புதன், 16 அக்டோபர், 2024

16. சுக வாழ்வு (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

சக்கரவர்த்தியும் ராஜகுமாரர்களும் திரும்பி வருவதை அறிந்து அயோத்தி நகரத்தினரின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிற்று. தசரதனையும் பரிவாரத்தையும் ராஜகுமாரர்களையும் வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்ட அயோத்தி நகரம் தேவலோகத்தைப்போல் ஜொலித்தது.

ராமனும் சீதையும் மிகவும் சந்தோஷமாக அயோத்தியில் ஒரு குறையுமின்றிப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தார்கள். ராமன் தன் இதயத்தை அப்படியே சீதைக்கு அர்ப்பணம் செய்துவிட்டான்.


இருவர்களுக்குமிடையில் வளர்ந்த பிரியமானது இருவர்களுடைய குணங்களைப் பற்றியதா? அல்லது இருவர்களுடைய சம அழகைப் பற்றியதா என்பதைச் சொல்ல முடியாமலிருந்தது. இரண்டும் சேர்ந்தே அவர்களுடைய பரஸ்பர அன்பு இரு மடங்காக வளர்ந்து கொண்டு போயிற்று. ராமனுடைய உள்ளமும் சீதையினுடைய உள்ளமும் சம்பாஷணையின்றியே ஒன்றோடொன்று பேசும் என்கிறார் கவி. இவ்வாறு ராமனுடைய பிரியத்தை அனுபவித்த சீதையின் காந்தியானது தேவலோகத்தில் சாக்ஷாத் சீதேவியின் காந்தியைப்போல் பிரகாசித்தது.


வெகு நாட்களுக்குப்பிறகு, வனவாசம் ஆரம்பித்த சமயம், மகாதபஸ்வி அனசூயை ராமன் மேல் சீதை வைத்து வந்த அன்பைப் பற்றிப் பாராட்டிப் பேசிய போது சீதை சொன்னாள்: “ராமர் எல்லா நற்குணங்களையும் அடைந்தவர். அவருடைய அன்பு என் அன்புக்குச் சமமான அன்பு. எந்த நிலையிலும் மாறாத அன்பு. மாசற்ற சிந்தனையும் புலன்களை அடக்கியாளும் சக்தியையும் பெற்றவர் அவர். தாயைப் போலும் தகப்பனைப் போலும் என்னைக் காத்து வருகிற இவரை நான் எப்படிக் காதலிக்காமலிருக்க முடியும்?” என்றாள்.


காதலைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்களும், விவாகம் செய்துகொண்டு நன்றாக வாழவேண்டும் என்று ஆசைப்படும் யுவர்களும் யுவதிகளும், சீதை அனசூயைக்குச் சொன்ன இந்த வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். அவற்றில் பொருள் நிறைந்து கிடக்கிறது. இருவர்களுடைய அன்பும் சமமாக இருக்க வேண்டும். ஒன்று அதிகமாகவும் ஒன்று குறைவாகக் கடன்பட்டதாகவும் இருக்கலாகாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அன்பு மாறலாகாது. வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நிகழும். அன்பு ஒன்று போலவேயிருக்க வேண்டும். என்ன நேர்ந்தாலும் அதனால் அன்பானது ஏற்றத்தாழ்வு அடையக்கூடாது. கொண்ட மனைவிக்குப் புருஷன் தாயைப் போலும் தந்தையைப் போலும் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து தேவியின் அருளைப் பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக