திங்கள், 14 அக்டோபர், 2024

14. சீதா கலியாணம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

மிதிலையில் ஜனக மகாராஜனுடைய யாகத்துக்காகச் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பல்வேறு தேசங்களிலிருந்து ரிஷிகளும் பிராமண சிரேஷ்டர்களும் வந்து சேர்ந்திருந்தார்கள். விசுவாமித்திரருக்கும் ராஜகுமாரர்களுக்கும் தகுந்த விடுதி காட்டப்பட்டு, அங்கே அவர்கள் தங்கினார்கள். ஜனகருடைய புரோகிதரான சதானந்தர் விசுவாமித்திர முனிவரை எதிர்கொண்டு உபசரித்தார். பிறகு ஜனகரே நேரில் வந்தார்.

“தாங்கள் என்னுடைய யாகத்திற்கு வந்தது என்னுடைய பெரும் பாக்கியம்” என்றார் ஜனகர்.


“இந்த வாலிபர்கள் யார்? இவர்களைப் பார்த்தால் தேவலோகவாசிகளைப் போலிருக்கிறார்கள். ஆயுதங்களைத் தரிக்கும் தோரணையைப் பார்த்தால் தேர்ச்சியடைந்த வீரர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரே சாயலாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பெற்ற மகா பாக்கியவான் யார்?” என்று ஜனகர் கேட்டார். 


விசுவாமித்திர முனிவர், அவர்கள் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் என்பதையும், தாம் செய்த யாகத்தை அவர்கள் காத்து, அரக்கர்களை அழித்த விவரத்தையும் ஜனக மகாராஜனுக்குத் தெரிவித்தார்.


விருத்தாந்தம் எல்லாம் சொல்லி, “மிதிலையிலுள்ள ருத்திர தனுசைப்பற்றிக் கேள்விப்பட்டு, தாங்கள் அனுமதித்தால் அதைப் பார்க்க வந்திருக்கிறார்கள்” என்று பொருளை அடக்கி முனிவர் சொன்னதும் ஜனகர் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்.


“வில்லைப் பார்க்க வந்திருக்கிற ராஜகுமாரன் வில்லைப் பார்க்கலாம்; வில்லை வளைத்து நாண் ஏற்றினானாகில் என் மகளையும் பெறுவான். இந்த வில்லைப் பார்த்து, அசைக்கவும் முடியாதென்று திரும்பிப் போன ராஜகுலத்தவர்கள் பலர். சரீர சம்பந்தமின்றித் தெய்வீகமாய்த் தோன்றிய என் மகள் சீதையைத் தசரதருடைய மகன் அடைந்தானாகில் நான் மகிழ்வேன்” என்றார் ஜனகர்.


வில்லைக் கொண்டு வரும்படியாக ஜனகர் தம் ஆட்களுக்கு உத்தரவிட்டார்.


வில்லானது ஓர் இரும்புப் பெட்டியில் பூஜை பந்தோபஸ்துடன் வைக்கப்பட்டிருந்ததை எட்டுச் சக்கரங்கள் கொண்ட வண்டியில் ஏற்றி, ஆயிரக்கணக்கான ஜனங்கள் சேர்ந்து உற்சவத் தேரை இழுத்து வருவதுபோல் இழுத்து வந்து சபா மண்டபத்தில் சேர்த்தார்கள்.


 * * *


“இதோ, நானும் என் முன்னோரும் பூஜித்த மகா தேவனுடைய வில். ராஜகுமாரி சீதையை அடைய இதைப் பல அரசர்கள் வளைத்து நாண் ஏற்றப் பார்த்து முடியாமல் திரும்பிப் போயினர். இதைக் காண விரும்பும் தசரத குமாரனும் பார்க்கலாம்” என்றார் ஜனகர்.


சபையில் இவ்வாறு ஜனகர் சொன்னதும், “ராம சந்திரனே! பெட்டியைத் திறந்து, வில்லைப் பார்” என்றார் விசுவாமித்திர முனிவர்.


குருவின் ஆணையைப் பெற்ற ராமன் இரும்புப் பெட்டியைத் திறந்து வில்லைப் பார்த்து விட்டு மிக வினயமாக, “இந்தப் புண்ணிய தனுசை நான் தீண்டலாமா? எடுத்து நாண் ஏற்ற அனுமதி உண்டா?” என்றான்.


ஜனகரும் விசுவாமித்திர முனிவரும் “மங்களம் ஆகுக!” என்றார்கள்.


சபையிலிருந்த அனைவரும் கண்களை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


ஒரு பூமாலையை எடுப்பதுபோல் அவ்வில்லை விளையாட்டாக எடுத்தான் ராமன்!


“சீதை எனும் பூந்

தோடலர் கொம்பினைச்சூட்டிட நீட்டும்

ஏடவிழ் மாலை இதென்ன எடுத்தான்!”


எடுத்து நிறுத்தித் தன் கால் கட்டை விரலால் தாக்குக் கொடுத்து வில்லை வளைத்து நாண் ஏற்றிவிட்டான். பிறகு நாணைப் பிடித்துக் காது வரையில் இழுத்தான். 


தடுத்(து) இமையாமல் இருந்தவர் தாளில் 

மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்

கடுப்பினை * யாரும் அறிந்திலர் கையால்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்!

(* கடுப்பு - வேகம்)


நாணை இழுத்த வேகத்தில் வில் வளைந்து வந்து திடீர் என்று இடியோசையுடன் முறிந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.


“என் உயிரை விடப் பிரியமான சீதையை ராமனுக்குத் தந்தேன்” என்றார் ஜனகர்.


“மிக வேகமாகச் செல்லும் தூதர்களை அயோத்தியைக்கு அனுப்பித் தசரத மகாராஜனை அழைத்து வர உத்தரவு இடுவீராக” என்றார் விசுவாமித்திர முனிவர். அப்படியே தூதர்கள் சென்றார்கள்.


ஜனக மகாராஜனுடைய தூதர்கள் மூன்று நாட்கள் வெகு வேகமாகப் பிரயாணம் செய்து, அயோத்தி போய்ச் சேர்ந்தார்கள். தேவராஜனைப் போல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த தசரத சக்கரவர்த்தியைக் கண்டு தூதர்கள், “விசுவாமித்திர முனிவரும், ஜனக மகாராஜாவும் தங்களுக்கு நற்செய்தி அனுப்பியிருக்கிறார்கள். திருமகன் மிதிலைக்கு வந்தவன் சீதா சுயம்வரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த பரமசிவனார் வில்லை வளைத்து, நாணேற்றி, நாணை இழுத்து வில்லை ஒடித்தே விட்டான். சீதையைத் தங்கள் வீரகுமாரன் ராமசந்திரனுக்குக் கொடுத்து விவாகம் செய்யத் தங்கள் அனுமதியையும் தங்கள் நல்வரவையும் ஜனக மகாராஜா எதிர்பார்க்கிறார். அனைவரும் உள்ளம் பூரித்து மகிழுமாறு தாங்களும் பரிவாரமும் உடனே மிதிலை செல்ல வேண்டும்” என்று கூறினார்கள்.


பயந்து பயந்து ராஜகுமாரர்களை விசுவாமித்திர முனிவருடன் அனுப்பின தசரதனுக்கு இந்தவிதமான சந்தோஷச் செய்தி வந்ததும் அவன் பரவசப்பட்டான் என்று சொல்லவும் வேண்டுமா? உடனே மந்திரிகளுக்குச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்து, அடுத்த நாளே தசரதன் பரிவாரத்துடன் மிதிலைக்குப் புறப்பட்டான்.


தசரதன் சகல பரிவாரங்களுடனும் அரசர்க்குரிய ரத்தினாதி பரிசுகளுடனும் மிதிலை போய்ச் சேர்ந்தான். ஜனகரும் தசரத சக்கரவர்த்தியும் சந்தித்து உபசாரங்கள் முடிந்ததும், “யாகம் சீக்கிரத்தில் முடியும். அது முடிந்தவுடனே இந்த விவாகத்தை நடத்தி விடுவது சிலாக்கியமாக எண்ணுகிறேன்” என்று ஜனக மகா ராஜா தசரதனுக்குச் சொல்லிச் சம்மதம் கேட்டார்.


“பெண்ணைக் கொடுப்பவராகிய நீர் அல்லவோ செய்யவேண்டியதற்கெல்லாம் அதிகாரி? நீர் சொல்லுகிறபடி எல்லாம் நடக்க வேண்டியது” என்றான் தசரதன்.


“இதோ என் மகள் சீதை, மகனே! நீ செல்லும் தரும நெறியில் இவள் உன்னுடன் துணையாகச் செல்வாள். கையைப் பிடித்துப் பெற்றுக்கொள்வாய். மங்களம் ஆகுக. கற்பைக் காத்து மிக பாக்கியவதியாக உன் நிழலைப்போல் உன்னைப் பற்றி நிற்பாள். எப்போதும் விட்டுப் பிரிய மாட்டாள்.”


“இயம்ஸீதா மம ஸுதா

ஸஹ தர்ம சரீ தவ

ப்ரதீச்ச சைனாம் பத்ரம்தே

பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா

பதிவ்ரதா மஹா பாகா

சாயா இவானுகதா ஸதா”


வடநாட்டில் எல்லா விவாகங்களிலும் பெண்ணைக் கொடுக்கும்போது இந்த சீதா கல்யாண மந்திரத்தைச் சொல்லி வருகிறார்கள்.


இவ்வாறு ஜனகர் சீதையை ராமனிடம் ஒப்புவித்துவிட்டார். சீதையும் சக்கரவர்த்தித் திருமகனும் பழைய பாற்கடல் காதலர்கள் அல்லவோ? பிரிந்தவர்கள் மறுபடியும் ஒன்று கூடும் பெரு மகிழ்ச்சியை அடைந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக