ஞாயிறு, 13 அக்டோபர், 2024

13. அகலிகை (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

எல்லாரும் விசாலா நகரத்தில் ஒருநாள் தங்கி அடுத்த நாள் விடியற்காலை மிதிலை நோக்கிச் சென்றார்கள்.

ஜனகராஜனுடைய நகரத்துக்கு இன்னும் கொஞ்ச தூரம் இருக்க, மிக ரம்மியமான ஓர் ஆசிரமத்தைக் கண்டார்கள். ராமன், “முனிவர் யாரும் இல்லாததாகக் காணப்படும் இந்தப் புராதன ஆசிரமம் யாருடையது? ஏன் இந்த அழகான ஆசிரமம் வாசம் இல்லாமல் கிடக்கிறது?” என்று வினவினான்.


முனிவர் சொன்னார்: “இதை நீ தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஆசிரமம் ஒரு சாபத்துக்கு உட்பட்டிருக்கிறது. இது கௌதம மஹா முனிவருடைய ஆசிரமம். முன்னாள் அவர் இங்கே இருந்து வந்தார்.”


நீண்ட காலம் அவரும் அவர் மனைவி அகலிகையும் இங்கே இருந்து வந்தார்கள். இடையூறின்றி அவர்களுடைய தவமும் கழிந்தது. ஒருநாள் இந்திரன், சமயம் பார்த்து, ஆசிரமத்தில் முனிவர் இல்லாத காலத்தில் கௌதமருடைய உருவத்தையும் முனி வேஷத்தையும் தரித்துக் கொண்டு ஆசிரமத்துக்குள் புகுந்தான். அகலிகையின் உலகப்பிரசித்தமான அழகை நினைத்து அவளையடையும் கெட்ட எண்ணத்துடன் வந்தான். இவ்வாறு திருட்டுத்தனமாக வந்த தேவராஜன் அகல்யா தேவியைப் பார்த்து, “அழகியே! எனக்கு ஆசை மேலிட்டிருக்கிறது. இந்த நிலையில் காலப் பொருத்தம் பார்க்கலாகாது. நாம் கூடுவோம்” என்று முனிவர் சொல்வதுபோல் சொன்னான்.


ரிஷியின் மனைவி உடனே விஷயத்தைத் தெரிந்து கொண்டு விட்டாள். இவன் தன் புருஷன் இல்லை, இந்திரன் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. ஆயினும் தேவராஜனே தன்னைத் தேடிவந்தான் என்று தன் அழகைப் பற்றிக் கர்வப்பட்டு மனநிலை இழந்துவிட்டாள். தேவராஜனுடைய விருப்பத்துக்கு உடன்பட்டு விட்டாள்.


பிறகு, “தேவராஜனே! சீக்கிரம் அப்புறப்பட்டுப் போ. பெரும் அபாயத்தினின்று எப்படியாவது காப்பாற்றிக்கொள்” என்று எச்சரித்தாள். இந்திரனும், “உனக்கு நன்றி!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் திரும்பிப் போனான்.


வெளியில் சென்றிருந்த கௌதமர் ஸ்நான ஜபங்கள் முடித்துக்கொண்டு ஆசிரமத்துக்கு வந்து கொண்டிருந்தார். தேவ தானவர்களும் பயப்படும் படியான தபோபலம் அடைந்த முனிவர், ஸ்நானம் செய்த ஈரத் துணியோடு முகத்தில் அக்னி பகவானைப் போல் காந்தி ஜொலிக்க, அன்று ஓமத்துக்கு வேண்டிய தர்ப்பையும் ஸமித்துகளும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் அதுவரை மிக தைரியமாக இருந்த இந்திரன் மிக நடுங்கினான். முகம் வாடி அவர் எதிரில் வணங்கி நின்றான். “மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்துக்குள் புகுந்து தகாததைச் செய்தாய்! நீ நபும்சகனாய்ப் போவாய்!” என்று கோபம் மேலிட்டுச் சொன்னார்.


சினங்கொண்ட முனிவர் இவ்வாறு சொன்ன அக்கணமே இந்திரன் தன் ஆண்மையை இழந்தான். தேவர்கள் பரிதபித்தார்கள்.


முனிவர் தம் மனைவிக்கும் பிராயச்சித்தம் விதித்தார். “அகலிகையே! நீ இங்கே நீண்ட காலம் காற்றே உணவாக ஏதொரு ஆகாரமுமின்றிச் சாம்பல் மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பல காலம் கழித்து இவ்விடம் தசரதன் மகன் ஒருநாள் வருவான். அந்த வீரன் இந்த ஆசிரமத்தில் கால் வைக்கும்போது உன் பாபம் நீங்கும். நீ அவனை அதிதியாக வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கைக் குணத்தையும் காந்தியையும் மறுபடியும் அடைந்து என்னுடன் வாழ்வாய்.”


இவ்வாறு சொல்லிவிட்டு கௌதமர் நெறி தவறிய மனைவியை விட்டு விலகி, இமயமலை சென்றுவிட்டார். அங்கே தவமிருக்கிறார்.


ஆசிரமத்திற்குள் நாம் செல்வோம். திக்கற்ற இந்த அகலிகைக்கு முனிவர் சொல்லியபடி நீ விமோசனம் தருவாய்" என்றார் விசுவாமித்திர முனிவர்.


அவ்வாறே ஆசிரமத்துக்குள் சென்றனர். ராமன் உள்ளே கால் வைத்ததும் அகலிகையின் பாவம் தீர்ந்தது. பாவம் தீர்ந்து காந்தியுடன் விளங்கிய அகலிகையைக் கண்டான் ராமன். அகலிகை உலகத்திலுள்ள எல்லா ஸ்திரீகளுடைய அழகையும் ஒன்று சேர்த்து பிரம்மாவால் ஆக்கப்பட்ட தனி அழகை அடைந்தவள். இலைகளிலும் கொடிகளிலும் மறைந்து யாருக்கும் தென்படாமல் பல்லாண்டுகள் விரதம் காத்து வந்த அவள் அன்று பனியால் மூடப்பட்ட சந்திரனைப் போலும், புகையால் மறைக்கப்பட்ட அக்னி சுவாலையைப் போலும், அசையும் ஜலத்தில் காணப்படும் சூரிய பிம்பம் போலும் ராமன் ஆசிரமத்திற்குள் சென்றபொழுது காணப்பட்டாள்.


ராமனும் லக்ஷ்மணனும் முனி பத்தினியின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தார்கள். நெடுங்காலம் காத்திருந்த அகலிகை தன்னுடைய விமோசன காலம் வந்துவிட்டதென்று மகிழ்ந்து சக்கரவர்த்தித் திருமகனுக்கு அர்க்கியம் பாத்தியம் முதலியன தந்து உபசாரம் செய்தாள். ராமனும் அங்கீகரித்தான். ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய, அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து, தேவகன்னி போல் பிரகாசித்தாள். கௌதமரும் அச்சமயம் அங்கே வந்து சேர்ந்தார்.


* * *


இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள அகலிகை கதை. மற்றப் புராணங்களிலும் கதைகளிலும் சில விஷயங்கள் பேதப்பட்டு வழங்கி வருகின்றன. அதனால் குழப்பம் வேண்டியதில்லை.

இவ்விடத்தில் கொஞ்சம் நின்று ராமாயணம், பாரதம் முதலிய புராணங்களைப் படிக்கும் இக்காலத்தவர்களுக்குப் பொதுவாகச் சில வார்த்தைகள்.


புராணங்களில் தேவர்களும் ராக்ஷசர்களும் அடிக்கடி வருவார்கள். ராக்ஷசர்கள் என்பவர் அதருமத்துக்குக் கொஞ்சமும் பயப்படாத துஷ்டர்கள் குலம். சர்வ சாதாரணமாகத் தீய காரியங்களைச் செய்வார்கள். 


இரக்கமென்(று) ஒரு பொருள் 

இலாத நெஞ்சினர் 

அரக்கர் என்று உளர்பலர் 

அறத்தின் நீங்கினார்

என்று கம்பர் விளக்கியிருக்கும் கூட்டம். அசுரர்களும் ராக்ஷசர்களைப் போன்றவர்களே.

ராக்ஷசர்களிலுங்கூட ஒரு சிலர் அறிவாளிகளும் நல்லவர்களும் இருந்தார்கள். எந்த நல்ல குலத்திலும் சில தீயவர்கள் உண்டாவார்கள். அப்படியே எந்தக் கெட்ட குலத்திலும் சில சமயம் நல்லவர்களும் இருப்பதுண்டு. ஆனால் மொத்தத்தில் ராக்ஷசர்களும் அசுரர்களும் கம்பர் சொல்லியிருக்கிறபடி தீய கருமங்களிலேயே ஈடுபட்டுச் சந்தோஷப்பட்ட கூட்டம். அவர்களைத் தமிழர்கள் என்றும், தம் முன்னோர்கள் என்றும் சிலர் இக்காலத்தில் அறிவீனமாக எண்ணியும் பேசியும் வருவது பரிதாபம். எந்தப் பழைய தமிழ் நூலிலாவது சரித்திரத்திலாவது தனிப் பாட்டிலாவது கிராமப் பாட்டிலாவது இப்படிச் சொன்னதில்லை. தமிழர்களுக்கு “நீங்கள் தான் புராணத்தில் அரக்கர் என்று சொல்லப்பட்டவர்கள்” என்கிற புதுப் பட்டம் அளிப்பதற்குப் பழைய தமிழ் நூல்களில் ஆதாரமும் எங்கும் கிடையாது.


தேவர்கள் என்கிற கூட்டம் சாதாரணமாக அதருமத்துக்கு அஞ்சும் சுபாவம்கொண்ட கூட்டம். ராக்ஷசர்களை ஒழிப்பதே தேவர்களுடைய வேலையாக இருந்தது. இந்தக் காரியத்தில் புராணங்களின்படி சில சமயம் தருமத்துக்கு விரோதமான முறைகளிலும் தேவர்கள் இறங்குவதுண்டு. இதற்குக் காரணம் ராக்ஷசர்கள் தவம் செய்து பெற்ற வரங்களேயாகும். தவம்செய்து பெற்றுவிட்ட வரங்களின் பலத்தினால் உலகத்தைத் துன்புறுத்தும் அசுரர்களைத் தேவர்களால் எதிர்க்க முடியாமல் போகும். அச்சமயங்களில் தேவர்களும் ஏதோ வழி தேடி முறை தவறியும் நடக்கவேண்டியதாகும். ஆனால் மொத்தத்தில் தேவர்கள் நல்ல சுபாவம் கொண்டவர்கள். அவர்களிலும் பலர் தீய காரியங்களைச் செய்து அதனால் கஷ்டமும் படுவார்கள். அப்படிச்செய்த அதர்மங்களின் பயனைத் தேவர்களும் அனுபவிப்பார்கள். தேவர்களாயிற்றே என்று அவர்களுக்கு வேறு நியதியில்லை. கரும விதிகளுக்கு இவர்களும் உட்பட்டவர்களே யாவர்.


தேவர்கள் மொத்தத்தில் நல்வழியில் நிற்பவர்களானபடியால் அவர்களில் யாரேனும் பிழை செய்தால், அந்தப் பிழை இப்போது படிக்கும்போது நம் கருத்தில் பெரும் பிழையாகத் தோன்றும். இது இயற்கை - வெள்ளைத் துணியில் பட்ட கறையானது கண்ணைக் குத்துவதுபோல்.


எப்போதுமே தீய காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ராக்ஷசர்களுடைய பிழை படிக்கும்போது நமக்கு அவ்வளவு பெரிதாகக் காணப்படாது - கருப்புத் துணியில் பட்ட அழுக்கைப்போல் மறைந்து நிற்கும்.


யோக்கியர்கள் நல்ல வழியிலிருந்து வழுவினால் அது நம்மை மிகவும் புண்படுத்துகிறது. எப்போதுமே  தீய எண்ணமும் துஷ்ட காரியமுமாக இருப்பவர்களை ஐயோ பாவம் என்று விட்டு விட்டு, தருமசங்கடத்தில் சிக்கிக்கொண்டு ஏதேனும் பிழை செய்கிறவர்களை அதிகக் கடுமையாகக் கண்டித்து விமரிசனம் செய்வதும் பேசுவதும் இயற்கை. ஆனால் இது நியாயமாகாது.


புராண கர்த்தாக்களே தேவர்களை அவ்வப்போது அநீதியிலும் பாபத்திலும் சிக்கிக்கொள்ளச் செய்திருப்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனுள் அடங்கி நிற்கும் பாடத்தைக் கற்க வேண்டும். புராண கர்த்தாக்கள் எந்தக் காரணத்தைக்கொண்டு இந்திரன் முதலிய தேவர்களும் சில சமயம் மகா பயங்கர பாபங்களைச் செய்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்? தரும சங்கடங்களையும் சிக்கல்களையும் தாமே ஏன் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? இதையெல்லாம் நாம் சாவதானமாக ஆராயவேண்டும். இவற்றின் நோக்கம் மக்களுக்கு விவேகமும் அடக்கமும் பயபக்தியும் உண்டாக்கித் தரவே என்பது வெளிப்படை. இல்லாவிடில் முனிவர்கள் தாமாகவே தங்கள் கருத்துக்கும் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக நல்லவர்களுக்குச் சங்கடங்களை உண்டாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.


இத்தகைய தரும சங்கட நிகழ்ச்சிகளை வைத்துச் சிலர் மூர்க்கமாகத் தவறான முடிவுகளைக் கட்டிக்கொண்டு சந்தோஷப்படுகிறார்கள். “ராவணன் மிக நல்லவன்; அவனுடைய காரியங்களைப்பற்றி வால்மீகி இல்லாததைச் சொல்லி அவதூறு செய்திருக்கிறார். ராமன் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் அநீதி செய்தான் அல்லவா? சீதை ஒரு சமயம் பொய்யே சொல்லிவிட்டாள் அல்லவா?” என்று இவ்வாறு வாதம் செய்து பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.


எதை எப்படியேனும் எழுதும் அவகாசம் பெற்றிருந்த வால்மீகி முனிவர் ஏன் இவ்வாறு தம் கருத்துக்கே விரோதமாகவும் தம் கதாநாயகனுக்கே இழுக்குத் தரும்படியானதுமான நிகழ்ச்சிகளைக் கற்பித்துக் கொண்டு அலைய வேண்டும்? முற்றிலும் வால்மீகியே கொடுத்த பாத்திரம் அல்லவா ராமனும் ராவணனும்? ராவணனைப்பற்றி வேறு கதையோ சரித்திரமோ இருந்ததா? இல்லை. வால்மீகிக்கும் முன்னதாக யாரேனும் ஒரு புராணமோ பாட்டோ சரித்திரமோ அல்லது கல் சாசனமோ எழுதியிருந்து அதில் விஷயங்கள் வேறு விதமாக எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோமா? இல்லை. அப்படி ஏதேனுமிருந்திருக்கும் பட்சத்தில் வால்மீகி முனிவரானவர் ராமனுக்கும் சீதைக்கும் தேவர்களுக்கும் பட்சபாதமாக மாற்றியும், விஷயங்களை மூடியும் மறைத்தும் சொல்லி, சமாதானங்களைக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார் என்று ஒருவேளை வாதாடலாம்.


ராம கதையைப் பற்றிய விஷயங்களைப் பெற்றது வால்மீகி நூல் வழியே தான்; வேறு எங்கிருந்தும் அல்ல. தரும சங்கடங்களைக் காட்டுவதும் அந்நூலே. பிழைகளாகத் தோன்றும் நிகழ்ச்சிகளும் அந்நூலிலே தான் கண்டோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று, மூளையில் குழப்பமாவது அசூயையாவது இன்றி, ஆழ்ந்து ஆராய்ந்தால் அவற்றிலெல்லாம் சாதாரண மக்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களின் சித்திரத்தைக் காண்போம். நம்மால் பின்பற்றக் கூடிய நல்ல உபதேசத்தை அவற்றினின்று பெறலாம். நாம் உணர்ந்து நடக்கக் கூடிய நெறியைக் கண்டு பயன் அடையலாம்.


எவ்வளவு பெரிய பாபத்தைச் செய்துவிட்டாலும் பச்சாத்தாபப்பட்டு, தண்டனையைப் பொறுத்துத் தவமிருந்தால் விடுதலை அடையலாம் என்பது அகலிகை நிகழ்ச்சியின் பாடம். பாபம் செய்த மற்றவர்களை இகழாமல் அவரவர்கள் தத்தம் உள்ளங்களில் உண்டாகும் தோஷங்களை அகற்றுவதில் முயற்சி செலுத்த வேண்டும்; எவ்வளவு சுத்தமான நிலையிலிருந்தாலும் சதா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது பாடம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக