வியாழன், 17 அக்டோபர், 2024

17. யுவ ராஜ்யம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பன்னிரண்டு ஆண்டுகள் ஆனந்தமாக ராமனும் சீதையும் அயோத்தியில் சுகம் அனுபவித்தார்கள். இனி, உலகில் மக்கள்படும் இடையூறுகள், துயரங்கள், கோபதாபங்கள் எல்லாவற்றையுமே பகவானும் ஈசுவரியும் நேராக ஊனுடலில் அனுபவிக்கப் போகிறார்கள். 'எந்த அவதாரம் எடுக்கிறேனோ அந்த அவதாரத்துக்குரிய தேகமும் உணர்வுமாகத்தான் என் திருவிளையாடல் நடைபெற்று வரும்' என்பது பகவானே சொல்லிய விளக்கம்.

தன்னுடைய ஊன் உயிர் உணர்வில் மற்ற மக்களைப்போல் துன்பப்பட்டு இமையோர் இடுக்கண் காத்த சக்கரவர்த்தித் திருமகன் யார்? எங்கும் எதிலும், உள்ளும் புறமும் உள்ள லோகநாதனே! இதைப் பெரியோர் அறிவார்கள் என்று விளக்கிச் சொல்லிக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அயோத்தியா காண்டம் ஆரம்பிக்கிறார்.


வானின்(று) இழிந்து வரம்பிகந்த

மாபூ தத்தின் வைப்பெங்கும்

ஊனும் உயிரும் உணர்வும்போல்

உள்ளும் புறத்தும் உளன்என்ப

கூனும் சிறியகோத் தாயும்

கொடுமை இழைப்பக் கோல்துறந்து

கானும் கடலும் கடந்திமையோர்

இடுக்கண் காத்த கழல்வேந்தை


நான்கு புத்திரர்களிடமும் தசரதனுக்கு மிகப் பிரியம். ஆயினும் ராமனிடத்தில் அதிகப் பிரியம் என்றே சொல்லலாம். அந்தப் பிரியத்துக்குத் தகுந்த ராஜ லக்ஷணங்களும் சீலமும் ராமனிடமிருந்தன. கௌசல்யா தேவியோ, இந்திரனைப் பெற்ற அதிதியைப்போல் ராமனை மகனாக அடைந்து சொல்லுக்கடங்காத பெருமிதத்தை அனுபவித்து வந்தாள்.


சக்கரவர்த்தித் திருமகனுடைய குணங்களை எடுத்துக் காட்டி வால்மீகி பக்கம் பக்கமாக அடுக்கியிருக்கிறார். ராம குணங்களாகிய சமுத்திரத்திலிருந்து எவ்வளவு எடுத்துக் குடித்தாலும் முனிவருக்குத் திருப்தி இல்லை.

தாமே சொல்லுவதாகவும் தசரதன் கண்டு அனுபவிப்பதாகவும், ஜனங்கள் அவனைப் பற்றிப் புகழ்வதாகவும், இன்னும் இவ்வாறு பல துறைகளிலும் பல இடங்களில் ராமனுடைய குணாதிசயங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார். எழுத்துச் சிக்கனம் அதிகம். அப்படியாயினும் பக்கம் பக்கமாக நிறைந்து கிடக்கிறது. 


மக்களுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள் லக்ஷணங்கள் இவையனைத்தும் ராமனிடமிருந்தன என்பது முனிவருடைய கருத்து. அந்தக் குணங்களைப் பற்றிப் படித்தும் கேட்டும். மக்கள் மேன்மை அடைவார்கள் என்று கருதி வால்மீகி ரிஷி ராமனுடைய குணாதிசயங்களை அடிக்கடி மிக விரிவாகப் பாடியிருக்கிறார்.

*

ராமனுடைய திருமேனியழகு, பராக்கிரமம், உள்ளத்தின் தூய்மை, வாழ்க்கையில் சீலம், இரக்கம், பேச்சினிமை, சாந்தம், நிறைந்த அறிவு, இவற்றுடன் அபூர்வ தேக பலம், வியாதியற்ற சரீரம், ராஜ்ய பரிபாலனத்துக்குரிய நீதி சாஸ்திரங்களில் பயிற்சி, இவைகளையெல்லாம் கண்டு ஜனங்கள், ராமன் எப்போது அரசனாவான் என்று விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தசரதன் இதை நன்றாய் அறிவான். ஆனபடியால் தன் முதிய வயதைக் கருத்தில் கொண்டு ராமனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்து விட்டு அவனிடம் ராஜ்ய பரிபாலனத்தை ஒப்புவித்து விட விரும்பினான். இதை ஒரு நாள் மந்திரிகளிடத்தில் சொல்லி ராஜ சபையைக் கூட்டினான்.


ரிஷிகளும் அறிஞர்களும் அயோத்தி நகரத்துச் சிரேணித் தலைவர்களும் பல தேசங்களின் அரசர்களும் தசரதன் கூட்டிய ராஜ சபைக்கு வந்து அவரவர்களுக்குரிய ஆசனங்களில் உட்கார்ந்தார்கள். கிரமப்படி எல்லாரும் அமர்ந்த பின் தசரதன் எழுந்து பேசினான். துந்துபி நாதம் கொண்ட அவனுடைய குரல் மேக கர்ஜனைபோல் கம்பீர பிரதித்துவனியோடு சபா மண்டபத்தில் விம்மியது. தசரதன் முகத்தில் ராஜ லக்ஷண காந்தி ஜொலித்தது. அவன் பேச்சு, பொருள் செறிந்து, கேட்போர் மனத்தைக் கவர்ந்தது.


“என் முன்னோர்களைப் போலவே நானும் பெற்ற குழந்தையைப்போல இந்த ராஜ்யத்தைப் போற்றி வந்தேன். சோம்பலின்றி மக்களுக்காக உழைத்து வந்தேன். இப்போது என் உடல் மூப்பின் காரணம் தளர்ந்து போயிருக்கிறது. என் மூத்த மகனை யுவராஜனாக நியமித்து ராஜ்ய பாரத்தை அவனிடம் ஒப்படைத்துவிட்டு நான் ஓய்வு பெற விரும்புகிறேன். என் முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நானும் மிகுதியுள்ள என் வாழ்நாளை வனத்தில் கழிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். 


என் மூத்த மகன் ராமன் ராஜ்ய பாரத்தை என்னைப் போலவே நன்றாகத் தாங்குவான். அதற்கு வேண்டிய எல்லாக் குணங்களும் அவன் பெற்றிருக்கிறான். ராஜ சாஸ்திர நிபுணன். நீதி சாஸ்திரமும் நன்றாக அறிந்தவன். சத்துருக்களின் பலத்தை அடக்கும் வீரமும் சக்தியுமுடையவன். என் பாரத்தை அவன் தோளின் மேல் வைத்து விட்டு ராஜ்யத்தின் க்ஷேமத்தைப்பற்றி நான் கவலையற்றிருக்க விரும்புகிறேன். சபையிலுள்ள பெரியோர்களும் அரசர்களும் மகா ஜனங்களும் அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். என் யோசனை தவறாக இருந்தால் சொல்லுவீர்களாக” என்றான்.


அரசனுடைய பேச்சைக் பேச்சைக் கேட்டதும் சபையில் மகிழ்ச்சியைக் குறிக்கும் சப்தம் அலையலையாகக் கிளம்யிற்று. ராமனை யுவராஜாவாக்குகிறேன் என்கிற பேச்சைக் கேட்டதும் கருமேகத்தைக் கண்ட மயில்கள் நர்த்தனம் செய்து மகிழ்வதுபோல “அப்படியே செய்வீர்” “அப்படியே செய்வீர்!” என்று சபையில் நான்கு பக்கத்திலிருந்தும் கூக்குரல் எழுந்தது. அந்தணர்களும், சேனைத் தலைவர்களும், நகரத்துச் சிரேஷ்டர்களும், கிராமங்களிலிருந்து வந்திருந்த ஜனபதத் தலைவர்களும் எல்லாரும் “ராமனுக்கு யுவராஜ அபிஷேகம் செய்து ராஜ காரியங்களை அவனிடம் ஒப்புவிப்பதை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்” என்று ஏகோபித்து ஆமோதித்தார்கள்.


இதைக் கேட்டு அரசன் மறுபடியும் பேசலானான். “நீங்கள் கொடுத்த அபிப்பிராயத்துக்குக் காரணங்கள் காட்டாமல், நான் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்டு விட்டதில் எனக்குத் திருப்தியில்லை. பெரியோர்கள் விஷயங்களை விளக்கிப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று சொன்னான். 


அப்போது சபையில் பலர் எழுந்து இராமனுடைய குணாதிசயங்களையும் ராஜ்ய பாரம் தாங்கும் தகுதியையும் விஸ்தாரமாக எடுத்துக் காட்டினார்கள். அதைக் கேட்கக் கேட்க அரசனுடைய உள்ளம் ஆனந்தத்தில் மூழ்கிற்று. முடிவில் “தாமதம் செய்ய வேண்டாம். உடனே ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வீர்” என்று ஜனங்கள் யாவரும் ஒருமிக்க நின்று கைகூப்பிக் கேட்டுக் கொண்டார்கள்.


“என் அன்பார்ந்த பிரஜைகளே! நீங்கள் சொல்லுவதைக் கேட்டு நான் எல்லை கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். அப்படியே செய்வேன். யுவ ராஜ்ய பட்டாபிஷேக மங்கள காரியம் கிரமப்படி நடைபெறும்” என்றான் அரசன்.

*

வசிஷ்டர், வாமதேவர் முதலிய பெரியோர்களைப் பார்த்துத் தசரதன், “இது சித்திரை மாதம். மங்களமான காலம். வனங்களெல்லாம் பூத்து அழகாக விளங்கும் பருவம். அபிஷேகத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள்” என்று சொன்னான்.


இவ்வாறு உத்தரவிட்டதும் ஜனக்கூட்டத்திடையே பெரிய சந்தோஷ ஆரவாரம் பொங்கிற்று.

*

மன்னனுடைய உத்தரவின் பேரில் அந்தரங்க அமாத்தியனான சுமந்திரன் ராமனை அழைத்து வரச் சென்றான். ராமன் விஷயம் தெரியாதவனாகத் தந்தையின் முன்னால் வந்து நின்றான். பட்டாபிஷேக நிச்சயத்தைப் பற்றி அரசன் சொன்னதைக் கேட்டு. “தங்கள் ஆணைப்படி நடக்க நான் கடமைப் பட்டவன்” என்றான்.


“உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை. நீ குணவான். ஜனங்கள் எல்லாரும் உன்னை விரும்புகிறார்கள். இனி நீ முன்னைவிட அதிகமான வினயத்துடனும் ஜாக்கிரதையுடனும் நடந்துகொண்டு எல்லா பாக்கியமும் புகழும் அடைவாயாக” என்று அரசன் மகனை ஆசீர்வதித்தான். ராமனும் தன் இருப் பிடம் திரும்பினான்.

*

மறுபடியும் அரசன் ஏதோ யோசித்தவனாக, “ராமனை அழைத்து வா!” என்று சுமந்திரனுக்கு உத்தரவிட்டான். “இதென்ன காரணம்? எதற்காகச் சக்கரவர்த்தி மறுபடியும் என்னை வரச் சொன்னது?” என்று ராமன் கேட்டான்.


“எனக்குக் காரணம் தெரியாது. அரசன் அழைத்து வரச் சொன்னதுதான் எனக்குத் தெரியும்” என்று சொன்னான் சுமந்திரன்.


'யுவராஜ்ய பட்டாபிஷேக விஷயத்தில் மந்திராலோசனை செய்து உசித அனுசித சந்தேகம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். எப்படியானாலும் சரியே; தான் அவசரப்பட வேண்டியதில்லை' என்பது ராமனுடைய எண்ணம். ராஜ்யாதிகாரம் உடனே வகிக்க வேண்டும் என்று ராமனுக்கு ஆசை இருக்கவில்லை. அதைக் கடமையாகவே பாவித்தான். அரசன் ஒப்புக் கொள்ளும்படி சொன்னால் சரி, இல்லாவிட்டால் வேண்டியதில்லை என்பது அவன் கருத்து.


கம்பர் பாட்டும் இதை எடுத்துக் காட்டுகிறது. 

தாதை அப்பரி(சு) உரை செயத் 

தாமரைக் கண்ணன்

காதல் உற்றிலன் இகழ்ந்திலன்

கடன் இதென்(று) உணர்ந்தும்

'யாது கொற்றவன் ஏவிய (து) 

அது செயல் அன்றோ

நீதி எற்(கு) என நினைந்தும்

அப்பணி தலை நின்றான்.


உடனே ராமன் அரசனிருந்த இடம் சென்றான். மகனைக் கட்டியணைத்து ஆசனத்தில் அமரச் செய்து, “ராமனே எனக்கு வயது அதிகமாகிவிட்டது. எல்லா சுகங்களும் நீண்ட ஆயுளும் அனுபவித்து விட்டேன். செய்ய வேண்டிய தேவ பித்ரு காரியங்களையெல்லாம் செய்து தீர்த்தேன். இனிச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை. உனக்கு அபிஷேகம் செய்வித்துச் சிம்மாசனத்தில் அமரச் செய்வதைத் தவிர வேறொன்றும் நான் ஆசைப்படவில்லை. நான் நேற்றிரவு கெட்ட சொப்பனங்கள் கண்டேன். தவிர வருங்கால விஷயமறிந்தவர்கள் என்னுடைய ஜாதகத்தின்படி இப்போது எனக்கு மரணமும் பெரிய துக்கமும் சம்பவிக்கலாம் என்கிறார்கள். ஆனபடியால் உன் பட்டாபிஷேகத்தை நாளைய தினமே செய்து முடித்துவிட வேண்டும் என்பது என் எண்ணம். நாளைய தினம் புஷ்ய நட்சத்திரம்; நல்ல நாள் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். இந்தக் காரியத்தை உடனே செய்து முடிக்கவேண்டும் என்று என் உள்ளத்தில் ஏதோ என்னைத் தூண்டித் துரிதப் படுத்துகிறது. உடனே நீயும் சீதையும் பட்டாபிஷேகத்துக்காக விரதமிருங்கள். கிரமப்படி இன்று உபவாசமிருந்து, தரையில் படுத்துத் தூங்கி, மங்கள காரியத்துக்கு ஏதொரு இடையூறும் வராதபடி பூஜை செய்வாயாக. பரதன் ஊரிலில்லை. அவன் தன் மாமனுடைய ஊருக்குப் போய் வெகு நாட்களாயின. கேகய தேசம் வெகு தூரத்தில் இருக்கிறது. அவனுக்கு இப்போது சொல்லியனுப்பி வரவழைக்க அவகாசமில்லை. அவன் வருவதற்காகக் காரியத்தை நிறுத்தி வைப்பது உசிதமல்ல” என்றான்.


தசரதன் பேசிய பேச்சில் கவி நமக்கு இடம் தருகிறார்: கைகேயியை விவாகம் செய்து கொண்ட காலத்தில் தசரதன் கேகயனுக்குக் கொடுத்த வாக்கு அவன் நினைவுக்கு வந்து அது அவனை மனத்தில் வேதனை செய்தது போலத் தோன்றுகிறது. பரதன் மிக நல்லவன், அண்ணனிடம் அவன் மிக்க அன்பும் பக்தியும் வைத்தவன். ஆனபடியால் கைகேயி விவாக நிபந்தனையை அவன் பொருட்படுத்தமாட்டான். ராமனுடைய பட்டாபிஷேகத்தை அவன் ஆட்சேபிக்கவே மாட்டான். ஆயினும் மனிதனுடைய மனத்தை நம்பக் கூடாது. நல்லவர்களுடைய புத்தியும் சில சமயம் மாறிப் போகும் என்று தசரதன் பயந்தான்.


“பரதன் அண்ணனைக் குருவாகக் கருதுகிறவன்; தர்மாத்மா; சுத்தமான உள்ளமும் ஆசைகளை அடக்கும் சக்தியும் பெற்றவன். ஆயினும் மனுஷ்யனுடைய சித்தம் எப்போதும் ஒரே விதமாக இருக்காது” என்று தசரதன் ராமனிடம் சொல்லி, மறுநாளே பட்டாபிஷேகம் முடித்துவிட வேண்டும், பரதன் வருவதற்காகக் காக்க வேண்டாம் என்று வசிஷ்டருக்கும் தெரிவித்து விட்டான்.

*

தந்தையினிடம் விடைபெற்றுக் கொண்டு ராமன் உடனே கௌசல்யா தேவியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். பெற்ற தாய்க்கு விஷயத்தைச் சொல்லி ஆசி பெறுவதற்காகச் சென்றான். அதற்கு முன்னதாகவே கௌசல்யைக்குச் சமாசாரம் எட்டி விட்டிருந்தது. சுமத்திரை, சீதை, லக்ஷ்மணன் எல்லாரும் கௌசல்யா தேவியுடன் இருந்தார்கள்.


கௌசல்யை மடிப் பட்டு உடுத்தி மகனுடைய சுபத்தைக் குறித்துப் பூஜையில் அமர்ந்தாள்.


தந்தை இட்ட ஆணையைப் பற்றிக் கௌசல்யையிடம் ராமன் சொன்னான்.


“கேள்விப்பட்டேன், மகனே! இது உண்மையென்று நீயும் சொல்லுகிறாய். சிரஞ்சீவியாக இருப்பாயாக! ராஜ்யத்தை வகித்து விரோதிகளையடக்கிப் பிரஜைகளையும் பந்துக்களையும் காப்பாற்றி வருவாய். உன் குணங்களால் பிதாவைத் திருப்தி செய்தாய். அது என்னுடைய பாக்கியம்” என்று சொல்லி மகனை ஆசீர்வதித்தாள்.


ராமன் தன் பக்கத்தில் நின்ற தம்பி லக்ஷ்மணனைப் பார்த்துச் சிறிது நகைத்து, “லக்ஷ்மணா, என்னோடு சமமாக இருந்து செல்வம் நிறைந்த இந்த நாட்டை நீ ஆள்வாயாக. என் உடலுக்கு நீ வெளியில் நடமாடும் இரண்டாவது உயிரல்லவா? உனக்காகத் தான் இந்த ராஜ்ய பதவி என்னை அடைந்திருக்கிறது. எனக்குச் சேர்ந்த பாக்கியமெல்லாம் உன்னுடையதுமேயாகும்” என்று சொன்னான்.


ராஜ்ய பாரத்தை லக்ஷ்மணனும் சேர்ந்து வகிக்க வேண்டும் என்று கோரியது அன்பினால் உண்டான பேச்சு. சிறு நகைப்பு, தானாக வந்து சேர்ந்த சௌபாக்கியத்தைக் குறித்து உள்ளத்தில் பற்றின்மையினால் உண்டான மெய்ப்பாடு.


பிறகு இரு தாய்மார்களையும் வணங்கி விடைபெற்றுச் சீதையை அழைத்துக் கொண்டு தன் இல்லத்துக்குச் சென்றான்.


அரசன் கட்டளைப்படி வசிஷ்டர் ராமனுடைய இல்லத்துக்கு வந்தார். இதையறிந்ததும் ராமன் வெளியில் சென்று வசிஷ்டரை வணங்கி வாகனத்திலிருந்து கைகொடுத்து இறக்கி உள்ளே அழைத்துச்சென்றான்.


வசிஷ்டர் மந்திர பூர்வமாக உபவாச சங்கற்பம் செய்வித்து விட்டு அரசனிடம் திரும்பச் சென்றார். போகும் போது ஜனங்கள் ராஜ மார்க்கத்தில் ஆங்காங்கே கும்பல் கும்பலாகக் கூடிப் பட்டாபிஷேக மகோற்சவத்தைப் பற்றிச் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நகரவாசிகள் வீடுகளை யெல்லாம் அலங்கரித்துக் கொடிகள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். தெருக் கூட்டத்துக்கு இடையில் கஷ்டப்பட்டு வசிஷ்டருடைய தேர் மெல்லச் சென்றது.


வசிஷ்டர் வந்ததும் அரசன் ஆசனத்திலிருந்து இறங்கி அவரைக் கண்டு “செய்ய வேண்டிய உபவாச சங்கற்பம் செய்வித்தீர்களா?” என்று கேட்டு, “ஆயிற்று” என்று அவர் சொன்னதும் மகிழ்ந்தான். ஏதாவது இடையூறு நேரிடுமோ என்று தசரதனுக்குத் திகில் இருந்து கொண்டேயிருந்தது.


நகரம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அடங்காத உற்சாகம் பெண்களுக்கு. எல்லா வீடுகளிலும், எல்லாத் தெருக்களிலும் தங்களுடைய சொந்த மங்கள நிகழ்ச்சியாகவே ராமனுடைய பட்டாபிஷேகத்தை ஆண் பெண் குழந்தைகள் எல்லாரும் பாவித்து எல்லை கடந்த குதூகலத்திலிருந்தார்கள்.


மறுநாள் காலையே இந்த மகோற்சவம் நடக்கப் போகிறது என்பது தெரிந்ததும் சந்தோஷமும் பரபரப்பும் இரு மடங்காய் விட்டன. சுற்றுப் பக்கத்துப் பிரதேச வாசிகள் எல்லாம் அயோத்திக்குப் பட்டாபிஷேக மகோற்சவத்தைப் பார்க்க வந்து சேர ஆரம்பித்து விட்டார்கள். எங்கு பார்த்தாலும் மங்கள வாத்தியமும் கோஷங்களுமாகவிருந்தன.


ராமனும் சீதையும் தங்களுடைய மனையில் நாராயணனைத் தியானித்து ஓமத்தீயில் நெய் விட்டு, எஞ்சி நின்ற நெய்யைத் தேவப் பிரசாதமாக பக்தியுடன் அருந்தி இருவரும் தரையில் புல் பரப்பி அன்றிரவு படுத்தார்கள். அதிகாலையில் மங்கள வாத்தியங்கள் எழுப்ப இருவரும் எழுந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக