23. கோபமும் சமாதானமும் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

 ராமன் கௌசல்யா தேவியின் மனைக்குச் சென்றான். அங்கே பிராமணர்கள், விருந்தினர்கள், ஸ்திரீகள் எல்லாரும் சந்தோஷமாகப் பட்டாபிஷேகத்தை எதிர்பார்த்துக் கூடியிருந்தார்கள். மூன்றாம் கட்டுக்குள் கௌசல்யா தேவி வெண்பட்டு உடுத்தி ஓமத் தீயில் நெய் விட்டுக் குமாரனுடைய க்ஷேமத்திற்காகத் தேவதைகளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். ராமன் வந்ததும் எழுந்து அவனை ஆலிங்கனம் செய்து உச்சி மோந்து யுவராஜா ஆகப் போகும் குமாரனுக்குத் தகுந்த ஒரு ஆசனத்தைக் காட்டி உட்காரச் சொன்னாள்.

“அம்மா! எனக்கு இந்த ஆசனம் தகாது. கீழே தர்ப்பைப் புல் பரப்பி உட்கார வேண்டிய தபஸ்வி நான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய சமாசாரத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; பொறுத்துக் கொண்டு என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று கூறிச் சுருக்கமாக நடந்த விஷயத்தை ராமன் கௌசல்யைக்குச் சொன்னான்.


“அரசர் இராஜ்யத்தை பரதனுக்கு அளிக்க விரும்புகிறார். நான் பதினான்கு வருஷம் தண்ட காரண்யத்தில் வனவாசம் செய்யவேண்டும் என்று அரசருடைய ஆணை. உங்களிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு இன்றே நான் செல்ல வேண்டும்” என்றான்.


இதைக் கேட்டதும் வாழை மரம் அறுபட்டுக் கீழே விழுவதுபோல் கோசலை தரையில் விழுந்தாள். லக்ஷ்மணனும் ராமனும் அவளையெடுத்துத் தடவிக் கொடுத்து உட்கார வைத்தார்கள்.


“என் இதயம் இரும்போ? கல்லோ? நான் இன்னும் உயிருடன் இருக்கிறேனே!” என்று மகனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.


லக்ஷ்மணனுக்குக் கௌசல்யா தேவியின் துக்கத்தைப் பார்த்துச் சகிக்கவில்லை. அரசன் மேல் கடுங்கோபம் மேலிட்டுப் பேச ஆரம்பித்தான்.

*

“கொடும் பாதகங்கள் செய்த துன்மார்க்கர்களுக்கு விதிக்கும் தண்டனையை ராமசந்திரனுக்கு இந்தக் கிழ அரசர் விதித்திருக்கிறார். என்ன குற்றம் ராமன் செய்தான் என்று கண்டு இந்தப் பிராயச் சித்தத்தை விதித்தார்? விரோதிகளில் கூட எவனும் ராமன் பேரில் ஒரு குற்றம் சாற்றினதில்லை. மூடனாய்ப் போனார் நம் தந்தை. கிழ வயதில் காதலின் காரணமாகப் புத்தியை இழந்தார். இவர் அரசராக இருக்க இனித் தகுந்தவரல்ல. ஸ்திரீயின் பேச்சைக் கேட்டு அதருமம் செய்யும் ஒருவர் எப்படி அரசராக இருக்கலாம்? பகைவர்கள் கூட உன்னைக் கண்ட மாத்திரத்தில் உன் மேல் அன்பு செலுத்துவார்கள். உன்னை வனம் போகச் சொல்லுகிறார் மூடர். அண்ணா! நீயும் நானும் சேர்ந்து இவரைத் தகர்த்துவிட்டு ராஜ்யத்தை இன்று முதல் ஆள்வோம். யார் நம்மை எதிர்க்கத் துணிவார்கள்? எதிர்க்கத் துணிந்தவர்களை ஹதம் செய்வேன். நீ எனக்கு அநுமதி கொடுத்தால் போதும். நான் ஒருவனே பார்த்துக் கொள்ளுகிறேன். பரதன் ராஜ்ய பதவிக்கு வருவதாம், நீ வனம் புகுவதாம்! உலகம் சிரிக்கும். இதைச் சம்மதிக்க வேண்டாம். நான் இதைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. நம்மை எதிர்ப்பவர்களை ஹதம் செய்துவிட்டு, எந்த இடைஞ்சலுமில்லாமல் நீ ஆட்சி புரிந்து வரும்படி நான் பார்ப்பேன். இந்தச் சக்தி எனக்கு உண்டு. சூரியன் உதிப்பதற்குப் பதிலாகப் பெரிய இருள் உதயமாகிவிட்டது. பட்டாபிஷேகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, வனவாசம் என்கிறார் அரசர். இந்த அதருமத்தைப் பொறுத்துக் கொண்டு நயமாகப் பேசுவதில் பயனில்லை. என்னால் இதைச் சகிக்க முடியாது. என் தருமத்தை நான் நடத்தியே தீருவேன். அம்மா. நீ பார்! ராமா, நீயும் பார் என் சக்தியை!” என்றான்.


லக்ஷ்மணன் சொன்னது கௌசல்யைக்கு ஆறுதல் தந்தது. ஆயினும் புருஷனை ராஜ்யாதிகாரத்தினின்று நீக்கிவிட்டு, ராஜ்யத்தை ஆக்கிரமிப்பது முதலிய, அதற்கு முன் என்றும் கேளாத பேச்சுக்களைக் கேட்டுப் பயந்தாள்.


“ராம! லக்ஷ்மணன் சொல்வதையெல்லாம் சரியாக ஆலோசித்துப் பார். காட்டுக்குப் போகவேண்டாம். போனால் நான் தனியாக எப்படி இங்கே சத்துருக்களிடையில் இருக்கமுடியும்? உன்னுடன் நானும் வந்து விடுகிறேன்!” என்றாள்.


தம்பி சொன்னதைச் சாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ராமன். லக்ஷ்மணனுடைய ரோஷம் பொங்கி வடியவேண்டும்; அதை முற்றிலும் அடக்க இயலாது என்று எண்ணிக் கோபம் தீரப் பேச விட்டான்.


பிறகு கௌசல்யா தேவியை நோக்கி, “தாயே! என்னுடன் யாரும் காட்டுக்குப் போகும் பேச்சு வேண்டாம். வயோதிக அரசருக்கு நீங்கள் சிசுரூஷை செய்து கொண்டு பொறுமையுடன் இங்கேயே இருப்பது உங்கள் கடமை. மகாராஜனைப் புருஷனாகக் கொண்ட பட்டமகிஷி எவ்வாறு புருஷனை இழந்த ஒரு ஸ்திரீயைப் போல் வனத்துக்கு என்கூட வரலாம்? அது தகாது. நான் வனவாசம் முடிந்து திரும்பி வரப் போகிறேன். எல்லாரும் சுகமாகப் பல்லாண்டு வாழ்வோம். தந்தையின் வாக்கு தருமமோ அதருமமோ, சுயமாகச் சொன்னதோ, பிறர் சொல்லக் கேட்டு மோசம் போய்ச் சொன்னதோ, எப்படியாயினும் சரி, அதைச் சிரமேற் கொண்டு நிறைவேற்றுவது என் கடமை. இந்தத் தருமத்தை நான் புறக்கணித்து விட்டு எந்தப் பொருளைப் பெற்றும் எந்தப் பதவியை வகித்தும் சுகமோ புகழோ பெற முடியாது. லக்ஷ்மணா, நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. உன் சக்தியை நான் அறிவேன். சந்தேகமேயில்லை. எல்லாரையும் தோற்கடித்து, ஹதம் செய்து, எனக்கு நீ ராஜ்யம் சம்பாதித்துக் கொடுப்பாய். என் மேல் உனக்கு இருக்கும் அன்பும் எனக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய வம்சத்துக்குத் தகாது. பிதிரு வாக்குப் பரிபாலனம் என்பது சிறந்த தருமம். அதை இழந்து வேறு எதைச் சம்பாதித்தாலும் ஈடு ஆகாது.”


இவ்வாறு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றான் ராமன். லக்ஷ்மணனுடைய கோபம் அவ்வளவு சுலபமாகத் தணியுமா? தன்னைப் பற்றிய விஷயமாக இருப்பின், ஒரு வேளை கோபம் எளிதில் தணியும். ராமனுக்கு இந்தத் துக்கம் கொஞ்சமும் காரணமின்றி மிக அநியாயமாய் நேர்ந்ததே என்கிற கோபம் அவனை விட்டு அகலவில்லை. படம் எடுத்துச் சீறும் நாகப்பாம்பைப் போல் கண்களினின்று கோபப்பொறிகள் பறந்து கொண்டிருந்த லக்ஷ்மணனைத் தனியாக உட்கார வைத்து ராமன் நிதானமாகப் பேசினான்.

*

“தம்பி, எனக்கு நீ வெளியில் நடமாடும் உயிரல்லவா? நான் சொல்லுவதைக் கேள். நீ தைரியசாலி. உன் கோபத்தையும் என்னைப் பற்றிய துக்கத்தையும் நீ அடக்கியாள வேண்டும். அது உன்னைப் பிடித்துக் கொண்டு வெறியாட்டமாட இடம் கொடுக்காதே. தருமம் என்பதைப் பலமாகப் பற்றிப் பிடித்து இப்போது ஏற்பட்ட அவமானத்தை ஒரு பெரிய சந்தோஷமாக மாற்றுவோம். பட்டாபிஷேகத்தை முற்றிலும், மறந்துவிட்டு, நம் கருத்தையெல்லாம் வேறு துறையில் செலுத்துவோம். நம்மைப் பெற்ற தந்தையின் நிலை இப்போது என்ன என்பதை நன்றாக ஆலோசிப்போம். அவருக்கு ஏற்பட்டிருக்கும் பயம் என்னவென்பதை நாம் உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டோ கொடுத்துவிட்ட ஒரு வரத்தை இல்லையென்று இப்போது சொன்னால் அசத்தியத்தில் இறங்கினதாகும்; பாபம் வந்து சுற்றிக் கொள்ளும்; இதுவரையில் அவர் நடத்திய சகல தருமமும் தானமும் புண்ணிய கருமங்களும் பயனின்றிப் போகும். இந்தப் பெரும் பயத்தினால் நம் தந்தை வேதனைப் படுகிறார். அவருடைய பயத்தைத் தீர்ப்பதல்லவோ நம்முடைய கடமை? என்னைப் பற்றி வருந்துகிறார். எனக்கு வருத்தம் கொஞ்சமுமில்லை, உனக்கும் வருத்தமில்லையென்று அவருடைய சந்தேகத்தை முற்றிலும் போக்கி அவருக்கு நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். நமக்கு உயிர் கொடுத்த தந்தையின் பயத்தைப் போக்கி அவர் மனம் நிம்மதியடையச் செய்வது புத்திரர்களாகிய நம்முடைய கடமை. பரலோகத்தைப் பற்றி நம்முடைய தந்தை பயப்படுகிறார். அந்தப் பயத்தை நாம் போக்கவேண்டும். இதுவரையில் நாம் அவருக்கு எள்ளளவும் துக்கமோ அதிருப்தியோ தந்ததில்லை. இப்போது நாம் அவர் பரலோகத்தைக் குறித்துப் பயப்படுவதற்குக் காரணமாய் விட்டோம். அதைச் சுலபமாக நாம் தீர்க்கலாம். அப்படிச் செய்யாமல் அவருடைய சங்கடத்தை அதிகப்படுத்தலாமா? இந்தக் காரணத்தினால், லக்ஷ்மணா, பட்டாபிஷேகத்தைப் பற்றி முற்றிலும் என் மனம் விலகி வனம் போவதிலேயே ஈடுபட்டு விட்டது. நான் காட்டுக்குப் போய் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்விப்பதே என்னுடைய ஆசையும் மகிழ்ச்சியுமாகி விட்டது. இதைத் தாமதப்படுத்தினால் கைகேயிக்குச் சத்தேகம் உண்டாகும். ஆனபடியால் இன்றே வனம் சென்று அவளுடைய மனம் நிம்மதியடையச் செய்ய வேண்டும். சத்தியப் பிரதிக்ஞையைப் பற்றிய பயம் தீர்ந்து போய் நம் தந்தை சுகமாக இருப்பார். நான் துயரமடைவேன் என்றல்லவா அவர் வேதனைப் படுகிறார்? எனக்குக் கொஞ்சமும் துக்கமில்லை என்று அவருக்குத் தெளிவானால் அவருடைய வேதனை அவரை விட்டு விலகும். இதனாலேதான் நான் அவசரப்படுகிறேன். கைகேயியைப் பற்றி நாம் கோபித்துக் கொள்ளக்கூடாது. நம்மிடத்தில் அவள் இது வரையில் எவ்வளவு பிரீதி வைத்திருந்தாள்! திடீர் என்று இம்மாதிரியான எண்ணம் அவளுக்கு உண்டானது விதியின் காரியம். நாம் அவளை நிந்திக்கலாகாது. மக்கள் ஏதேதோ சங்கற்பம் செய்வார்கள். ஆனால் விதி வேறு விதமாகத் தீர்த்து விடுகிறது. இது கைகேயியினுடைய காரியமே அல்ல. விதி அவளை ஒரு அறிவில்லாத கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறது. பழியைச் சுமக்கும் துக்கம் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவளிடத்தில் நாம் வைத்து வந்த அன்பு அப்படியே இருக்க வேண்டும். வஞ்சக எண்ணம் அவள் உள்ளத்தில் முந்தியே இருந்திருந்தால் அவள் நடவடிக்கை வேறு விதமாக இருந்திருக்கும். திடீர் என்று இந்த விதம் நிர்த்தாட்சிண்யமாக 'ராமனே, நீ வனம் செல்' என்று அவள் தன் வாயாலேயே சொல்லுவதற்குக் காரணம் தெய்வச் செயலே, சந்தேகமில்லை. அவள் மேல் நாம் கோபம் கொள்ளலாகாது. அவள் எவ்வளவு மேன்மைக் குணம் பொருந்தியவள். நம்மைப் பெற்ற தாயைப் போல் பார்த்து வந்தவள்! பண்பாடு அடைந்தவள். புருஷன் எதிரில் இம்மாதிரி கூச்சமின்றி ஏன் நடந்து கொண்டாள்? இதற்குத் தெய்வத்தின் செயலல்லாமல் வேறு காரணமிருக்க முடியாது. விதியை யார் தான் எதிர்க்க முடியும்! மகா தீரர்களான ரிஷிகள் கூடத் தங்கள் தவத்திலிருந்து திடீரென்று வழுவிப் போயிருக்கிறார்கள். தெய்வத்தால் வந்ததை எதிர்க்கும் ஆற்றலைக் கைகேயி எப்படிப் பெறுவாள்? நம்முடைய மனோ தைரியத்தால் இந்த அனர்த்தத்தை நாம் சந்தோஷ நிகழ்ச்சியாகச் செய்து விடுவோம். அதுவே நம்முடைய வீரத்துக்கு அடையாளம். லக்ஷ்மணா, வனம் செல்லுவதற்குச் சங்கற்பம் முறைப்படி செய்து பெரியோர்களுடைய ஆசியைப் பெற்றுக் கொண்டு நான் உடனே போக வேண்டும். தாமதம் கூடாது. அபிஷேகத்துக்கென்று கொண்டு வந்திருக்கும் கங்கை ஜலத்தைக் கொண்டு வா! அதையே வனவாச விரத சங்கற்பத்துக்கு உபயோகித்துக் கொள்ளுகிறேன. இல்லை! வேண்டாம்! அந்த ஜலம் பட்டாபிஷேகத்துக்கு உபயோகப் படவேண்டிய ராஜாங்கப் பொருள். அதை நாம் எப்படித் தொடலாம்? நாமே கங்கை சென்று ஜலம் கொண்டு வருவது நலம். தம்பி, விசனப்படாதே. ராஜ்யம், சம்பத்து இவற்றைப் பற்றிச் சிந்தனை செய்யாதே. வனவாசமே எனக்கு மேன்மையான பாக்கியம். நம்முடைய சிறிய அன்னை பேரில் கோபிக்க வேண்டாம். அபிஷேகக் காரியங்களைத் தடுத்தது அவளல்ல. தெய்வம் வகுத்ததை அவள் பேரில் போடலாகாது.” இவ்வாறு ராமன் சாந்தமாகத் தம்பிக்குத் தன் அந்தராத்மாவின் கருத்தை விவரமாக எடுத்துச் சொன்னான்.


இந்த இடத்திலெல்லாம் வால்மீகி உபயோகித்திருக்கும் பதம் “தைவம்”. சம்ஸ்கிருத இலக்கியங்களில் “தைவம்” என்றால் “விதி” என்று பொருள். தைவம், திஷ்டம், பாக்யம், நியதி, விதி இந்தப் பதங்களெல்லாம் எதிர்பாராததும் காரணமறியாததுமான நிகழ்ச்சிக்கு ஒரு பொருள் கொண்ட பல மொழிகள். தன்னுடைய முயற்சியோ அல்லது பிறருடைய சூழ்ச்சியோயில்லாமல் நிகழும் நிகழ்ச்சியை இந்தப் பெயர்களிட்டுச் சொல்வார்கள். 'எல்லாம் ஈசுவரனுடைய செயல்' என்கிற கொள்கையினால் 'விதி'க்கும் ஈசுவர ஸங்கல்பத்துக்கும் கொஞ்சம் குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஆனால், ராமன் இந்தச் சந்தர்ப்பத்தில் தம்பிக்குச் செய்த உபதேசத்தில் கைகேயினுடைய காரியத்தைத் தேவர்கள் தங்களுக்காகச் செய்த சூழ்ச்சி என்று அறிந்து சொல்லவில்லை. சாதாரண மக்கள் வாழ்க்கையில் "விதியால் நடந்தது; வருத்தப்படாதே; யார் பேரிலும் குற்றம் சொல்லுவதற்கில்லை" என்று ஆறுதல் சொல்லுவது போல் சொன்னான். அவ்வளவே. 


கம்பராமாயணத்திலும் 'யாவராலும் மூட்டாத காலக்கடைத் தீயென மூண்டெழுந்த' இளையோனைப் பார்த்து ராமன் சொல்லுகிறான்.


நதியின் பிழையன்று நறும்புன லின்மை; அற்றே 

பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள் 

மதியின் பிழையன்று; மகன்பிழை யன்று; மைந்த! 

விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்ட தென்றான்.

*

ராமன் சொன்ன சமாதானம் தம்பியின் கோபத்தைக் கொஞ்ச நேரம் அடக்கிற்று. ஆனால் மறுபடியும் மிக வேகத்துடன் கோபம் பொங்கிவிட்டது. “இது விதியின் வேலை. சிற்றன்னையின் மதி கெட்டதற்கு அது காரணமாயிருக்கலாம். ஒப்புக் கொள்ளுகிறேன். அவளை நான் கோபிக்கவில்லை. ஆனால் விதியினால் அனர்த்தம் நடந்துவிட்டது என்று சும்மா இருந்து விடலாகாது. அனர்த்தத்தைச் சீர்ப்படுத்தி நியாயத்தை ஸ்தாபிப்பது க்ஷத்திரியனுடைய தருமம். வீர புருஷன் விதிக்கு அடங்கிப் போவதா? ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று நகரமும் நாடும் பறைசாற்றி விட்டு, எப்போதோ கொடுத்து மறந்து போன வரங்களை இப்போது கிளப்பி, உன்னைக் காட்டுக்குப் போ என்று ஒரு வஞ்சகர் உத்தரவிட்டால் அதை விதி என்று எடுத்துக் கொண்டு அடங்கிப் போவது புருஷ லக்ஷணமல்ல. கீழான ஜனங்களே விதிக்குத் தலை வணங்குவார்கள். நம்மைப் போன்ற வீரர்கள் விதியை எதிர்த்து வெற்றி பெறவேண்டும். வீரியமில்லாதவர்களே விதிக்குத் தலைவணங்குவார்கள். நான் அப்படிச் செய்ய முடியாது. இன்று பார்ப்பீர்கள் விதியின் பலத்துக்கும் வீர புருஷனுடைய பலத்துக்குமுள்ள வித்தியாசத்தை. விதி என்கிற மத யானையை நான் அடக்கித் திருப்பிக் கொண்டு வரப்போகிறேன். உம்மை வனம் செல்லும்படி சூழ்ச்சி செய்தவர்களையே காட்டுக்கு நான் அனுப்பப் போகிறேன். உமக்கு வனம் போகும் ஆசை இருந்தால் அதைப் பிறகு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்குத் தகுந்த காலம் உண்டு. பல்லாண்டு ராஜ்யத்தை ஆண்டு நம்முடைய முன்னோர் செய்து காட்டியபடி ராஜ்யத்தைப் புத்திரர்களிடத்தில் ஒப்புவித்து விட்டு வனம் சென்று தவம் செய்யலாம். இப்போது உம்முடைய ஆட்சியை யாரேனும் எதிர்த்தால் அவர்களைத் தொலைத்துவிட நான் இருக்கிறேன். என் இரு புயங்களை அழகுக்காகவா பெற்றேன்! இந்த வில்லும் இந்த பாணங்களும் இடுப்பில் தொங்கும் இந்தக் கத்தியும் அலங்காரத்துக்கா? அல்லது இவை நாடகமேடை வேஷப் பொருள்களா? நான் உம்முடைய வேலைக்காரன், உத்தரவு தரவேண்டும். பிறகு பார்க்கவும், இந்த வேலைக்காரனுடைய வேலையை!”


இவ்வாறு மறுபடியும் கொழுந்து விட்டெரியும் தீப்போல் கிளம்பிய லக்ஷ்மணனுடைய ஆத்திரத்தை ராமன் மெதுவாகத் தணித்தான்.


“நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும் வரையில் அவர்களுடைய சொற்படி நடப்பது நம்முடைய கடமை. பிதாவின் கட்டளையை மீறும் காரியம் என்னால் முடியாது. அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றித் தந்து அவரை சத்திய பிரதிக்ஞராக்குவது நம்முடைய முதல் கடமை. பெற்ற தாய் தந்தையரை அவமதித்து, தருமமே உருவமான பரதனையும் கொன்றுவிட்டா ராஜ்யத்தைச் சம்பாதிப்பது? அப்படிச் செய்துவிட்டாலும் அதனால் ஏதேனும் சந்தோஷம் அடைய முடியுமா? நான் சொல்லுவதைக் கேள்” என்று சொல்லி லக்ஷ்மணனுடைய கண்ணில் பெருகிய கண்ணீரைக் கையால் துடைத்துச் சமாதானப் படுத்தினான்.


ராமபிரான் தன் கையால் கண்ணீரைத் துடைத்த பிறகும் கோபம் நிற்குமா? லக்ஷ்மணன் சாந்தமானான்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை