செவ்வாய், 15 அக்டோபர், 2024

15. பரசுராமர் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

அயோத்தியில் தன்னிடம் ஒப்புவித்த ராஜகுமாரர்களை மிதிலையில் தசரதனிடம் க்ஷேமமாக ஒப்புவித்து விட்ட விசுவாமித்திர மகாமுனிவர் மங்கள காரியங்கள் முடிந்தவுடன். இரண்டு அரசர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு இமயமலைக்குச் சென்றார். இராமாவதார சரித்திரத்தில் விசுவாமித்திரருடைய பங்கு இத்துடன் முற்றிற்று.

இராம சரித்திரம் என்கிற மகா கோபுரத்துக்கு விசுவாமித்திரர் அஸ்திவாரக் கல் என்றே சொல்லலாம். இதற்குப் பிறகு விசுவாமித்திரரைப் பற்றி ராமாயணத்தில் ஒன்றுமில்லை. வால்மீகி ராமாயணத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் : ஒரு காண்டத்தில் மிக முக்கியமான பங்கெடுத்துக் கொள்ளும் பாத்திரங்கள் அந்தக் காண்டத்தோடு வெகுவாக மறைந்து போகிறார்கள். பால காண்டத்து விசுவாமித்திரர் பிறகு காணப்படுவதே இல்லை. அயோத்தியா காண்டத்துக் கைகேயி பிறகு எங்கேயோ பேச்சின்றி மறைந்து போகிறாள். குகனும் அப்படியே. பரதனும் இவ்வாறே. சித்திரகூடத்திலிருந்து திரும்பிப்போனவனை மறுபடி ராமன் அயோத்தி திரும்பும் வரையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் காண்பதில்லை. ராமனுடைய பல கஷ்டங்களிலும் கவலைகளிலும் பரதனைக் கவி நம்முன் கொண்டு வருவதில்லை. சாதாரண நாடகங்களில் வரும் பாத்திரங்களைப் போல் வால்மீகியின் இதிகாசத்திலுள்ள பாத்திரங்கள் கடைசி வரையில் நின்று அவ்வப்போது தகுந்த சமயங்களில் திரும்ப வந்து தங்களைக் காட்டிக் கொள்ளுகிறதில்லை. கதாபாத்திரங்களை விமரிசனம் செய்வதில் விசேஷ ரஸம் காணும் நம்முடைய நாவலர்கள் இதைக் கவனத்தில் வைக்க வேண்டும்.


விவாகம் முடிந்ததும் தசரத சக்கரவர்த்தி அயோத்தியைக்குத் திரும்பினான். அவனுடைய பெரும் பரிவாரமும் கூடச் சென்றது.


வழியில் ஓர் இடத்தில் திடீரென்று அபசகுனங்கள் தென்பட்டன. கவலைப்பட்ட தசரதன் காரணம் என்னவென்று வசிஷ்டரைக் கேட்டான்.


“கெட்ட நிமித்தங்கள் உண்மையே. ஆயினும் கெடுதலில்லை. பறவைகளின் குறிகள் அசுபமாக இருந்தாலும் தரையில் நடக்கும் பிராணிகளின் குறிகள் சுபமாகவே இருக்கின்றன. ஆகையினால் பயத்துக்குக் காரணமில்லை” என்றார்.


இவ்வாறு ரிஷியும் அரசனும் பேசிக்கொண்டிருக்கையிலேயே பயங்கரமான காற்று வீசிற்று. மரங்கள் ஒடிந்து விழுந்தன. பூமியில் ஒரு பெரிய அதிர்ச்சி உண்டாயிற்று. புழுதி உயரக் கிளம்பிச் சூரியனை மறைத்தது. எட்டுத் திக்குகளும் இருண்டு விட்டன. எல்லாருமே பயந்து போனார்கள். பிறகு காரணம் கண்டார்கள். க்ஷத்திரியர் கூட்டத்துக்கே யமனாக அவதரித்த பரசுராமர் வந்து நின்றார்.


தோளில் வில்லும் கோடரியும் கையில் மின்னலைப்போல் ஜொலிக்கும் ஒரு அம்புமாகத் திரிபுரம் எரித்த ருத்திரனைப் போலவே, பார்த்தவர்கள் நடுங்க, தலையில் ஜடையுடன் பரசுராமர் விளங்கினார். அவர் முகத்தினின்று காலாக்கினி போலத் தாங்க முடியாத ஒளி வீசிற்று. தலைமுறை தலைமுறையாக க்ஷத்திரியர்களை ஹதம் செய்த ஜமதக்கினி குமாரர் பரசுராமர் எங்கே சென்றாலும் பூகம்பமும் பெருங்காற்றும் அவருக்கு முன் செல்லும். க்ஷத்திரிய குலம் நடுங்கும்.


தசரதனுடைய பரிவாரத்திலிருந்த பிராமணர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். “ஜமதக்கினி முனிவருடைய குமாரரான ராமர் தம்முடைய தந்தை ஒரு அரசனால் கொல்லப்பட்ட காரணத்தினால் க்ஷத்திரிய குலத்தையே அழித்து விடுவதாகப் பிரதிக்ஞை எடுத்து, பிரதிக்ஞைப்படி நூற்றுக் கணக்கான அரசர்களை ஹதம் செய்து சினம் தணிந்ததாக எண்ணினோமே, மறுபடியும் தம் கோர யுத்தத்தை ஆரம்பித்து விட்டாரா என்ன?” என்று பயந்து மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். இவ்வாறு சந்தேகித்துக்கொண்டே அவருக்கு அர்க்கியம் சமர்ப்பித்து உபசரித்தார்கள்.


அவர்கள் செய்த உபசாரத்தை அங்கீகரித்துப் பரசுராமர் ராமசந்திரனைப் பார்த்துப் பேசலானார்: “தசரதன் மகனே! உன் வீரச் செயல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். ஜனகர் சபையில் பரமசிவனுடைய தனுஸை நீ வளைத்துவிட்டதும் அது ஒடிந்ததும் எல்லாம் நான் கேட்டு இது எவ்வாறு நடந்தது என்று ஆச்சரியப்பட்டுத்தான் உன்னைப் பார்க்க வந்தேன். இதோ என்னிடம் இருக்கும் வில். நீ ஒடித்த வில்லுக்குச் சமானமானது. என் தந்தை ஜமதக்கினி அடைந்த விஷ்ணு தனுசு இது. இதை வளைத்து நாண் ஏற்றுவாய். பாணமும் தருகிறேன். இதைச் செய்வாயேல் நாமிருவரும் யுத்தம் செய்வோம்” என்றார்.


தசரதன் இதையெல்லாம் பார்த்துப் பெருந் திகிலடைந்தான். மகனை எப்படியாவது இந்தக் கொடிய பரசுராமரிடமிருந்து மீட்டு அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்று பரிதாப முறையில் பேசினான்.


“நீர் பிராமணர். க்ஷத்திரிய ஜாதியின் பேரில் உமக்கிருந்த கோபம் இதற்கு முந்தியே தணிந்து விட்டதல்லவா? பிறகு தவம் செய்யப் புகுந்தீர் அல்லவா? என் குமாரன் சிறுவன். அவனுடனா நீர் யுத்தம் செய்வது? அபயம் தருவீராக. இனி ஆயுதம் எடுப்பதில்லையென்று தேவராஜனிடம் நீர் வாக்குறுதி செய்துவிட்டீர். காச்யபருக்குப் பூமண்டல ஆதிபத்யத்தையும் தந்துவிட்டு, மகேந்திர பர்வதத்தில் தவம் செய்யப் போனீரல்லவா? பிரதிக்ஞை தவறலாமா? ராமனிடத்தில் நாங்கள் எல்லோரும் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறோம். அவனை நீர் ஹதம் செய்து விட்டால் நாங்களும் கூடவே மடிந்து போவோம்”— இவ்வாறு தசரதன் திகிலடைந்து கெஞ்சியதைப் பரசுராமர் கவனிக்கவேயில்லை. அவர் தசரதனைப் பார்க்காமல் ராமசந்திரனோடேயே பேசிக்கொண்டு போனார்.


“விசுவகர்மாவால் பூர்வம் இரண்டு சிறந்த வில்லுகள் செய்யப்பட்டன. இரண்டும் சம சிறப்பு வாய்ந்தவை. ஒன்று திரிபுரத்தை எரித்த திரியம்பகனுக்குத் தரப்பட்டது. இரண்டாவது வில் திருமாலுக்குத் தரப்பட்டது. அந்த விஷ்ணு தனுசு இது. நீ வளைத்து ஒடித்ததாகச் சொல்லப்படுவது சிவன் வில். இந்த வில்லை நீ வளைக்க முடியுமா, பார்! வளைத்தாயானால் உன் வீரியம் எனக்கு நிச்சயமாகும். அப்போது நாமிருவரும் யுத்தம் செய்வோம்” என்றார்.


இவ்வாறு தனக்குச் சமானம் யாருமில்லை என்று எண்ணி வந்த பரசுராமர் மிக உரத்த குரலில் பேசியதைக் கேட்ட சக்கரவர்த்தித் திருமகன் மெதுவாகவே அடக்கமும் கம்பீரமும் கொண்ட குரலில் பதில் சொன்னான்.


“ஜமதக்னி புத்திரரே! தந்தை கொல்லப்பட்ட கோபத்தால் நீர் பழி வாங்கினீர். அதில் நான் குற்றம் காணவில்லை. ஆனால் மற்றவர்களைப் போல் என்னை நீர் அடக்க முடியாது. தயவுசெய்து வில்லைக்கொடும்” என்று சொல்லித் தசரதராமன் ஜமதக்னி ராமரிடமிருந்து வில்லையும் அம்பையும் வாங்கினான். வில்லை வளைத்து அம்பையும் வைத்து நாணையும் இழுத்தான்!


“பிராமணரே! இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்? இந்த அம்பு வீணாகாதே?” என்றான் சக்கரவர்த்தித் திருமகன் புன்னகையுடன்.


இரண்டு ராமர்களும் கூடியதைப் பார்க்க, தேவ கந்தர்வ யக்ஷ கணங்கள் ஆகாயத்தில் வந்து நின்றார்கள்.


தசரத ராமன் வில்லை வளைத்ததும் பரசுராமருடைய தேஜஸானது வாடிவிட்டது. அவருடைய அவதார சக்தி அந்தக் கணத்தில் மறைந்தது.


“உன் பிரபாவத்தைக் கண்டேன். நீ என்னைக் கர்வபங்கம் செய்ததில் எனக்கு வருத்தமில்லை. நீ யார் என்பதை அறிந்தேன். என் தவம் முழுதும் உனதாகக் கடவது. ஆனால் காசியபரிடம் நான் செய்த பிரதிக்ஞைப்படி அவருக்குக் கொடுத்துவிட்ட பூமியில் நான் இரவில் தங்கக்கூடாது. ஆனபடியால் நான் என் தவ வலிமையால் சூரியாஸ்தமனத்துக்கு முன் மகேந்திர மலைக்குப் போய்ச் சேரவேண்டும். அதற்கு மட்டும் அனுமதிப்பாயாக. மற்றப்படி உன் கையிலிருக்கும் அம்புக்கு என் தபோபலம் முழுதும் இரையாகக் கடவது” என்று சொல்லிவிட்டுச் சக்கரவர்த்தித் திருமகனைப் பிரதக்ஷணம் செய்து வணங்கித் தாம் வந்த வழியே திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக