24. சீதையின் தீர்மானம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

அந்தப்புரத்தில் நடந்த விஷயங்கள் இன்னும் நகரத்து ஜனங்களுக்குச் சரியாகத் தெரியாது. ராமனோ வனம் செல்லுவதில் தன் முழு மனத்தையும் செலுத்தி அதற்கு வேண்டியதையெல்லாம் மிகவும் துரிதமாகக் கவனித்து வந்தான்.

எல்லாக் காரியங்களும் முடித்துவிட்டு கெளசல்யா தேவியிடம் மங்கள ஆசீர்வாதம் பெறப்போனான். “நீ போய்விட்டபிறகு இந்த அயோத்தியில் எப்படியிருக்கமுடியும்? உன்னுடன் நானும் வனம் போவதே நலம்” என்று கௌசல்யை திரும்பச் சொன்னாள்.


வேண்டாமென்று ராமன் அவளுக்குக் காரணங்களையும் தருமத்தையும் எடுத்துக் காட்டினான். அரசனாகிய புருஷனை விட்டுவிட்டு மகனோடு காடு செல்வது தகாது. மூப்படைந்த புருஷனுக்குச் சிசுரூஷை செய்துகொண்டு சுகமோ கஷ்டமோ சமாளித்துக் கொண்டு அயோத்தியில் இருப்பதுதான் கடமை என்று ராமன் அவளுக்கே தெரிந்த விஷயமானாலும் துக்கத்தால் குழப்பமடைந்திருந்த அவளுக்கு எடுத்துச் சொன்னான். தாயுள்ளத்தில் கிளம்பிய புகையை அகற்றிவிட்டு, ராமன் சொல்லுவதே சரி என்று ஒப்புக் கொண்டாள்.


மகனை சுவஸ்தி மந்திரங்கள் சொல்லி ஆசீர்வதித்து, “தகப்பன் ஆணையைச் செய்து முடித்துவிட்டு வெற்றியுடன் திரும்பி வருவாயாக!” என்றாள். “பதினான்கு வருஷங்களையும் சுலபமாகக் கழித்து விட்டு வந்து விடுகிறேன்” என்று ராமனும் சிரித்துக் கொண்டு சொல்லி அவளைத் தேற்றினான்.


தாயின் மங்கள ஆசிகளைப் பெற்ற சக்கரவர்த்தித் திருமகனுடைய முகத்தில் தேஜஸ் முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தது என்கிறார் முனிவர். கடமையைக் கருதி ஒரு பெரிய தியாகம் செய்யச் சங்கற்பம் செய்பவர்களுடைய முகத்தைப் பார்க்கும்போதுதான் முனிவருடைய சொற்களின் பொருள் விளங்கும்.


அரசன் அழைத்துவரச் சொன்னான் என்று சுமந்திரனோடு சென்றானல்லவா ராமன்? தேரும் குடையும் சாமரங்களும் பரிவாரமுமாக எப்போது திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் சீதை. தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காக வனத்துக்குப் போகிறேன் என்று தன் காதலிக்கு எவ்வாறு சொல்லிச் சமாளிப்பது என்கிற ஏக்கத்தோடே சென்றான் ராமன். தேரும் சாமரங்களுமின்றி ராமன் தனியாகத் திரும்பி வந்ததைப் பார்த்தாள். முகத்தில் ஏக்கத்தையும் கண்டாள் சீதை.


‘ஏன் என் நாதர் ஏதோ மனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்? எது எப்படியாயினும் நம்மிருவருக்கும் உள்ள அன்பு ஒன்று போதாதா?' என்று எண்ணி, “என்ன விஷயம், ஒருமாதிரி இருக்கிறீர்களே?” என்று கேட்டாள்.


வெகு சுருக்கமாகவே ராமன் நடந்த விஷயத்தைச் சொன்னான். சொல்லிவிட்டு, “வைதேஹி, நீ என்னை விட்டுப் பிரிந்து இவ்விடம் தனியாக இருப்பதில் உனக்கு ஏற்படக்கூடிய துக்கம் எனக்குத் தெரியும். ஆயினும் தருமத்தை நீ நன்றாக அறிவாய். ஜனகனுடைய மகளுக்கு நான் சொல்லவேண்டிய தொன்றுமில்லை. மகாராஜாவிடமும் தாய்மார்கள் மூவரிடமும் ஜாக்கிரதையாக நடந்துகொள். மற்ற அந்தப்புரப் பெண்களைக் காட்டிலும் அதிகமாக நீ எதையும் எதிர்பார்க்க வேண்டாம். அரசனாகிய பரதனிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். உன்னிடம் அவனுக்குள்ள பிரியம் குறையாமலிருக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். வைதேஹி! என்மேல் நீ வைத்திருக்கும் அன்பு கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்வாயல்லவா? நான் வனத்தில் பதினான்கு வருஷம் கழித்துத் திரும்பி வருவேன். அது வரையில் பூஜையும் சரியாகக் காத்து வரவேண்டும். கௌசல்யாதேவி மிகவும் துக்கப்படுவாள். அவளைக் கவலையோடு பார்த்து வரவேண்டும். பரதனும் சத்ருக்னனும் எனக்கு மிகப் பிரியமானவர்கள். அவர்களைச் சகோதரர்கள் போல் கருதி வருவாய். அரசகுல சுபாவங்களை மனத்தில் வைத்து நடந்து கொள். என்னை அதிகமாகப் புகழ்ந்து பேசாதே. நான் இன்றே வனம் போகவேண்டும். மனத்தை நிலையில் வைத்துக் கொண்டிருப்பாயாக” என்றான் ராமன்.


இந்தப் பேச்சைக் கேட்ட சீதைக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. அன்பெல்லாம் கோப உருவமாக வெளிப்பட்டது.


“நன்றாகப் பேசினீர்! தருமமெல்லாம் அறிந்த ராஜகுமாரரே! எனக்குச் சிரிப்பு வருகிறது. புருஷன் வேறு, மனைவி வேறு, என்பதை இன்று தான் உம்முடைய பேச்சில் அறிந்தேன். ராமர் வனம் போக வேண்டியதானால் அந்த ஆணையானது சீதைக்கும் தான். வனத்தில் செல்லும்போது நான் முன்னால் சென்று காட்டுப் பாதையிலுள்ள முள்ளையும் புல்லையும் மிதித்து உமக்கு மெதுவாக்கிக் கொண்டு செல்வேன். பிடிவாதம் செய்கிறேன் என்று கோபம் கொள்ள வேண்டாம். என்னுடைய தாயும் தந்தையும் தருமத்தைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நீர் இன்று எனக்குச் சொன்னது நான் இதற்கு முன் கேட்டதற்கெல்லாம் முற்றிலும் விரோதமாக இருக்கிறது. நீர் செல்லும் இடம் நானும் கூடச் செல்ல வேண்டும் என்பதே நான் கற்ற ஒழுக்கம். இன்றே நீர் வனம் போகவேண்டியதானால் உம்முடன் நானும் இன்றே போவேன். இதைப்பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. வனம் சென்றால் நான் கஷ்டப்படுவேன், துக்கப்படுவேன் என்றெல்லாம் எண்ணவேண்டாம். வனவாசத்தை மிகவும் சந்தோஷமாகவே அனுபவிப்பேன். உம்முடன் இருந்தால் வனவாசம் என்பது எனக்கு ஒரு விளையாட்டாகத் தான் இருக்கும். இங்கே என்னைத் தனியாக விட்டுப் போகாதீர். நீர் வனம் சென்றால் இங்கே எனக்கு என்ன வேலை? வனத்தில் என்னால் உமக்கு ஒரு இடைஞ்சலும் ஏற்படாது. காயும் கிழங்கும் சாப்பிட்டுக் கொண்டு நிச்சயமாக உமக்கு முன்னால் நான் நடந்து செல்வேன். உம்முடன் சென்று மலையும் ஆறும் பார்த்து மகிழவேண்டுமென்பது என் ஆசை. பறவைகளும் புஷ்பங்களும் நிறைந்த வனத்தில் உம்முடன் நானும் இருந்து சந்தோஷமாக ஆறுகளில் குளித்தும் நித்திய கருமங்களைச் செய்தும் சுகமாகக் காலம் கழிப்பேன். உம்முடனில்லாமல் சுவர்க்கமும் எனக்கு வேண்டாம். என்னைத் தனியாக விட்டுப் போனால் என் மரணம் நிச்சயம். நான் உம்மிடம் யாசிக்கிறேன். என்னை அழைத்துப்போக வேண்டும். என்மேல் இரக்கம் கொள்வீர். என்னை நிர்க்கதியாக்க வேண்டாம்” என்றாள் சீதை. கோபமாக ஆரம்பித்தவள் மிகவும் கெஞ்சிக் கேட்டு முடித்தாள்.


ராமன் காட்டில் ஏற்படும் பயம், கஷ்டம் எல்லாவற்றையும் விஸ்தாரமாக எடுத்துச் சொல்லி, “நீ காட்டுக்கு என்னுடன் வருவது தகாது” என்றான்.


சீதையின் கண்களில் நீர் பெருகிற்று. “புலி, சிம்மம், கரடி, பாம்பு இவையெல்லாம் உம்மைக் கண்டால் தூர விலகிச் செல்லும். நீர் சொல்லும் வெய்யில், மழை, காற்று, பசி, முள் அனைத்தும் நான் சந்தோஷமாகப் பொறுத்துக் கொள்வேன். எனக்கு வனவாசத்தைப் பற்றிக் கொஞ்சமும் பயமில்லை. நீர் என்னை இங்கே விட்டுவிட்டுப் போனீரானால் என் உயிர் என்னை விட்டு நீங்கும், நிச்சயம்” என்று சந்தேகத்துக்கும் மறு பேச்சுக்கும் இடமின்றிச் சொல்லி விட்டாள்.


சீதை அத்தோடு விடவில்லை. “நான் மிதிலையிலிருந்த காலத்தில் பிராமணர்களும் ஜோதிஷர்களும் இவளுக்கு வனவாசப் பிராப்தி என்று என்னைக் குறித்து என் தாயிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியுமா? உம்முடன் சேர்ந்து வனவாசம் செய்துவிட்டு எப்படியும் நடக்க வேண்டிய அந்த நிகழ்ச்சியைச் சுகமாக முடித்து விடுவதற்கு இதுவே சமயம். வனவாசம் மிகக் கஷ்டம் என்பதெல்லாம் யாருக்கு? இந்திரியங்களை வசப்படுத்தாமலிருக்கும் ஸ்திரீ புருஷர்களுக்குத்தான். நீராவது நானாவது அவ்விதம் கஷ்டப்பட மாட்டோம். என்னைத் தடுக்காதீர்” என்றாள்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை