தமஸா நதிக்கரையில் படுத்து உறங்கின அயோத்தி நகரவாசிகள் காலையில் எழுந்து பார்த்தார்கள். ராமனையும் தேரையும் காணாமல் பிரமித்து இங்கு மங்கும் தேடிப் பார்த்துத் தேர்ச் சக்கரத்தின் சுவட்டைப் பின்பற்றிப் போய் மறுபடி அயோத்திக்குப் போகும் வழியோடு அது கலந்து போனதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்கள். நகரத்துக்குத் திரும்பித் தத்தம் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். கைகேயியைப் பலவாறாக நிந்தித்துத் திருப்தியடையப் பார்த்தார்கள். ராமனையிழந்த நகரம் அழகையிழந்து துயரத்தில் மூழ்கிற்று.
*
விடிவதற்கு முன்னமே புறப்பட்டுப் போன ரதம் வனத்தில் வெகுதூரம் சென்று விட்டது. பல நதிகளைக் கடந்து கோசல தேசத்தின் தெற்கு எல்லையை நோக்கிச் சென்றார்கள். ராமன் சுமந்திரனோடு பேசிக் கொண்டே போனான். “நான் மறுபடியும் சரயூ நதிக்கரை வனத்தில் என்று வேட்டையாடுவேன்? வேட்டையாடுவது சரியா? ஓரளவுதான். அத்தகைய காரியங்களில் அரசகுமாரர்கள் ஈடுபட வேண்டும். அளவுக்கு மிஞ்சிப் போனால் அது கெட்ட வழக்கமாகும்.”
இம்மாதிரிப் பொழுதுபோக்காகப் பல விஷயங்கள் பேசிக் கொண்டே அவர்கள் சென்றார்கள்.
கோசல நாட்டின் தென் எல்லையைச் சேர்ந்ததும் ராமன் தேரை நிறுத்தி அயோத்தி நகரத்தை, திசை நோக்கி வணங்கினான்.
“நகரங்களுக்குள் மாணிக்கமே! இக்ஷ்வாகு வம்சத்தின் தலைநகரமே! என் வனவாச விரதம் முடிந்து தந்தை தாய்களையும் உன்னையும் மறுபடி தரிசிப்பேனா? நீ அந்தச் சந்தோஷத்தை எனக்குத் தரவேண்டும்” என்று பிரார்த்தனை செலுத்தினான்.
தேர் கங்கை நதிக்கரையை அடைந்தது. நதியின் அபார அழகை அனுபவித்துக் கொண்டே சென்றார்கள். மிக ரம்மியமான ஓர் இடத்தைக் கண்டதும் ராமன், “இவ்விடம் இன்று இரவு தங்கலாம்” என்றான்.
குதிரைகளை அவிழ்த்து விட்டு ஒரு மரத்தடியில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அந்தப் பிரதேசத்துக்கு அதிபதி குகன். ராமன் வருவான் என்பதைத் தன்னுடைய ஆட்களால் முன்னாலே அறிந்த குகன் தன் பரிவாரங்களுடன் ராம லக்ஷ்மணர்களைத் தரிசிக்கத் வந்தான்.
குகன் ராமனிடம் அபார அன்பு கொண்டவன். கங்கைக் கரை நிஷாதர்களுக்குத் தலைவன். மிகவும் செல்வாக்கும் புகழும் பெற்ற ஸ்தலபதி. தூரத்தில் வரும்போதே குகனைப் பார்த்துச் சக்கரவர்த்தித் திருமகனும் லக்ஷ்மணனும் எழுந்து அவனிடம் சென்றார்கள். குகன் ராமனை ஆலிங்கனம் செய்து வரவேற்றான்.
“இந்தத் தேசம் உனதாகவே வைத்துக் கொள்வாய். அயோத்தி எப்படியோ அப்படியே இதுவும் உன்னுடையதாகும். இத்தகைய அதிதி எவனுக்குக் கிடைப்பான்? இது என் பாக்கியம்” என்றான் குகன்.
குகனுடைய உபசாரம் அபாரமாக இருந்தது. அவனுடைய ஆட்கள் பலவித உணவுப் பதார்த்தங்களும் பணியாரங்களும் கொண்டு வந்து வைத்தார்கள். “என் ராஜ்யத்தில் நீ சுகமாக இருக்கலாம். பதினான்கு வருஷங்களும் கழிக்கலாம். ஒன்றும் குறைவு இருக்காது. உன்னை உபசரிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், அருள்வாய்!” என்றான்.
ராமன் அவனை இறுகத் தழுவி, “அப்பனே! உன் அன்பு எனக்குத் தெரியும். உன் உபசாரத்தை இங்கே பெற்றேன். அதற்கு மேல் நான் விரதத்தால் கட்டுப் பட்டு நிற்கிறேன். வனவாசம் செய்ய வந்திருக்கிறேன் அல்லவா? இதோ, இந்தக் குதிரைகள், என் தந்தைக்கு இவை மிகப் பிரியமான குதிரைகள். அவற்றிற்கு நல்ல தீனி ஏற்பாடு செய்வாய். நாங்கள் வனவாசத்துக்குரிய உணவைப் புசித்துப் படுக்கிறோம்” என்றான்.
அன்று அந்த மரத்தடியில் ராமனும் சீதையும் தங்கினார்கள். லக்ஷ்மணன், குகனுடனும் சுமந்திரனுடனும் பேசிக் கொண்டே அன்று இரவும் தூங்காமலே கழித்தான்.
குகன் லக்ஷ்மணனுக்குச் சொன்னான்:
“அப்பனே, நீ படுத்துத் தூங்குவாய். அதோ உனக்கு இடம் சரியாகப் பண்ணி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வனத்தில் என்னையறியாமல் யாரும் ஏதும் செய்ய முடியாது. என்னுடைய ஆட்கள் மிகக் கவனமாகக் காவலிருக்கிறார்கள். ராமனைப் பற்றிக் கவலையோ பயமோ வேண்டியதில்லை - தூங்குவாய்”.
இதைக் கேட்டு லக்ஷ்மணன், “குகனே! எனக்குத் தூக்கம் வரவில்லை. அதோ சீதை, ஜனக மகாராஜனின் மகள், தசரத சக்கரவர்த்தியின் மருமகள் தரையில் படுத்திருக்கிறாள். மூன்று உலகமும் யுத்தம் செய்து வசமாக்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்த புருஷோத்தமன் புல் தரையின் மேல் படுத்துக் கிடக்கிறான். இதைப் பார்த்தும் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?” என்றான்.
“ராமனை வனத்துக்கு அனுப்பி விட்ட அயோத்தி நகரம் எவ்வாறு பிழைக்கும்? அரண்மனை அந்தப்புரம் அழுகுரலால் நிரம்பும். கௌசல்யையும் என் தாயும் இப்போது உயிருடன் இருக்கிறார்களோ, உயிர் நீத்தார்களோ, எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. 'வனம் போ' என்று தந்தை எளிதில் சொல்லி விட்டாரேயொழிய ராமனை அனுப்பிவிட்ட பின் அவர் உயிர் வைத்திருப்பது சந்தேகம். அவர் இறந்தால் பிறகு எங்கள் தாய்மார்களின் கதியும் அதுவே. அந்திமக்கடன் செய்வதற்குக்கூட நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. எங்களுடைய வனவாச விரதம் முடிந்து நாங்கள் திரும்பி ஊர் போய்ச் சேரும் போது, தந்தையும் தாய்மார்களும் உயிருடனிருந்து சந்தோஷப் படுவார்களா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாகத்தான் இருக்கிறது” என்றான்.
இப்படித் துயரம் நிறைந்த மொழிகளை மனமுருகிப் பேசினான் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட குகனும் கண்ணீர் விட்டான். இரவெல்லாம் இவ்வாறு பேசிக் கொண்டு கழித்தார்கள்.
அதிகாலையில் ராமன் எழுந்து லக்ஷ்மணனுக்குச் சொன்னான்:
“நதியைத் தாண்டிப் போகவேண்டும். குகனுக்குச் சொல்லி இந்த அகலமான நதியைக் கடப்பதற்குப் பெரிய ஓடம் ஏற்பாடு செய்யும்படி சொல்லுவாய்!” என்றான்.
அவ்வாறே குகனும் தன் காரியஸ்தர்களுக்குச் சொல்லி ஒரு நல்ல ஓடத்தை அமைத்து ராமனுக்குத் தெரிவித்தான். ஆயுத பாணிகளாக ராமலக்ஷ்மணர்களும் சீதையும் நதியை நோக்கிச் சென்றார்கள்.
சுமந்திரன் ராமனை வணங்கி, “இனி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
ராமன் சுமந்திரன் தோளின் மேல் கையை வைத்து, “சுமந்திரரே, சீக்கிரம் அயோத்தி திரும்பிச் செல்லுவீர். அரசன் பக்கத்திலிருப்பீர். அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வீர்” என்றான்.
“உலகத்தில் சீலம், அத்தியயனம், நல்ல நடத்தை இவையெல்லாம் ஒரு பயனும் இல்லை என்பதை இப்போது அறிந்தேன். நீயும் தம்பியும் வைதேஹியுடன் வனத்தில் வசிக்கப் போகிறீர்களே! எங்களுக்கு இனி என்ன கதி? கைகேயி ஆட்சியில் நாங்கள் எப்படிப் பிழைப்போம்?” என்று சொல்லிச் சுமந்திரன் குழந்தை போல் உரக்க அழுதான்.
ராமன் அவன் கண்களைத் துடைத்து, “எங்கள் குலத்துக்கு உத்தமமான நண்பர் உம்மைப் போல் வேறு யாரும் இல்லை. தந்தை துக்கம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உம்முடைய கடமை. மனம் உடைந்து போயிருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் அது சரியா அல்லது கைகேயியைத் திருப்தி செய்வதற்காகச் சொல்லுகிறாரா என்று விசாரியாமல் அவர் சொன்னபடி செய்து அவருடைய மனத்தில் கஷ்டம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வனத்திலிருக்கும் எங்களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் பதினான்கு வருஷம் சுலபமாகக் கழித்துத் திரும்பி வந்து விடுகிறோம் என்று நான் சொன்னதாக அரசனிடமும் எல்லாரிடமும் சொல்ல வேண்டும். பரதனைச் சீக்கிரம் தருவித்து அரச பதவியில் அமர்த்தி எங்கள் அன்பைச் சொல்லி, பெரிய அன்னைகள் இருவரையும் தன்னைப் பெற்ற தாய் கைகேயியைப் போலவே பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்” என்றான்.
இவ்வாறு ராமன் சொன்னான். ஆனாலும் சுமந்திரன் துக்கம் தாளாமல், “நான் எப்படித் திரும்பிப் போய், என்ன சொல்லி, யாரைச் சமாதானப் படுத்துவேன்?” என்றான். தேரைப் பார்த்து, “நீ இல்லாமல் சூனியமாக நிற்கும் இந்தத் தேரை நான் எப்படி ஓட்டுவேன்?” என்று அழுது கொண்டேயிருந்தான்.
ராமன் மறுபடியும் சுமந்திரனுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லிக் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு பொறுமையுடன் இருப்பதே அவன் கடமை என்று கூறி அனுப்பினான்.
“குகனே! நீ விரும்பியபடி உன் ராஜ்யத்தில் நான் சந்தோஷமாக இருந்துகொண்டு பதினான்கு வருஷங்கள் கழிக்கலாம். ஆனால் அது நான் பிரதிக்ஞை செய்த வனவாசம் ஆகுமா? தகப்பனார் கொடுத்த வாக்கைச் சத்தியமாக்க நான் அயோத்தியை விட்டு வந்திருக்கிறேன். ஆனபடியால் தாபஸ வாழ்க்கை வாழ வேண்டும். ருசியாகச் சமைக்கத் தெரிந்தவர்கள் பக்குவப்படுத்திய பதார்த்தங்களை நான் தொடக்கூடாது. பழம், கிழங்கு, காய் அல்லது விலக்கப்படாத மாமிசத்தை நாங்களே சம்பாதித்து வேள்வித் தீயில் சுட்டு ஆகாரம் செய்ய வேண்டும்.”
இப்படிச் சொல்லிக் குகனைச் சமாதானப்படுத்தித் தங்கள் தலை மயிரை அவ்விடத்தில் ஆலமரத்துப் பாலால் திரித்து ஜடையாகச் செய்து முடித்துக் கொண்டார்கள்.
சீதையை ஓடத்தில் ஏற்றி உட்காரவைத்து, பிறகு இரு ராஜகுமாரர்களும் ஏறினார்கள். குகன் தன் ஆட்களுக்குச் சொல்லி ஓடத்தைச் செலுத்த உத்தர விட்டான்.
ஓடக்காரர்கள் ஓடத்தைக் கங்கையில் வேகமாகச் செலுத்தினார்கள். நடு ஆற்றில் சீதை பாகீரதியைத் தியானித்து, “தேவீ! எங்களுடைய விரதத்தை முடித்து மறுபடியும் உன்னைக் கடந்து க்ஷேமமாக ஊர் திரும்ப அருள்வாயாக!” என்று நமஸ்கரித்தாள்.
பிறகு பேசிக்கொண்டே கங்கையைக் கடந்து அக்கரை அடைந்தார்கள். அங்கே மூவரும் முதல் முதல் வேறு துணையின்றி நின்றார்கள்.
“லக்ஷ்மணா! நீதான் இனி எனக்குக் காவல் படை!” எனறான் ராமன். “நீ முன்னால் செல். சீதை உன்னையடுத்தாற் போல் செல்லவேண்டியது. நான் உங்கள் இருவருக்கும் பின்னால் வருவேன். வனவாசத்தின் கஷ்டங்கள் சீதைக்கு அதிகமாயிராமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இனி ஜனக் கூட் டம் கிடையாது. விளையாட்டு வேடிக்கைகள் கிடையாது.”
அன்று ராமனுக்குக் கௌசல்யாதேவியின் நினைவு வந்து ரொம்பவும் துக்கப்பட்டான்.
“லக்ஷ்மணா! நீ திரும்பிப் போய் என்னைப் பெற்ற கௌசல்யா தேவியையும், உன்னைப் பெற்ற சுமித்திரா தேவியையும் பாதுகாத்தல் நலமல்லவா? நான் எப்படியாவது சமாளித்துக் கொள்ளுகிறேன்” என்றான். இதற்கு லக்ஷ்மணன், “மன்னிக்கவும், நான் அயோத்திக்குத் திரும்பிப் போக முடியாது!” என்றான். இது ராமன் எதிர்பார்த்த பதிலே.
இப்படி அடிக்கடி மானுஷ சுபாவம் தலையெடுத்துச் சக்கரவர்த்தித் திருமகன் துக்கப்படுவதையும் பேசுவதையும் பார்ப்போம். இதுவே ராமாயணத்தின் அழகு. சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் ஈசுவரனாகவே இருந்து எல்லாம் செய்து முடித்து விட்டால் பிற்பாடு அவதாரம் ஏது? சாமான்ய தருமத்தை நிலை நாட்டுவது ஏது? ஆதி அவதாரங்களுக்கும் பிந்திய அவதாரங்களுக்கும் பேதம் இதுவே. ராமாவதாரத்தில் மானுஷ சுபாவத்தின் போக்கும் அதனுடன் சாதாரண தருமத்தின் விளக்கமும் சேர்ந்து வரும். இதைத்தான் ராமசந்திரன் யுத்தம் முடிந்து சீதை அக்கினிப் பிரவேசம் செய்யும் சமயம் சொன்னான்.
ஆத்மானம் மானுஷம் மன்யே
ராமம் தசரதாத்மஜம்
“நான் என்னைத் தசரதன் மகன் ராமன் என்கிற மனிதனாகத்தான் எண்ணி வருகிறேன். உண்மையில் நான் யார்? யாரைச் சேர்ந்தவன்? எதற்காகப் பிறந்தேன்? இந்த விஷயங்கள் எனக்கு எப்படித் தெரியும்? தாங்கள்தான் எனக்குச் சொல்ல வேண்டும்.” இவ்வாறு அச்சமயம் ராமனே பிரம்மாவிடம் சொன்னதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
கங்கையின் தென் கரையில் ராமன் துக்கப்பட்டுப் பேசியபோது லக்ஷ்மணன் ராமனுக்குத் தைரியம் சொல்லித் தேற்றினான்.
அன்றைய இரவு ஆலமரத்தடியில் கழித்து மறு நாள் காலையில் புறப்பட்டு அஸ்தமிக்கும் சமயம் பரத்வாஜ முனிவருடைய ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்கள். அவ்விடம் உபசாரங்களைப் பெற்று “எந்த இடத்தில் நாம் வனவாசம் ஏகாந்தமாகச் செய்ய முடியும்?” என்று முனிவரைக் கேட்டு அவருடைய யோசனையையும் ஆசியையும் பெற்றுச் சித்திரகூடம் சென்றார்கள்.