12. பகீரதன் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

யாகக் குதிரையைத் தேடிச் சென்ற தன் குமாரர்கள் திரும்பி வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசன் சில நாட்கள் கழித்துப் பேரன் அம்சுமானை அழைத்து, “பாதாளம் போன குமாரர்களுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. நீ வீரன் அல்லவா? ஆயுதபாணியாகச் சென்று பார்த்துவிட்டு வருவாய். வெற்றியோடு வருவாய்!” என்று அம்சுமானை ஆசீர்வதித்து அனுப்பினான்.

அம்சுமான் தன் சிறிய தகப்பன்மார், சகர குமாரர்கள் பூமியைத் தோண்டிக்கொண்டு போன வழியைப் பிடித்தே சென்றான். திக்கு கஜங்களைக் கண்டபோது அவற்றை வணங்கிப் பூஜித்துத் தன் காரியத்தைச் சொல்லிக்கொண்டான். அந்த யானைகளும், “நீ காரிய சித்தியடைவாய்” என்று ராஜகுமாரனை ஆசீர்வதித்தும் தைரியப்படுத்தியும் அனுப்பி வைத்தன. அதன் பேரில் தாமதமின்றி உற்சாகமாகச் சென்றான்.


பாதாளத்தில் எல்லாப் பக்கங்களும் சுற்றிப் பார்த்தான். ஓர் இடத்தில் பெரியதொரு சாம்பற் குவியலையும் பக்கத்தில் யாகக் குதிரையையும் கண்டு திருப்பதியும் திகைப்பும் அடைந்தான்.


சகர ராஜாவின் பத்தினி சுமதியின் சகோதரனாகிய கருட பகவான் அங்கே தற்செயலாக வந்தவன் அம்சுமானை நோக்கி, “திகைக்காதே! இந்தச் சாம்பற் குவியலே உன் பித்ருக்களான சகர குமாரர்களின் மிச்சம். கபில தேவரால் சபிக்கப்பட்டுச் சாம்பலானார்கள். அன்புக்குரிய குழந்தாய்! குதிரையைப் பிடித்துச் சென்று யாகத்தை முடித்துக் கொள்ளுங்கள். சபிக்கப்பட்ட ராஜகுமாரர்கள் நற்கதியடைய வேண்டுமானால் தேவலோகத்துக் கங்கையை இங்கே வரவழைத்துச் சாம்பலைக் கரைக்க வேண்டும்” என்றான் கருட பகவான்.


குதிரையுடன் அம்சுமான் வெகுவேகமாகத் திரும்பிப்போய்ப் பாட்டன் மகாராஜாவிடம் விஷயத்தைச் சொன்னான்.


தன் புத்திரர்களுடைய கதியைக் கேட்டு அரசன் துயரக் கடலில் மூழ்கினான். குதிரை திரும்பி வந்தபடியால் யாகத்தைக் கிரமமாக முடித்துவிட்டு, குமாரர்களின் கதியைப் பற்றியும் கங்கையைப் பற்றியும் யோசித்தான். யோசித்து, யோசித்து இன்னது செய்வது என்று தோன்றாமல் அந்தத் துயரத்திலேயே உயிர் நீத்தான்.


முப்பதினாயிரம் ஆண்டு வாழ்ந்து சகரன் இறந்தான் என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. ராமாயணத்தில் முப்பதினாயிரம் அறுபதினாயிரம் என்கிற பெரிய எண்களைப் படித்து நாம் திகைக்க வேண்டியதில்லை. முப்பது “வருஷ சஹஸ்ரம்” என்றால் அநேக வருஷங்கள் என்றாவது அல்லது முப்பது வருஷமாகவேயும் வைத்துக் கொள்ளலாம். 'சஹஸ்ரம்' என்பதை "வருஷம்" என்பதற்கு ஒரு மங்கள அடைமொழியாகவே வைத்துக்கொள்ளலாம். ‘ஷஷ்டி சஹஸ்ரம் மக்கள்' என்றால் அறுபது மக்களாகவே வைத்துக் கொள்ளலாம். நம்பினால் இருக்கிறபடியே வைத்துக் கொள்ளலாம்.


சகரனுக்குப் பிறகு அம்சுமானும், அம்சுமானுக்குப் பிறகு திலீபனும் திலீபனுக்குப் பிறகு பகீரதனும் அயோத்தியில் அரசாண்டார்கள். அம்சுமானும் திலீபனும் தங்கள் மூதாதையர்களுடைய நற்கதிக்கு வேண்டியதைச் செய்யமுடியவில்லையே என்று எண்ணி எண்ணி, மற்ற எல்லாவிதத்தில் சம்பத்தும் புகழும் அடைந்திருந்தாலும் இந்தப் பெருங் குறையின் காரணமாகத் தலைமுறை தலைமுறையாகத் துக்கப் பட்டுக்கொண்டே காலகதியடைந்தார்கள்.


திலீபனுக்குப் பின் அவன் குமாரன் பகீரதன் அயோத்தியாபதியானான். அவன் மகாதீரன். பகீரதனுக்கு மக்கட் பேறு வாய்க்கவில்லை. அதைக் கருதியும் கங்கையைக் கொண்டு வருவதற்காகவும் ராஜ்யத்தை மந்திரிகள் வசம் ஒப்பித்துவிட்டுக் கோகர்ணத்தில் நீண்ட தவம் புரியப் போனான். நான்கு பக்கங்களிலும் தீ மூட்டி, தலை மேலே வெய்யிலும் காய, மாதம் ஒரு முறையே ஆகாரம் உண்டு பல்லாண்டுகள் உக்கிரமான தவம் புரிந்தான். விடா முயற்சிக்கு ஒரு பெயரே ஆயிற்று பகீரதனுடைய நாமம்.


பிரஜாபதிப் பிரம்மா பகீரதனுடைய தவத்தை அங்கீகரித்து அவனுக்குத் தரிசனம் தந்து, “என்ன வேண்டும்?” என்று கேட்டான். பகீரதன் தன் இரண்டு விருப்பத்தையும் தெரிவித்தான். “என் பேரில் தாங்கள் இரக்கங் கொண்டால் எங்கள் குலம் அறுபட்டுப் போகாமல் எனக்குப் புத்திரப்பேறு தரவேண்டும். என் மூதாதைகள் சாபத்துக்கு இரையாகி ஜலக்கிரியை இல்லாமல் சாம்பலாகப் பாதாளத்தில் கிடப்பதைக் கங்கா ஜலத்தில் கரைத்து, நீர்க்கடன் செய்து முடித்து அவர்களைச் சுவர்க்கம் சேரச் செய்யவேண்டும். அதற்காகக் கங்கை கீழே இறங்கி எங்கள் குலத்தின் பெருந்துயரத்தை நீக்க வேண்டும். இதுவே நான் கோரும் வரம்” என்று பகீரதன் பிரம்மாவை மிக வணக்கமாகப் பிரார்த்தித்தான்.


“உன் தவம் தேவர்களுக்குத் திருப்தி தந்தது; உன் இஷ்டங்கள் நிறைவேறும். ஆனால் ஒன்று: ஹிமவானுடைய மூத்த புத்திரியான கங்கை கீழே இறங்கினால் அந்த வேகத்தை இந்தப் பூமி தாங்காதே? அதைத் தாங்கக்கூடியவன் உமாபதி ஒருவனே. அவனைக் குறித்துத் தவஞ்செய்வாய்” என்று சொல்லி உடன் வந்த தேவ கணங்களுடன் மறைந்தான்.


மறுபடியும் பகீரதன் நீண்ட காலம் அன்ன ஆகாரமின்றிக் கடுந்தவம் செய்து உமாபதியின் அருளைப் பெற்றான். பரமசிவன் பிரத்யக்ஷ தரிசனம் தந்து, “உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன். மலைராஜன் மகளாகிய கங்கை இறங்கும்போது என் தலையில் அவளைத் தாங்குவேன். அவள் உனக்கு அருள்வாளாக” என்றான்.


பரமேசுவரன் பகீரதனுக்கு இந்த வரத்தைத் தந்ததும் பிரம்மன் சொல்லியிருந்தபடி கங்காதேவி இறங்கினாள். தன் முழு வேகத்துடன் ஆகாயத்திலிருந்து கீழே மகாதேவனுடைய சிரசின்மேல் வீழ்ந்தாள். தன்னுடைய அபார வேகத்தால் சங்கரனையும் தள்ளிக் கொண்டு நேராகப் பாதாளம் போவேன் என்று அவள் எண்ணினாள். அவளுடைய கர்வத்தையடக்கவேண்டும் என்று முக்கண்ணன் உத்தேசித்தான். அவன் அந்தப்படி நினைத்த மாத்திரத்தில் தலையில் இறங்கிய பவித்திர ஜலப் பிரவாகம் அவனுடைய பெருஞ்சடையில் அகப்பட்டுக்கொண்டு வெளியில் வரமுடியாமல் நின்றுபோய் விட்டது!


எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆயினும் இமயமலைச் சொரூபமான மகாதேவனுடைய சடையின் குகைகளினின்று வெளிப்பட்டு வந்து பூமியில் இறங்க முடியாமல் திகைத்துப் போனாள்.


கங்கைக்காகத் தவமிருந்து சித்தி அடைந்த பகீரதன், “ஐயோ இப்படியாயிற்றே! ஜலப் பிரவாகமெல்லாம் எங்கே போயிற்று?” என்று மறுபடியும் மகாதேவனைக் குறித்துத் தவம் செய்தான்.


மகாதேவன் அவனுக்கிரங்கி பிந்து ஸரஸில் கங்கையை மெதுவாக விட்டான். அங்கிருந்து ஏழு சிறு ஆறுகளாக மிக அடக்கத்துடன் கங்காதேவி வெளிப்பட்டாள். மூன்று ஆறுகள் கிழக்கு முகமாகவும் மூன்று ஆறுகள் மேற்கு முகமாகவும் சென்றன. ஏழாவது ஆறு பகீரதன் பின்னால் சென்றது. பகீரதன் மகிழ்ச்சிப் பரவசமானான். தலைமுறை தலைமுறையாகக் காத்திருந்த தன் மூதாதைகளுக்கு நற்கதியுண்டாயிற்று என்று அவன் மனம் பூரித்து, வெற்றித் தேர் ஏறி முன் சென்றான். கங்கை ஆறு அவனைத் தொடர்ந்து துள்ளிக் குதித்துப் பெரும் பிரவாகமாகிச் சென்றது. ஜலத்துடன் பல ஜலஜந்துக்களும் பறவைகளும் விளையாடிக்கொண்டு செல்ல மின்னல் பாய்வதுபோல் விளங்கிற்று. அந்த மகத்தான காட்சியைக் காண தேவ கந்தர்வர் கூட்டம் ஆகாயத்தில் கூடிற்று. நதியின் கதியும் சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் மகா வேகமாகவும் சில இடங்களில் மேலிருந்து கீழே குதித்தும், சில இடங்களில் கீழிருந்து மேலே குதித்தெழுந்தும் கங்கா தேவி மனத்தைக் கவரும் கதிகளுடன் பகீரதன் தேரைப் பின்பற்றி நர்த்தனம் செய்துகொண்டு சென்றாள். ஆகாயத்தில் தேவ கந்தர்வர் கூட்டங்களும் நதியின் கூடவே சென்றன.


இப்படிச் சென்ற புண்ணிய நதியானது வழியில் ஓர் இடத்தில் ஜன்ஹு ரிஷியினுடைய யாக வேதிகையைக் கலைத்துச் சேதம் செய்தது. ஒதுங்கிப் போகாமல் இப்படிச் செய்தாளே என்று ரிஷியானவர் நதியை அப்படியே கையில் எடுத்து உறிஞ்சி ‘ஆச மனம்' செய்து விட்டார். கங்கை முற்றிலும் மறைந்து ஒழிந்து போயிற்று!


மறுபடியும் பகீரதன் ஐயோ என்று திகைத்தான். ஆனால் தேவ ரிஷி கணங்கள் ரிஷியை வணங்கி கங்கையின் அபராதத்தை மன்னித்து, பகீரதனுடைய தவத்தைப் பயனடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ரிஷியும் அங்கீகரித்து நதியைத் தமது வலது காதின் வழியாக வெளிப்படுத்தி மேலே போகவிட்டார்.


“ரிஷியின் உடலிலிருந்து வெளிப்பட்டு ரிஷியின் பெண்ணே ஆனாய். ஜான்ஹவி என்ற பெயரும் பெறுவாய்” என்று தேவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்தார்கள்.


பிறகு யாதொரு இடையூறுமில்லாமல் கங்கை சாகரம் சேர்ந்தாள். அங்கிருந்து பாதாளம் புகுந்து சகர புத்திரர்கள் எரிந்து சாம்பலான இடத்தைச் சேர்ந்தாள். பகீரதனும் தன் மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செய்து முடித்து அவர்களை உத்தம லோகம் அடையச் செய்தான்.


பகீரதன் தன் தளரா முயற்சியால் பூமிக்குக் கொண்டு வந்த புண்ணிய நதிக்குப் பாகீரதி என்றும் பெயர்.


“உன் முன்னோர்களாகிய சகர குமாரர்கள் வெட்டிய சாகர சரித்திரமும் பகீரதன் தவத்தின் பயனாக ஆகாய கங்கை பூமிக்கு இறங்கிய சரித்திரமும் கேட்டாய். உனக்கு மங்களமாகுக. மாலை ஆயிற்று. உன் மூதாதை உலகத்துக்குத் தந்த கங்கையில் இறங்கி சந்தியா வந்தனம் செய்வோம்” என்று விசுவாமித்திரர் ராமசந்திரனுக்குச் சொல்லி முடித்தார்.


கங்கைக்குப்போய் ஸ்நானம் செய்தாலும், அல்லது இந்தப் புண்ணிய கதையைப் பக்தியுடன் படித்தாலும், படிக்கச் சொல்லிக் கேட்டாலும் பாவங்கள் தீர்ந்து சுத்த உள்ளத்தையடைந்து நல்ல சீலமும், எடுத்த காரியத்தில் தளரா முயற்சியும் மக்கள் அடைவார்கள்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை