19. கூனியின் போதனை (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

அதுவரையில் ராமனைத் தன் வயிற்றில் பிறந்த குழந்தையாகவே பாவித்து வந்த கைகேயி இப்போது மந்தரையின் உபதேச வலையில் சிக்கிக் கெட்டுப் போனாள்.

“பயமாக இருக்கிறது, என்ன செய்யலாம் சொல், மந்தரா! கௌசல்யைக்கு அடங்கி நான் அவளுடைய வேலைக்காரியாகப் போவதா? ஒரு நாளும் முடியாது. பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தே தீரவேண்டும். நீ சொல்லுவதே சரி. ராமனை வனத்துக்கு அனுப்பி விடவேண்டும் என்பது நிச்சயம். இதற்கு என்ன உபாயம் செய்யலாம்? சொல், நீதான் சாமர்த்தியசாலி” என்று மந்தரையைச் சரணமடைந்தாள். அந்தச் சமயம் கைகேயியின் கண்களுக்கு மந்தரையின் கூன் வடிவம் கூட மிகச் சௌந்தர்யமாகக் காணப்பட்டது. இது வெறும் ஹாஸ்யம் அல்ல. சூட்சுமமான மனத் தத்துவம்.


“கைகேயி! இது என்ன விந்தை? உபாயம் என்னையா கேட்கிறாய்? உனக்கு ஏன் இவ்வளவு மறதி வந்து மூடிக்கொண்டது? அல்லது வேஷம் போடுகிறாயா? நானே சொல்ல வேண்டுமென்றால் சொல்லுகிறேன், கேள்” என்றாள் மந்தரை.


இதைச் சொல்லிவிட்டுக் கொஞ்சம் நிறுத்தினாள். 


“சொல், சொல், எப்படியாவது பரதனுக்குப் பட்டம் சூட்டவேண்டும், ராமனுக்கு அபிஷேகம் நடக்காமல் செய்யவேண்டும்” என்றாள் கைகேயி, பரபரப்பாக. 


“சொல்லுகிறேன், அவசரப்படாதே. முன்னொரு காலத்தில் உன் புருஷன் தசரத சக்கரவர்த்தி தெற்கே சம்பரனோடு யுத்தம் செய்தது நினைவு இருக்கிறதா? நீயும் கூட இருந்தாயே? இந்திரனுக்கு உதவியாகப் போனான் அல்லவா உன் புருஷன்? வைஜயந்தி நகரத்துச் சம்பரனை இந்திரன் சமாளிக்க முடியாமல் தசரதனுடைய உதவியை நாடினான். தசரதன் சென்று சண்டையிட்டு உடம்பெல்லாம் காயப்பட்டு நினைவிழந்து போனான் அல்லவா? அப்போது அவனுடைய தேரை நீயே நடத்திச் சாமர்த்தியமாக யுத்தகளத்திலிருந்து வெளியே கொண்டுபோய், அரசன் உடலில் பாய்ந்திருந்த அம்புகளையெல்லாம் மெதுவாக எடுத்து நினைவு தெளியச் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினாய், மறந்து விட்டாயா?”


“அப்போது அவன் உனக்கு என்ன சொன்னான்? 'இரண்டு வரங்களைக் கேள்; எதைக் கேட்டாலும் நான் தருவேன்' என்று அவன் சொல்ல, 'எனக்கு வேண்டும்போது கேட்கிறேன், இப்போது வேண்டாம்' என்று நீ சொல்ல, 'அப்படியே' என்று அவன் கூறினான் அல்லவா? நீயே எனக்கு இதைச் சொல்லியிருக்கிறாய். நீ மறந்து விட்டாய்; நான் மறக்கவில்லை. அதை வைத்து இப்போது காரியத்தைச் சாதிக்கலாம். ராம பட்டாபிஷேகத்தை நிறுத்தி பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய் என்று புருஷனைக் கேள். இரண்டு வரத்தில் முதலாவதாக அதைக் கேள். இரண்டாவதாக ராமனைப் பதினான்கு வருஷம் காட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்று கேள். பாபம் என்று தயங்காதே! பயப்பட்டு நடுங்காதே! நான் சொல்வதைக் கேள். அப்படி ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டால் தான், ஜனங்கள் அவனிடம் வைத்திருக்கும் அபார அன்பும் பற்றும் நாளடைவில் மறைந்து போய், உன் குமாரனுடைய யுவராஜப் பட்டம் ஊர்ஜிதப்படும். போய், கோபாக்கிருஹத்தில் தரையில் படுத்துக்கொள். பழைய துணி உடுத்திக் கொண்டு தரையில் கிட! அரசன் வந்தபோது பேச வேண்டாம். கண்ணெடுத்தும் பார்க்க வேண்டாம். உன் துயரத்தை அவன் சகிக்க மாட்டான் என்பது எனக்குத் தெரியும். நம்முடைய காரியம் வெற்றியுடன் முடியும்” என்றாள் மந்தரை.


“அரசன் என்னவெல்லாமோ ஆசை காட்டுவான். அதற்கு உட்படாதே! கேட்ட இரண்டு வரமே வேண்டும் என்று பிடிவாதமாக இரு. சத்தியத்துக்குப் பயந்த அரசன் கட்டாயம் வழிக்கு வருவான். உன்னிடம் அவன் வைத்திருக்கும் காதலின் வேகம் எனக்குத் தெரியும். உனக்காக உயிரைக் கொடுக்க வேண்டுமானாலும் கொடுப்பான். நெருப்பில் விழச் சொன்னாலும் விழுவான். நான் சொன்னபடி செய். பயப்பட வேண்டாம். ராமனை வனத்துக்கு அனுப்பினாலொழிய உன் காரியம் சாதகமாகாது. ராமன் வெளியேற்றப்பட வேண்டும். அப்போதுதான் பரதனுக்கு நீ சம்பாதித்துத் தரும் பதவி ஸ்திரமாகும். இல்லாமற் போனால் பெற்ற பதவி கனவாக மறைந்து போகும். இதை நினைவில் வைத்துக் கொள். இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்காதே! ஜாக்கிரதை!” என்றாள் மறுபடியும்.


கூனியின் இந்த உபதேசத்தை ஏற்றதும் முதலில் பயத்தில் மூழ்கிய கைகேயியின் முகம் பிறகு மலர்ந்தது. “உன் புத்திக் கூர்மையை நான் என்ன வென்று சொல்லுவேன், மந்தரா! என்னைக் காப்பாற்றினாய்!” என்று சொல்லிக் குதிரைக் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்தாள்.


“தாமதம் செய்யாதே, செய்ய வேண்டியதை உடனே செய். கரை உடைந்துபோன பிறகு ஏரிக்கு அணை கட்ட முடியாது. சொன்னதையெல்லாம் கவனத்தில் வை. பிடிவாதமாக இருக்கவேண்டும். நிச்சயமாக உன் காரியம் சித்தியாகும்” என்று ராமனை வனத்துக்கு அனுப்புவதைப் பற்றி மறுபடியும் வற்புறுத்திச் சொன்னாள்.


கைகேயி “சந்தேகப்படாதே. நான் உறுதியாக இருப்பேன். இதோ, பார்!” என்று அப்போதே கோபாக்கிருஹத்துக்குள் நுழைந்து தன் ஆபரணங்களையெல்லாம் சிதறியிறைத்துவிட்டு, துணியை மாற்றிக்கொண்டு தரையில் படுத்துக் கொண்டாள். படுத்தவள் அழுத குரலில் மந்தரைக்குச் சொன்னாள். “மந்தரா! என் தந்தை கேகயராஜனிடம் நீயே போய்ச் சொல்லுவாய். பரதனுக்குப் பட்டாபிஷேகம் என்றோ, அல்லது கைகேயி இறந்தாள் என்றோ, இரண்டில் ஒன்று நீயே போய்ச் செய்தி சொல்லிவிடு, என் மந்தரையே!” இவ்வாறு சொல்லி உண்மையிலேயே தசரதன் செய்ததெல்லாம் மோசம் என்று எண்ணி அவன் மேல் கடுங்கோபத்தோடு தரையில் படுத்தாள்.


அப்போதும் அவள் அழகு குறையவில்லை. சிரித்தாலும் அழகு, கோபித்தால் அதுவும் ஒரு அழகு அல்லவா அழகைப் பெற்ற பெண்ணின் முகம்?


பாப எண்ணம் நன்றாகப் புகுந்து விட்டது. கைகேயியினுடைய சுபாவம் முற்றிலும் மாறிப் போயிற்று. தன்னுடைய வாழ்க்கை அடிமை வாழ்க்கையாகப் போகும், பரதன் உயிருக்குப் பெரிய ஆபத்து அருகில் வந்து விட்டது என்கிற திகிலானது பிசாசுபோல் அவள் உயிரைப் பிடித்துக் கொண்டு விட்டது. இதுவரையில் என்றும் செய்யாத வேலை. புருஷனை ஒரு பெரிய விஷயத்திலே நிர்ப்பந்திப்பதினால் ஏற்படக்கூடிய கூச்சமும், ராமனைக் காட்டுக்கு அனுப்பு என்று கேட்கப் புகுவதில் உண்டாகும் வெட்கமும், பாப பயமும் - அனைத்தையும் உடனே மனத்தில் வெள்ளோட்டம் நடத்திவிட்டாள். உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டுவிட்டாள்.


மிகப் பெரிய துக்கம் மேலிட்டவளாக உயிர்த்தும், வியர்த்தும், கண்களை மூடியும் நாக கன்னிகையின் அழகைப் பெற்ற கைகேயி கூந்தலை விரித்தும் தூசி படிந்த தரையில் கிடந்தாள். ஒரு அழகிய பறவை வேடனுடைய அம்பால் தாக்கப்பட்டுக் கீழே திடீரென்று விழுந்தது போல் தரையில் கிடந்தாள். அவளுடைய உடலை அலங்கரித்த ஆபரணங்களும் சகல திவ்விய ஆபரணங்களும், இங்கு மங்கும் கருத்த ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் போல் பிரகாசித்துக் கொண்டு ஊடல் அறையில் சிதறிக் கிடந்தன.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை