ராமனுடன் சீதையும் வனம் போவது என்று நிச்சயமாகி விட்டது. ஏழை அந்தணர்களை அழைத்துச் சகல பொருள்களையும் தானம் கொடுத்து விட்டு வனவாசத்திற்குச் சீதை ஆயத்தமாகி விட்டாள்.
லக்ஷ்மணனும் அண்ணனுக்குச் சகாயமாக வனம் போகத் தீர்மானித்து ராமனுடைய சம்மதமும் பெற்றான். மூவரும் தந்தை தசரதனிடம் விடைபெற்றுக் கொள்ளுவதற்காகச் சென்றார்கள்.
தெருக்களிலும் ராஜ வீதியின் இரு பக்கத்திலுமுள்ள மாளிகைகளின் உப்பரிகைகளிலும் சாளரங்களின் பின்னாலும் ஜனங்கள் கூட்டங் கூட்டமாக நின்று, நடந்து போவதைக் கண்டார்கள்.
அடங்காத துக்கமும் வியப்பும் கோபமும் அடைந்து “இப்படியும் ஒரு அரசன் உண்டா? இத்தகைய ராஜகுமாரனை எவனாவது வனத்துக்கு அனுப்பி விடுவானா? ஐயோ, பாவம்! காலால் தெருவில் நடந்து போகிறாளே, சீதை! வனத்தில் வெய்யிலும் மழையும் இவள் தாங்குவாளா? இது என்ன விபரீதம்! சரி, இந்த நகரத்தை விட்டு நாம் அனைவரும் ராஜகுமாரர்கள் செல்லும் வனத்துக்குப் போக வேண்டியதுதான். வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டு நாமும் வனம் செல்வோம். ராமன் இருக்கும் வனமே நமக்கு அயோத்தியை; இந்த நகரம் பாம்புகள் புகும் புற்றும், எலிகள் தோண்டிய வளைகளுமாக, வீடுகளெல்லாம் பாழாகப் போக வேண்டியது தான். கைகேயி இங்கே அரசு புரியட்டும். நாம் போகும் வனத்திலிருக்கும் காட்டு மிருகங்களும் பிணம் தின்னும் பறவைகளும் அந்த இடத்தை விட்டு விட்டு அயோத்திக்கு வந்துவிடும். இதுவே காடாகும், அது நகரமாகும்.”
இவ்வாறெல்லாம் மக்கள் பேசிய பேச்சு ராமன் காதில் விழுந்தாலும் அதை அவன் கவனிக்காமல் சென்றான்.
அரசனுடைய மாளிகையின் வாயிலருகே துக்கம் நிறைந்த முகத்தோடு மூலையில் உட்கார்ந்திருந்த சுமந்திரனைப் பார்த்து ராமன், இனிய குரலில் “மூவரும் அரசனைக் காண வந்திருக்கிறோம். தெரியப்படுத்தி உள்ளே வருவதற்கு அனுமதி கேட்டு வர வேண்டும்” என்று சொன்னான். சுமந்திரனும் அவ்வாறே சொல்லுவதற்குச் சென்றான்.
ராகுவால் பிடிக்கப்பட்ட சூரியனைப் போல், சாம்பல் நிறைந்த அடுப்புப்போல், நீர் வற்றிய தடாகத்தைப்போல் காட்சி தந்தான் சக்கரவர்த்தி.
சுமந்திரன் கைகூப்பி, துக்கத்தால் பேச்சு தடுமாறிச் சொன்னான்:
“அந்தப்புர வாயிலில் ராஜகுமாரன் நிற்கிறான். பிராமணர்களுக்குத் தன் பொருள்களைக் கொடுத்து விட்டு ‘மங்களம் ஆகுக’ எல்லாரிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டு தண்டகாரணியம் போவதற்கு முன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றான். மன்னன் அழைத்து வரச் சொன்னான்.
*
ராமன் வந்து கொஞ்சம் எட்டி நின்று அஞ்சலி செய்தான். ராமனைக் கண்டதும் படுத்திருந்த அரசன் குதித்தெழுந்து மகனைக் கட்டியணைத்துக் கொள்ளச் சென்றான். கைகளை விரித்துக் கொண்டு தாவிப் போனவன் ராமனையடைவதற்கு முன்னே மூர்ச்சை அடைந்து தரையில் விழுந்தான்.
ராமனும் லக்ஷ்மணனும் கீழே விழுந்த மன்னனைத் தூக்கிப் படுக்கையில் உட்கார வைத்துத் தடவிக் கொடுத்தார்கள். பிறகு ராமன், “பெருமானே! விடை பெற்றுக் கொண்டு போக வந்திருக்கிறோம். என்னுடன் லக்ஷ்மணனும் வைதேஹியும் வனத்துக்கு வருகிறார்கள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்கள் என்கூட வரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். எங்களுக்கு அனுமதி கொடுத்து, ஆசீர்வதித்து அனுப்புவீராக” என்றான்.
அப்போது தசரதன், “கைகேயிக்கு நான் கொடுத்த வரத்தால் நான் கட்டுப்பட்டேன். நீ கட்டுப் படவில்லை. நீ என்னை மதிக்காமல் உன் பலத்தால் அயோத்தியைப் பற்றிக்கொண்டு அரசனாக இருக்கலாமே!” என்றான்.
முன்னால் மனத்தில் மட்டும் இருந்த கருத்தை இப்போது அரசன் வியக்தமாகச் சொன்னான்.
“தாங்கள் இன்னும் ஆயிர வருடங்கள் ஆண்டு வரவேண்டிய இந்த ராஜ்யத்துக்கு நான் ஆசைப்படவில்லை. நான் பதினான்கு வருஷம் அரண்யவாசம் செய்துவிட்டுத் திரும்பி வந்து உம்முடைய பாதங்களைத் தொட்டு வணங்குவேன்” என்றான் சக்கரவர்த்தித் திருமகன். அரசனுடைய ஆசை இல்லை என்று தீர்ந்தது.
“குலத்தின் புகழைப் பெருக்குவாய், மகனே! போய்த் திரும்பி வா. மங்களமாகுக. பயம் என்பது உன் வழியை விட்டு விலகி நிற்கக் கடவது. தருமத்தினின்று பிறழாத உத்தமனே! திடசங்கற்பம் கொண்ட வீரனே! யாரும் உன் எண்ணத்தை மாற்ற முடியாது. ஆனால் இன்றே போக வேண்டாம். ஒரு ராத்திரி இருந்துவிட்டுப் போகலாம். உன்னை நான் மனதாரப் பார்த்துத் திருப்தி அடைய விரும்புகிறேன். நாளை விடிந்ததும் நீ போகலாம். ராமா! நான் கைகேயியால் வஞ்சிக்கப்பட்டேன். அவளுக்கு நான் தந்த வரத்தால் கட்டுப்பட்டு இந்தப் பாப காரியத்தைச் செய்ய வேண்டியதாயிற்று. அவள் என்னை மோசம் செய்து விட்டாள். சாம்பல் பூத்து மூடிய நெருப்பைப் போல் மறைந்திருந்த அவளுடைய எண்ணத்தை நான் அறியாமல் ஏமாந்து போனேன். அவள் வலையில் சிக்கிவிட்டேன். நீயோ தந்தையின் சொல்லைச் சத்தியமாக்கியே தீருவேன், தந்தையைப் பொய்யனாக்கி விடமாட்டேன் என்று ராஜ்யத்தையும் நாட்டையும் விட்டு வனம் போகத் தீர்மானித்து விட்டாய். உலகத்தில் உன்னைப் போல் சிரேஷ்ட குமாரன் வேறு யார் இருக்கிறான்? இந்த அனர்த்தம் என் சம்மதம் பெற்றதல்ல என்று சத்தியமாகச் சொல்லுகிறேன்” என்று பரிதாபமாக அரசன் கூறினான்.
அந்தி காலத்தில் ராமனுடைய அன்பை இழக்காமல் உயிர் நீக்கவேண்டும் என்பது தசரதனுடைய ஆசை.
“தந்தையே! பரதனுக்குச் சொல்லியனுப்பி நீர் என் தாய்க்குத் தந்த வரத்தைப் பூர்த்தி செய்யவும். ராஜ்யத்தை நான் மனத்தால் துறந்து விட்டாயிற்று. என் உள்ளம் இப்போது வனத்தைப் பற்றி நிற்கிறது. உம்முடைய மனத்தில் ஒரு குறையும் வருத்தமும் இல்லாமல் நீர் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்து, ஆசீர்வதித்து முடிக்க வேண்டும். நான் இப்போது இந்த ராஜ்யத்திலாவது வேறு சம்பத்திலாவது ஒரு சிறிதும் மனத்தை வைக்கவில்லை. தந்தையே, துக்கத்தை முற்றிலும் அகற்றிக் கொள்வீராக. கண்ணீர் விடாதீர். சமுத்திரம் உலர்ந்து போகுமா? அதைப் போன்ற தீரராகிய நீர் நிலையை இழக்காதீர். உம்மைச் சத்தியவாதியாக்குவதே என் ஆசை. உம்மைப் பொய்யனாக்கி விட்டு நான் மற்றப் பொருள்களை வைத்துக் கொண்டு என்ன சுகம் சம்பாதிப்பேன்? நீர் மனத்தை முற்றிலும் சாந்தப்படுத்திக் கொண்டு துக்கத்தை விலக்கி விடவேண்டும். நான் வனத்தில் ஆனந்தமாகக் காலம் கழிப்பேன். வனத்தில் உள்ள அழகும் சுகமும் வேறு எங்கே கிடைக்கும்? தகப்பனாராகிய நீரே எனக்குத் தெய்வம். ஆனபடியால் நான் வனம் போவது தெய்வ வாக்கின்படியாகும். பதினான்கு வருஷங்கள் தீர்ந்த பின், என்னை மறுபடி பார்ப்பீர். விசனப்படாதீர். இந்த ராத்திரி இருந்து நாளை போகச் சொல்லுகிறீர். அதில் என்ன பயன்? இன்று போலவே மறுநாளும். ஆனபடியால் இன்றே போக அனுமதி தருவீராக” என்றான்.
அதன் பிறகு தசரதன் சுமந்திரனுக்குச் சொன்னான்: “சரி, அப்படியானால் நம்முடைய சேனைத் தலைவர்களுக்குச் சொல்லி நல்ல சதுரங்க சேனை ஒன்றைத் தயார் செய்து ராமனுடன் வனம் போக உடனே உத்தரவிடுவாய். ராமன் காட்டில் சுகமாக ரிஷிகளுடன் காலம் கழிப்பதற்கு வேண்டிய சகல பொருள்களும் திரட்டி அமைத்துச் சேனையுடன் அனுப்பிவிட வேண்டியது. தனம், தானியம், ஆட்கள், எல்லாம் ஒரு குறையுமின்றித் திரட்டி அனுப்ப வேண்டியது.”
பாவம், வனவாசம் என்றால் அரசர்கள் செய்யும் சுற்றுப்பிரயாணம் போல் செய்துவிடலாம் என்று பார்த்தான் தசரதன்.
கைகேயி, பக்கத்திலிருந்தவள், சிரித்தாள். “அப்படியா? வரத்தை மிக அழகாகப் பூர்த்தி செய்கிறீர்கள்! ‘பரதனுக்கு ராஜ்யம் கொடுத்தேன்' என்று சொல்லி ராஜ்யத்திலுள்ள செல்வத்தையெல்லாம் வாரி எடுத்து ராமனுக்குக் கொடுத்துவிட்டு ராஜ்யத்தைப் பாழ்செய்து அதைப் பரதனுக்குத் தருகிறீரா?” என்றாள் கைகேயி.
தசரதன் கோபாவேசமாகப் பேசப் போனான். ராமன் அமாத்தியர்களைப் பார்த்துச் சொன்னான்.
“வணக்கத்துடன் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் வனம் போக நிச்சயித்தது இந்த வகையில் அல்ல. ராஜ்ய போகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தவசிகளின் தவ வாழ்க்கை வாழ நான் வனம் செல்லுகிறேன். பரிவாரமும் பொருள்களும் எனக்கு எவ்விதத்தில் உதவும்? யானையைத் தானம் செய்த பின் யானையைக் கட்டும் கயிற்றில் ஆசை வைப்பதா? தயவு செய்து மரவுரியைக் கொண்டுவரச் சொல்லுக! மண் வெட்டியும் கூடையும் கொண்டுவரச் சொல்லுக! அவை போதும்” என்றான்.
கைகேயி ஓடிப்போய்த் தயாராக வைத்திருந்த மரவுரியைக் கொண்டு வந்து ராமனுக்குத் தானே வெட்கமில்லாமல் கொடுத்தாள். உடன் அவ்விடத்திலேயே ராமன் மரவுரியை உடுத்துக் கொண்டான். ரிஷியைப் போல் பொலிவடைந்தான். லக்ஷ்மணனும் தன் ஆடையைக் களைந்து மரவுரியைத் தரித்தான். தசரதன் இதையெல்லாம் செய்கையற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
பிறகு சீதைக்காகவும் மரவுரி கொண்டு வந்தாள் கைகேயி, அதை வாங்கிச் சீதை இன்னது செய்வது என்று தெரியாமல் ஒரு க்ஷணம் திகைத்து நின்றாள். அவள் அதற்கு முன் இத்தகைய ஆடையை உடுத்தினதில்லையல்லவா!
பக்கத்தில் கந்தர்வ ராஜனைப் போல் அழகு வீசிக் கொண்டு நின்ற ராமனைப் பார்த்துக் கொஞ்சம் கூச்சத்துடன், “இதை எப்படிக் கட்டிக் கொள்வது, சொல்லுவீர்” என்றாள்.
ராமன் அதை எடுத்துச் சீதை உடுத்தியிருந்த பட்டின்மேல் மரவுரியையும் உடுத்தித் தானே முடி போட்டான். அச்சமயம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப்புர ஸ்திரீகள் அனைவரும். ‘கோ!’ என்று அழுதார்கள். தசரதன் நினைவு இழந்து விட்டான்.
மூர்ச்சை தெளிந்த பிறகு, கைகேயியை அனைவருக்குமெதிரில் தசரதன் மிகக் கடுமையாகத் திட்டினான். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. தவிர இப்போது யார் என்ன செய்ய முடியும்? சீதை வனம் போவது கைகேயிக்காக அல்ல. ராமனுடன் வனம் போவதிலேயே அவள் சுகம் கண்டாள். யார் சொல்லியும் அவள் நிற்க மாட்டாள். போகும் போது தரையைப் பார்த்த வண்ணம் அரசனை வணங்கி ராமன் சொன்னான்:
“தந்தையே! தாய் கௌசல்யா தேவியை இவ்விடம் விட்டு விட்டுப் போகிறேன். ஒப்பற்றவள். யார் பேரிலும் அவளுக்குக் கோபமில்லை. மகராஜனே! அவளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளவும். என்னை விட்டுப் பிரிந்து இதற்கு முன் அவள் கண்டிராத துக்கத்தில் - பெருந்துயரக் கடலில் அவள் மூழ்கினாளாயினும் உமக்காக உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள். நான் வனத்திலிருந்து திரும்பி வரும் போது அவளை நான் இங்கேயே காணவேண்டும். யமாலயத்தில் தேடும்படி நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று துக்கம் தாங்காமல் சொன்னான்.
ராமன் இப்படிச் சொல்லி விட்டு வெளியே செல்லும் காட்சியைப் பார்க்கக் கிழ அரசனால் சகிக்க முடியவில்லை. கண்களைக் கையால் மூடிக் கொண்டான்.