21. மனைவியா பிசாசா? (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

‘இது தூக்கத்தில் காணும் துர்ச் சொப்பனமா? நான் விழித்திருக்கிறேனா? இல்லை, தூங்குகிறேனா? ஏதாவது சித்தப் பிரமை வியாதி என்னைப் பீடிக்கிறதா? முன் ஜன்ம பாபங்களின் நினைவு வந்து அதை இப்போது நிகழும் உண்மை போல் காண்கிறேனா? ஏதாவது கிரக பீடையா? பைத்தியம் பிடித்து ஏதோ நடக்கிறதாகக் காண்கிறேனா, ஒன்றும் விளங்க வில்லையே!’ என்று தசரதன் சித்தம் கலங்கி மனத்தில் உண்டான பயத்தைத் தாங்க முடியாமல் தவித்துத் தவித்துப் பிரக்ஞை இழந்தான். கொஞ்சம் நேரம் கழித்துக் கண்ணைத் திறந்து புலியைக் கண்ட மானைப்போல் கைகேயியைப் பார்த்து நடுங்கினான். “ஐயோ!” என்று தரையில் உட்கார்ந்து கதறினான். மந்திரவாதியால் பிடிக்கப்படும் பாம்பைப்போல் ஆடினான். மறுபடி மூர்ச்சையடைந்து விட்டான். பிறகு வெகு நேரம் கழித்து நினைவு அடைந்து கண்களினின்று நெருப்புப் பொறிகள் பறக்க, “ஏ கொடிய அரக்கியே! குலத்தைக் கெடுக்க வந்த பாவியே! உனக்கு என்ன தீங்கு செய்தான் ராமன்? பெற்ற தாயைப் போல உன்னைப் பாவித்து வந்தானே! உன்னை நான் ஒரு பெண் என்று எண்ணினேனே! கொல்லும் விஷப் பாம்பு என்பதைத் தெரியாமல் உன்னை எங்கிருந்தோ கொண்டு வந்து மடியில் வைத்துக் கொண்டேனே!” என்றான்.


கைகேயி ஒன்றும் பேசவில்லை. “நாடெல்லாம் புகழும் ராமனை என்ன குற்றம் சொல்லி நான் தள்ளுவேன்? கௌசலையைத் தள்ளிவிட்டுப் பிழைக்கலாம். தரும சொரூபி சுமித்திரையையும் இழந்து பிழைப்பேன். ராமனை இழந்தால் பிறகு என் உயிர் நிற்காது. ஜலமில்லாமல் பிழைப்பேன், சூரிய ஒளியில்லாமல் சமாளிப்பேன். ராமனை விட்டு விட்டு உயிரை வைத்திருக்க என்னால் முடியாது. இந்த மகா பாப எண்ணத்தை மனத்தினின்று விலக்கித் தள்ளு. உன் பாதத்தில் என் தலையை வைத்து வருந்தி வேண்டிக் கொள்ளுகிறேன். எவ்வளவு தடவை நீயே சொல்லியிருக்கிறாய்: 'எனக்கு இரண்டு அருமைக் குழந்தைகள்; அதில் மூத்தவன் ராமன்தான் எனக்கு அதிகப் பிரியமானவன்' இவ்வாறு பல தடவை நீ சொல்லியிருக்கிறாயே? நீ எப்போதும் நினைத்து வந்ததை இப்போது நான் காரியத்தில் நிறைவேற்றினேனேயன்றி வேறில்லை. அப்படியிருக்க, ஏன் இம்மாதிரிக் கொடிய வரத்தைக் கேட்கிறாய்? இல்லை, இல்லை, என்னைப் பரீட்சை செய்கிறாய்! பரதன் மேல் எனக்குப் பிரியம் உண்டா என்பதைக் காண இப்படிச் செய்கிறாயா ? பெரும் புகழ் பெற்ற குலத்தைப் பாபச் செயலில் அழித்து விடாதே” என்றான். அப்போதும் கைகேயி ஒன்றும் பேசவில்லை. கோபப் பார்வை பார்த்தாள்.


“இது வரையில் எனக்கு வருத்தம் தரக்கூடிய காரியம் ஏதும் நீ செய்ததில்லை. பொருத்தமில்லாத பேச்சும் பேசியதில்லை. இப்பொழுது யார் உன் புத்தியைக் கெடுத்தது? இது உன் செயல் அல்ல, நான் நம்ப மாட்டேன். என் காதலியே, எத்தனை தடவை நீ என்னிடம் சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறாய்? 'பரதன் மிகப் பெருந்தன்மையான பிள்ளை; சந்தேகமில்லை. ஆனால் ராமனுக்குச் சமானமாக மாட்டான் பரதன்' என்று மகிழ்ந்து மகிழ்ந்து சொல்லுவாயே! அந்த ராமனையா நீ இப்போது கூசாமல் காட்டுக்கு அனுப்பு என்கிறாய்? அவனால் காட்டில் இருக்க முடியுமா? இதையா நீ விரும்புகிறாய்? மிருகங்கள் நிறைந்த பயங்கரமான காட்டுக்கு நம்முடைய ராமனை அனுப்பச் சொல்லுகிறாயா? அவன் எவ்வளவு அன்பு செலுத்தி உனக்குச் சேவை செய்திருக்கிறான்? அதை மறந்து விட்டு எப்படி உனக்கு மனம் வந்தது, அவனைக் காட்டுக்கு அனுப்பு என்று வாயால் சொல்ல? அவன் என்ன தவறு செய்தான்? இந்த அரண்மனையில் நூற்றுக் கணக்கான ஸ்திரீகள் இருக்கிறார்கள். யாராவது ராமனைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரு அபவாதம், ஒரு குற்றம் சொல்லியதுண்டா? உலகமெல்லாம் அவனை விரும்புகிறதே? எல்லாருடைய அன்பையும் தன்னுடைய குணத்தாலும் சீலத்தாலும் சம்பாதித்திருக்கிறானே? உனக்கு ஏன் வந்தது அவன் மேல் இப்போது வெறுப்பு? இந்திராதி தேவர்களுக்குச் சமானமாக இருக்கிறானே என் மூத்த மகன்? தவம் செய்யும் ரிஷிகளுடைய முக தேஜஸை அடைந்திருக்கிறானே? ராமனுடைய சத்தியம், சீலம், சினேகம், அறிவு, படிப்பு, வீரம், பெரியோர்களிடம் அடக்கம் இவற்றை எல்லோரும் பாராட்டுகிறார்களே! அவன் வாயில் ஒரு கடினமான வார்த்தை வந்ததை நான் பார்த்ததில்லையே. அவனை எப்படி 'நீ காட்டுக்குப் போ' என்று தந்தையான நான் சொல்லுவேன்? இது சாத்தியமா? நான் கிழவன். எனது அந்திம காலத்தில் என்னிடம் இரக்கம் காட்டு, கைகேயி! இந்த ராஜ்யத்தில் உள்ள செல்வத்தில் எதை வேணுமானாலும் கேள், எல்லாவற்றையும் கேள், உனக்குத் தருவேன். என்னை யமனிடம் அனுப்பாதே! கை கூப்பித் தொழுகிறேன். உன் இரு பாதங்களையும் பிடித்து வேண்டிக் கொள்ளுகிறேன். சரணம், சரணம்! ராமனைக் காப்பாற்றுவாயாக. என்னை அதர்மத்தைச் செய்யச் சொல்லாதே!” என்றான்.


இப்படிச் சோகக் கடலில் விழுந்து மூழ்கித் தவித்துக் கொண்டு கரையேற வகை தெரியாமல் அடிக்கடி நினைவு இழந்தும், கண்ணீர் விட்டு அலறியும், வேதனைப்பட்டுக் கொண்டுமிருந்த மகாராஜனைப் பார்த்து, கைகேயி சிறிதும் இரக்கமின்றிக் கொடிய மொழிகளைப் பேசினாள்.


“அரசனே! வரங்கள் இரண்டு கொடுத்துவிட்டுப் பிறகு கொடுத்தேனே என்று வருத்தப்பட்டுப் புறக்கணித்தீரானால் அரசராகிய உமக்கு எப்படி வாய் எழும், சத்தியம் என்றாவது, தருமம் என்றாவது பேச? மற்ற அரசர்களிடம் என்ன சொல்லுவீர்? ‘ஆம்! என்னைக் காப்பாற்றி எனக்கு உயிர் தந்த கைகேயிக்கு வாக்குத் தந்தேன். பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை; கொடுத்த வாக்கைப் பொய்யாக்கினேன்' என்று சொல்லுவீரா? வேறென்ன சொல்வீர்? ராஜ குலத்துக்கே அபவாதம் சம்பாதித்துக் கொடுக்கிறீர். 'அரசர்கள் மனைவிக்குக் கொடுத்த வாக்கைப் பொய்யாக்குவார்கள், சொன்னதைச் செய்யமாட்டார்கள். என்கிற அபவாதத்தை உம்மால் அரசகுலம் அடையும். சைப்யன் ஒரு பட்சிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் உடலிலிருந்து மாமிசத்தை அறுத்தெடுத்துத் தந்தான் என்பது உமக்குத் தெரியாதா? அலர்க்கன் தன் கண்ணைப் பறித்துத் தந்து சத்தியம் காத்து உத்தம கதியடைந்தான் என்று நீர் கேட்டதில்லையா? சமுத்திரமானது ஒப்பந்தம் செய்து கொண்ட பின் அந்த ஒப்பந்தத்தை மதித்து, கரையை மீறாது நிற்கிறது. செய்த பிரதிக்ஞையைப் பொய்யாக்காதீர். நல்ல குலத்தைச் சேர்ந்தவர் நீர். முன்னோர் வழியில் நடப்பீராக. இல்லை, இல்லை! நீர் தருமத்தை விட்டு விட்டு ராமனுக்குப் பட்டமளித்துக் கௌசல்யையுடன் போகித்து சுகமாக வாழ்வீர். உமக்குச் சத்தியம் எங்கே போனால் என்ன? தருமம் எங்கே போனால் என்ன? எனக்குச் சபதம் செய்து தந்த வரங்களைப் புறக்கணித்தீராகில் உம்மெதிரில் இன்றே விஷம் குடித்து இறப்பேன். ராமனுக்கு நீர் பட்டாபிஷேகம் செய்வீர், அன்றே நான் சத்தியம் தவறிய உம் எதிரில் உயிர்விடுவேன், நிச்சயம். நான் பரதன் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். வாக்குத் தந்தபடி ராமனைக் காட்டுக்கு அனுப்பினீரானால் சரி. இல்லையேல் உயிரை விடுவேன்” என்று கைகேயி உறுதியாகச் சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்தினாள்.


இரக்கமற்ற மனைவியின் முகத்தைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தசரதன் பேச்சில்லாமல் நின்றான். இவள் கைகேயியா அல்லது பிசாசா என்று சந்தேகப்பட்டுப் பார்த்தான். பிறகு கோடரியால் வெட்டப்பட்ட மரத்தைப்போல் கீழே விழுந்தான்.


கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்து, தீன சுரத்தில் மெதுவாகப் பேசினான்: “யார் உனக்கு இந்த உபதேசம் செய்து உன் புத்தியைக் கெடுத்தது, கைகேயி? நான் செத்தேன். குலமும் அழிந்தது. எந்தப் பிசாசு உன்னைப் பிடித்துக் கொண்டு இப்படி வெட்கமிழந்து உன்னை ஆடச் செய்கிறது? நீ என்ன நினைக்கிறாய்? என் மகன் பரதன், அண்ணன் ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுத் தான் அரசனாக இருக்க ஒப்புவானா? ஒரு நாளும் ஒப்பமாட்டான். இதை நீ அறியாயா? ராமனை வனவாசம் போ என்று நான் சொல்லவாவது! இது நடக்கக் கூடிய பேச்சா? உலகத்திலுள்ள அரசர்கள் என்னை இகழமாட்டார்களா ? 'மனைவியினுடைய நிர்ப்பந்தத்தால் இந்தக் கிழவனாகிய மூடன், தன் மூத்த குமாரனும் உத்தம புருஷனுமான ராமனை அவனுக்குரிய ராஜ்யத்திலிருந்து துரத்திவிட்டான்' என்று சொல்லிச் சிரிப்பார்கள் என்பது உனக்கு விளங்கவில்லையா? ராமனைக் காட்டுக்கு அனுப்பு என்று சுலபமாகச் சொல்லுகிறாய். கௌசல்யை உயிர்விட மாட்டாளா? நான் தான் உயிர் வைத்திருப்பேனா? ஜனகருடைய மகளைப் பற்றி யோசித்தாயா? ராமன் தண்டகாரண்யம் போக வேண்டும் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் அவள் உயிர் நீப்பாளே? உன்னை ஒரு ஸ்திரீ என்று நம்பி மனைவியாகக் கொண்டேன். உன் ரூபத்தைக் கண்டு மோசம் போனேன். மதியிழந்தவன் விஷம் கலந்த தேனைக் குடிப்பது போல் உன் அழகைக் கண்டு மயங்கி உன்னைக் கட்டிக் கொண்டேன். வேடனுடைய பாட்டைக் கேட்டு மான் வலையில் சிக்குவது போல் உன் வலையில் சிக்கிப்போய் மாள்கிறேன். உலகம் என்னைச் சீ என்று வெறுத்து என்னை விட்டுத் தூர விலகும். கள் குடித்த பிராமணனைத் தெருவில் எல்லாரும் வெறுப்பது போல என்னை எல்லாரும் வெறுப்பார்கள். ஆஹா! என்ன வரத்தைக் கேட்டாய்? குலம் அழிந்து போகப்போகிறது. ஒரு பெண்ணின் வசம் சிக்கித் தன் அன்புக்குரிய குமாரனைக் காட்டுக்கு அனுப்பிய மூடன் என்கிற இகழ் என்றென்றைக்கும் என்னைப் பற்றிக் கொண்டு நிற்கும். நீ வனம் செல்லவேண்டும் என்று நான் ராமனுக்குச் சொன்னேனானால் மறு பேச்சுப் பேசமாட்டான். போகிறேன் என்று உடனே சந்தோஷமாகப் போய் விடுவான். நானும் எனக்குப் பின் கௌசல்யையும் சுமித்திரையும் உயிர் நீப்போம். இப்படிச் சம்பாதித்த ராஜ்யத்தை நீ சுகமாக அனுபவிப்பாய். பாவி மூடப் பெண்ணே!”


“பரதன் இதற்கெல்லாம் சம்மதிப்பானா? அவனும் இதற்குச் சம்மதித்தானானால் அவன் எனக்கு உத்தரகிரியையும் செய்ய வேண்டியதில்லை. வெட்கமற்ற ஸ்திரீயே, என் சத்துருவே, புருஷனையிழந்து விதவையாகி உன் மகனுடன் ராஜ்யத்தைச் சந்தோஷமாக அனுபவிப்பாயாக.”


“ஹா! ராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமா! ஆஹா! ஸ்திரீகளுடைய சுபாவம் எவ்வளவு பாப சுபாவம்! எவ்வளவு கொடியவர்கள்! இல்லையில்லை. இவள் தான் கொடியவள். மற்றவர்களை ஏன் நான் நிந்திக்கவேண்டும்? பரதன் தனக்குத் தாயாக இவளைப் பெற்றானே! ஒரு நாளும் என்னால் இது செய்ய முடியாது. கைகேயி! உன் காலைப் பிடித்துக் கேட்டுக் கொள்ளுகிறேன். கொஞ்சம் இரக்கம் காட்டு” என்று கதறிக் கொண்டு தசரதன் கீழே தரையில் புரண்டான்.

*

மகாராஜாவாகப் பல்லாண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து பெரும் கீர்த்தியைப் பெற்ற தசரத சக்கரவர்த்தியானவன் பூமியில் புரண்டு அழுதுகொண்டு மனைவியின் பாதங்களைப் பிடித்து இறைஞ்சும் நிலையை என்னென்று சொல்வது! சம்பாதித்த புண்ணியம் தீர்ந்ததும் யயாதி சுவர்க்கத்திலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுப் பூமியில் வீழ்ந்த காட்சியாக இருந்தது

அது.


மகாராஜன் எவ்வளவு வணங்கி எவ்வளவு தீனமாகக் கேட்டுக்கொண்டும் கைகேயி பிடிவாதமாக, “நீர் சத்யசந்தர், சொன்ன சொல் தவறாதவர் என்று இவ்வளவு நாள் எல்லாரிடமும் பறை சாற்றி வந்தீர். தெய்வங்கள் சாட்சியாக எனக்கு வரம் தந்துவிட்டு அதைப் புறக்கணிக்கப் பார்க்கிறீர். நீர் வார்த்தை தவறினால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன், அது நிச்சயம்” என்று முடிவாகச் சொல்லி விட்டாள்.


“அப்படியானால் பாவி, ராமன் வனம் போவான், நான் சாவேன். நீ எனக்கும் என் குலத்துக்கும் பகையாகி உன் விருப்பத்தையடைந்து என்ன சுகமடைய வேண்டுமோ அதை அடைவாயாக” என்றான் தசரதன்.


மறுபடியும் “ராமனைக் காட்டுக்கு அனுப்பி நீ என்ன பிரயோஜனத்தைப் பெறுவாய் என்பதை நான் அறியவில்லை. உலகம் முழுவதும் உன்னை இகழ்வதைத் தவிர, வேறொரு பிரயோஜனமும் நீ அடையப் போவதில்லை. புத்திரப் பேறு இல்லாது பல்லாண்டு வருந்தி, பிறகு ஆண்டவன் அருளால் ராமனை அடைந்தேன். அவனை இப்போது காட்டுக்கு அனுப்புகிறேன். ஆஹா! என்ன பாக்கியத்தைப் பெற்றேன்!” என்று கிழ அரசன் அழுதான்.


பிறகு அவன் ஆகாயத்தை நோக்கி, “நிசியே, நீ தீர்ந்து பொழுது விடிந்து விட்டால் நான் என்ன செய்வேன்? பட்டாபிஷேகத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு என்ன சொல்லுவேன்? ஆகாயமே! நட்சத்திரங்களுடன் எனக்காக அப்படியே நிற்பாய்! ஐயோ! வேண்டாம். அப்படியானால் இந்தப் பாவியின் முகத்தில் விழித்துக்கொண்டே இருக்க வேண்டியதாகும்! சீக்கிரம் தீர்ந்து போவாய் நிசியே. விடிந்தால் இவள் முகத்தைப் பார்க்காமலிருக்கலாம்” என்று இவ்வாறு பேசிக்கொண்டு உன்மத்த நிலையும் மூர்ச்சையுமாக மாறி மாறி வேதனைப்பட்டான் அப்பாவி தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டு முதுமையடைந்த பேரரசன்.


“என்மேல் இரக்கம் கொள்வாய், கைகேயி! நான் கோபம் கொண்டு சொன்னதையெல்லாம் மறந்து விடு. உனக்கு என் பேரிலிருந்த அன்பை வைத்துக் கேட்டுக்கொள்கிறேன். ராஜ்யம் உனக்குத் தந்தேன் என்றே வைத்துக்கொண்டு ராமனுக்கு அதை நீ உன்னுடையதாக உன்னுடைய கையால் கொடுத்து நாளை நடக்க வேண்டிய பட்டாபிஷேகம் நடைபெறும்படி செய். நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகமென்று ராஜ சபையில் தீர்மானித்துப் பெரியோர்களுக்கும் ராமனுக்கும் நான் சொன்னதைப் பொய்யாக்க வேண்டாம். என்மேல் இரக்கம் கொள். ராமனுக்கு நீயாகக் கொடு ராஜ்யத்தை. உலகமுள்ளவரையில் நிற்கும் பெருங் கீர்த்தியை அடைவாய். என் விருப்பம், ஜனங்களின் விருப்பம், பெரியோர்களின் விருப்பம், பரதன் விருப்பம் எல்லாமும் இதுவேயாகும். இதைச் செய்வாய் என் உயிரே, என் காதலியே!” என்று மறுபடியும் அரசன் கொடிய கைகேயியைக் காலைப் பிடித்து வேண்டிக் கொண்டான்.


“முடியாது! கொடுத்த வரத்தைப் பொய்யாக்காதீர். சத்தியம் சத்தியம் என்று பேசிக்கொண்டிருந்து, ஏன் இப்போது அசத்தியத்தில் புகப் பார்க்கிறீர்? அப்படிச் செய்தீரானால் என் உயிரை மாய்த்துக்கொள்வேன், அறிவீர். வீண் கால தாமதம் வேண்டாம்” என்றாள் கைகேயி.


“மந்திரத்துடன் கையைப் பிடித்துத் தீயின் முன் உன்னைக் கொண்டேன். இப்பொழுது உன்னை நீக்கினேன். எனக்கும் உனக்கும் பிறந்த மகனையும் நீக்கி விட்டேன். இரவு தீர்ந்து, பொழுது விடியப் போகிறது. பட்டாபிஷேகம் இல்லை. ராமன் எனக்கு உத்தர கிரியை செய்வான்” என்றான் அரசன்.


“வீணாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறீர். ராமனுக்குச் சொல்லியனுப்பி அவனை இங்கே உடனே வரவழைக்கவும். பரதனுக்கே ராஜ்யம் என்று சொல்லி அவனை வனத்துக்கு அனுப்பிச் சத்தியத்தைக் காப்பாற்றவும். தாமதம் செய்ய வேண்டாம்” என்றாள் கைகேயி.


“அப்படியா?” என்றான் அரசன்.


“சரி, என் மகன் முகத்தையாவது பார்ப்பேன். நான் இறப்பது நிச்சயம், உடனே அவனை வரச் சொல். இறப்பதற்கு முன் அவன் முகத்தையாவது பார்ப்பேன். சத்தியம் என்கிற கயிற்றினால் கட்டப்பட்ட இந்த மூடக் கிழவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று தீன சுரத்தில் சொல்லிவிட்டு மறுபடியும் நினைவு இழந்தான்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை