22. கைகேயி வியந்தாள் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

ஒரு பக்கம் இயற்கை வேகம் ராமனைப் பற்றிய அன்பு மற்றொரு பக்கம் செய்த பிரதிக்ஞையை எவ்வாறு என் போன்றவன் பொய்யாக்கலாம் என்கிற தரும சங்கடச் சிக்கல். கைகேயி முடிவில் எப்படியோ இரக்கம் கொள்வாள், தரும சங்கடம் தீர்ந்து விடும் என்று தசரதன் எதிர்பார்த்தான். ஆனால் அது இல்லையென்று இப்போது முடிவாகத் தெரிந்து விட்டது.

இனி ஒரே ஒரு கடைசி ஆசை “நான் தந்துவிட்ட வரப் பிரதிக்ஞையில் எவ்விதத்திலும் ராமன் கட்டுப்படவில்லை. என் பிரதிக்ஞையைப்பற்றி அவனுக்கென்ன தரும சங்கடம்? அவனுக்குப்பலம் இருக்கிறது: ஆதரவு இருக்கிறது. அவன் என் பேச்சைப் புறக்கணிக்கலாம். ஆனால் அவன் சுபாவத்துக்கு இது விரோதம். ஆயினும் ஒரு வேளை தெய்வாதீனமாக என்னை எதிர்க்கும் எண்ணம் அவனுக்குத் தோன்றலாம். அப்படிச் செய்வானானால் என் சத்தியமும் என்னால் குறைவின்றிக் காப்பாற்றப் பட்டதாகும்; குலநீதி, தருமம், ஜனங்களுடைய விருப்பம் இவையும் அவன் எதிர்ப்பின் மூலம் வெற்றியடையலாம். ராமன் என் பேச்சைக் கேளாமற் போனால் எல்லாம் சரியாகிப் போம்.”


இவ்வாறு தசரதன் எண்ணினான். பித்ரு வாக்கிய பரிபாலன தருமத்தை ராமன் கைவிடமாட்டான் என்கிற விஷயத்தைத் தசரதன் மறந்து விட்டு இவ்வாறு குழப்பமும் துக்கமும் நிறைந்த தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டதாகத் தோன்றுகிறது.


தன்னுடைய மரணத்தை எப்படியும் நிச்சயமாக எதிர்பார்த்தான். இந்தத் தரும சங்கடத்தில் இது அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் தந்தது. பின்னால் வரப்போகும் கஷ்டங்களைத் தன்னுடைய கண்களால் பார்க்க வேண்டியதில்லையல்லவா?


மரணம் அருகில் வந்து நிற்பதைக் கண்டு விட்டதும் பூர்வ நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. சிறு வயதில் தான் செய்த பாபம் நினைவுக்கு வந்தது. “அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன். ரிஷி குமாரனைக் கொன்று அவனுடைய வயோதிகப் பெற்றோர்களுக்கு எத்தகைய பெரும் துக்கம் உண்டாக்கினேன்! அது வீண் போகுமா? நானும் புத்திரனைப் பிரியும் சோகத்தை அனுபவித்தால் அந்தப் பாபம் தீரும்” - இவ்வாறு தன் உள்ளத்தைத் தசரதன் சமாதானப்படுத்திக் கொண்டான்.


எப்படியாயினும் கொடிய மனைவி தன்னிடம் பெற்றுவிட்ட வாக்கை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்துவிட்டான். ஆனபடியால் காரியக் கிரமத்தையெல்லாம் கைகேயிக்கு விட்டு விட்டான்.


பொழுது விடிந்தது; முகூர்த்த காலம் நெருங்கி விட்டதென்று வசிஷ்ட முனிவரும் சிஷ்யர்களும் பொன் பாத்திரங்களில் புண்ணிய நதிகளின் ஜலமும், இன்னும் பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய பொருள்களும் எடுத்துக் கொண்டு அரண்மனை நோக்கி நகரத்து ராஜ வீதியில் சென்றார்கள். தெருவெல்லாம் மகோற்சவத்துக்காக அலங்கரிக்கப்பட்டு எங்கும் ஜனங்கள் நிறைந்து நின்றார்கள். “எப்போது? எப்போது?” என்று குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்த ஜனங்கள் வசிஷ்ட முனிவரும் அவருடைய சிஷ்யர்களும் செல்வதைப் பார்த்ததும் அடங்கா மகிழ்ச்சி அடைந்தார்கள். நீர்க் குடங்கள், தானியங்கள், ரத்தினங்கள், தேன், தயிர், நெய், பொரி, தர்ப்பைப் புல், சமித்து, புஷ்பம், பால், கனிகள், யானை, குதிரை, ரதம், வெண் குடை, சாமரம், காளை, குதிரை, புலித்தோலாசனம் இவையெல்லாம் வாத்திய கோஷத்துடன் செல்வதைக் கண்டதும், ஜனங்களுடைய ஆரவாரமும் உற்சாகமும் முன்னைவிட அதிகமாயின.


வசிஷ்டர் அரண்மனை வாயிலில் சுமந்திரனைக் கண்டார். “எல்லோரும் காத்திருக்கிறார்கள்; சகல ஏற்பாடுகளும் செய்து ஆயிற்று என்று அரசனுக்கு உடனே தெரிவிக்க வேண்டும்” என்றார்.


சுமந்திரனும் கைகூப்பி வணங்கி அரசன் படுத்திருந்த படுக்கை அறைக்கு வெளியிலிருந்து கொண்டு வழக்கப்படி மங்கள ஸ்துதி செய்து வீட்டு வசிஷ்டருடைய பிரார்த்தனையைத் தெரியப்படுத்தினான்.


“அரசனே, இந்திரனுக்குச் சமானமானவனே, இந்திரனுடைய சூதனான மாதவியைப்போல் நான் உம்மை எழுப்புகிறேன். எல்லா தேவர்களும் உமக்கு வெற்றி தருவார்களாக. பெரியோர்களும் படைத் தலைவர்களும் நகரத் தலைவர்களும் தரிசனத்துக்குக் காத்திருக்கிறார்கள். நிசிதேவி மறைந்தாள். காலையில் செய்ய வேண்டியது சகலமும் உம்முடைய ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது. அரசர்க்கரசே, எழுந்து அருள வேண்டும்! வசிஷ்ட பகவான் பிராமணர்களுடன் காத்திருக்கிறார்” என்றான்.


அச்சமயம் அரசனோ பேச முடியாமல் சங்கடத்தின் உச்சியை அடைந்திருந்தான். ஆகவே, அரசனுக்குப் பதிலாகக் கைகேயி தைரியமாகச் சுமந்திரனிடம் சொன்னாள்:


“சுமந்திரரே! மகாராஜா ராத்திரி முழுதும் ராம பட்டாபிஷேகத்தைப் பற்றியே பேசிக் கொண்டு தூங்காமல் கழித்தார். இப்போதுதான் அயர்ந்து கொஞ்சம் தூங்குகிறார். சீக்கிரம் சென்று ராமனை அழைத்து வாரும்” என்று சமத்காரமாகப் பேசிச் சுமந்திரனை ராமனிடம் அனுப்பினாள்.


தசரதன் தன் யோசனைக்கு ஒப்புக் கொண்டு விட்டான்; ஆயினும் அதைச் செய்து முடிக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை; ஆனபடியால் இனிச் செய்ய வேண்டியதையெல்லாம் தானே செய்ய வேண்டும் என்று கைகேயி தனக்குள் தீர்மானித்து விட்டாள்.


சுமந்திரன் ராமனுடைய அரண்மனைக்குச் சென்றான். சீதையும் ராமனும் மகோத்சவத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.


அந்தச் சமயம் சுமந்திரன் “மன்னனும் கைகேயி அரசியும் உம்மை உடனே வரச் சொன்னார்கள்” என்று சங்கதியைத் தெரிவித்தான்.


ராமன் உடனே புறப்பட்டான். இந்தத் தாமதமும் நடவடிக்கைகளும் கண்டு, எல்லாருக்குமே கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்று. ஆனாலும் அவர்களுக்கு விஷயம் விளங்கவில்லை. அதைப் பற்றிப் பேசவும் மனமில்லை. எல்லாம் நல்லதாகத்தான் முடியும் என்று அவரவர்கள் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு போனார்கள்.


தெருக்களெல்லாம் உற்சவ அமர்க்களம். முகூர்த்தமோ அடுத்து வந்துவிட்டது. இதனிடையில் அரண்மனை அந்தப்புரத்தில் ஜனங்கள் கொஞ்சமும் எதிர்பாராத காரியம் நடந்து கொண்டிருந்தது.


ஏன் வீணாகத் தாமதம் செய்கிறார்கள்? ஒரு வேளை ஏதோ செய்ய வேண்டிய கிரியைகளும் முறைகளும் நீடித்துக்கொண்டு போகிறது போலிருக்கிறது என்று ஜனங்கள் சமாதானப்படுத்திக் கொண்டு காத்திருந்தார்கள்.


வீதிகளில் ஜனக் கூட்டம் வர வர அதிகரித்து வந்தது.


சுமந்திரன் ராமனை அழைத்து வந்தான். கூட்டமாக நின்ற ஜனங்களை மெதுவாக ஒதுக்கி வழி செய்து கொண்டு அவர்கள் சென்றார்கள். அந்தப்புரத்தில் தந்தையின் படுக்கையறையில் ராமன் நுழைந்தான். நுழைந்ததும் பாம்பின் மேல் கால் வைத்தாற்போல் பயந்து திடுக்கிட்டான். அங்கே தந்தையின் நிலையைப் பார்த்து ராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.


அரசன் ஏதோ பெருந்துக்கத்தில் மூழ்கிக் கிடந்தான். அவனுடைய முகம் மல்லிகைப் புஷ்பம் வெய்யிலில் உலர்ந்து போனால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது.


தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். பிறகு கைகேயியின் பாதங்களையும் தொட்டு அவளையும் வணங்கினான்.


“ராம” என்று ஒரு வார்த்தை தீன சுரத்தில் தசரதன் சொல்லிவிட்டுச் சும்மா இருந்து விட்டான். பேசவில்லை. ராமனுடைய முகத்தை நேராகப் பார்க்க அரசனால் முடியவில்லை.


தன்னுடன் பேசாமலும் பாராமலும் படுத்துக் கிடந்த தந்தையின் நிலையைப் பார்த்து ராமன் வியப்பும் பயமும் அடைந்தான்.


தாங்க முடியாத வேதனையிலிருந்த அரசனைப் பார்த்து ஒன்றும் விளங்காமல் திகைத்து ராமன், “அம்மா! இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு கோபமாயிருந்தாலும் என்னிடம் எப்போதும் இனிய பேச்சுப் பேசுவாரே தந்தை? ஏதாவது நானும் அறியாமல் தவறு செய்துவிட்டேனா? ஏதாவது உடம்பில் திடீர் என்று அசௌக்கியம் ஏற்பட்டு விட்டதா? யாராவது ஏதாவது அவருக்குக் கோபம் மூட்டும்படியான சொல் பேசிவிட்டார்களா? தயவு செய்து நடந்ததை எனக்குச் சொல்ல வேண்டும். இதை என்னால் பொறுக்க முடியவில்லை” என்றான்.


இப்படி ராமன் துக்கத்திலும் வியப்பிலும் மூழ்கிக் கேட்ட கேள்விக்குக் கைகேயி கூச்சம் கொஞ்சமுமின்றித் தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் சமயம் வந்துவிட்டது என்று பேசினாள்.


“அரசருக்கு யார் பேரிலும் கோபமில்லை. ஏதோ அவர் மனத்திலுள்ள விஷயத்தை உன்னிடம் சொல்லப் பயப்படுகிறார். அவ்வளவுதான். நீ மனம் நொந்து கொள்வாய் என்று உன்னிடம் விஷயத்தைச் சொல்லப் பயப்படுகிறார். அதனால் பேச முடியாமலிருக்கிறார். முன்னொரு சமயம் என்னிடம் சந்தோஷப்பட்டு எனக்கு வரம் தந்தார். இப்போது 'ஏன் தந்தேன்' என்று பாமரர்களைப் போல் அரசர் வருத்தப்படுகிறார். இது அவருக்குத் தகாதல்லவா? கொடுத்தேன் என்று ராஜாவான ஒருவர் பிரதிக்ஞை செய்துவிட்டுப் பிந்தி வருத்தப்படுவது மடமையல்லவா? அவர் கொடுத்த வரத்தைச் செய்து தீர்க்க வேண்டியது உன் கையில் இருக்கிறது. உனக்குச் சொல்லப் பயந்துகொண்டு கொடுத்த வரத்தையும் செய்த பிரதிக்ஞையையும் பொய்யாக்கலாம் என்று யோசிக்கிறார். இது அவருக்குத் தகுமா? 'பயப்பட வேண்டாம். எனக்காக நீர் சத்தியத்தைக் கைவிட வேண்டாம்' என்று நீ அவருக்குத் தைரியமும் உறுதியும் சொல்லிவிட்டால் அவர் பேசுவார். அவருக்கு நீ உதவி செய்ய வேண்டும். எல்லாம் உன் கையிலிருக்கிறது. 'செய்து தீர்க்கிறேன் அதற்குத் தடையில்லை' என்று நீ எனக்கு உறுதி கூறினால் விஷயத்தைப் பிற்பாடு சொல்லுகிறேன்” என்றாள்.


இதைக் கேட்டு ராமன் வருத்தம் மேலிட்டு அரசன் பக்கத்தில் நின்ற கைகேயிக்குச் சொன்னான்:


“அம்மா! என்னைப் பற்றியா இந்தக் கஷ்டம்? என்னைப் பற்றி நீங்கள் இம்மாதிரி சந்தேகப்படலாகாது. நான் அவ்வளவு கெட்டுப் போனவனல்ல. என்னைத் தந்தை நெருப்பில் விழச் சொன்னால் விழுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். இதோ தாயே சபதம் செய்கிறேன். ஒன்றும் விசாரிக்க வேண்டியதில்லை. அரசர் இதைச் செய்யவேண்டும் என்று என்னால் ஆகக்கூடியதை ஆணையிடலாம். அவர் ஆணை எதுவாயினும் அதைச் செய்வேன், சத்தியம்” என்றான்.


இப்படி ராமன் சொன்னதைக் கேட்டதும் 'முடிந்தது காரியம்' என்று மகிழ்ச்சி அடைந்தாள் கைகேயி. அரசனும் 'இனித் தப்புவதற்கு வழியில்லை' என்று துக்கத்தில் மூழ்கினான்.


அதன்மேல், நாணம், இரக்கம் கொஞ்சமுமின்றி மகா பயங்கரமான விஷயத்தைப் பாவி கைகேயி சொன்னாள்:


“ராமா, நீ சொன்ன மொழி உனக்கே தகும். தந்தையைச் சத்தியவானாகச் செய்வதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன மேலான காரியம்? விஷயத்தை இப்போது சொல்லுகிறேன், கேள். ஏன் உனக்குச் சொல்ல அரசர் பயந்தார் என்பது உனக்கு விளங்கும். சம்பரனுடன் உன் தந்தை சண்டையிட்டுக் காயம் பட்ட காலத்தில் அவருடைய உயிரைக் காப்பாற்றிய எனக்கு அவர் நான் இஷ்டப்பட்ட இரண்டு வரங்களைத் தருவேன் என்றார். 'இப்போது வேண்டாம். வேண்டும்போது கேட்பேன்' என்றேன். 'அப்படியே ஆகட்டும்' என்று அவரும் ஒப்புக்கொண்டார். இப்போது அந்த வரங்களைக் கேட்டுப் பெற்றேன். பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் என்றும். இன்றே நீ ராஜ்யத்தை விட்டு விலகி தண்டகாரணியம் போக வேண்டும் என்றும், இந்த இரண்டு வரங்களையும் அரசனிடம் அடைந்திருக்கிறேன். உன்னுடைய பிரதிக்ஞையையும் தந்தையின் சத்தியத்தையும் காப்பாற்றுவாயாக. நீயும் பொய்யனாகப் போனால் அது வேறு சங்கதி. இல்லையேல், நான் சொல்லுவதைக் கேள்; தாமதமில்லாமல் உனக்கு அபிஷேகம் செய்ய வைத்திருக்கும் ஜலத்தைக் கொண்டே பரதனுக்குப் பட்டாபிஷேகம் நடத்திவிடச் சொல். ஜடையும் மரவுரியும் தரித்து நீ தண்டகவனம் உடனே செல். சம்மதித்தேன் என்று சொல்லி அரசனுடைய பெருங் கஷ்டத்தைத் தீர்ப்பாயாக. இது உனக்குப் புகழ் தரும்” என்றாள்.


'புகழ் தரும்' என்று கைகேயி வாயால் வந்த வார்த்தை உண்மையே அல்லவா? இமயமலையும் கங்கையாறும் சமுத்திரமும் இருக்கும் வரையில் ராமனுடைய புகழ் இருந்தே வரும்!


இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தசரதனுடைய உள்ளம் கொதித்தது. ஆனால் கைகேயியின் வியப்பே வியப்பு! ராமனுடைய முகத்தில் வருத்தம் என்பது அடையாளத்துக்குக் கூடக் காணப்படவில்லை. சக்கரவர்த்தித் திருமகன் புன்னகை செய்து பேசினான்.


“அப்படியா, தாயே? அரசனுடைய பிரதிக்ஞை நிறைவேறும்படி சடையும் மரவுரியும் தரித்து இன்றைக்கே வனம் செல்லுகிறேன்” என்றான்.


ராமன் கைகேயியைப் பார்த்துக் கம்பீரமாகப் பேசலானான்:


“தாயே, எனக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை. பரதனுக்கு நான் எதையும் கொடுத்துவிட்டுப் பரம சந்தோஷத்தை அடைவேன். நீங்கள் யாரும் என்னைக் கேட்காமலே நான் அவனுக்குத் தருவேன். அப்படியிருக்கத் தந்தையின் ஆணை ஏற்பட்டதும் ஒரு கணம் தயங்குவேனா? அரசர் சந்தேகப்பட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது. அவர் இஷ்டத்தை எனக்கு நேரில் சொல்ல அவருக்கு ஏன் கூச்சம்? அவருக்கு நான் அடிமையல்லவா? அவருடைய வாக்கைச் சத்திய வாக்காகச் செய்வதை விட எனக்கு வேறு என்ன புகழ், என்ன பாக்கியம்? இதற்காகவா தந்தை எப்போதும் போல் பிரியமாகப் பேசாமல், முகத்தை எனக்குக் காட்டாமல் கஷ்டப்பட்டது? அவரே நேரில் என்னை அழைத்து இந்த ஆணையைச் சொல்லாதது தான் என்னுடைய குறை. இன்றே ஒரு விசாரமுமில்லாமல் வனம் செல்லுகிறேன். உடனே தூதர்களை வேகமாகப் போகச் சொல்லி பரதனை அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள், தாமதிக்க வேண்டாம்”  என்றான்.


சக்கரவர்த்தித் திருமகன் முகத்தில் அந்தக் கணத்தில் தேஜசு நெய்விட்ட அக்கினி போல் வளர்ந்தது. பாவி கைகேயியோ தான் வெற்றியடைந்து விட்டதாக எண்ணிச் சந்தோஷப் பட்டாள். வரப்போகும் துக்கத்தை அவள் அறியவில்லை. பெற்ற மகனுடைய இகழ்ச்சியை விட வேறு என்னவேண்டும் ஒரு ஸ்திரீக்குத் துக்கம்? ஆசை என்பது அவளை ஏமாற்றிவிட்டது. சொந்த மகனான பரதனுடைய குணத்தைக்கூட அவள் சரியாக உணர முடியாமல் செய்துவிட்டது.


நான்கு பக்கமும் வழியடைத்து அகப்பட்டுக் கொண்ட காட்டு யானைபோல் தசரதன் தவித்துக் கொண்டிருக்க, கைகேயி அனாவசியமாக “அரசன் பேசுவதற்காகத் தாமதிக்க வேண்டாம்” என்று ராமனைத் துரிதப்படுத்தினாள்.


“தாயே! என்னை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றான் இராமன். “தந்தையின் சொல்லை நிறைவேற்றுவதை விட நான் எந்த சுகத்தையும் அதிகமாக மதிக்கவில்லை. பொருளுக்கு ஆசைப்படுவேன் என்று எண்ண வேண்டாம். பரதன் ராஜ்யபாரத்தை வகித்து மூப்படைந்த தந்தையைச் சரியாகப் பார்த்து வர வேண்டும். அதுவே என்னுடைய மகிழ்ச்சியுமாகும்.”


இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தசரதன் ‘ஓ!' என்று பெருங்குரலிட்டு அழுதான். அரசனையும் கைகேயியையும் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு ராமன் துரிதமாக அவ்விடத்தைவிட்டு வெளியே சென்றான்.


வெளியே இருந்த லக்ஷ்மணன் கண்கள் சிவந்து மகா கோபத்துடன் ராமன் பின் சென்றான்.


வழியில் அபிஷேக ஜலக் குடங்களைக் கண்டு முகத்தில் கொஞ்சமும் வருத்தக் குறி இல்லாமல் கம்பீரமாக அவற்றை வலம் செய்து ராமன் சென்றான். தன்னுடன் வந்த வெண்குடை சாமரம் முதலியவைகளை விலக்கிவிட்டு அங்கிருந்த நகரத்து ஜனங்களையும் கலைந்து போகச் சொல்லிவிட்டு ஜிதேந்திரியனான சக்கரவர்த்தித் திருமகன் கௌசல்யாதேவியின் மனைக்குச் சென்றான். தாயிடம் விஷயத்தைச்சொல்லி உடனே வனம் செல்வதற்கு விடைபெற்றுக்கொள்ளச் சென்றான்.


இந்தக் கட்டத்தில் நிகழ்ந்த உணர்ச்சி வேகங்களை எழுத்திலே படித்துவிட்டு மாத்திரம் உணர்வது கஷ்டம். அவரவர் பெற்றிருக்கும் கற்பனைச் செல்வத்தை உபயோகித்து அகக் கண்ணால் நிகழ்ச்சிகளைக் காண வேண்டும். தசரதன் உள்ளமும், சக்கரவர்த்தித் திருமகன் உள்ளமும், ஆசைக்கு இரையான பரதனுடைய தாயின் உள்ளமும் வாழ்க்கையில் தினமும் அடிபடும் நம்முடைய உள்ளங்கள்.


வால்மீகி அகக் கண்ணால் முற்றிலும் ராம சரித்திர நிகழ்ச்சிகளைக் கண்டு பாடினார். கம்பரும் அப்படியே பாடினார். ஆழ்வார்களும் கண்டு உள்ளம் உருகிப் பாடியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எங்கேயாயினும் ராமாயண கதையை யாரேனும் சொன்னால் அவ்விடம் ‘பாஷ்பவாரி பரிபூர்ண லோசன’த்துடன் கண்களிலிருந்து நீர் பெருக ஆஞ்சனேயர் கைகூப்பி நின்று கேட்டுக்கொண்டிருப்பார் என்று பெரியோர்கள் சொல்லுவதின் கருத்து இதுவே.


இந்தக் கட்டத்தைப் பக்தியுடன் படிக்கும் ஆண் பெண் குழந்தைகளுக்கு எப்போது எந்தத் துக்கம் வந்தாலும், ஸ்ரீ ராமன் அருளால் அந்தத் துக்கத்தைத் தாங்கும் சக்தி உண்டாகுக.