான்.

ரமணீயமான சித்திரகூட மலைப் பிரதேசத்தில் மால்யவதி நதிக்கரையில் கட்டிய இந்த ஆசிரமத்தில் மூவரும் வசித்து வந்தார்கள். எந்தக் கவலையுமின்றி வனவாச தருமத்தை அனுசரித்து வந்தார்கள். பிறந்து வளர்ந்த நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்ட துக்கத்தை மறந்துவிட்டு இந்திரன் தேவ கணங்களுடன் சுவர்க்கத்தில் வசிப்பது போல் சந்தோஷமாகக் காலங் கழித்தார்கள்.

*

கம்பரும் வால்மீகியும் இந்தக் கட்டத்தை ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டவர்கள் போல் அழகாக வர்ணிக்கிறார்கள்.


ஆசிரமம் கட்டி முடிந்ததும் அந்தப் பர்ணசாலையைப் பார்த்து,

“என்று கற்றனை நீ இதுபோல்?”

என்று ராமன் தம்பியைக் கட்டி அணைத்துக் கண்ணீர் விட்டதாகக் கம்பர் பாடியிருக்கிறார். அப்படித்தானே நடந்திருக்க வேண்டும்!


“பூவை விட மெல்லிய பாதங்களைப் படைத்த இந்த மிதிலை ராஜகுமாரி பெருங்காட்டையும் நடந்து தாண்டினாள். அவளுடைய பாதங்கள் செய்த அற்புதத்தைப் போல், தம்பி, உன் கைகள் இந்தத் தச்சு, கொத்து வேலையும் செய்து விட்டன! நம்முடைய துரதிர்ஷ்டத்திலிருந்து உண்டான நல்ல அதிர்ஷ்டத்தை உன் கைவேலையில் கண்டேன்” என்று ராமன் ஆனந்தக் கண்ணீர் விட்டதைக் கம்பர் அற்புதமான முறையில் பாடியிருக்கிறார். இதை டி.கே.சி. எனக்குப் பல தடவை அவருடைய தனிப் பாங்கில் பாடிக் காட்டி உள்ளத்தை உருக்கியிருக்கிறார். பின்னால் வரும் கஷ்டங் களையும் துக்கங்களையும் எடுத்துக்காட்ட ஒரு அற்புதப் பின் திரையாகிறது இந்தச் சித்திரகூட மகிழ்ச்சி நிலை.


கம்பரும் வால்மீகியும் இருவரும் இந்த இடத்தில் ராம லக்ஷ்மணர்களையும் சீதையையும் விட்டு விட்டு அயோத்தியைக்குச் செல்லுகிறார்கள். அயோத்தியையின் பரிதாப நிலையையும் பரதனுக்கு ஏற்பட்ட அநியாயப் பழியையும் துக்கத்தையும் கவனிக்கப் போகிறார்கள்.




கருத்துரையிடுக (0)
புதியது பழையவை