வெள்ளி, 18 அக்டோபர், 2024

18. கைகேயி (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

ராஜ குல அந்தப்புர வழக்கத்தையனுசரித்து, கைகேயிக்கு, தோழியும் அந்தரங்க வேலைக்காரியுமாக ஒரு கூனியம்மை எங்கிருந்தோ வந்து சேர்ந்திருந்தாள்.


எஜமானி கைகேயிக்கு இவள் கொஞ்சம் சொந்தம் கூட; அதனால் நெருங்கிப் பழகும் உரிமையைக் கொண்டாடி வந்தாள். இவள் பெயர் மந்தரை. ராமாயண கதையில் மிகப் பிரசித்தி பெற்ற பாத்திரம். நம் நாட்டு மக்கள் அனைவரும், ஆண் பெண் குழந்தைகள் எல்லாரும் வெறுக்கும் பாத்திரம். இவளே ராமனைக் காட்டுக்கு அனுப்பச் செய்தவள். இவள் என்ன செய்தாள், எப்படிச் செய்தாள் என்பதை விவரமாக இனிப் பார்க்கலாம்.


தசரதன் ராஜ சபையைக் கூட்டி ராமசந்திரனுக்கு நாளைக்கே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று நிச்சயித்த அந்த நாள், மந்தரை தற்செயலாக அந்தப்புரத்து மேல் மாடி ஏறி அழகிய உப்பரிகையிலே போய் நின்றாள். உயரத்திலிருந்து நகரத்தைப் பார்த்தாள். தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜனங்கள் தங்கள் வீடுகளின் மேல் பலவித அழகிய கொடிகள் பறக்க விட்டிருந்தார்கள். ஆடை அணிகள் பூண்டு, சந்தனம் பூசி, புஷ்பம் அணிந்து, எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் ஏதோ பேசிக் கொண்டு மிகச் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாள். கோயில்களில் எல்லாம் வாத்திய கோஷம். ஏதோ பெரிய மங்கள உற்சவம் நடக்கப் போவதாகத் தெரிந்தது.


மந்தரை பக்கத்தில் நின்ற அந்தப்புர வேலைக்காரியைப் பார்த்து, “என்ன நீ பட்டு உடுத்தியிருக்கிறாய்? என்ன விசேஷம் ஊரில்? கௌசல்யாதேவி பிராமணர்களுக்குத் தக்ஷிணை கொடுத்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறதே! பணத்தைச் சாதாரணமாக வீண் செலவு செய்ய மாட்டாளே! எங்கே பார்த்தாலும் திருவிழா வாத்தியமும் அலங்காரமுமாக இருக்கிறதே! உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள்.


“உனக்குத் தெரியாதா? நம் ராமசந்திரனுக்கு நாளைக் காலை யுவராஜ பட்டாபிஷேகம்” என்று அந்த வேலைக்காரச் சிறுமி சொல்லிக் கொண்டானடித்தாள்.


இதைக் கேட்டதும் மந்தரைக்கு அடங்காத கோபம் மேலிட்டது. மிக வேகமாகக் கீழே இறங்கினாள். நேராகக் கைகேயியின் அறைக்குச் சென்றாள். அப்போது கைகேயி படுத்திருந்தாள். 


“மூடப் பெண்ணே! எழுந்திரு, எழுந்திரு! தலைக்கு மேல் பெரிய வெள்ளம் வருகிறது. நீ மோசம் போனாய். மூடப்பெண்ணே, தூங்குகிறாயே!” என்றாள்.


மந்தரையின் துக்கத்தைப் பார்த்து அவளுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ என்று கைகேயி எண்ணி, “மந்தரை, உனக்கு என்ன துயரம் ஏற்பட்டது? ஏன் இப்படித் துக்கப் படுகிறாய்?” என்று மெதுவாகக் கேட்டாள்.


மிகக் கெட்டிக்காரி மந்தரை பேச ஆரம்பித்தாள். “உனக்கும் எனக்கும் விநாசம் வந்து விட்டது, பெண்ணே! ராமனை யுவராஜனாகச் செய்து விட்டான். இதற்குமேல் எனக்கு என்ன துக்கம் வேண்டும்? உனக்குத் துக்கம் வந்தால் நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்? ஓடி வந்தேன். அரசகுலத்தில் பிறந்து வளர்ந்தாய்; மகாராஜனுடைய வீட்டில் அரசியாகவும் புகுந்தாய். ஐயோ! கெட்டுப் போனாயே! ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்ணாயிருக்கிறாய். இனிய மொழிகள் பேசிப் பேசி உன் புருஷன் உன்னை ஏமாற்றியே விட்டான். வஞ்சனைக்காரன், எல்லாம் கௌசல்யைக்குக் கொடுத்து விட்டு உன்னைத் தெருவில் திண்டாட விட்டு விட்டான் மோசக்காரன். பரதனை 'மாமன் வீட்டுக்குப் போ' என்று சொல்லி வெகு தூர தேசத்துக்கு அனுப்பி விட்டு, இங்கே அவசரம் அவசரமாக ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போகிறான். நாளைக்கே எல்லாம் முடிந்து விடப்போகிறது. நீயோ எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா படுத்துக் கிடக்கிறாய். நீயும், உன்னை நம்பியிருக்கிற எல்லோரும் அழிந்தீர்கள்.”


இப்படி மந்தரை அடுக்கிக் கொண்டே போனாள். கைகேயிக்கு இந்தப் பேச்சு காதில் பட்டதேயொழிய அதன் பொருளில் கவனம் செல்லவில்லை. அவள் ஒன்றே ஒன்றைத்தான் கவனித்தாள். அதாவது ராமனுக்குப் பட்டாபிஷேக மகோற்சவம் நடக்கப் போகிறது என்பதைத்தான்.


“என் குமாரன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்கிற செய்தியைக் கொண்டு வந்தாய். மந்தரா! இதை விட என்ன சந்தோஷம் எனக்கு? இந்தா, இதைப் பெற்றுக் கொள்! இன்னும் என்ன வேண்டுமோ, கேள்” என்று தன் கழுத்திலிருந்த மாலையை எடுத்து மந்தரைக்குக் கொடுத்தாள். மங்களச் செய்தி கொண்டு வந்தவர்களுக்கு ஏதாவது பொருள் உடனே தருவது ராஜ குல வழக்கம்.

*

மந்தரை வீணாகப் பயப்படுகிறாள். அவள் ஒரு வேலைக்காரிதானே! பெரிய வீட்டு விஷயங்களை அவளால் தெரிந்து கொள்ள முடியாது. அவளுடைய மூட பயத்தைப் போக்கி, தைரியம் உண்டாக்க ஆபரணத்தை அவளுக்குத் தந்து தன் மகிழ்ச்சியை அவளும் அடையச் செய்யலாம் என்று கைகேயி எண்ணினாள்.


கைகேயியினுடைய உள்ளம் எளிதில் கெடவில்லை. நல்ல பண்பாடு பெற்றவள். தாழ்ந்த புத்திக்கு உடனே இடம் கொடுக்கவில்லை. மந்தரைக்கோ இதைக் கண்டு துக்கம் இன்னும் அதிகரித்தது.


கைகேயி தந்த மாலையை அப்படியே வீசி எறிந்து விட்டு, மந்தரை “ஐயோ, பைத்தியக்காரி! தலைக்கு மேல் வந்திருக்கிறது வெள்ளம். மடப் பெண்ணே! நீயோ ஹா ஹா என்று சிரித்து மகிழ்கிறாய். தீராத கஷ்டம் வந்து உன் வாழ்க்கையைக் கவிழ்ப்பதற்கு நிற்கும் போது நீ கண்ணை மூடிக் கொண்டிருக்கிறாய். உன்னைப் பார்த்து நான் சிரிக்கவா, அழவா? உன் சக்களத்தியானவள் தன் மகன் பட்டத்துக்கு வர ஏற்பாடு செய்து விட்டாள். நீ இது வெகு மங்களம் என்று கூத்தாடுகிறாய். உன் மதியை நான் என்னென்று சொல்லுவேன்? ராமன் பட்டம் பெற்ற பின் பரதன் நிலை என்ன? பரதன் இருக்கும் வரையில் தனக்கு என்றைக்குமே அபாயம் என்று ராமன் எண்ணுவான் அல்லவா? இயற்கையின் போக்கு ராமனுக்குத் தெரியும். ஆனபடியால் பரதன் ராமனுக்குப் பகையாகி விட்டான். பயத்தினால் தான் விரோதிகளை அரசர்கள் கொல்லுவது. ராமன் பட்டம் பெற்றபின் பரதனைக் கண்டு அவன் பயப்படுவான். பயத்தினால் அல்லவோ பாம்புகளைக் கண்டவுடன் கொல்லுகிறோம்? பரதன் உயிரைப் பற்றி இனிமேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதாகும். நாளைப் பொழுது விடிந்ததும் கௌசல்யை பாக்கியவதியானாள். நீ அவளுக்குத் தாசியானாய். அவள் முன் கை கூப்பி வணங்கி ஒரு வேலைக்காரியாக நிற்பாய். நாளை முதல் உன் மகனுடைய சுதந்திரமும் முடிந்தது. அவன் இனிமேல் ராமனுக்கு ஒரு சாதாரண வேலைக்காரன். நம்முடைய அந்தப்புரத்தில் இனி மானம், சந்தோஷம் என்பது இல்லை” என்று சொல்லித் துக்கத்தினால் மேலே பேச முடியாமல் நிறுத்தினாள்.


கைகேயி இதையெல்லாம் கேட்டு உண்மையில் வியப்படைந்தாள். ‘ஏன் இவ்வாறு பயப்படுகிறாள், மந்தரை? ராமனுடைய குணம் இவளுக்குத் தெரியாதா? தருமமே வடிவம் கொண்டவன் அல்லவா அவன்?’ என்று எண்ணினாள்.


“மந்தரா! ராமனுடைய சத்தியம், சீலம், அடக்கம் இவற்றை நாம் எல்லோரும் கண்டு மகிழ்ந்தோம் அல்லவா? அவன் மூத்தவன், ராஜ்யம் அடைகிறான். அவனுக்குப் பிறகு பரதன் அடையப்போகிறான். இதில் என்ன கெட்டுப் போச்சு? ஏன், தோழி, நீ வருத்தப் படுகிறாய்? ராமனுக்குப் பிறகு நூறு வருஷம் பரதனும் அரசனாகி வாழ்வான். அழாதே, துக்கப் படாதே! ராமன் என்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறான்! தன்னைப் பெற்றவளிடம் கூட அவ்வளவு பிரியம் அவனுக்கு இல்லையே? தன் தம்பி ஒவ்வொருவனையும் தன் உயிராகவே அல்லவோ ராமன் கருதி வருகிறான். அவனைப் பற்றி நீ பயப்படுவது சரியே அல்ல” என்று சொல்லி இயற்கை அன்புடன் கைகேயி மந்தரையின் பயத்தைத் தணிக்கப் பார்த்தாள்.


“ஐயோ, உன் புத்திக்கு நான் என்ன சொல்வேன்! ஏன் உன் மூளை இப்படிக் கெட்டுப் போயிற்று? ராமன் அரசனாக அபிஷேகமான பின் பரதனுக்கு ஏது இடம்? ராஜ குல வழக்கம் உனக்குக் கொஞ்சமும் தெரியவேயில்லை. ராமன் சிம்மாசனம் ஏறினால் அத்துடன் பரதனுடைய ராஜ வாழ்க்கை முடிந்தது. ராமனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகன், அவனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகன், இப்படித் தான் உரிமை செல்லும். தம்பியைப் பற்றிப் பேச்சே கிடையாது. மூத்த மகன் மூத்த மகனாகவே சங்கிலி கோத்த வரிசைக் கிரமமாகப் போகும். தம்பி எவ்வளவு குணவானாக இருந்தாலும் அவனுக்கு இடமில்லை. இதுவே ராஜ குல வரிசைக் கிரமம். ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து முடித்த பின் உன் மகன் அநாதையாவான். ராஜ வம்சத்தில் அவனுக்காவது அவன் மக்களுக்காவது இடமில்லை. இது உனக்குத் தெரிய வில்லையே, என் கண்மணி! நான் என்ன செய்வேன்?”


“ராமன் பட்டம் பெற்றபின் அவன் பரதனைச் சும்மா விடமாட்டான். பரதன் உயிருக்கும் ஆபத்துண்டாகும். பரதன் உயிரோடு இருக்க நீ வேண்டினாயானால் அவன் மாமன் வீட்டிலிருந்தே எங்கேயாவது போய் மறைந்து க்ஷேமமாக இருக்கட்டும். இங்கே வந்தால் அவனுக்கு ஆபத்தே உண்டாகும். கௌசல்யைக்கு உன் மேல் மிகக்கோபம். அரசனுடைய பிரீதியை நீ சம்பாதித்திருப்பதாக எண்ணி நீ அவளைப் பல தடவை அலட்சியம் செய்திருக்கிறாய். இப்போது பழி வாங்குவாள் நிச்சயம். சக்களத்தியின் கோபம் மிகப் பொல்லாதது. ராமன் பட்டமடைந்தால் நம்முடைய பரதன் செத்தான் என்றே வைத்துக் கொள். ஆனபடியால் உறுதியாகத் தீர்மானிப்பாய். எப்படியாவது பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும். ராமனை ராஜ்யத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும்.”


இவ்வாறு முடித்தாள் மந்தரை. கைகேயியின் உள்ளத்தில் பயம் புகுந்து கொண்டது. மந்தரை வெற்றியடைந்து விட்டாள். கிலி பிடித்த கைகேயியின் முகம் சிவந்து போய்ச் சுவாசம் வெப்பமடைந்தது. இன்னது செய்வது என்று தெரியாமல் மந்தரையிடம் தஞ்சமடைந்து பேச ஆரம்பித்தாள்.


புத்திர பாக்கியம் பெறாமலிருந்த காலத்தில் கைகேயியைத் தசரதன் ராஜகுல வழக்கத்தையனுசரித்து விவாகம் செய்து கொண்டான். அந்தச் சமயம் கைகேயியினுடைய தந்தை கேகயராஜன் தசரதனிடம் வாக்குறுதி பெற்றான், இவள் வயிற்றில் பிறக்கும் மகனுக்குப் பட்டம் என்று. இப்படி அப்போது சொன்னதில் ஒன்றும் வியப்போ வித்தியாசமோ இருந்திருக்க இடமில்லை. அப்போது யாருக்குமே குழந்தை இல்லை. மற்ற மனைவிகளுக்குப் புத்திரப் பேறு உண்டாகவில்லை. புத்திரப்பேற்றுக்கு ஆசைப்பட்டே மூன்றாவது மனைவியைக் கொண்டது. அந்த ஆசையும் நிறைவேறவில்லை. வெகு நாட்கள் கழித்து யாகம் செய்து மூன்று மனைவிகளும் குழந்தை பெற்றார்கள். பட்ட மகிஷியின் மகனான ராமன் நான்கு புத்திரர்களுக்குள் மூத்தவனாகவும், சகல உத்தம குணங்களையுடையவனாகவும், ராஜ்ய பாரம் வகிக்கும் தகுதியைக் கொண்டவனாகவும், மந்திரிமார்கள், நகரத்தார், கிராமவாசிகள், சிற்றரசர்கள் அனைவரும் யுவராஜ்யப் பதவிக்குத் தகுந்தவன் என்று சொல்லும்படி அவர்களுடைய அன்பைச் சம்பாதித்தவனாகவும் இருக்க, எப்படி அவனுடைய உரிமையையும் ராஜகுல முறையையும் புறக்கணித்துப் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது நியாயமாகும்? தவிர, பரதனும் கைகேயியும் இதைப் பற்றி ஏதொரு ஆசை அல்லது எண்ணங்கூட வைத்தது கிடையாது. அதைப் பற்றிப் பேச்சே கிடையாது. ஆனபடியால் முறைப்படி ராமனை யுவராஜ்யப் பதவியில் அமர்த்துவதில் ஒரு சிக்கலும் ஏற்படாது என்று அரசன் எண்ணினான். அவ்வாறே கைகேயியின் உள்ளத்திலும் ஏதொரு கல்மஷமும் இருக்கவில்லை. இது கைகேயியின் நடவடிக்கைகளினால் வியக்தமாகத் தெரிகிறது. பரதன் உள்ளத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.


ஆயினும் தசரதன் ராமனிடம் சொன்னதைப் போல் நல்லவர்களுடைய தூய சிந்தையும் திடீர் என்று திரிந்து போகும். கெட்டவர்களுடைய துர்ப்புத்தியும் அதனோடு விதியும் சேர்ந்துவிட்டால் யாருமே கெட்டுப் போகலாம். இதுவே கைகேயி விஷயத்தில் நடந்து விட்டது.


தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி

தூய சிந்தையும் திரிந்தது; சூழ்ச்சியின் அரக்கர்

மாய, வானவர் பெற்றநல் வரம்உண்மை யாலும்

ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தாலும்.


என்று பாடுகிறார் கம்பர். தாமதப்பட்டால் ஒருவேளை இடையூறு ஏற்படும் என்று எந்தக் காரணத்துக்காக பரதன் வருவதை எதிர்பாராமல் பட்டாபிஷேகம் முடித்து விடலாம் என்று தசரதன் அவசரப்பட்டானோ அதே காரணமும் அதே அவசரமும் கைகேயியின் சித்தத்தைக் கோணல் வழியில் செலுத்த மந்தரைக்கு நன்றாக உபயோகப்பட்டுவிட்டன.


“பார், இவ்வளவு அவசரம் ஏன்? உன் மகன் ஊரில் இல்லாத சமயத்தில் அவனை மோசம் செய்யவே இந்த அவசர ஏற்பாடுகள் எல்லாம்! காதல் வேஷம் போடும் உன் அரசனுடைய வஞ்சக சமத்காரத்தைப் பார்!” என்றாள்.


மந்தரை கைகேயியினுடைய உள்ளத்தைக் கெடுத்துத் தன் ஆலோசனைக்குச் சம்மதிக்கச் செய்து விட்டாள். மொத்தத்தில் கைகேயியினுடைய சுபாவம் சாதாரண ஸ்திரீ சுபாவம். நல்ல உணர்ச்சியும் பண்பாடும் உண்டு. கூர்மையான புத்தியும் உண்டு. ஆனால் லோக விவகாரம் அதிகமாக அறிந்தவளல்ல. பிடிவாதம் அதிகம். எளிதில் ஏமாற்றப்பட்டாள். செய்யும் காரியத்தின் முழுப் பலனை ஊகித்து அறியும் ஆற்றல் ராமாயணச் சங்கடப் படலம் பெற்றிருக்கவில்லை. ஆரம்பித்து விட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக