26. வனம் சென்றனர்! (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

குமாரன் மரவுரி தரித்துக் கடைசியாகப் பேசியதைக் கேட்ட அரசன் மனமுடைந்து போய்ப் படுக்கையில் கிடந்தான். ராமனை நினைத்துக் கொண்டு அழுதான். பேச முடியவில்லை.

பேசுவதற்குக் கொஞ்சம் சக்தி வந்ததும், “நான் எத்தனையோ கன்றுகளைக் கொன்று தாய்ப் பசுக்களை இம்சித்திருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தத் துக்கம் எனக்கு நேர்ந்திராது. மரணமும் நாம் வேண்டுகிறபோது நம் இஷ்டப் பிரகாரம் வராது. கைகேயியினுடைய இம்சையை நான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது. அக்கினி தேவனைப் போல் எழில் கொண்ட என் மகன் தன் உடையைக் கழற்றி விட்டு மரவுரியைத் தரித்தான். நானும் பார்த்துக் கொண்டு உயிருடன் இருக்கிறேன்.. ராம... ராம... ராம........ வனம் போய் விட்டாயா?” என்று முணுமுணுத்துக் கொண்டு படுக்கையில் அரை நினைவாகக் கிடந்தான்.


பிறகு தெளிந்து “சுமந்திரனே, ரதம் கொண்டு வந்து குழந்தைகளையும் ஜானகியையும் ஏற்றிக் கொண்டு ராஜ்யத்து எல்லை வரையில் போ!” என்றான்.

*

லக்ஷ்மணன் சுமித்திரா தேவியின் பாதங்களைத் தொட்டு வணங்கி, “அம்மா!” என்று சொல்லி, வேறு பேச்சில்லாமல் நின்றான்.


அவனைக் கட்டியணைத்துச் சுமித்திரை உச்சி மோந்து, “நீ அண்ணன் பேரில் வைத்திருக்கும் அன்பே போதும். உன்னைப் பெற்றதின் பெரும் பாக்கியம் அடைந்து விட்டேன். குழந்தாய், ராமனைக் காப்பது உன் கடமை. வனத்தில் மிக ஜாக்கிரதையாக அண்ணன் பக்கத்தில் எப்போதும் இருக்கவேண்டும். தம்பிக்கு அண்ணன் குருவும் அரசனுமேயாவான். இது நம் குலத்தின் தருமம். போய் வருவாய், லக்ஷ்மணா! காட்டில் ராமனே உனக்குத் தந்தை; ஜானகியே நான்; இதை அறிவாய். வனத்தை அயோத்தியாகவே பாவிப்பாய். சந்தோஷமாகப் போ, என் அன்புக்குரிய மகனே!” என்றாள்.

*

ராமாயண கதையில் அதிகம் பேசாத மகாஞானி, எதையும் முதிர்ந்த அறிவுடன் சரியாக உணர்ந்து நடந்து கொள்ளுகிறவள் சுமித்திராதேவி. ராமனுடைய அவதார ரகசியம் சுமித்திரைக்குத் தெரிந்திருந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள். கௌசல்யா தேவியைப் போல் மகனைத் தடுத்துப் பேசாமல் “போய் வருவாய்” என்று சுமித்திரை தன் மகன் லக்ஷ்மணனுக்குத் தைரியமாகச் சொன்னாள்.


“ரதத்தில் ஏறுவாய் சக்கரவர்த்தித் திருமகனே! புகழின் சிகரமே! உனக்கு மங்களம். எங்கு செல்ல வேண்டுமோ, செல்லுவாய். உனக்கு மங்களம். பதினான்கு வருஷம் இப்பொழுதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது, ராஜ குமாரா!” என்றான் சுமந்திரன்.

*

சீதை சிரிப்பும் சந்தோஷமுமாகத் தேரில் ஏறினாள். அவளுக்கு வேண்டிய துணிமணிகளையெல்லாம் மாமி கௌசல்யை கட்டிக் கொடுத்தாள். இரு சகோதரர்களுடைய கவசங்களும் ஆயுதங்களும் கிழங்கு தேடி வெட்டிக் கொள்வதற்கான குந்தாலியும் கூடையும் தேரில் வைக்கப் பட்டன. வனவாசத்துக்கு முக்கியமாகக் கூடையும் குந்தாலியும் வேண்டும்.

ராம லக்ஷ்மணர்களும் ஏறினார்கள். சுமந்திரன் தேரை ஓட்டினான்.

*

இந்தக் கட்டத்தில் கொஞ்சம் நின்று நாம் ஆண்டவனைத் தியானிக்கலாம். வனவாச ஆரம்பமாகிய இந்தப் புண்ணிய கட்டத்தில் நம்முடைய பாப எண்ணங்களை விலக்கித் தூய்மையடைய விரும்பிப் பிரார்த்திப்போமாக. சத்தியம், தீரம், அன்பு இவை ராமாயணத்திலிருந்து நாம் பெறும் பிரசாதம். அதற்காகவே தான் ராமாவதாரம். மரவுரி உடுத்திய சக்கரவர்த்தித் திருமகனையும் தம்பி லக்ஷ்மணனையும் ஜானகியையும் மனத்தில் நிறுத்தி ஆண்டவன் அருட்பிரசா தத்தைக் கேட்போமாக.

*

“இழுத்துப் பிடி, இழுத்துப் பிடி, சாரதியே! ரதத்தை மெள்ள ஓட்டு! ராமன் முகத்தையாவது நன்றாகப் பார்ப்போம்” என்று தெருவில் நின்ற ஜனங்கள் கத்தினார்கள்.


“ஐயோ, இப்படிப்பட்ட புத்திரர்களைப் பெற்று விட்டு, காட்டுக்கு அனுப்புகிறார்களே! இவர்களைப் பெற்ற தாய்மார்களுடைய வயிறு எரியாதா? உயிர் நிற்குமா? பார்த்தாயா வைதேஹியை? இவளல்லவோ புண்ணியவதி! இந்த லக்ஷ்மணன் அல்லவோ பாக்கியவான்! இவனல்லவோ ஒரு தம்பி? தருமம் அறிந்த வீரன்!”


இப்படியெல்லாம் பேசிக் கொண்டு ரதத்தைத் தொடர்ந்து நகரத்து ஜனங்கள் ஓடினார்கள். அவர்களுடைய துக்கம் ஆறாகப் பெருகிற்று.


ஒரு பக்கம், “ரதத்தை வேகமாகச் செலுத்து” என்கிறான் ராமன். ஜனங்களோ, “மெள்ள மெள்ள!” என்கிறார்கள். கூட்டமோ மிகப் பெருங் கூட்டமாகப் போயிற்று.


எப்படியோ சமாளித்துக் கொண்டு சுமந்திரன் ரதத்தை அயோத்தியை விட்டு வெளியே செலுத்தினான். நகரம் துக்கத்தில் மூழ்கிற்று. ஒவ்வொரு வீட்டிலும் கண்ணீரும் உபவாசமும் நிந்தனையுமாக இருந்தன.

*

அரசன் அந்தப்புரத்தை விட்டு வெளியே வந்து ரதம் புறப்பட்டதைப் பார்த்துக் கொண்டு வெகுநேரம் நின்றான். தேர் கிளப்பிய தூசியையே ராமனாகப் பாவித்து அந்தத் தூசி கண்ணுக்குத் தெரியும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான். அந்தத் தூசியும் மறைந்து போன பின் “ஐயோ!” என்று கதறிக் கீழே விழுந்தான். ஒரு பக்கம் கௌசல்யையும் ஒரு பக்கம் கைகேயியும் இருந்தார்கள்.


தசரதன் கைகேயியைப் பார்த்துச் சொன்னான்: “பாவியே! என்னைத் தொடாதே. நெறி தவறியவளே, உன் முகத்தைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. உனக்கும் எனக்கும் சம்பந்தம் அற்றது. உன்னை விட்டேன்! விட்டேன்!” என்றான்.


“பரதனும் இதற்குச் சம்மதித்து ராஜ்யத்தைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டானேயானால் எனக்காக அவன் நீர்க்கடன் செய்தாலும் அது என்னைச் சேராது” என்றான்.


“ராமன் எவ்வாறு காட்டில் வசிப்பான்? கல்லோ கட்டையோ தலைக்கு வைத்துத் தரையிலா படுப்பான்? ஐயோ, அவன் எவ்வாறு கிழங்கும் காயும் உண்டு பிழைப்பான்?” இப்படிப்  பலவாறு பிரலாபித்தான். தானே நெருப்பில் கைவைத்துக் கையைச் சுட்டுக் கொண்டு அழுவது போல் தசரதன் தானே செய்த காரியத்தின் முடிவை எண்ணி எண்ணிப் பிரலாபித்தான்.


“கைகேயி, நீ சுகமாக இரு. உன் காரியத்தை நடத்தி முடித்தாய் அல்லவா? விதவையாகிச் சந்தோஷமாக இரு!” என்று அவளை நினைத்து நினைத்துக் கோபாவேசமானான். மயானத்தில் ஸ்நானம் செய்து திரும்பிய நிலையில் அந்தப்புரம் போய்ச் சேர்ந்தான்.


“இங்கே வேண்டாம். என்னைக் கௌசல்யை வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள்” என்றான்.


அவ்வாறே செய்தார்கள். கெளசல்யா தேவியின் அந்தப்புரத்தில் தசரதன் பிரலாபித்துக் கொண்டு படுத்தான்.

*

நடு ராத்திரியில் “கௌசல்யா, நீ இருக்கிறாயா? கைகளால் தொட்டுக் காட்டு. என் கண்களில் திருஷ்டி போய் விட்டது, ராமனுடன் போய்விட்டது” என்றான். கௌசல்யா தேவியின் துக்கமோ, மிகப் பெரிது. தன் துக்கத்தையும் பொறுத்து அரசனுக்கு அவள் என்ன சமாதானம் சொல்ல முடியும்?


“இராத்திரி நேரங்கூட நடு மத்தியான வெய்யிலைப் போல் உடலைச் சுடுகிறதே” என்று அவளும் அழுதாள்.


சுமித்திரை கௌசல்யைக்குச் சொன்னாள்: “அக்கா! சாஸ்திரமும் தருமமும் தெரிந்த நீ ஏன் துக்கப்படுகிறாய்? மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டிய நீ இப்படித் தைரியம் இழக்கலாகாது. சத்தியத்துக்காக அல்லவோ ராமன் வனம் சென்றிருக்கிறான்? ராஜ்யத்தைத் துச்சமாக எண்ணித் தந்தையைச் சத்தியவான் ஆக்குவதே தம் கடமை என்று வனம் சென்ற தீரனை மகனாய்ப் பெற்ற நீ அல்லவோ பாக்கியசாலி? கஷ்டமான தருமத்தைக் குறைவற நடத்திப் பயனடையும் உன் மகனைப் பற்றி நீ துக்கப் படலாமா? முன்னோர் வழியில் நடந்து அனந்தமான - முடிவில்லாத - புகழ் பெறும் ராமனைப் பற்றி நாம் துயரப்படலாகாது. லக்ஷ்மணனும் அவனுடன் சென்றானே என்று என் மகனைப் பற்றி நான் பெருமைப் படுகிறேன். வனவாசத்தின் கஷ்டங்களை நன்றாகத் தெரிந்தும் ஜானகி உன் மகனுடன் சென்றிருக்கிறாளே! ராமனுடைய கீர்த்தி மேலோங்கிப் பிரகாசித்து உலகமெல்லாம் ஒளி வீசும். நாம் துக்கப்படலாகாது. மகாத்மாவான உன் மகனுடைய பரிசுத்தமும் உத்தம குணங்களும் அவனுக்குப் பூரண கவசமும் காப்புமாகும். சூரியனுடைய வெய்யில் அவன் உடல்மேல் பட்டாலும் அது சுடாது. காற்றும் அவன் மேல் குளிர்ந்து வீசும். இரவில் தூங்கும்போது அவனுடைய புண்ணிய தேகத்தை சந்திரனுடைய கிரணங்கள், பெற்ற குழந்தையைத் தகப்பன் தழுவி ஆலிங்கனம் செய்வதுபோல், அவன்மேல் வீசிக் காப்பாற்றும். நம்முடைய வீரராகவனைப் பற்றி நீ கவலைப்படாதே! எந்தப் பகைவனும் அவனை எதிர்த்து உயிருடன் மீள முடியாது. நம்முடைய ராமன் சர்வ கல்யாண குணங்களும் பொருந்தியவன், சூரன், அவன் நிச்சயம் திரும்பி வந்து அயோத்தியாதிபதியாகிச் சிம்மாசனம் ஏறுவான். லோகநாதனே ராமன். உன் மருமகள் சீதை அவனுடன் சென்றிருக்கிறாள். சீதை வேறு, லக்ஷ்மி வேறல்ல. திரும்பி வந்ததும் பூதேவியையும் ராமன் அடைவான். நீ சந்தேகப்படாதே. அவன் வனம் போவதைக் கண்ணுற்ற நகரத்து ஜனங்களுடைய அனுதாபத்தைப் பார்த்தாய். என் வீர மகன் வில்லும் கத்தியும் கையில் தாங்கி அவனைக் காக்கக் கூடவே போயிருக்கிறான். ராமனுக்கு ஒரு குறையோ பயமோ கிடையாது. செய்த பிரதிக்ஞையை முடித்து விட்டு அவன் திரும்பி வருவதை உன் கண்ணாலேயே பார்ப்பாய். சோகத்தை விடு, நான் சொல்லுவது சத்தியம். சந்திரனைப்போல் பூரண கலையுடன் திரும்பி வந்து உன் பாதங்களைத் தொட்டு வணங்கி நிற்பதைப் பார்ப்பாய். அப்போது உன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகும். என் அன்புக்குரிய கௌசல்யே! துக்கம் வேண்டாம். மூவரும் திரும்பி வருவார்கள். துக்கப்படும் அந்தப்புரத்து ஜனங்களுக்கு ஆறுதலும் தைரியமும் நீ சொல்ல வேண்டும். அப்படியிருக்க நீயே மனமுடைந்து நிற்கிறாய், வேண்டாம். இந்த உலகத்தில் ராமனைப்போல் தருமத்தில் உறுதியாய் நிற்பவன் வேறு யார்? அதைப் பற்றி நாம் துக்கப்படலாமா? நீ பெருமைப் பட வேண்டும்.”


இவ்வாறு சுமித்திரை தேற்றினாள். சுமித்திரா தேவியின் தைரியமான வார்த்தைகளைக் கேட்டு கௌசல்யையின் துக்கம் ஓரளவு அகன்றது.

*

ராமனுடைய தேருடன் கூடவே நகரத்து ஜனங்கள் பெருங் கூட்டமாகத் தொடர்ந்து சென்றார்கள்.


“வனம் போக வேண்டாம், திரும்புங்கள்” என்று ரதம் போவதைத் தடுத்துக் கொண்டு ஓடினார்கள்.


“தகப்பனாரைச் சத்தியசந்தராகச் செய்வதற்காக நான் வனம் போகிறேன். இதற்கு நீங்கள் துக்கப்படலாகாது. என்னை நிறுத்த வேண்டாம்” என்று எவ்வளவு கேட்டுக் கொண்டும் அவர்கள் விடவில்லை, கூடவே சென்றார்கள். ராமன் பேரில் அவர்களுக்கிருந்த அளவற்ற பிரியத்தினால் என்ன சொல்லியும், “வனம் போக வேண்டாம்! வனம் போக வேண்டாம்!” என்று சொல்லிக் கொண்டு ரதத்தோடு ஓடினார்கள்.


ராமன் ரதத்தை நிறுத்தி அன்பு நிறைந்த பார்வையுடன் அவர்களுக்குச் சொன்னான்:

“அயோத்தி நகரத்து மக்களே! என்மேல் நீங்கள் வைத்திருக்கும் பிரியமும் கௌரவமும் நான் அறிவேன். அதையெல்லாம் நீங்கள் இனி பரதன்மேல் செலுத்த வேண்டும். அதுவே எனக்கும் திருப்தி தரும். சீலமும் சகல கல்யாண குணங்களும் பொருந்தியவன் பரதன். அவன் மனம் திருப்தியடையுமாறு நடந்து கொள்ளுங்கள். அவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் சரியாகச் செய்யுங்கள். அவன் வயதில் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தில் முதிர்ந்தவன். வீரமும் மென்மையும் இரண்டும் கலந்த சிரேஷ்டமான உள்ளம் பெற்றவன். உங்களை ஷேமமாகக் காப்பாற்றும் சக்தி அவனுக்கு உண்டு. அவனே உங்கள் நாதன். தகப்பன் சொல்லைச் சத்தியவாக்காகச் செய்வதற்கு நான் வனம் போகிறேன். பரதனை யுவராஜனாக அரசர் நியமித்திருக்கிறார். அவன் அந்தப் பதவிக்குத் தகுந்த குணங்களைப் பெற்றவன். மகாராஜா விதித்தபடி நானும் நீங்களும் எல்லோரும் நடக்க வேண்டும். தந்தைக்கு உண்டாகும் துயரத்தைப் போக்க நீங்கள் எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும்.”


இப்படி ராமன் அவர்களுக்கு புத்திமதியும் நல்ல வார்த்தையும் சொன்னான். ஆனால் அவர்களோ, ராமனுடைய வார்த்தைகளில் நிறைந்திருந்த தருமமும் நீதியும் அன்பும் கண்டு முன்னை விட அதிகமாகவே அவனை விரும்பினார்கள்.


சிரேஷ்ட குணம் பொருந்தியவர்களும் வயதில் மிக முதிர்ந்தவர்களுமான பிராமணர்கள் சிலர் வேகமாகப் போகும் தேரைப் பார்த்து, “ஹே, குதிரைகாள்! ஏன் எங்கள் ராமனை வனம் கொண்டு போகிறீர்கள்? வேண்டாம்! குதிரைகளுக்கு ஓசைப்புலன் மிகக் கூர்மையானது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். நாங்கள் சொல்லுவதைக் காதில் வாங்கி நின்று ராமனைத் திருப்பிக் கொண்டு வந்து எங்களிடம் விட்டு விடுவீர்களாக!” என்று புலம்பினார்கள்.


இப்படி வயோதிக அந்தணர்கள் இறைஞ்சுவதைக் கண்டு ராமன் தேரை நிறுத்தினான். மூவரும் தேரிலிருந்து இறங்கிக் காலால் நடந்து சென்றார்கள்.


பாமர ஜனங்களும் நகரத்து முக்கியஸ்தர்களும் ஞானமும் வயதும் விரத நியமங்களால் சித்தியும் அடைந்த அந்தணர்களும் அயோத்தியில் பறக்கும் பறவைகளுங்கூட ராமனை வனம் போக வேண்டாம் என்று வற்புறுத்தி வருவதைப் பார்த்து தமஸா நதி குறுக்கே வந்து தடுத்தது போல் தோன்றியது. தமஸா நதிக் கரையில் தேர் நின்றது. சுமந்திரன் குதிரைகளை அவிழ்த்துத் தண்ணீர் காட்டிப் புல் மேய விட்டான்.


“லக்ஷ்மணா! இதுவே நம்முடைய வனவாசத்தில் முதல் ராத்திரி. இந்தப் புண்ணிய நதிக் கரையில் இன்று தங்குவோம். வனவாசம் ஒன்றும் கஷ்டம் இல்லை. பார், வனத்திலுள்ள பக்ஷிகளும், மிருகங்களும் மரங்களுங்கூட நம்மிடம் அநுதாபம் காட்டுவது போல் சப்தமும் காட்சியும் அளிக்கின்றன. ஆனால் அயோத்தியில் நம்முடைய பெற்றோர்களின் துயரத்தை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பரதனுடைய குணங்களை நினைத்துத் தைரியம் அடைகிறேன். அவன் நம்முடைய பெற்றோர்களைப் பிரியமாகக் கவனித்துக் கொள்ளுவான். சந்தேகமில்லை. சுமந்திரரே, குதிரைகளுக்கு வேண்டியதைச் செய்யவும்” என்றான் ராமன்.


பிறகு நதியில் மாலை வந்தனங்கள் செய்துவிட்டு ராமன், “இன்று உபவாசமிருக்கலாம். இது நம்முடைய வனவாச ஆரம்ப ராத்திரி. லக்ஷ்மணா! நீ என்னுடன் இருக்கிறபடியால் எனக்கு ஒரு கவலையுமில்லாமலிருக்கிறது” என்றான்.


ராமனுக்கும் சீதைக்கும் படுப்பதற்குப் புல் பரப்பி அமைத்துக் கொடுத்து லக்ஷ்மணன் சுமந்திரனுடன் பேசிக் கொண்டே இரவைக் கழித்தான்; தூங்கவில்லை.

*

அதிகாலையில், விடிவதற்கு முன் ராமன் எழுந்திருந்து சுமந்திரனைப் பார்த்து, “நகரத்து ஜனங்கள் ஆற்றங்கரையில் எங்கெங்கோ படுத்து ஓடி வந்த களைப்பினால் நன்றாகத் தூங்குகிறார்கள். எங்கள் பேரில் இவர்கள் வைத்திருக்கும் அன்பைப் பார்த்து எனக்குத் துக்கமாக இருக்கிறது. எப்படியாவது என்னை நிர்ப்பந்தித்துத் திருப்பி அழைத்துப் போவதே இவர்கள் எண்ணம். ஆகையால் நாம் இப்போதே கிளம்புவோம்” என்றான்.


குதிரைகளைப் பூட்டி மெள்ள நதியைத் தாண்டி அக்கரை சேர்ந்தார்கள். அங்கே நின்று ராமன் சுமந்திரனுக்குச் சொன்னான்: “தேரை மறுபடி ஜனங்கள் தூங்கும் அக்கரைக்குச் செலுத்தி அங்கிருந்து அயோத்தியை நோக்கிக் கொஞ்ச தூரம் ஓட்டிப் பிறகு தேரைத் திருப்பி இவ்விடம் ஓட்டி வந்தால், ஜனங்கள் விழிப்பதற்கு முன் நாம் ஏறிச் செல்வோம். தேரின் சுவடு பார்த்து நாம் நகரத்துக்குத் திரும்பிப் போய் விட்டதாக எண்ணி அவர்களும் ஊர் திரும்புவார்கள். இல்லாவிடில் இந்த ஜனக் கூட்டம் நம்மை விடாமல் பின் தொடர்ந்து வரும்” என்றான்.


சுமந்திரனும் அப்படியே செய்தான். தேர் திரும்பியதும் மூவரும் ஏறித் தெற்கு முகமாகச் சென்றார்கள்.