சபையில் காரியங்களையெல்லாம் முடித்து விட்டு, பட்டாபிஷேக மகோற்சவத்துக்காகச் செய்ய வேண்டியதையெல்லாம் பூர்த்தியாக உத்தரவிட்டு, ஒரு கவலையும் இனி இல்லை என்று சந்தோஷமடைந்து தசரதன் தன் காதல் மனைவி கைகேயி தேவியினுடைய அந்தப்புரத்தை நோக்கிச் சென்றான். அரசியல் காரியங்களில் கிரமப்படி கேட்க வேண்டியவர்களையெல்லாம் கேட்டுச் சம்மதம் பெற்றுப் பட்டாபிஷேகத் தீர்மானம் முடிந்துவிட்டது. ஒரு பெரிய பாரம் தீர்ந்து கவலையற்று ஓய்வு ஏற்பட்டால் உடலின் பசுதர்மம் தலை எடுப்பது இயற்கை. உடனே போய்த் தன் அழகிய காதல் மனைவியோடு விஷயங்களைச் சொல்லிச் சல்லாப சுகம் அடையலாம், பொழுது விடிந்ததும் உற்சவம், அதுவரையில் ஆசை தீரப் போகத்தில் மூழ்கலாம் என்கிற எண்ணத்தோடு வெள்ளை மனத்துத் தசரதன் அந்தப்புரத்தில் புகுந்தான்.
எப்போதுமே இளைய மனைவியின் அரண்மனை, விசேஷமான அழகு வாய்ந்தது. ரமணீயமான தோட்டமும் வாவிகளும் மேலே பறக்கும் பறவைகளும் நீரில் விளையாடும் பறவைகளும் சித்திரத் தோகை விரித்து ஆடும் மயில்களும் மரங்களிலெல்லாம் விதம் விதமான புஷ்பங்கள் மலர்ந்து பிரகாசிக்கும் காட்சியுமாக அந்த அந்தப்புரம் எப்போதையும்விட அதிக அழகு பெற்று விளங்குவதாக எண்ணினான் தசரதன். ஆகாயத்தில் ராகுக் கிரகம் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கிற நாளில் அதையறியாத சந்திரன் பயமின்றிப் பூரண களையுடன் உதயமாவது போல் முகத்தில் மகிழ்ச்சி ஜொலிக்கத் தசரதன் கைகேயியின் அழகிய இல்லத்தில் பிரவேசித்தான். அங்கே என்ன காத்திருக்கிறது என்று அறியவில்லை!
அரண்மனையில் வாசனைத் திரவியங்கள் பான விசேஷங்கள் வழக்கம் போல் எல்லாம் அந்த அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய பிரகிருதி வேகம் அதிகரித்தது. ஆசனங்களையெல்லாம் பார்த்தான். அவனுடைய காதலியைக் காணவில்லை.
இன்பத்துக்கென்றே தனியாக அமையப் பெற்ற மனைவியாவாள் கைகேயி. அவள் ராஜ விவகார விஷயங்கள் எதிலும் தலையிடுவதில்லை. அவளுடைய அந்தப்புரம் நுழைந்ததுமே அரசனுக்கு உள்ளம் முழுதும் காதல் வேகம் பொங்கும். எப்போதும் அரசன் வரும் சமயம் அவள் காத்திருந்து எதிர்கொண்டு அணைத்துக் கொள்ளுவாள். இன்று ஏன் அவள் காணப்படவில்லை? அரசன் கொஞ்சம் திகைத்தான். படுக்கைகள் ஆசனங்கள் எல்லாம் மறுபடி உற்றுப் பார்த்தான். விளையாட்டுக்காக ஒளிந்து கொண்டிருக்கிறாளோ என்று எண்ணி மகிழ்ச்சியடைந்து திரும்பத் திரும்பக் கவனித்துப் பார்த்தான். என்றும் இப்படி இருந்தது இல்லையே, என்ன காரணம் என்று யோசித்து அங்கிருந்த ஒரு காவல் பெண்ணைக் கேட்டான். அவள் கைகூப்பி “சுவாமி! தேவியார் மிகக் கோபங் கொண்டு உள்ளே போய்விட்டார்கள்” என்றாள்.
அரசன் பயந்தான். உள்ளே சென்று ஊடலறைக்குள் நுழைந்தான். கொஞ்சமும் எதிர்பாராத விபரீதக் காட்சியைக் கண்டான்.
கைகேயி அரசனைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. அப்பாவி அரசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எவ்வாறு விளங்கும்? கல்மஷம் என்பது கொஞ்சமும் அவன் உள்ளத்திலில்லை. கைகேயியினுடைய உள்ளத்திலோ பாபம் நிறைந்து அடைத்துக் கொண்டிருந்தது. இவன் வயதோ அதிகம். அவளோ இன்னும் சிறு வயது. காதல் உணர்ச்சியோ அரசனுக்கு அதிக வேகத்திலிருந்தது. இந்த நிலையில் அவனுக்கு ஒன்றும் விளங்காமல் பைத்தியக்காரனைப் போல் நடந்து கொண்டான்.
கீழே கிடந்த கைகேயிக்கு அருகில் இவனும் தரையில் உட்கார்ந்து அவள் தலையை மெதுவாகத் தூக்கித் தன் மடியின் மேல் வைத்துக்கொண்டு தடவிக் கொடுத்தான்.
“உனக்கென்னவாயிற்று? உடம்பில் என்ன? எங்கேயாவது வலியா? எனக்குச் சேவை செய்யச் சிறந்த வைத்தியர்கள் இல்லையா? உடனே வரவழைக்கிறேன். எதுவாயிருந்தாலும் சரிப்படுத்தி விடுவார்கள். நீ பயப்பட வேண்டாம்” என்றான்.
கைகேயி பெருமூச்சு விட்டாள்; பேசவில்லை.
“உன்னை யாராவது அரண்மனையில் அவமதித்துப் பேசிவிட்டார்களா? யாராவது ஏதாவது தவறு செய்திருந்தால் எனக்குச் சொல், கடுந்தண்டனை விதித்து விடுவேன். யாராவது உன்னை அலட்சியம் செய்து உனக்குக் கோபம் உண்டாக்கினார்களா? அல்லது உனக்கு ஏதாவது வேண்டுமாயிருந்து என்னையறியாமல் அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேனா, சொல்!”
இவ்வாறெல்லாம் சாதாரணமாகப் பெரிய வீட்டு நிருவாகத்தில் ஏற்படக்கூடிய குறைகளை எல்லாம் கேட்டுப் பார்த்தான்.
கைகேயியோ இதையெல்லாம் ஒன்றும் கவனிக்காமல் பிசாசு பிடித்தவள் போல் பேசாமல் கிடந்தாள்.
“உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள். யாரைத் தண்டிக்கவேண்டும்? தண்டிப்பேன். யாரைத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும்? உடனே கொலையாளியாக இருந்தாலும் விட்டுவிடுவேன்!-” இப்படியெல்லாம் காம மோகத்தால் பீடிக்கப்பட்டு, கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
“எனக்கு உள்ள சர்வாதிகாரம் உனக்குத் தெரியாதா? யாருக்கு என்ன கொடுக்க வேண்டும்? எந்த தேசத்தில் யாரை என்ன செய்யவேண்டும், சொல் அதை உடனே செய்து விடுவேன்” என்றான் மறுபடியும்.
கைகேயி எழுந்து உட்கார்ந்தாள். அரசனுக்கு உடனே சந்தோஷமாய் விட்டது. கைகேயி பேச ஆரம்பித்தாள்:
“என்னை யாரும் அலட்சியமாகப் பேசவில்லை. யாரும் நிந்திக்கவில்லை, அவமானப் படுத்தினதில்லை. அரசனே, உம்மால் ஆகவேண்டிய காரியம் இருக்கிறது. அதை நீர் செய்து தரவேண்டும். தந்தால் சொல்லுகிறேன்” என்றாள்.
இதைக் கேட்டதும் அப்பாவியான தசரதனுக்கு மனம் பூரித்துவிட்டது. ‘எது வேண்டினும் அதைச் செய்யும் சக்தி எனக்கிருக்க, இனி என்ன கவலை?’ என்று தைரியம் அடைந்தான். முகம் மலர்ந்து, “கைகேயி! உடனே சொல், உனக்கு என்ன வேண்டும்? அதைச் செய்கிறேன். எதன் மேல் ஆணையிட்டுச் சொல்லவேண்டும்? உனக்குப் பிரியமானது எது? பெண்களுக்குள் நீதான் என் அன்பின் உச்சிக்கோடு. ஆண்களுக்குள் ராமசந்திரனைவிட எனக்கு வேறு யாரும் பிரியமில்லை. அந்த ராமன் பேரில் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ எது வேண்டுமென்கிறாயோ அதைச் செய்வேன். இது உறுதி” என்றான்.
பாபம் முற்றிக்கொண்டு வந்தது. “ராமன் மேல் ஆணை” என்றதுமே கைகேயிக்குத் தைரியம்
பிறந்தது.
“அப்படியா? ஆனால் சரி, ராமன் மேல் ஆணையிட்டுச் சொல்வீர். நான் கேட்பதை மறுக்காமல் தருவதாக மறுபடியும் சபதம் செய்வீராக” என்றாள்.
“என் காதல் அரசி! அப்படியே! இதோ சபதம் செய்கிறேன். என் அன்புக்குரிய ராமன் மேல் ஆணை. நான் அடைந்த சகல புண்ணியத்தின் மேலும் ஆணை. நீ என்ன விரும்புகிறாயோ, அதைச் செய்வேன், இது சத்தியம்” என்றான் அரசன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கைகேயிக்குத் தன் மகா பாப எண்ணத்தைக் கருதி ஓரளவு சந்தேகம் உண்டாயிற்று. ஒரு வேளை 'மாட்டேன், இது மகா பாபம், ஆணையும் சபதமும் இத்தனை பெரிய பாபம் செய்யும் படி இடம் தரா' என்று சொல்லிவிடுவானோ என்று பயம் ஏற்பட்டது. எழுந்து நின்று கைகள் கூப்பி நான்கு திசைகளும் பார்த்து உரத்த குரலில் “ஓ தேவர்களே! என் புருஷன் செய்த சபதத்திற்கு நீங்கள் எல்லாரும் சாக்ஷியாவீர்கள். ஏ! சூரிய சந்திராதி கிரகங்களே, நீங்களும் சாக்ஷி. ஏ! பஞ்ச பூதங்களே, நீங்களும் சாக்ஷி. சத்தியம் தவறாத என் புருஷன் செய்த சபதத்திற்கு நீங்கள் எல்லாரும் சாக்ஷிவீர்கள்!” என்று சொன்னாள்.
மகிழ்ச்சி மலர்ந்த முகத்தோடு தசரதன் கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். காம மோகத்தால் அரசன் மதியிழந்து வலையில் சிக்கினான் என்று நிச்சயம் செய்து கொண்டாள். அதன் மேல் தைரியமாக ஆரம்பித்தாள்:
“அரசனே, நினைவிலிருக்கிறதா? முன் நாளில் யுத்த பூமியில் காயப்பட்டு உயிரிழக்கும் தறுவாயில் நீர் இருந்தபோது இருட்டில் ரதத்தை நானே மெள்ளச் செலுத்தி, அப்புறப்படுத்தி, உம்முடைய உடலில் பாய்ந்திருந்த அம்புகளையெல்லாம் எடுத்துச் சுகப்படுத்தினேன். மூர்ச்சை தெளிந்ததும், 'பகைவர்கள் என்னைக் கொன்றிருப்பார்கள்; நீ எனக்கு உயிர் கொடுத்தாய். உனக்கு வேண்டிய வரங்கள் இரண்டு கேள்' என்றீர். நான் 'இப்போது வேண்டாம், பிறகு வேண்டும் போது கேட்கிறேன். இப்போது நீர் உயிர் தப்பியதே எனக்குப் பெரு மகிழ்ச்சி' என்று சொன்னேன் அல்லவா? நினைவிலிருக்கிறதா?” என்றாள்.
“நன்றாக நினைவிலிருக்கிறது! இரண்டு வரங்களையும் கேள், இப்போதே தருகிறேன்” என்றான் தசரதன்.
“சபதம் செய்திருக்கிறீர். ராமன் மேல் ஆணையிட்டுச் சபதம் செய்திருக்கிறீர். தேவர்களும் பஞ்ச பூதங்களும் சாக்ஷியாக இருக்கிறார்கள். இதோ கேட்கிறேன். சத்தியத்தைக் காப்பாற்றுவீர். உம்முடைய முன்னோர்கள் வழியில் நின்று நல்ல கதியடைவீர். வாக்குத் தவறாதீர். இப்போது அமைத்து வைத்திருக்கும் பட்டாபிஷேக சாமக்கிரியைகளைக் கொண்டு பரதனுக்குப் பட்டங் கட்டுவீராக. முதல் வரமாக இதை வேண்டுகிறேன். இரண்டாவது வரம் நான் கேட்பது, உம்முடைய மகன் ராமனைப் பதினான்கு வருஷம் வனவாசம் செய்யும்படி உடனே தண்டகாரண்யம் அனுப்புவீர். செய்த பிரதிக்ஞையைப் புறக்கணிக்காதீர். உம்முடைய குலத்தின் புகழையும் புண்ணியத்தையும் காப்பாற்றுவீர்!” என்றாள்.